இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த குருதேவ என அழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் பல்முகத் தன்மை கொண்டவராக விளங்கின கவிஞர், ஓவியர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள். இது அவரின் 150 வது பிறந்த் தின நூற்றாண்டு...(2012) தாகூரின் கவிதைகள் பெருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் பேசப்பட்டவை. இந்தியக் கவிதை மரபில் வியாசரும், கபிரும், ராம்பிரசாத்தும் அவரை வெகுவாக பாதித்திருக்கிறார்கள். வங்காள நாட்டுப்புற இசையோடு தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்ட பின்புதான் அவரது கவிதை உலகும் இசையறிவும் பல சிகரங்களை அடைந்தன. இயற்கையும் மனித உணர்வுகளுமான வெளிப்பாடுகள் அவரை, அவர் கவிதைகளை இன்னும் செழுமையாக்கின. முப்பதுகளில் நவீனத்துவமும், யதார்த்தமும் இணைந்த பரிசோதனை முயற்சிகளாக வங்காள இலக்கியத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரின் கீதாஞ்சலி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
அரசியலிலும் தீர்க்கமான கருத்துக்களைக் கொண்டு அவற்றை பதிவு செய்திருக்கிறார் தாகூர். சாந்தி நிகேதனில் காந்தியும் கஸ்தூரிபா அவர்களும் தங்கியிருந்தபோது அவரின் அரசியல் கருத்துக்கள் இந்திய சுதந்திரம் குறித்தனவாக வலுப்பெற்றன. ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தையும், பிரிட்டிஸ் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார், இந்திய தேசியத்தின் ஒற்றுமை குறித்து வலியுறுத்தினார். குருட்டுத்தனமான புரட்சியோ, சுதந்திரமோ அல்லாமல் நிலையான உபயோகமுள்ள கல்வி மூலமான விடுதலையே இந்தியாவை வளப்படுத்தும் என்று உறுதியாக நம்பினார். இந்திய விடுதலைப் போராட்ட வித்துக்களாக அவரின் பாடல்களை வடிவமைத்துக் கொண்டார் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்குத் தந்த கௌரவங்களையும் பட்டங்களையும் துறந்தார். தாகூரின் இரண்டு முக்கிய அரசியல் செய்திகளை உள்ளடக்கிய கவிதைகளாக Where the mind is without fear என்பதையும், it they answer not to try call, walk alone (Ekla chalok) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அரசியல் கருத்துக்களும் ஆன்மீக எண்ணங்களும் அதற்கு அடிப்படையாக சாந்தி நிகேதனை நிறுவ வழிவகுத்தது. கலிபோர்னியாவிற்கு 1917ல் சென்றிருந்த போது புதுவகை பல்கலைக் கழக அமைப்பை உலக மனித குல விஷயங்களுக்கானதாகவும், இந்திய மரபுக் கல்வி இணைந்ததாகவும் அமையத் திட்டமிட செய்தது. விஸ்வபாரதி என்ற கல்விகழகமாக அது நிலை பெற்றது.
தாகூரின் நாவல்கள் பெருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப்புகழ் பெற்றன. எட்டு நாவல்களை எழுதியிருக்கிறார். அவரின் Ghare Baire (வீடும் வெளி உலகமும்) ஒரு ஜமிந்தாரின் பார்வை மூலமாக இந்திய தேசிய எழுச்சியையும், தீவிரவாதத்தையும், சுதேசிய இயக்கங்களில் மத வாத பாதிப்புகளையும் வெளிக்காட்டிய நாவல். இந்து முஸ்லீம் கலவரப் பின்னணியும் பெரும் பங்கு வகித்தது. இந்திய அடையாளத்தையும், தனித்தன்மையையும் அவரின் "கோரா" நாவல் பலவகைகளில் கேள்விக்குறியாக்கியது. "குமுதினி" நாவல் ஒரு குடும்ப சூழலில் ஒரு பெண்ணின் நிலையை சித்தரிக்கிறது. குடும்ப சிதைவை மீறி அவள் வெளிவர வேண்டிய சூழலை காட்டுகிறா பெண் மனத்தின் எழுச்சியைக் காட்டுகிறார். "சோக்கர் பாலி' நாவல் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஒரு விதவைப் பெண் படும் சிரமங்களையும், அவளின் லௌகீக வாழ்க்கையின் சிரமங்களைக் கடந்து இந்திய மரபின் உச்சமான துறவும், ஆன்மீக உலகமும் அவளைக் கொண்டு செல்வதை சித்தரிக்கின்றன அவரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல நாவல்கள் திரைப்படங்களாகி தாகூரின் படைப்பு இன்னும் விரிவாகச் சென்றடையச் செய்தன.
இசையமைப்பதில் தீவிரமாய் ஈடுபட்டிருந்த தாகூரின் பல கவிதைகளும், நாடகங்களும், நாவல் சிறுகதைகளின் சில பகுதிகளும் பாடல் வடிவமாகின அவராலேயே. இந்துஸ்தானி இசையின் துமுரி பாணி என்பது அவரை ஆரம்பத்தில் வெகுவாக பாதித்தது. குடும்ப நிகழ்வுகளிலும், சமய திருவிழாக்களிலும், கிராம நிகழ்ச்சிகளிலும் இன்னும் தாகூர் இசையமைத்த பல பாடல்கள் பாடப்பெறுவது அவரது இசையின் நிரந்தரத் தன்மையைக் காட்டுவதாகும். , புத்ததேவ் தாஸ் குப்தா, அம்ஜன் அலி கான் போன்றோரின் இசைப் படைப்புகளின் தாக்கங்களை அவரின் பிற்காலப் படைப்புகளில் காணலாம் பங்களாதேசின் அமர் சோனார் பங்களாவும் இந்தியாவின் ஜனகணமனாவும் என்று இரு நாட்டின் தேசிய கீதங்களை உருவாக்கியதில் அவரின் பங்கு தனித்தன்மையானதாகும்.
பதினாறு வயது முதல் நாடகங்களில் அக்கறை கொண்டிருந்தார். இருபது வயதில் "வால்மீகி பிரதிபா" என்ற நாடகத்தினை எழுதினார். கொள்ளைக் காரனான வால்மீகி சரஸ்வதியின் அருள் பெற்று ராமாயணத்தை இயற்றியதைப் பற்றின நாடகம் அ. அவரின் Dak Ghan (தபால் அலுவலகம்) என்ற நாடகம் ஆன்மீக விடுதலையைப் பற்றி மரணத்தை முன் வைத்து எழுதப்பட்டதாகும். இரண்டாவது உலகப் போரின் போது பல வெளிநாடுகளில் இந்த நாடகம் நடிக்கப்பட்டது என்பது அதன் சிறப்பை உணர்த்தும். தத்துவார்த்தம் மற்றும் குறியிட்டு வெளிப்பாடுகள் புது பரிமாணங்களை அவரின் படைப்புகளுக்குத் தந்தன. அவரின் Chandalike (தீண்டத்தகாத பெண்) என்ற நாடகம் ஆதிவாசிப் பெண் ஒருத்தியிடம் கௌதம புத்தரின் சீடரான ஆனந்தா நீர் கேட்டுப் பெறுவதை முன் வைத்து பல தத்துவார்த்தக் கேள்விகளை உருவாக்கிய நாடகமாகும்.
சுமார் நூறு சிறுகதைகளை எழுதியிருக்கிறார் தாகூர். 1891 முதல் 1895 வரையிலான "சாதானா"காலத்தில் தாகூரின் பெரும்பான்மையான சிறுகதைகள் வெளியாயின. இந்த சமூகத்தில் சாதாரண நிலை மக்களின் பிரச்னைகளை அவற்றில் வெளிக் கொணர்ந்தார். இந்திய தத்துவார்த்த நிலையும், தேடலுமாய் கதைகளை அமைத்துக் கொண்டார்.
சாருலதா போன்ற சர்ச்சைக்குரிய கதைகளை எடுத்துக் கொண்டு சத்யஜித்ரே போன்ற திரைப்பட இயக்குனர்கள் திரைப்படங்களாக்கி இருக்கின்றனர். அவரின் "சோக்கர் பாலி" சமீபத்தில் இந்தியிலும் படைப்புகளின் அமரத்துவத் தன்மைக்கு சாட்சியாக விளங்குபவை தாகூரின் படைப்புகள். 1941ல் சுதந்திரத்திற்கு முன்பே மறைந்து விட்ட தாகூரின் படைப்புகள் சுதந்திர இந்தியா பற்றின கனவுகளையும் வெளிப்பாட்டு சித்திரங்களையும் கொண்டிருந்தன. தனி நூல்களும் தொகுப்புகளுமாக 500 புத்தகங்கள் அவர் பெயரில் உள்ளன. ரொம்பகாலம் அவர் படைப்புகள் காப்புரிமை சாந்தி நிகேதனிடம் இருந்த்து. 2001க்குப் பிறகே பொதுவுடமையாக்கப்பட்டு பல பதிப்பகத்தார்களால் வெளியிடப்பட்டன. தாகூர் 500 நூல்கள் மூலம் இன்னும் பல 500 ஆண்டுகளாவது வாழ்வார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.