க.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல. ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது 'கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி" நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த 'வியத்தலும்-பாராட்டுதலும்' என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரியக் காரணமாயிற்று. அம்மனிதரோடு ஒப்பிடுகையில் எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர் கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை. மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தாம். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.
காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம். ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.
என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால். இருந்தும் தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.
க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு. ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து 'ஒருபாற் கோடாமை மனத்துடன் ' உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல், எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன். நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவ்யா வெளியீடு - 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும், நவீன இலக்கியத்தில் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.