நினைவுகளின் சுவட்டில் – (60)
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது.? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்?. சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா? நன்றாக ஒழுங்காக வேலை செய்கிறேனா? பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா? இங்கே ஊரில் அப்பா அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை தெரியாத ஊரில், எல்லோரும் அவர்கள் காரியத்தைத் தான் பார்த்துக்கொள்வார்களே தவிர நமக்கு ஒரு கஷ்ட காலத்துக்கு எப்பவாவது உதவ வருவார்களே தவிர நாம் தான் நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும்”….. இந்த மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஜாம்ஷெட்பூர் மாமா, மாமி பற்றிச் சொன்னேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “அப்புவுக்கு நம்மகிட்டே ரொம்ப ஒட்டுதல்டா. எந்த சீமைக்குப் போனா என்ன, நம்ம மறக்க மாட்டாண்டா. பாட்டி கிட்டேயும் (நிலக்கோட்டைப் பாட்டி) அப்புவுக்கு பாசம் ஜாஸ்தி” என்றாள் அம்மா. ஹிராகுட்டைப் பற்றிக் கேட்டாள் அம்மா. அப்பாவும் கேட்டுக் கொண்டிருந்தார். சுற்றித் தங்கையும் தம்பியும் உட்கார்ந்து கொண்டு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். . முதல் தங்கை கல்யாணம் ஆகி சென்னையில் இருக்கிறாள். “உன்னாலே வரமுடியாதுடா, தெரியும். இப்போதான் வேலைக்குச் சேந்திருக்கே. எங்கேயே கண்காணா இடத்திலே இருக்கே. நீ வராட்டா பரவாயில்லே. அதுக்காக நீ ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம். ஒருத்தரும் தப்பா நினைச்சிக்கலே. அது சரி அங்கே சாப்பாட்டுக்கு என்னடா பண்றே? எங்கே சாப்பிடறே. சாப்பாடு நன்னா இருக்கா.? அங்கெல்லாம் ரொட்டி தான் சாப்பிடனுமாமே. அப்படியா? அப்படீன்ன ரொட்டி ஒத்துக்கறதாடா?” என்று கேட்டாள் கவலையோடு. ஜெம்ஷெட்பூரில் மாமாவோடு இருந்தபோது கவலை இல்லை. இப்போது தனியாக இருக்கறானே பிள்ளை. எங்கே என்னத்தைச் சாப்பிடறானோ?” என்ற கவலை. “முதல்லே ஹிராகுட் போனப்போ அங்கே ஒரு நாயர் ஹோட்டலைத் தவிர வேறே ஒண்ணும் இருக்கல்லைம்மா. அங்கே தனியா இருக்கறவா எல்லாருக்கும் அந்த நாயரை விட்டா வேறே கதி இல்லை. அப்புறம் இப்போ கொஞ்ச நாளாத் தான் ஒரு பாலக்காட்டுக்காரர் மெஸ்ஸுன்னு ஒண்ணு நடத்தறார். இப்போ தமிழ்க் காரா எல்லாரும் அங்கே தான் சாப்பிடறோம். சாப்பாட்டுக்கு ஒண்ணும் கஷ்டமில்லை என்றேன். நான் நாயர் ஹோட்டலில் சாப்பிட்டேன் என்று சொன்னதும் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அது ரசிக்கவில்லை. “என்னென்னமோ சொல்றானே” என்ற கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தது. “என்னடா சொல்றே? நாயர் ஹோட்டல்லே சாப்டேங்கறயே? என்றாள் அம்மா. “சரி விடு, வேறே கதி இல்லேன்னா என்ன பண்ணுவான். அதான் இப்போ ஒரு பாலக்காட்டுக்காரர் கிள்ப்பிலே சாப்பிடறேங்கறானே” என்று அப்பா சமாதானமாகச் சொன்னார். அம்மா புரிந்துகொள்வாள், அப்பாவைச் சமாளிப்பது தான் கஷ்டம் என்று பயந்திருந்தேன். ஆனால் நடந்தது நினைத்ததுக்கு நேர் மாறாக இருந்தது. ஆனாலும் அந்த விஷயம் அந்த முதல் நாளோடு முடிந்தது. அதன் பிறகு அது மறந்து பேச நிறைய விஷயங்கள் இருந்தன. காவேரிப்பட்டணம் எஸ். என்.. ராஜா, செல்லஸ்வாமி, கிருஷ்ணசாமி பற்றியெல்லாம் சொன்னேன். மாயவரத்துக்காரர் ஒத்தர் பணம் கொடுத்து இருக்கிறார். அதைக் கொடுக்க மாயவரம் போகணும், முடிந்தால் சீர்காழி போய் கிருஷ்ணஸ்வாமி குடும்பத்தாரையும் பார்த்து வரவேண்டும்.” என்றேன். “அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இருடா இங்கே. ஒன்றரை வருஷம் கழிச்சு இப்பத்தான் வந்திருக்கே. உடனே மாயவரம் சீர்காழின்ணு ஆரம்பிச்சுட்டே. இங்கே கொஞ்ச நாள் இரு. அப்பறம் முதல்லே நிலக்கோட்டை போய் மாமாவைப் பாத்துட்டு வா.; அதுக்கப்பறம் பாத்துக்கலாம் மத்ததையெல்லாம்.” என்றாள் அம்மா. “”கும்ப கோணமும் போகணும்மா. இங்கே உடையாளுர் காரா பொண்ணு ஒருத்தி கற்பரக்ஷைன்னு பேர், கல்யாணம் ஆகி அங்கே ஹிராகுட்டுக்கு வந்திருக்கா. உன்னை அ[ப்பாவையெல்லாம் ரொமப நன்னா தெரியும்னு சொன்னா. அவ பாட்டி கும்மோணத்திலே ரெட்டியார் குளத்தெருவிலே இருக்காளாம். போய் பார்த்து, கற்பரக்ஷை நான் இருக்கற இடத்திலே தான் இருக்கா. சௌரியமா இருக்கா. ஒண்ணும் கவலைப்பட வேண்டானும் சொல்லுடா”ன்னும் சொன்னா. அங்கே ஒரு தடவை போகணும்மா?” என்றேன். ‘சரிதான் போ. இப்பத்தான் வந்திருக்கே. கால்லே சக்கரத்தைக் கட்டீண்டு வந்து அங்கே போகணும், இங்கே போகணும்னு அடுக்கிண்டே போறயே. இங்கே இருக்கப் போறயா இல்லையா என்றாள்: அம்மா கோபத்துடன். “ இருபது நாள் லீவ் இருக்கும்மா. கவலைப் படாதே. சீர்காழி மாயவரம் எல்லாம் காலம்பற போய்ட்டு சாயந்திரம் திரும்பி வந்துடலாம். நிலக்கோட்டை போனாத் தான் உடனே திரும்ப முடியாது.” என்று அம்மாவை சமாதானப் படுத்தினேன்,. என் மனதில் இன்னொரு பிரயாணமும் இருந்தது. என் பள்ளிக்கூட நண்பன், கவிஞன், ஆர். ஷண்முகம் சிதம்பரம் பக்கத்தில் கிள்ளை என்ற (கிள்ளை என்று தான் என் நினைவில் இருக்கிறது) ஊரில் இருக்கும் காந்தி ஆஸ்ரமத்தில் படிக்கிறவன், அவனுக்குக்கூட படிப்பிற்கு மாதன் இருபது ரூபாய் அனுப்புகிறேன் என்று முன்னர் சொல்லியிருக்கிறேன். அவனைப் போய் பார்க்கவேண்டும். ஆனால் முடிகிறதோ என்னவோ. அதைப் பற்றி நான் அம்மாவிடம் சொல்லவில்லை. போக முடியாமல் போகலாம். ஆகவே அதை இப்பவே சொல்லி காரியத்தைக் கெடுத்துக் கொள்வானேன் என்று தோன்றிற்று.
அம்மா ஊர்க்கதையெல்லாம் சொன்னாள். அம்மாவின் உலகம் அது. நான் எஸ் எஸ் எல் ஸி பாஸ் செய்த போது, நான் பாஸ் செய்வேனா என்பது எனக்கே நிச்சயமில்லாதிருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறி எவ்வளவு குறைச்சல் மார்க்கில் பாஸ் ஆகுமோ அவ்வளவே மார்க் வாங்கி பாஸ் ஆனதே பெரிய விஷயம். அதற்கே ஊரில், இன்னும் யார் யார் பாஸ் செய்தார்கள், பாஸ் செய்யவில்லை என்று தெரியாது. இருந்தாலும், “சாஸ்திரிகளாத்து பிள்ளை பாஸ் பண்ணிடுத்தாமே” என்று சிலர் சொல்லிக் கொண்டதாக அம்மா சொன்னாள். அந்த சாஸ்திரிகளாத்துப் பிள்ளை இப்போது வடக்கே (வடக்கே போய் வேலை பார்ப்பது என்பது பெரிய தீரச் செயல் ஆயிற்றே}} போய் வேலை தேடீண்டு அப்பா அம்மாக்கு பணம் அனுப்பறானாமே என்றால் அது இன்னமும் காட்டமான விஷயமாயிருக்குமே.. ”இல்லைடா. நானும் அப்படி ஏதாவது பேசிப்பாளோன்னு பயந்துண்டுதான் இருந்தேன். ஆனா “உங்க கவலை விட்டது போங்கோ. இனிமே உங்க பிள்ளை உங்களைப் பாத்துப்பான்னு தான் சந்தோஷமா சொலறா,” என்றாள் அம்மா.
ரொமப நாள் கழித்து தங்கை தம்பிகளோடும் கிராமத்திலும் பொழுது போவது சந்தோஷமாக இருந்தது. “பிள்ளை தலையெடுத்துட்டான். இனிமே கவலை இல்லை என்று அம்மா அப்பாவும் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள்.இருந்தாலும் அம்மா அப்பப்போது என்னை நினைவு படுத்திக்கொண்டிருப்பாள். “பாத்து செலவழிடாப்பா. நம்மது இல்லேன்னு ஒரு அஞ்சு ரூபாயாவது சேத்து வச்சுக்கணும். அப்புறமா இன்னும் ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ, என் கிட்டே இருந்த ஒரே ஒரு சங்கிலியையும் அடகு வச்சுத் தான் உன்னை அனுப்பிச்சது. அதை ஞாபகம் வச்சுக்கோ. அப்பாவாலே எல்லாம் அதை மீட்க முடியாது. நீ பணம் சேத்து அனுப்பினாத்தான் அதை மீட்க முடியும். அது இல்லாமே இப்படி மூளிக்கழுத்தோடே நான் ஒரு கல்யாணம் கார்த்தின்னு எங்கேயும் போக முடியாதுடாப்பா.” என்று கண்கள் கலங்க, நாக்கு தழதழக்க அம்மா சொல்வாள்.
நினைவுகளின் சுவட்டில் – (61)
உடையாளூர் கிராமத்தில் அப்படி ஒண்ணும் நெருக்கமான சினேகிதர்கள் என்று என் ஒத்த வயதினர் யாரும் எனக்கு இருந்ததில்லை. “என்னடா, எப்போ வந்தே?” என்று சம்பிரதாயமாகக் கேட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ”வேலை இருக்குடா தலைக்கு மேலே”, என்று சொல்லிக்கொண்டே போய்க்கொண்டிருப்பார்கள். ”மெஷினுக்கு போகணும், நெல் அரைச்சிண்டு வரணும்”, இல்லையோ, “சந்திரசேகரபுரம் போகணும்டா, கொஞ்சம் சாமான் வாங்கிண்டு வான்னு அப்பா சொல்லிருக்கா” என்று சொன்னால் அதிகம். “இருப்பியோல்யோ ஒரு மாசமாவது, சாவகாசமாப் பேசிக்கலாம்” என்று சொல்லக் கூடும். யாருடனும் ஆர். ஷண்முகம் போல நெருக்கம் இருந்த தில்லை. அதிகம், கும்பகோணத்திலேயே இருந்து விட்டதும், சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் ஊருக்கு வந்தாலும் சினேகம் அப்படி ஒன்றும் யாருடனும் ஏற்பட்டதில்லை. வயல் வேலைகளில் அவர்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது. அத்தகைய ஈர்ப்பு எனக்கு இருந்ததில்லை. அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, கூடச் சேர்ந்து சிரிக்க, கோபம் கொள்ள என்று ஏதும் என்னிடம் இருக்கவில்லை. எல்லாம் ஷண்முகத்துடன் தான். அவனைப் பார்க்கப் போகவேண்டும். கிள்ளை போக ஏதாவது சாக்கு தேடவேண்டும்.
ஒரு தடவை நிலக்கோட்டை போய் மாமாவைப் பார்க்கவேண்டும். அதில் யாருக்கும் ஏதும் ஆக்ஷேபணை இராது. போனேன். மாமாவுக்கு சந்தோஷம் தான். தான் படிக்க வைத்து வளர்த்த பிள்ளை இப்போ வடக்கே வேலை பார்க்கிறான். பாட்டிக்கும் பரம சந்தோஷம். மாமா கேட்டார். வேலை எப்படி கிடைத்தது. ஹிராகுட்டில் எனக்கு நல்லது கெட்டது சொல்ல பெரியவர்கள் இருக்கிறார்களா? எவ்வளவு சம்பளம், சாப்பாட்டுக்கு என்ன செய்கிறேன் என்பது போன்ற வீட்டுக்குப் பெரியவர்கள் கவலைப் படும் விஷயங்கள், கேள்விகள் கேட்டார். அடிக்கடி லெட்டர் போட்டுக்கொண்டு இருக்கவேண்டும், அப்பாவுக்கு மாசா மாசம் தவறாது பணம் அனுப்பிக்கொண்டிருக்கவேண்டும்” அனாவசிய செலவு செய்யக் கூடாது “ என்பது போன்ற புத்திமதிகள். சின்ன மாமா ஆசிரியர் பயிற்சி முடிந்து அலங்காநல்லூரிலோ அல்லது எங்கோ ஆசிரியராக வேலையும் கிடைத்து விட்டது. கல்யாணமும் ஆகி ஆறு மாதப் பெண்குழந்தைக்கு தகப்பனாகவும் ஆகியிருந்தார். ஆசிரியர் வேலை பார்க்கும் பெண் தான் வேணும் என்பது தான் அவரது ஒரே நிபந்தனை. மாமாவுக்கு உதவியாக இருக்கவேண்டும் அவர் கஷ்டப்பட்டது போதும் இனியும் அவரைக் கஷ்டப்பட விடக்கூடாது என்பது அவரது ஆசை. நிலக்கோட்டைக்கே மாற்றிக்கொண்டு வந்து மாமா வேலை பார்க்கும் நாங்கள் எல்லாம் படித்த சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியிலேயே வேலை பார்க்கவேண்டும் என்றும் அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். சிறு பிராயத்தில் நாங்கள் எல்லாம் மாமாவுக்கு எவ்வளவோ கஷ்டம் கொடுத்திருந்தோம். சின்ன மாமாவுக்கு இப்போது வந்துள்ள பொறுப்புணர்வு மாமாவுக்கும் பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. சின்ன மாமாவுக்கு வேலையும் கிடைத்து, கல்யாணமும் ஆகி, ஒரு பேத்தியும் கிடைத்துவிட்டதில் பாட்டிக்கு சந்தோஷம் தான்.
ஒரு நாள் மாயவரம் போய்வந்தேன். முதலில் கையிலிருக்கும் 600 ரூபாயை உரியவரிடம் சேர்ப்பித்துவிட்டால் ஒரு பாரம் தீரும். நேரே வீட்டுக்கு மணிஆர்டர் செய்யாமல் என்னிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய பெரியவருக்கு மனத்தில் வேறு எதையோ நினைத்துக் கொண்டு தான் என்னிடம் பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் என்று தான் நினைத்தேன். சம்பத் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, ”சாப்பிடச் சொன்னால் பேசாமல் சாப்பிடு. சங்கோஜப்படாதே” என்று சொன்னது சாப்பாட்டை மாத்திரம் நினைத்துச் சொன்னதாகவும் எனக்குத் தோன்றவில்லை. பணத்தை அவர் வீட்டில்கொடுத்தேன். கடிதமும் எழுதியிருந்தார். சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிடும்போது அவர்கள், அவர் பையன், பெண், மனைவி எல்லோரும் சமையலறையிலேயே என்னவோ பேசிக்கொண்டார்கள். பையன் வந்து “அப்பா சௌக்கியமா இருக்காரா?” ஊரெல்லாம் எப்படி இருக்கு? என்று கேட்டான். இதையெல்லாம் என்னிடமிருந்து தான் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றில்லை. ஏதோ பேசவேண்டு மென்று பேசியதாகத் தான் தோன்றியது. ஏதோ பகடைக்காயாக நான் நகர்த்தப்பட்டேன் என்று தான் எனக்குப் பட்டது. பணம் கிடைத்தது என்று அப்பாவுக்கு எழுதிவிடப்பா, அவர் கவலைப் படுவார் என்று சொல்லி ஊருக்குத் திரும்பினேன்.
• அடுத்த பயணம் கற்பரக்ஷை நான் போய் பார்க்கவேண்டும் என்று சொன்ன ரெட்டிராயர் குளம் மேற்குத் தெருவுக்கு.. போய் வந்தேன். கற்ப ரக்ஷையை வளர்த்த வயதான அம்மையார் இருக்கும் வீடு அது. அம்மா சொன்ன விவரம். அது எனக்கு மிக சந்தோஷம் தந்த பயணம். ரொம்பவும் அன்போடும், அக்கறையோடும் என்னை விசாரித்து, அவசர அவசரமாக எனக்காக அவர்கள் சமைத்த வத்தல் குழம்பும் அப்பளமும் என்னமாக ருசித்தது! இன்னமும் நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது அவ் அவர்கள் பெண் எங்கோ வடக்கே கண்காணாத ஊரில் இருக்க நேரிட்டாலும், நான் அவர்களுக்கு கற்பரக்ஷையின் அருகில் இருப்பதும் அவர்களுக்கு அவளைப் பற்றிய செய்தி சொன்னதும் பெரும் நிம்மதி தருவதாக இருந்திருக்கிறது.. இது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். எனக்கு அவர்கள் பெயர் மறந்து விட்டது. அந்தப் பெண்ணின் பெயரை அப்போது எழுதும் சௌகரியத்துக்காக சாவித்திரி என்றும் அந்தப் பாட்டியின் பெயர் மதுரம் என்றும் சொல்லியிருந்தேன். அவள் பெயர் சாவித்திரி இல்லை. கற்பரக்ஷை. என்று என் தம்பி நினைவுச் சுவட்டில் புத்தகத்தைப் படித்துவிட்டுத் திருத்தினான். கற்பரக்ஷை தான் என்ன அழகான பெயர். திருவாலங்காடோ என்னவோ, பக்கத்து க்ஷேத்திரம் ஒன்றின் அம்மன் பெயர். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள், குழந்தையை கருவில் இழப்பவர்கள் வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் அருளும் அம்மன் பெயர். அப்படிப் பிறந்த பெண் குழந்தை தான் கற்பரக்ஷை. பின்னும் அவளை தத்தெடுத்த விதவையின் பராமரிப்பில் வளர்ந்தவள். அந்த விதவையும் சின்னஞ்சிறு வயதில் கல்யாணமாகி, 12 வயதே ஆன சிறுவனைக் கணவனாகப் பெற்று விதவை யானவள் விதியின் .கொடுமை அதோடு நிற்கவில்லை. அப்பாவின் வீட்டில் வளர்ந்த அந்த விதவைப் பெண், யாரோ ஒருத்தன் கொல்லைச் சுவரை ஏறிக்குதித்து வீட்டுக்குள் நுழைந்துவிட்டான் என்று, இனி இந்த கிராமத்தில் இருப்பது பாதுகாப்பல்ல என்று அப்பா கும்பகோணத்துக்கு வந்து அந்த விதவைச்சிறுமிக்கு எந்த பாதகமும் ஏற்படாதவாறு காப்பாற்றியிருக்கிறார். அது காப்பாற்றிய காரியமாக நமக்குத் தோன்றாது. சிறுமிக்கு திரும்ப கல்யாணம் செய்து வைத்திருக்கலாம். ஆனால் நம் சமூகம் அதற்கு அக்காலத்தில் இடம் கொடுத்திராது. சமூகத்தின் பழிக்குத் தான் பெண்ணும், தகப்பனும் ஆளாயிருப்பார்கள். அந்தச் சிறுமியின் வாழ்வு அப்படியேதான் கழிந்தது. நான் பார்த்த போது அந்த அம்மையார் நல்ல உயரம். சுருக்கம் விழாத முகம். நல்ல சிகப்பு. ஆனால் அக்கால வைதீக பிராமண குடும்பங்களின் ஆசாரப்படி வழிக்கப்பட்ட தலை முக்காடிட்டிருந்தது. தனக்கு ஒரு கவலை இல்லாது வளர்ந்தது போலத் தான் ஒரு சோகமோ இழப்போ காட்டாத பேச்சு. தன் அத்தனை சோகத்தையும் இழப்பையும் எப்படி இவ்வளவு எளிதாக வழித்தெடுத்து எறிந்து விட முடிந்திருக்கிறது? தன் தர்மம் இது, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இது என்ற தீர்மானம் மனத்தில் ஆழப்பதித்து விட்ட அமைதி. தான் வளர்த்த குழந்தைகளின் சௌக்கியம் தான் அவர்களது அக்கறையாக இருந்தது. இதைக் கொண்டு போய் கொடுத்துடுடாப்பா, என்று புடவை ரவிக்கை, வேஷ்டி எல்லாம் கட்டிக் கொடுத்தாள் தன் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்குமாக. என்னவோ ஒரு சின்னப் பையனிடம் பேசும் மூதாட்டி போலத்தான் என்ன கனிவு என்ன ஆதுரம் என்று நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் மனம் என்ன ஆனந்தமடைகிறது. போய் வந்த கதையை அம்மாவிடம் சொன்னபோது தான், இந்த பழைய கதையை எல்லாம் அம்மா சொன்னாள்.
ஷண்முகத்தைப் பார்க்கவேண்டும்.அடுத்து. கிள்ளைக்குப் போகிறேன் என்று சொன்னால், அப்பாவும் அம்மாவும் சம்மதிக்கப் போவதில்லை. என்ன பொய் சொன்னேன், எப்படி அவர்களை நம்ப வைத்தேன் என்பது இப்போது ஞாபகமில்லை. எப்படியோ என்னவோ சொல்லி ஷண்முகத்தைப் பார்க்க கிள்ளை கிளம்பினேன். ஷண்முகம் பயிற்சி பெறும் அந்த காந்தி ஆஸ்ரமம் இருக்கும் ஊர் பெயர் கிள்ளைதானா இல்லை வேறு ஏதாவதா நினைவில் இல்லை. கும்பகோணத்திலிருந்து கிளம்பி ரயில் ஏறினால் சிதம்பரத்து முன் வரும் அல்லது சிதம்பரத்துக்கு அடுத்து வரும் ஸ்டேஷன் அது. நான் கிள்ளைபோய்ச் சேரும் போது அந்தி நேரம். இருட்டத் தொடங்கிவிட்டது. ஷண்முகத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். அவனுக்கு முன்னதாக சொல்லி யிருக்க வில்லை. என்னை எதிர்பார்க்கவே இல்லாத போது முன்னறிவிப்பு ஏதும் இன்றி அவன் முன்னால் போய் நின்றால் எப்படி இருக்கும்? ஒரு பெரிய ஹாலில் தான் சுமார் இருபது முப்பது பேர் சுவரோரமாக பெட்டியும் படுக்கையுமாகத் தங்கி யிருந்தனர் .சாயந்திரம் பிரார்த்தனை நேரம். பிரார்த்தனைக்குப் பிறகு சாப்பாடு. பிரார்த்தனையில் அல்ல. சாப்பாட்டில் நான் கலந்து கொண்டேன். ஷண்முகம் அங்கும் எல்லோரும் விரும்பும் நபராகியிருந்தது தெரிந்தது.
இருவரது புதிய வாழ்க்கை., புதிய இடம் பற்றிப் பேசினோம். நான் பார்த்து வியந்த ஜோகன் என்னும் படத்தைப் பற்றி விஸ்தாரமாக ஷண்முகத்திடம் சொன்னது எனக்கு நினைவு இருக்கிறது. முற்றிலும் வித்தியாசமான அனுபவமான அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற ஆசையும் துடிப்பும் எனக்கு. ஹிராகுட்டில் நண்பர்களையெல்லாம் போய் பார்க்கச் சொன்னேன். அவர்கள் பார்த்தார்களா என்பது தெரியாது. பார்திருப்பார்கள். ஆனால் எனக்குத் தந்த அனுபவத்தை அவர்களுக்கு அது தரவில்லையோ என்னவோ. வேறு யாரிடம் பேசுவது. அப்பா அம்மாவிடமா,அவர்கள் சினிமா பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்கள். வேறு யாரும் எனக்குக் கிடைக்க வில்லை. பள்ளியில் ஒரே ருசி கொண்டவர்களாக தெரிய வந்தவர்களிடம் தானே இந்த பரிமாறல் சாத்தியம். ஆனால் ஷண்முகம் அக்கறையோடு ஏதோ நண்பன் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று எனக்குக் காது கொடுத்ததாகத் தோன்றியதே தவிர, அதிகம் அவனைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை. இரவு நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். காலையில் 5 மணிக்கே எழுந்து ஆஸ்ரமத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவேண்டுமென்பதால்,என்னோடு அவன் உடன் இருக்கமுடியாது என்றும், நான் தூங்கி எப்போது விழிக்கிறேனோ அப்போது ஷண்முகம் இல்லையே என்று கவலைப் படாமல் ஊருக்குக் கிளம்பலாம் என்று சொன்னான்
ஊருக்குத் திரும்பினேன். விடுமுறையில் சீர்காழி போகவேண்டும் என்று எண்ணியிருந்தாலும் போகவில்லை. ஒரு வேளை கிள்ளை போவதற்குத் தான் சீர்காழி போய் கிருஷ்ணசாமி குடும்பத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கிளம்பினேனோ என்று தோன்றுகிறது. ஆக, அந்த சாக்கும் தீர்ந்து விட்டதால் தான், சீர்காழிக்குப் போகவில்லையோ என்னவோ. . .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.