பரந்து விரிந்த எல்லையற்ற பெரும் வெட்டவெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து குதூகலமாகப் பறந்து திரிந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (Uranus – யுறெனஸ்), சேண்மம் (Neptune – நெப்டியூன்), சேணாகம் (Pluto – புளுடோ) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. இதில் சூரியன் சுமார் 460 கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமி சுமார் 457 கோடி (457,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலா சுமார் 453 கோடி (453,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும் அறிவியல் கூறுகின்றது. மேற்கூறிய ஒன்பது கோள்களில் பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக் கோளில் சுமார் 400 கோடி (400,00,00,000) ஆண்டளவில் ஒரு கலத்தைக் கொண்ட உயிரினமான அணுத்திரண்மம் (Molecule) முதன்முதலாகத் தோன்றி உயிர் மலர்ச்சி (Evolution of Life) முறையை ஆரம்பித்தது. இதையடுத்துப் புல், பூண்டு, செடி, கொடி, தாவரம், மரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு ஆகிய ஓரறிவிலிருந்து ஐயறிவுவரையான உயிரினங்கள் தோன்றியபின், அவற்றின் உச்சமாக ஆறறிவு படைத்த மனித இனமான ஆண், பெண் ஆகிய இருவரும் இரண்டு இலட்சம் (2,00,000) ஆண்டளவிற் தோன்றி, பூமியில் பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களுடன் இற்றைவரை தமது ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்தி வருகின்றனர்.
ஆண், பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மயங்கி நிற்றான். பெண், ஆணைப் பார்த்து அவன் திருவுருவில் மருண்டு நின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் நாடி வந்து, ஈர்த்து நின்று, அன்பு மழை சொரிந்து, வாழ்வியலில் இறங்கி, தம் இன விருத்தியைப் பெருக்கி, உலகை உய்வடையச் செய்து ஆனந்தப்படுவர்.
இயற்கையிலேயே ஆண்களை விஞ்சிய அழகு படைத்தோர் பெண்களாவர். பெண்ணின் பாதாதிகேசம் வரையான பாதம், கால்விரல், கால், தொடை, இடுப்பு, உடல், கை, கைவிரல், தோள், கழுத்து, நாடி, வாய், உதடு, கண், மூக்கு, செவி, கன்னம், நெற்றி, தலை, கூந்தல் ஆகிய ஒவ்வொரு உறுப்புகளையும் தொட்டுச்சென்று பாவிசைத்த பெருமைக்குரிய புலவர் குழாம் சங்க இலக்கியங்களில் நிரம்பி வழிகின்றனர். இவர்களால் பெண்கள் மேலும் பெருமையடைகின்றனர்.
இனி, சங்க இலக்கியங்களில் பெண் கூந்தற் பெருமை பேசும் பாங்கினைப் பார்ப்பதுதான் இக் கட்டுரையின் நோக்காகும்.
ஆண்கள் தமது தலைமுடியை நீளமாக வளரவிடாது இடைக்கிடை வெட்டித் தணித்துக் கொள்வர். ஆனால் பெண்கள் அதிலும் தமிழ்ப் பெண்கள் தம் கூந்தலை வெட்டாது நீளமாக வளர்த்து வருவர். இதற்காக அவர்கள் இயற்கையான பச்சிலைகளையும் பாவித்துச் சிரமப் பட்டுத் தம் கூந்தலை வளர்த்து அகிற்புகைத் தூபமும் காட்டித் தூய்மை செய்திடுவர். இன்னும், அவர்கள் தம் கூந்தலைத் தம் உயிரினும் மேலாக மதித்துப் பேணிக் காத்திடுவர்.
அகநானூறு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் பெண் கூந்தற் பெருமை கூறும் பாங்கினை ஈண்டுக் காண்போம். 'கொடுநுண் ஓதி' (9-11) –வளைந்த பெண் கூந்தல் என்றும், 'பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி' (9-22) – பிடியானையின் துதிக்கை போன்ற அவள் பின்னலிட்டுத் தொங்கும் கூந்தலைத் தீண்டி- என்றும், 'நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு' (36-11) என்றும், 'நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து' (39-22) என்றும், 'பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை' (43-11) என்றும், 'தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர்' (58-5) என்றும், 'நாறுஐங் கூந்தல்' (65-18) – மணம் நாறும் ஐவகைக் கூறுபாடமைந்த கூந்தல்- என்றும், 'பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க' (86-16) என்றும், 'தாழ்இருங் கூந்தல்நம் காதலி' (87-15) என்றும், 'இருள்மென் கூந்தல்' (92-13) என்றும், 'இரும்பல் கூந்தல்' (94-14), (136-29), (373-10) என்றும், 'சில் ஐங்கூந்தல்;' (123-6) – சிலவாகிய ஐந்து பகுதியைப் பொருந்திய கூந்தல்- என்றும், 'தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல்' (197-10) என்றும், 'சுரிவணர் ஐம்பால் நுண்கேழ்' (223-12,13) – சுரிதலையும், வளைவுகளையும், ஐவகையாக முடித்தலையும், மென்மையினையும் பொருந்திய கூந்தல் - என்றும், 'நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்' (266-4) என்றும், 'கோதை இணர, குறுங்கால், காஞ்சிப் போதுஅவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்' (296-1,2) என்றும், 'காந்தள் நாறும் நறுநுதல், துணைஈர் ஓதி-கூந்தல்' (338-8) என்றும், 'இமையக் கானம் நாறும் கூந்தல்' (399-2) என்றும் பெண் கூந்தல் அழகு பற்றிக் கடைச் சங்க நூலான அகநானூறு பேசுகின்றது.
புறநானூறு
'இரும்பல் கூந்தல் மடந்தையர்' (120-17) என்றும், 'ஒலியிருங் கதுப்பின் ஆயிழை' (138-8) என்றும், 'விரை வளர் கூந்தல்' (133-4) என்றும், 'ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்' (146-9) என்றும், 'நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்' (147-6) என்றும், 'நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழ' (247-6) என்றும், 'கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி' (250-4) என்றும், 'மனையோள் உளரும் கூந்தல் நோக்கி' (260-3,4) என்றும், 'நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்' (276-1) என்றும், 'குமரி மகளிர் கூந்தல் புரைய' (301-2) என்றும், 'விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட' (302-3) என்றும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு பெண் கூந்தற் பெருமை பேசி நிற்கின்றது.
குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை நூலில் பெண் கூந்தல் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளையும் காண்போம். 'அரிவை கூந்தலின்' (2-4) என்றும், 'மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல்' (19-4,5) என்றும், 'நன்னெடுங் கூந்தல்' (23-2) என்றும், 'நரந்த நாறும் குவைஇருங் கூந்தல்' (52-3) என்றும், 'இரும்பல் கூந்தல் இயலணி கண்டே' (165-5) என்றும், 'இவள் ஒலிமென் கூந்த லுரியவா நினக்கே' (225-6,7) என்றும், 'மலர் நாறும் நறுமென் கூந்தல்' (270-7,8) என்றும், 'குவளை நாறும் குவையிரும் கூந்தல்' (300-1) என்றும், 'நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்' (384-2) என்றும், 'நீர்வார் கூந்தல் ஓரை மகளிர்' (401-2,3) என்றும் குறுந்தொகைப் புலவர் பெண் கூந்தற் பெருமை பேசுகின்றனர்.
கலித்தொகை
'வண்டரற்றுங் கூந்தலாள்' (கடவுள் வாழ்த்து–வரி10) என்றும், 'பல்லிரும் கூந்தல்' (முல்லைக்கலி- 01-41,42) என்றும், 'மாரிவீழ் இருங்கூந்தல்' (பாலைக்கலி- 13-4) என்றும், 'நரந்தம்நாறு இருங்கூந்தல்' (குறிஞ்சிக்கலி- 18-5) என்றும், 'மணம்கமழ் நறுங்கோதை மாரிவீழ் இருங்கூந்தல்' (குறிஞ்சிக்கலி- 24-2) என்றும், 'நீ நாறுஇருங் கூந்தலார் இல்செல்வாய்' (மருதக்கலி- 30-1,2) என்றும், 'எம் பல்லிரும் கூந்தல்', 'நாறிரும் கூந்தல் பொதுமகளிர்' (முல்லைக்கலி- 1-41,42,48) என்றும், 'நெட்டிருங் கூந்தலாய்!' (முல்லைக்கலி- 5-57) என்றும், 'சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல்' (நெய்தற்கலி- 29-19) என்றும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் கூந்தல் அழுகு பேசப்படுவதைக் காண்கின்றோம்.
ஐங்குறுநூறு
பதினெண் மேற்கணக்கு நூல்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில் 'தோளும் கூந்தலும் பல பாராட்டி' (178-1) என்றும், 'மகளிர் நீர்வார் கூந்தல் உளரும் துறைவ!' (186-1,2) என்றும், 'கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்' (191-2) என்றும், 'கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல் ஆய்தொடி' (196-1,2) என்றும், 'முகம்புதை கதுப்பினள்' (197-2) என்றும், 'இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை' (231-2) என்றும், 'போதார் கூந்தல் இயலணி அழுங்க' (232-1) என்றும், 'கொடிச்சி கூந்தல்' (300-1) என்றும், 'பல்லிருங்கூந்தல் மெல்லிய லோள்' (308-1) என்றும், 'போதார் கூந்தல் முயங்கினள் எம்மே' (417-4) என்றும், 'முல்லை நாறும் கூந்தல்' (446-1) என்றும் பலவாறாகப் பெண் கூந்தல் மணம் வீசி எம்மைப் பரவசப்படுத்துகிறது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை என்ற நூலில் மாதர் கூந்தற் பெருமை பேசும் பாங்கினையும் காண்போம். 'நன்னெடுங் கூந்தல் நரையொடு மடிப்பினும்' (10-3) என்றும், 'தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல்' (20-3) என்றும், 'வடிக்கொள் கூழை ஆயமோடு ஆடலின்' (23-2) என்றும், 'மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்' (52-1,2) என்றும், 'கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும்' (84-1) என்றும், 'தேன்கமழ் ஐம்பால் (கூந்தல்) பற்றி' (100-4) என்றும், 'அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்' (110-6) என்றும், 'பின்னிருங் கூந்தலின் மறையினள்' (113-8) என்றும், 'அரிசில்அம் தண்அறல் அன்னஇவள் விரிஒலி கூந்தல்' (141-11,12) என்றும், 'ஐம்பால் வகுத்த கூந்தல்' (160-6) -ஐம்பகுதியாக வகுத்து முடிக்கப்பெற்ற கூந்தலைக் கொண்டவள்- என்றும், 'நாறிரும் கதுப்பினெம் காதலி' (250-8) என்றும், 'குவளை நாறும் கூந்தல்' (262-7) என்றும், 'கலிமயிற் கலாவத் தன்ன இவள் ஒலிமென் கூந்தல்' (265-8,9) என்றும், 'தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல்' (270-2,3) என்றும், 'புறந்தாழ்வு இருண்ட கூந்தல்' (284-1) என்றும், 'ஒலிவரும் தாழிருங் கூந்தல்' (295-2) என்றும், 'இரும்போது கமழுங் கூந்தல்' (298-11) என்றும், 'தேமறப் பறியாக் கமழ்கூந் தலளே' (301-9) என்றும் பல்வேறுபட்ட நிலைகளில் பெண்கள் கூந்தல் பறந்த வண்ணமுள்ளன.
பதிற்றுப்பத்து
'இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்' (18-4) – சுருண்டு வளைந்த, அடர்ந்து தழைத்த, ஐந்து பிரிவாகப் பின்னிய ஐம்பால் கூந்தல்- என்றும், 'கூந்தல் விறலியர்!' (18-6) என்றும், 'வண்டு பட ஒலிந்த கூந்தல்' (31-23,24) என்றும், 'கவரி முச்சி, கார் விரி கூந்தல்' (43-1) என்றும், 'வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்' (46-4) என்றும், 'வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர், வரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து' (50-18,19) என்றும், 'தேம் பாய் கூந்தல்' (54-5) என்றும், 'சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல்' (74-3) என்றும், 'தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்' (81-27) என்றும், 'தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்தல்' (89-15,16) என்றும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பெண் கூந்தல் பற்றிப் பரவலாகப் பேசப்படும் பாங்கு இவையாகும்.
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் 'மீப்பால் வெண்துகில் போர்க்குநர், பூப்பால் வெண்துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்' (10-79,80) எனவும், 'கொண்டிய வண்டு கதுப்பின் குரலூத' (10-120) எனவும், 'கார்கொள் கூந்தற் கதுப்பமைப் போரும்' (12-15) எனவும், 'பன்மணம் மன்னு பின்னிருங் கூந்தல்' (19-89) எனவும், 'புயல்புரை கதுப்பகம் (கூந்தல்) உளரிய வளியும்' (21-49) எனவும், 'காரணி கூந்தல் கயற்கண் கவிரிதழ்' (22-29) எனவும் பாவிசைத்துப் பெண் கூந்தல் அழகு காட்டும் பாவலர் நுகர்வுத் திறன் காண்கின்றோம்.
சிலப்பதிகாரம்
'போதொடு விரி கூந்தல் பொலன்நறுங் கொடி அன்னார்' (1-60) என்றும், 'பல்லிருங் கூந்தல் சின்மலர் அன்றியும்' (2-65) என்றும், 'தாழிருங்கூந்தல் தையாள்', 'வாரொலி கூந்தல்' (2-80,84) என்றும், 'மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப' (4-56) என்றும், 'தாமரைச் செவ்வாய்த், தண் அறல் கூந்தல்' (4-74) என்றும், 'ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல்' (5-2) என்றும், 'நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப், புகையின் புலர்த்திய பூமென் கூந்தல்' (6-79,80) என்றும், 'தளர்ந்த சாயல், தகைமென் கூந்தல்' (8-100) என்றும், 'நறும்பல் கூந்தல்' (10-39) என்றும், 'பொலங்கொடி மின்னின் புயல் ஐங்கூந்தல்' (11-109) என்றும், 'நறம்பல் கூந்தல்', 'குறுநெறிக் கூந்தல்', 'கணவனொடு இருந்த மணமலி கூந்தல்' (12- 3,23,46) என்றும், 'போதவிழ் புரிகுழல் பூங்கொடி! நங்கை!', 'குறுநெறிக் கூந்தல்' (13-81,84) என்றும், 'விரைமலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்' (13-167) என்றும், 'புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது', குரல் தலைக் கூந்தல்' (14-37,87) என்றும், 'நாறைங் கூந்தல்', 'தேமென் கூந்தல் சின்மலர் பெய்து' (15-97,133) என்றும், 'குரல்தலைக் கூந்தல், குலைந்து பின் வீழ' (30-38) என்றும் பெண் கூந்தல் அழகும், பெருமையும் காட்டித் தீட்டிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், சேரன் தம்பி இளங்கோவின் செந்தமிழ்க் காப்பியமாகும்.
நீண்ட கூந்தலுக்கான உலகச் சாதனை
சீன நாட்டு 'எக்ஸ்ஐஇ குய்யுபிங்' (Xie Qiuping) என்ற பெயர் கொண்ட பதின்மூன்று (13) வயது நிரம்பிய பெண் ஒருவர் 1973-ஆம் ஆண்டிலிருந்து தன் கூந்தலைச் சிரமப்பட்டு நீளமாக வளர்க்கத் தொடங்கினார். முப்பத்தொரு (31) ஆண்டுகளின்பின், 08-05-2004 அன்று இவரின் கூந்தலை அளந்து பார்த்த பொழுது அது 18 அடி 5.54 அங்குலம் (5.627 meter) நீளமாக வளர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தனர். இந்தப் பெண்ணின் நீண்ட கூந்தலை உலகச் சாதனையாகக் கின்னஸ் (Guinness) பொத்தகத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக் கூந்தலைச் சீப்பினால் ஒரு முறை வாரி இழுத்துத் துப்புரவாக்கச் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாம். இன்னும் இக் கூந்தலை ஒரு முறை கழுவி, உலர்த்துவதற்கும் ஐந்து (5) அல்லது ஆறு (6) மணித்தியாலங்கள் செலவிடப் பட்டதாகவும் அறிகின்றோம். தன் உயரத்திலும் பார்க்க மூன்று மடங்குக்குமேல் இக் கூந்தல் வளர்ந்திருப்பது ஓர் அதிசயச் செயலெனலாம்.
நிறைவுரை
பெண்கள் தம் கூந்தலைப் பேணி, காத்து, வளர்த்து, சீவிச் சிங்காரித்து, நறுமணப்புகை காட்டி, மல்லிகைப் பூச்சூடி என்றும் மணம் நாறும் வண்ணம் வைத்திருப்பர். இதனாற்றான் சங்க காலப் புலவர்களும் பெண் கூந்தல் நறுமணத்தில் மயங்கிப் பாவிசைத்துப் பரவசமடைந்தனர். அதே மணம் இன்றும் இரண்டாயிரத்து ஐந்நூறு (2,500) ஆண்டுகள் கடந்த பின்பும் நம் மத்தியல் வீசி எம்மனைவரையும் மகிழ வைக்கின்றது. எம்மால், புலவர் பாணியில் பாட்டிசைக்க முடியாவிட்டாலும் நாம் அந்த அற்புத மணத்தை நுகர்ந்து கொண்டு எம் வாழ்வியலை நடாத்தி எம்மினத்தைப் பெருக்கி உலகை உய்வடைய உதவுகின்றோம்.
பெண்கள் எல்லாரும் தமக்கு நீண்ட கூந்தல் அமையவேண்டும் என்று பிரார்த்திப்பர். கன்னிப் பெண்கள் தம் கூந்தலை வாரிச்சீவி நல்லெண்ணைய் பூசிப் பின்னிவிட்டு அழகு பார்ப்பர். அடர்த்தியான கூந்தலுள்ளோர் இரண்டு பின்னல் பின்னிவிட்டு மனம் குளிர்வர். இளம் பெண்கள் தம் கூந்தலால் கொண்டை போட்டுப் பூச்சூடிப் புன்சிரிப்போடு மகிழ்வர். வயது வந்த பெண்கள் தம் கூந்தலால் குடுமி போடுவர்.
சங்க காலத்து ஒரு சில பெண்கள் தமது கூந்தலை ஐந்து வகைப் பின்னலாகப் பின்னி மகிழ்ந்திருந்த செய்தியை மேற்காட்டிய அகநhனூறு (65-18, 123-6, 223-12,13), நற்றிணை (160-6), பதிற்றுப்பத்து (18-4) ஆகிய நூல்களில் படித்து மகிழ்ந்தோம். தமது கூந்தலை ஐந்து பின்னலாகப் பின்னினர் என்றால் அவர் கூந்தல்கள் மிக அடர்த்தி கொண்டனவாய் இருந்துள்ளமை புலனாகின்றது. இன்றைய நாளில் ஒன்று அல்லது இரண்டு பின்னல்கள் கொண்ட பெண்களைக் காண்கின்றோம். ஆனால் இன்று ஐந்து பின்னல்கள் உடைய பெண்களைக் கண்டிலேம்.
பதினெட்டரை அடி (18½ feet) நீளம் கொண்ட ஒரு பெண்ணின் கூந்தலுக்கு 2004-ஆம் ஆண்டில் மிக நீண்ட கூந்தலுக்கான உலகச் சாதனைப் பரிசு வழங்கப்பட்டுக் கின்னஸ் பொத்தகத்திலும் பதிவாகியுள்ளமை மேற்காட்டிய ஒரு அதிர்ச்சிச் செயலாகும். அதனால் பெண் குலத்தார் பெருமையடைகின்றனர். ஆனால் சங்க காலத்தில் இவ்வாறான அதி நீண்ட கூந்தல் இருந்ததாகச் சங்க நூல்களில் ஒரு குறிப்பும் கிடைத்தில.
இந்த நீண்ட ஆக்கத்தின் முடி தொட்டு அடி ஈறாகப் பெண்கள் பற்றியும் அவர் கூந்தல் பற்றியும் நிறையப் பேசப்பட்டுள்ளதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மேற்காட்டிய விடயம் தொடர்பில் ஆண்களாகிய நாம் எங்கிருக்கிறோம் என்றொரு கேள்வி எழாமலுமில்லை? பெண்ணானவள் ஆண் அருகில் என்றும்; இணைந்திருப்பவள். ஆக்கித் தருபவள். ஆக்கி வைப்பவள். அவன் நன்மை, தீமைகளில் பங்கேற்பவள். சுய நலமற்றவள். தன் நலம் கருதாதவள். பிறர் நலம் கருதுபவள். பின் தூங்கி, முன் எழுபவள். கணவனே கண்கண்ட தெய்வமெனத் துதிப்பவள்.
இவ்வாறான அதிசயப் பெண்களின் கூந்தற் பெருமை, அதன் அழகு, அது பெற்ற உலகச் சாதனை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு எல்லாப் பெண்களும் ஒன்றுகூடிப் பெருவிழா எடுத்து, மேடை அமைத்து, ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பதைக் கண்ணுற்ற இவர்களின் கணவர்மாரும் சாரி சாரியாக வந்து ஒன்றுசேர்ந்து மேடை ஏறித் தம் மனைவியர்களை அணைத்துக் கைகொடுத்துக் கூத்தும் ஆடி இன்புற்றிருந்த பாங்கு கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்வாறான ஒத்த கணவர் - மனைவியர்களிடையே நிலவும் இன்ப உணர்வு அவர்கள் வாழ்வியலை ஓர் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயுறவேதும் இருக்காதெனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.