தொழில் நுட்பம் பற்றி அலசுவதன்முன் அது எழுந்த கால எல்லை, எழவேண்டிய காரணம், அதனால் ஏற்பட்ட நன்மைகள், அதன் தற்போதைய வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பார்ப்பது உசிதமென மனம் அவாக் கொள்கின்றது. கதிரவன் 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு நட்சத்திரம் தீப்பிடித்து எரிந்து உருவாயிற்று என்பது வானூலாரின் கணிப்பாகும். அதன்பின் கதிரவன் குடும்பத்திலுள்ள ஒன்பது (09) கோள்கள் தோன்றின. அதில், மக்கள் வாழக்கூடிய ஒரேயொரு கோளான பூமியானது 454 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள்.
பூமிக்குரிய ஒரு நிலா 453 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள் தோன்றத் தொடங்கின. முதல் மனிதன் 20 இலட்சம் ஆண்டளவில் தோன்றினான். மேலும், இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் அமைப்பான புது நாகரிகப் பண்பான மனிதன் தோன்றினான். இன்று பூமியில் ஓரறிவிலிருந்து ஆறறிவுடைய உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் ஓரறிவு உயிர்களிலிருந்து ஐந்தறிவு உயிர்கள் வரையானவை ஒரே விதமான வாழ்க்கை முறைகளை என்றும் நடாத்திக் கொண்டு, எதுவித முன்னேற்றமுமின்றி மாண்டு மடிவதை எம்மால் பார்க்கமுடிகின்றது.
மனிதன் தோன்றிய பின்தான் பூமியானது உலகம் ஆயிற்று. இதற்கு அவனில் அமைந்த ஆறாம் அறிவு கைகொடுத்தது. அன்றிலிருந்து உலகம் வளர்ந்த வண்ணம் உள்ளது. இன்று மனிதனே உலகை ஆளுகின்றான்.
பழைய தொழில் நுட்பம்
அன்றே நீரின் முக்கியத்தை அறிந்து கொண்ட ஆறறிவுடைய மனிதன் ஆறு, நதி, நீரோடை, குளம் ஆகியவற்றிற்கு அருகில் கொட்டில் கட்டி வாழத் தொடங்கினான். பயிர், கொடி, செடி, மரம், தாவரம் ஆகியவற்றை நாட்டித் தண்ணீர் ஊற்றி வளர்த்து இலை, காய், கனி, கிழங்கு, நெல்லு ஆகியவற்றை எடுத்து உண்டு வாழ்ந்து வந்தான்.
இவ்வாறான கொட்டில்தான் பின்னாளில் அவன் கல்வீடு அமைப்பதற்கு உந்து கோலாய் அமைந்துள்ளதென்பது புலனாகின்றது. அன்றொருநாள் பூமியை ஆழக் குடைந்;த பொழுது நீர் ஊறி வருவதைக் கண்டு மகிழ்ந்து, அந்த இடத்தைப் பெருங்கல்லால் அடுக்கி ஒரு கிணறு அமைத்தான். அதில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் குடித்தான்; சமையல் செய்தான்; குளித்தான்; தோட்டம் செய்தான்; வாழ வழியும் கண்டான்.
இன்று குழாய்க் கிணறுகள் எழுந்ததற்கு அன்றுள்ள கிணறுகள்தான் முன்னோடியாய் அமைந்துள்ளன எனலாம்.
அதன்பின், அவன் நாட்டுப் பகுதிக்கும், கிராமங்களுக்கும் சென்று கிணறுகளை வெட்டி, வீடுகளையும் கட்டி, வயல் தோட்டம் செய்து வாழ்ந்து வந்தான். தொடக்கத்தில் வாளியில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றில் விட்டுத் தண்ணீர் அள்ளிப் பாவித்து வந்தான். அதிலுள்ள சிரமத்தையும் அறிந்து கொண்டான்.
நாளடைவில், கிணற்றுக்கருகில் ஓர் ஆடுகால் அமைத்து, ஒரு துலாவை அதில் மாட்டி, அதனால் சுலபமாகத் தண்ணீர் அள்ளப் பழகிக் கொண்டான். அத்தோடு கிணற்றுக் கட்டில்மேல்; ஒரு பத்தடிப் பீலி ஒன்றை வைத்து, அதன் மறுமுனையை நிலத்தில் வைத்து, அதிலிருந்து மண்ணினால் ஒரு நீண்ட வாய்க்கால் அமைத்து, கிணற்றிலிருந்து நீரை அள்ளி அந்தப் பீலியில் ஊற்றினால,; நீரானது வாய்க்கால் வழியோடி நீண்ட தூரத்திலுள்ள செடி, கொடி, பயிர்களுக்குப் போய்ச் சேருவதைக் கண்டு ஆனந்தப்பட்டான் கமக்காரன். அன்றிலிருந்து அவன் வருவாய் பெருகியது.
நாட்டின் தொழில் நுட்பம் அன்றே தொடங்கி விட்டது. ஆனால் அவனுக்கு அது ஒரு தொழில் நுட்பம் என்று அன்று தெரிந்திருக்கவில்லை.
தமிழன் பேரவாக் கொண்டவன். என்றும் சிந்தித்துத் தொழில்படுபவன். முதலில் தன் வயல், தோட்டம் ஆகியவற்றை மண்வெட்டி கொண்டு கொத்திப் பண்படுத்திப் பயிர் செய்து வந்தான். பின்பு அவன் ஒரு நுகம், ஒரு கலப்பை செய்வித்து, நுகத்தைத் தன் இரு மாட்டின் கழுத்தின் மேல் கட்டீ, கலப்பையை (ஏர்) நுகத்தில் தொடுத்து, மாடுகளை நடக்கச் செய்து, கலப்பையை அமத்தி நிலத்தை உழுது பண்படுத்தி நெல், சிறுதானியங்களை விதைத்து, அறுவடை செய்து வாழ்ந்தான். ஏர் உழவு அவன் அன்று கண்;ட ஒரு தொழில் நுட்பமாகும்.
இற்றைய உழவு இயந்திரம், இயந்திரக் கலப்பை ஆகியவை உழுது கொண்டும், இயங்கிக் கொண்டும் இருப்பதற்கு அன்றைய கலப்பையும், உழவு மாடும்தான் ஆற்றுப்படுத்தி நின்றுள்ளமை தெளிவாகின்றது.
அறுவடைகளைச் சூடாக வைத்தான். அதை மிதித்து நெல்லை எடுப்பதற்கு, ஒரு களக்கட்டையைச் சூட்டருகில் நாட்டி, சுற்றிவரப் பாய்களை விரித்து, அறுவடைகளைச் சுற்றிவரப் பரவி, எட்டு அல்லது பத்து மாடுகளைத் (நடையன்) தொடுத்து, அவற்றை அறுவடைகளின்மேல் ஏற்றிக் களக்கட்டையில் கட்டிச் சுற்றிவர நடப்பிக்க நெல் (பொலி) உதிர்ந்து பாயில் சேர்ந்து விடும். அதன்பின் அவற்றைத் தூற்றி நெல்லை எடுத்து உண்டு வந்தான். இதுவும் அவன் அன்று கண்ட ஒரு தொழில் நுட்பமாகும். அத்தோடு தமிழன் நின்று விடவில்லை. பொலி தூற்றுவதற்கு வயல்வெளியில் போதிய காற்றடிக்க வேண்டும். காற்று அடிக்காத பொழுது தீ கொழுத்திக் காற்றை உண்டாக்கிப் பொலியைத் தூற்றினான். இதுவும் அவனின் இன்னொரு தொழில் நுட்பமாகும்.
அன்று மாட்டால் சூடு மிதுத்துத் தொழில் நுட்பத்தில் முதல்அடி எடுத்து வைத்தவன் கமக்காரன். அது இன்று பல அடிகள் எடுத்து வைத்து முதிர் நிலை அடைந்து உழவு இயந்திரமாகிக் குறைந்த நேரத்திலும், சொற்ப செலவிலும் சூடடித்துக் கொடுப்பதை நவீன தொழில் நுட்பம் என்று பெருமிதம் கொள்கின்றோம்.
வயலில் சூடு மிதித்தபின் நெல்லு, வைக்கோல் ஆகியவற்றைத் தலையில் சுமந்து கொண்டுதான் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்;பது வழக்கம். இதற்கும் அவன் ஒரு வழி கண்டு பிடித்தான். இரண்டு சில்லுகள் அமைந்த மாட்டு வண்டியை அமைத்தான். அத்துடன் இரண்டு மாடுகள் பூட்டக் கூடிய நுகத்தையும் அமத்தான். இவற்றால் ஒரு தரத்தில் பத்து முதல் பன்னிரண்டு மூட்டை நெல்லை வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். இன்னும் இந்த வண்டியால் ஒரு தரத்தில் ஒரு சூடு வைக்கக் கூடிய வைக்கோலையும் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். இந்த மாட்டு வண்டி முறையால் கமக்காரர்கள் மிகவும் நன்மை பெற்றனர்.
அன்றைய மாட்டு வண்டில் முறையைக் கைக்கொண்டு இன்றைய நவீன தொழில் நுட்ப முறையான இழுவை இயந்திரப் பெட்டி, சரக்கு வண்டி, உந்து வண்டி ஆகியவற்றைக் கண்டு பிடித்து உபயோகத்தில் நிறுத்தி, அவற்றால் மக்கள் பெரும் நன்மை அடைவதையும் காண்கின்றோம்.
நவீன தொழில் நுட்பம்
இனி, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பம் பற்றிச் சில கருத்துக்களைப் பார்ப்போம். நாட்டுக்குகந்த தொழில் நுட்பம் என்பது கருத்தியல் கொள்கை கொண்ட ஒரு இயக்கமாகும். இதை 'நடுத்தரமான தொழில் நுட்பம்' என்று முதலாவதாகக் கூறப்பட்டது. இதைப் பின்னாளில் (1962) 'பொருத்தமான தொழில் நுட்பம்' என்றழைத்தனர். இத் தொழில் நுட்பத்தைப் பொருளியல் ஆய்வாளரான டாக்டர் ஈ.எவ். ஸ்சுமாசர் (Dr. Ernst Friedrich “Fritz” Schumacher – 16.08.1911 – 04.09.1977) என்பவர் நிறுவியுள்ளார். இவர் பிரித்தானிய தேசீய நிலக்கரிச் சபையில் 20 ஆண்டுகளுக்குமேல் கடமையாற்றியுள்ளார். இத் தொழில் நுட்பம் மக்களைச் சார்ந்ததாக அமைய வேண்டுமென இவரும், இவருடன் சேர்ந்த தொழில் நுட்ப விற்பன்னர்களும் வற்புறுத்திக் கேட்டுள்ளனர். தொழில் நுட்ப இயக்கமானது வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வளர்ச்சியுறும் நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றது.
தொழில் நுட்பம் தொடர்பான ஒரு சிலவற்றை நிரல்படுத்திக் காண்போம். இவற்றால் பாமர மக்கள் பெரும் நன்மை பெறுகின்றனர்.
1) ஈருருளி:- பாமர மக்களுக்குரியது. செலவின்றி இதில் நீண்ட தூரத்துக்கும் சவாரி செய்யலாம்.
2) கையால் இயக்கும் நீர் விசைக்குழாய்:- இதனால் நீரைக் கிணற்றிலிருந்து எடுத்துப் பாவிக்கலாம். இதற்கொரு செலவும் இல்லை.
3) சூட்டடுப்பு:- மின்சாரம் பாவித்தால் சிறிய செலவு ஏற்படும். விறகு பாவித்தால் செலவில்லை.
4) சூட்டுத் தட்டு:- இதற்கு மின்சாரச் செலவுண்டு. இதை இடத்துக்கு இடம் எடுத்துச் சென்று பாவிக்கலாம்.
5) குளிர் காப்புப் பெட்டி:- இதற்குக் குறைந்த செலவான மின்சாரம் தேவைப்படுகின்றது.
6) பொற் இன் பொற் குளிர் காப்புப் பெட்டி:- இது ஆபிரிக்கக் கண்டுபிடிப்பு. மின்சாரம் இல்லாது பொருட்களைக் குளிராய் வைத்திருக்கும்.
7) கைத் தொலைபேசி:- தாம் போகுமிடங்களுக்கு எடுத்துச் சென்று கதைக்கக் கூடியது.
8) மின்னஞ்சல்:- உடனுக்குடன் செய்திகளை அனுப்பி உடன் பதில் பெறும் வசதிகள் உள. கூடிய செலவு ஏற்படும்.
9) சூரிய ஆற்றலில் எரியும் மின்விளக்கு:- மின்கலம் முழு மின்னாற்றல் ற்றால் மின்விளக்கு நான்கு மணித்தியாலம் எரியக் கூடியது.
மின்கலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பாவிக்கலாம்.
10) கணிணி:- வளர்சியடைந்த நாடுகளில் கணிணிப் பாவனை மிகக் கூடுதலாய் உள்ளது. கணிணி இல்லையெனில் உலகத் தொடர்புகள் இல்லையெனலாம். இதற்கு முதலும், மின்சாரச் செலவும் ஏற்படும்.
11) மடிக் கணிணி:- இதை எங்கு சென்றாலும் எடுத்துச் சென்று மடியில் வைத்துப் பாவிக்கலாம். இதற்கும் முதலும், மின்சாரச் செலவும் உள்ளது.
12) வலைத்தளம்:-இதில் பற்பல விடயங்களைப் பதிவு செய்து itj;Js;sdh;. nghத்தகங்களில் படிக்க வேண்டிய அத்தனை விடயங்களையும் இதில் படித்துப் பயன் பெறலாம்.
மகாத்மா காந்தி
பொருத்தமான தொழில்நுட்ப இயக்கத்தின் தந்தையென இந்தியக் கருத்தியற் கொள்கை கொண்ட தலைவர் மகாத்மா காந்தி கருதப்படுகின்றார். இக் கருத்துப்படிவத்துக்கு ஒரு பெயர் சூட்டப்படாது விட்டாலும், காந்தி அடிகள் கிராமிய மக்களுக்கான தொழில் நுட்பத்தை முன்வைத்து, அந்த மக்கள் தன்திற நம்பிக்கையுடையவர்களாக வரவேண்டுமென்று வாதாடிச் செயலாற்றினார். அவர் சிறுபான்மை மக்களுக்காக முன் நின்று தொழிற்பட்டார். அகில இந்திய நூற்பவர் சங்கத்தை 1925-ஆம் ஆண்டில் வறிய மக்களுக்காக நிறுவினார். அவர் 1935-ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அகில இந்தியக் கிராமியத் தொழிற்துறைச் சங்கத்தை நிறுவினார்.
இவ்விரு சங்கங்களும் கிராமிய அடிப்படைப் பொருத்தமான தொழில் நுட்பச் சங்கங்களாகச் செயற்படத் தொடங்கின. இவ்விரு சங்கங்களிலும் பொது மக்கள் அங்கத்தினராகச் சேர்ந்து, தகுந்த ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெற்று, தமது குடிசைகளில் கைத்தறி அமைத்து, நூல் நூற்றுச் சேலை நெய்து, தம் வாழ்வியலைச் சீராக நடாத்தி வருகின்றனர். மேலும் காந்தி அடிகள் மக்களின் சூழல், சுகாதாரம் ஆகியவற்றிலும் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மக்களுடன் சேர்ந்து மலசல கூடங்களைத் துப்பரவாக்கி, அவற்றை என்றும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுத்து, மக்களையும் உற்சாகப்படுத்தி வந்துள்ளார்.
வளர்ச்சிப் போக்கு
1966-ஆம் ஆண்டிலிருந்து 1975-ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் உள்ள புதிய பொருத்தமான தொழில்நுட்ப நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் கணக்கிட்டால் அது முந்திய ஒன்பது வருடங்களிலும் பார்க்க மூன்று மடங்கு கூடியதாக இருந்துள்ளது. 1977-ஆம் ஆண்டின் தொழில்நுட்பக் கட்டளைச்சுவடியின்படி 680 நிறுவனங்கள் இருந்துள்ளன. இது 1980-ஆம் ஆண்டில் 1,000 நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. பொருத்தமான தொழில் நுட்பங்களை வளர்ச்சியடைந்த நாடுகளிலும் செயல்முறைப் படுத்தப்பட்டது. 1970-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆற்றல் நெருக்கடியால் பொருத்தமான தொழில் நுட்பத் தேசிய மையம் ஒன்றை 1977-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கக் கூட்டரசின் சட்டமாமன்றம் தொடக்கப் பணமாக மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களைக் ($ 3 million) கொடுத்துதவியது.
இந்த மையம் குறைந்த வருவாயுள்ள சமுதாயத்தினருக்குத் தொழில் நுட்ப அறிவுரைகளையும், செயல் முறைகளையும் அளித்து, அவர்கள் வாழ்க்கை முறையில் மேம்படுத்த உதவியது. ஆனால் 1981-ஆம் ஆண்டளவில் மையத்துக்குரிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் இந்த மையம், அமெரிக்க ஆற்றல் விவசாய இலாகாவுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியது. ஆனால், 2005-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசும் மையத்துக்குரிய கொடுப்பனவுகளை நிறுத்திக் கொண்டது.
துறைச்சொல்
தொடக்கத்தில் எல்லாத் தொழில் நுட்பங்களையும் 'பொருத்தமான தொழில் நுட்பம்' என்ற பெயரில் அடக்கிக் கூறி வந்தனர். நாளடைவில் தொழில் நுட்பங்கள் விரிந்து, பரந்து, கிளை எறிந்து பற்பல துறைகளில் இயங்கத் தொடங்கின. 'நடுத்தரத் தொழில் நுட்பம்' என்பதையும் இப்பொழுது 'பொருத்தமான தொழில் நுட்பம்' என்பதின் ஒரு பகுதி என்று கூறுகின்றனர். இந்நிலையில் பொருத்தமான தொழில் நுட்பம் என்ற ஒரு குடையின்கீழ் அடங்கும் வேறு வகையான தொழில் நுட்பங்களையும் பின்வருமாறு நிரல்படுத்திக் காண்போம்.
(1) முதலீட்டுச் சேமிப்புத் தொழில் நுட்பம், (2) ஊதியம் முனைப்பிலான தொழில் நுட்பம், (3) ஒன்றுவிட்டு ஒன்றான தொழில் நுட்பம், (4) தன்னுதவித் தொழில் நுட்பம், (5) கிராமிய மட்டத் தொழில் நுட்பம், (6) சமுதாயத் தொழில் நுட்பம், (7) முன்னேற்றத் தொழில் நுட்பம், (8) நாட்டுப் பழங்குடி சார்ந்த தொழில் நுட்பம், (9) மக்களின் தொழில் நுட்பம், (10) பொறிவலாளர் தொழில் நுட்பம், (11) மாற்றி அமைக்கத்தக்க தொழில் நுட்பம், (12) சிறு முதலீட்டுத் தொழில் நுட்பம், (13) எளிய தொழில் நுட்பம், என்பனவாம்.
மேலும் பறை மேளம், தவில், நாதசுரம், யாழ், செங்கோட்டி யாழ், புல்லாங்குழல், வீணை, மத்தளம், கடம், தம்புறா ஆகியவற்றையும் தொழில் நுட்பத்தைப் பாவித்துத் தமிழன் கண்டுபிடித்து அவற்றின் ஒவ்வொன்றின் இசையை மீட்டு, அதில் மூழ்கி, மக்களையும் மூழ்க வைத்து, தம் கலை, கலாசாரத்தையும் கட்டிக்காத்து வருவதை நாம் மிகவும் மெச்ச வேண்டும்.
இன்னும் தொலைபேசி, மகிழூந்து, பேருந்து, உந்துருளி, தொலைக்காட்சி, தொலைநகல், விமானம், செங்குத்தாக மேலெழுந்து இறங்கவல்ல திருகு வானூர்தி, பீற்றுவளி விசையால் இயங்கும் விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், கைத்துப்பாக்கி, துப்பாக்கி, எறிகணை, கண்ணி வெடி, அணுகுண்டு, ஏவுகணை போன்றவற்றின் உருவாக்கமும் தொழில் நுட்பத்தைச் சார்ந்ததாகும்.
தொழில் நுட்பம் மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் ஆசையும், விடாமுயற்சியும் இதற்கு உறுதுணையாய் அமைந்துள்ளன. தொழில் நுட்பத்தால் ஆக்கமும் உண்டு, அழிவும் உண்டு. எனவே இத் தொழில் நுட்பத்தை ஆக்கக் கோணத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இவ்வண்ணப் பிரயோகம் நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் நன்மை பயக்கும் என்பது திண்ணம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.