"எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள் வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில் ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில் வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை
புனைகதைகளின் சுவாரஸ்யத்தோடு இயல்பாக வெளீப்படுத்தியிருக்கிறார். மெல்லிய நகைச்சுவை, எழுத்தாளர்களின் வெவ்வேறு கலாச்சாரச் சூழல், எழுத்தின் நுட்பமான அம்சங்களைக் கொண்டவை அப்பேட்டிகள்.
அ.முத்துலிங்கம் அவர்கள் பற்றிய சகஎழுத்தாளர்கள், வாசகர்களின் கட்டுரைகளையும் , அவரின் பேட்டிகளையும் தொகுத்துப் படிக்கிற போது அவரின் பேட்டிகளில் இருக்கும் சுவாரஸ்யம் அவர் மற்ற எழுத்தாளர்களை நினைத்து வியத்தல் போல் அவரைப் பார்த்து எவருக்கும் வியப்பைக் கொடுக்கும். அந்த வியப்பை இத்தொகுப்பும் கொடுக்கும். நேர்காணல்கள் கூட ஒரு வகைப்படைப்பாக்கம்தான். பகிர்வும், விவாதங்களுமான கோப்பைக்குள் நிகழும் புயல்தான். கற்றறிந்த விசயங்களை, அனுபவப்பட்ட்தைச் சொல்வதும் அவரின் பரந்துபட்ட அனுபவ முதிர்ர்சியுடன் பல்வேறு விசயங்களை அருகருகே வைத்துப்பேசுவதில் இருக்கும் சுவாரஸ்யமும் இப்புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.
சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ” இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது. நாமெல்லாம் சமூக மனிதர்கள், சமூக விலங்குகள். ஆனால் ஏன் இப்படித் தனிமைப் பட்டுப் போனோம். பேச, பரிமாறிக் கொள்ள, கதைகள் சொல்ல, சிரிக்க, சந்தோசிக்க, கற்றுக் கொள்ள சந்திப்பு அவசியம் “ என்றார். aaஅவருக்கு 100 கோப்பைத் தேனீருடன், நூறு புது மனிதர்கள் கிடைத்திருப்பார்கள். உண்மைதானே.உரையாடல் என்ற வார்த்தையே அகராதியில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என்ற பயம் பல உளவியல் அறிஞர்களுக்கு வந்திருக்கிறது.வீடுகளுக்கு வரும் நண்பர்களோடு, உறவினர்களோடு தொலைக்காட்சி பார்த்தபடி, கைபேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பியபடி, பார்த்தபடி தான் உரையாடுகிறோம்.பயணங்களின் போது காதுகளில் ஏதவது ஒயரைச் செருகி எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம்.உரையாடுதல் என்ற கலைக்கு சாவு மணி அடிக்கிறோம்.கேட்க, பேச மறந்து விட்டவர்கள் போலாகிவிட்டோம்.
நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய, உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட.. முத்துலிங்கம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வெவ்வேறு விதமான தகவல்களும் இலக்கிய அனுபவங்களும் அவருக்கே உரித்தானவை.அவரின் “ குதிரைக்காரன் “ என்ற சமீபத்திய தொகுப்பிற்கான ( சென்றாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான ஆனந்தவிகடன் விருதை அந்நூல் பெற்றது ) முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.: “ நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது எத்தனை சுலபம். நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101 வது குதிரையை அடக்குவது எத்தனை சுலபம். 100 ரோஜாக்கன்று நட்டு வளர்த்த ஒருவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்த்து எடுப்பது எத்தனை சுலபம். ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. 100 சிறுகதைகள் எழுதிய ஒருவருக்கு 101 வது சிறுகதை எழுதுவது அத்தனை எளிதாக இருப்பதில்லை. உண்மையில் மிகவும் கடினமானது. அது ஏற்கனவே எழுதிய நூறு கதைகளில் சொல்லாதது ஒன்றைச் சொல்ல வேண்டும். மற்றவ்ர்கள் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்க வேண்டும். “ புதிதைச் சொல். புதிதாகச் சொல் “ என்பார்கள். இப்பேட்டிகளிலும் புதிது புதிதாக விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பேட்டி எடுத்தவர்கள் பாக்யவான்கள்.
முத்துலிங்கம் அவர்களின் இப்பேட்டிகளையும் உரையாடல்களைய்ம் கவனிக்கிற போது கட்டுப்பெட்டியான குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை எதிலும் குறுக்கிடாமல் , கேள்விகள் கேட்காமல் கண்களை சிமிட்டாமல் கேட்கும் பெண்களைப் போல் இருக்க ஆசை வருகிறது.
(விலை ரூ 120. கயல்கவின் பதிப்பகம் , சென்னை 9944583282)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.