எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும். அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை நேர்ப்பேச்சிலோ அவர் சொன்ன ஒரு ஆணித்தரமான கருத்து, இந்த மாதிரியான சிறு பத்திரிகைகள் எல்லாம் அதிகம் போனால் இரண்டு வருஷங்கள் தன் ஆரம்ப உயிர்ப்புடன் இருக்கும். அதன் பிறகு அது ஆரம்ப உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இழந்துவிடும். பின் அது ஏதோ பத்திரிகை நடத்துவதாகத் தான் இருக்கும். ஆகையால் இரண்டு வருஷங்கள் நடத்தி எப்போது அதன் புதுமையை இழக்கிறதோ நிறுத்தி விட வேண்டும் என்று சொல்வார். அப்படித்தான் அவர் நடத்திய சூறாவளி போன்றவையும் மணிக்கொடியும் (இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை நின்று புது ஆசிரியத்வத்தில் பின் மறு அவதாரம் எடுக்கும்) தேனீ, போன்றவை எல்லாமே. அப்போது க.நா.சு போன்று மலையாளத்தில் இளம் எழுத்தாளருக்கு ஆதர்சமாக இருந்த கோவிந்தன் சமீக்ஷா என்ற அவர் ப்ராண்ட் பத்திரிகையை தன் இஷடம் போல், அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ பிரசுரித்து வந்தார். அவரும் இதே அபிப்ராயத்தைத் தான் சொல்லி வந்தார். ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். புதிய உத்வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வளவோடு ஒரு சிறு பத்திரிகையின் காரியம் முடிந்து விடுகிறது. பின் அதை நிறுத்தி விட வேண்டும். அதற்கு ஏதும் வணிக, ஸ்தாபன உத்தேசங்கள் இருக்கக் கூடாது. என்பார். அப்படித் தான் அவர் வெளியிட்ட பத்திரிகைகளும் இயங்கின. அவர் இயக்கம் மலையாள இலக்கிய, கலை உலகில் மையம் கொண்டிருந்தது. அவர் எனக்கு அறிமுகமானதும், என்னையும் சமீக்ஷாவுக்கு எழுதச் சொன்னார். மலையாள சமீக்ஷாவுக்கு தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகள் பற்றியும், ஆங்கில சமீக்ஷாவுக்கும் ஒரு மௌனி கதை மொழிபெயர்ப்பும், மௌனி பற்றியும், பின் மற்றொன்றுக்கும் ஆங்கிலத்தில் கஷ்மீரி இலக்கியம் பற்றிய புத்தகம் ஒன்று பற்றிய மதிப்புரையும் எழுதச் சொன்னார். எழுபதுகளில் தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகளில் தெரிய வந்த புதியவர்கள் பெரும்பாலோரை அவர் அறிவார்.
ஆனால் தமிழில் நம் கதையும் பாரம்பரியமும் வேறாகத் தானே இருக்கும் எப்போதும், எதிலும். எழுத்து ஆரம்பித்த போது, செல்லப்பா நம்பியிருந்தது க.நா.சு. சிட்டி, சிதம்பர சுப்பிரமணியம், பி.எஸ். ராமையா, லா.ச.ராமாம்ருதம் போன்ற மணிக்கொடி காலத்திலிருந்து அவர் நன்கு அறிந்தவர்களைத் தான். ஆனால் இவர்கள் யாரும் அவருக்கு தொடர்ந்து உதவுகிறவர்களாக இல்லை. அவருக்கு அதிகம் உதவியாக இருந்த க.நா.சு. ந.சிதம்பர சுப்பிரமணியம் போன்றோர் ஆறு மாதங்களுக்கு மேல் உடன் செல்பவர்களாக இல்லை. ந. பிச்ச மூர்த்தி ஒருவரைத் தவிர. செல்லப்பா விமர்சன உலகில் நுழைவதற்கும், எழுத்து பத்திரிகை தொடங்குவதற்கும் உத்வேகம் தந்த க.நா.சு. வே கூட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தான் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டு, எழுத்து ஆறுமாதங்களுக்குள் தன் ஆரம்ப உத்வேகத்தை இழந்து விட்டது என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
க.நா.சு.வும் செல்லப்பாவும், இரட்டையர் என்று சொல்லத் தக்க நெருக்கத்தில் நண்பர்களாக, பழக்கத்திலும் இலக்கிய வாழ்க்கையிலும் இணைந்தவர்கள். க.நா.சுவின் பத்திரிகைகளில் செல்லப்பா இணையாசிரியராக இருந்தவர். கொட்டிக் கொட்டி விமர்சகராக செல்லப்பா அவதாரம் எடுக்கும் அளவுக்கு இலக்கிய சர்ச்சைகளில் அடிக்கடி நெருங்கி தமக்குள் ஈடுபட்டவர்கள். சுதேசமித்திரனில் 1957-ல் இதற்கெல்லாம் முன்னோடியாக இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர்களே இவர்கள் இருவரும் தான். மற்ற எவரையும் விட எழுத்து பத்திரிகையில் முதல் ஆறு மாதங்களுக்கு நிறைய எழுதியவரும் க.நா.சு தான். அப்படி இருக்க ஆறே மாதத்தில் மூச்சிழந்து விட்டது என்று எழுதியது அவர் முன்னாலேயே கொண்டிருந்த பார்வையைச் சார்ந்தது என்று கொள்ளலாம் தான். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. சாதாரணமாக இரண்டு வருஷ ஆயுள் தருபவருக்கு ஆறு மாதம் கொஞ்சம் அவசரப்பட்ட காரியம் தானே. நடப்பவற்றைக் கவனித்து வந்த எவருக்கும் அப்படித் தோன்றவில்லை. ஆனால் ந.பிச்சமூர்த்தியைத் தவிர பழைய பெரியவர்கள் எல்லோருக்கும் எழுத்து பத்திரிகையிலும் நம்பிக்கை இல்லை. சி.சு. செல்லப்பா வையும் அவர்கள் பெரிதாக மதித்தவர்களும் இல்லை. அவர்களுக்கு பொதுவாக தமிழ் உலகில் எழுத்துக்கும் செல்லப்பாவுக்கும் கிடைத்த உதாசீனமும் அவருக்கு வழிகாட்டும் இணையாக இருந்த க.நா.சுவே இப்படிப் பேசியது ஆறுதலாக, மனதுக்குள் சந்தோஷப் படுத்தும் ஒன்றாகவோ இருந்திருக்கும். ஆனால் அவர்கள் இதை வெளிப்படையாகப் பேசியவர்கள் இல்லை. இதே கருத்தை செல்லப்பாவோடு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நெருங்கிப் பழகிய கி.அ. சச்சிதானந்தமே சொல்லியிருக்கிறார். செல்லப்பாவைப் பற்றியோ, எழுத்து பற்றியோ சச்சிதானந்தம் அறிந்தது போல் அறிந்தவர் வேறு ஒருவர் இல்லை.
ஆனால் இப்படி ஒரு அபிப்ராயத்தைச் சொன்ன க.நா. சு வை வைத்து அவரை முழுமையாக அறிந்து கொண்டதாக ஒரு முடிவுக்கு வரமுடியாது. ”எந்த ஒரு படைப்பையும் எவ்வளவு அலசி எழுதினாலும் அதில் பயனில்லை. அலசுவதாலும் விவாதத்தினாலும் எதையும் ஸ்தாபித்து விட முடியாது. விவாதங்கள் தான் வளரும். அது ஒருத்தரின் சாமர்த்தியத்தைப் பொருத்தது. நான் இதைப் படித்திருக்கிறேன். இது ஒரு நல்ல படைப்பு என்று தான் சொல்லமுடியும். அது சொல்பவரைப் பொருத்து மதிப்பு பெறுகிறது” என்பது அவர் கருத்து. இது உண்மை தான். ஆனால் முழு உண்மை அல்ல. நல்ல படைப்பு என்று சொல்வதற்கான காரணங்களைச் சொல்லி கொஞ்ச தூரமாவது இட்டுச் செல்லவேண்டும். சொல்லிப் பின் முன் நீளும் பாதையைச் சுட்ட வேண்டும். அதன் பின் தான் சொல்பவரின் கருத்துக்கு மதிப்பு ஏற்படும். இல்லையெனில் அது எங்கும் இட்டுச் செல்லாத வெற்றுச் சொல் தான். வேலை மெனக்கெட்டு தன் விமர்சன செயல்பாட்டை விளக்கி ஒரு நீண்ட தலையங்கம் எழுதினார் செல்லப்பா. அந்த நீண்ட விளக்கம் முழுதையும் தன் இலக்கிய வட்டம் இதழில் வெளியிட்ட க.நா.சு. “இந்த கீதோபதேசத்துக்கு நன்றி” என்று முடித்திருந்தார். இது க.நா.சு. அல்ல. அன்றைய அவரது கசப்பின் வெளிப்பாடு தான். ஆனால் அன்று க.நா.சு. செல்லப்பாவுக்கோ, இருவரின் பழங்கால நட்புக்கோ, இலக்கிய வெளியில் இணைந்த செயல்பாட்டுக்கோ, நியாயம் செய்தவரில்லை. க.நா.சு. வின் அன்றைய இந்த உதாசீனம், செல்லப்பாவை உதறித் தள்ளும் காரியமாகவே ஆக்கிற்று.
அன்று எழுத்துவுக்கும் செல்லப்பா வுக்கும் ஆதரவாக இருந்தவர்கள் ந.பிச்சமூர்த்தியும் எழுத்து பத்திரிகையின் பக்கங்களிலிருந்து தெரியவந்த இளம் தலைமுறை எழுத்தாளர்களும் தான். எழுத்து பத்திரிகை மூலமே தெரியவந்த நகுலன் அவர்களில் ஒருவர் இல்லை தொடர்ந்து அவர் எழுத்துவில் தன் கவிதைகளுக்கு இடம் கண்ட போதிலும். பண்டிதர்களும் முற்போக்குகளும் செல்லப்பாவை மதித்தவர்கள் இல்லை. ஆனால் செல்லப்பாவின் பிடிவாதமும் முன்னெடுத்த காரியத்தைச் செய்தே தீரவேண்டும் என்ற அர்ப்பண உணர்வும் பலன் அளிக்கத் தொடங்கின. இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி
மிகப் பலவீனமாகத் தோன்றிய எழுத்து பத்திரிகை நாற்பதுகளில் துளிர்விட்டும் வளர்ச்சி கண்டு மரபாக ஸ்தாபிதமாகாத புதுக்கவிதை தமிழ் இலக்கியத்தில் வேரூன்றியது. “இதென்ன கல்யாண பத்திரிகை விநியோகம் போல ஐந்நூறும் அறுநூறும் அச்சடிக்கும் எழுத்து ஒரு பத்திரிகையா? என்று ராமையாவே கேலி செய்த (அவர் கேலி செய்தார். மற்றவர்கள் எழுத்துவுக்கு எழுதுவதையே நிறுத்திக்கொண்டனர்) எழுத்து பத்திரிகை தான் இலக்கிய சிறு பத்திரிகை மரபையே தோற்றுவித்தது. இருபதுகளிலிருந்து நாற்பதுகள் வரை இதற்கு முன்னோடியாக பல தோன்றிய போதிலும், எழுத்து தான் முதல் இலக்கிய சிறு பத்திரிகை. எழுத்து காலத்திலியே வானம்பாடி என்ற ஒரு முற்போக்கு பத்திரிகை மரபு இலக்கணம் பயின்ற பண்டிதர்களால் புதுக்கவிதை என்று அவர்கள் கொண்டாடிய கோஷங்கள் இட்ட செய்யுளுக்காக பிறந்தது. தாமரையும் அதற்கு விதிவிலக்கல்ல.
க.நா.சு வும் இலக்கிய வட்டம் தொடங்கினார். அதில் என்னையும் 1947-1964 இடையிலான இலக்கிய வளர்ச்சி பற்றி எழுதச் சொன்னார். யாரை? ஆறு மாதங்களுக்குள் தன் உயிர்ப்பை இழ்ந்துவிட்ட எழுத்து பத்திரிகை மூலம் தெரிய வந்தவனை? ஒரு இருபதாம் தர எழுத்தாளரைப் பற்றி (ஆர் சூடாமணி) எழுதிய ஒரு முப்பதாம் தர வாசகன் என்று அவர் வர்ணித்த என்னை. இரண்டு வருஷங்கள் கழித்து 1966-ல் எழுத்துவில் தெரியவந்த இரண்டு முக்கிய எழுத்தாளர்கள் என்று தருமு சிவராமூவோடு சேர்த்துச் சொன்ன என்னை. அப்போது இதெல்லாம் கொஞ்சம் மனதை உறுத்தினாலும் என்னைச் சோர்வடையச் செய்துவிட வில்லை. ”எழுதுங்கள் நிறைய எழுதணும்,” என்று தில்லியில் அவரை நேரில் சந்தித்த ஒரு சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர் சொன்ன போது, “என்னை நான் எழுத்தாளனாகவே கருதிக்கொண்டதில்லை” என்றேன். “அதுவும் சரிதான் புரியறது. கொஞ்சம் involuted- ஆக இருக்கு உங்கள் எழுத்து. Involutions அதிகம் தான்” என்றார்.
நான் ஒரு பொருட்டல்ல. என்னை ஒதுக்கிவிடலாம். பின் வருஷங்களில் அவர் என்னையும் என் எழுத்தையும் பற்றி நிறைய சொல்ல விருக்கிறார். சொல்லியிருக்கிறார். நேரிலும், எழுத்திலும். ஆனால் ஆறுமாதங்களுக்குள் தன் உயிர்ப்பை இழந்ததாகச் சொன்ன எழுத்து பற்றி, வெகு சீக்கிரம் “வருகிற ஜன்மங்களில் அவர்கள் (வெகு ஜன பத்திரிகைகள், எழுத்தாளர்கள், பண்டிதர்கள்) குறைந்த பட்சம் ஐந்து வருஷங்களாவது எழுத்து போன்ற ஒரு இலக்கியப் பத்திரிகையைப் போட்டு தங்கள் பாவங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” (ஞான ரதம், டிஸம்பர், 1972) என்று க.நா.சு எழுதுகிறார். இவ்வளவுக்கிடையிலும் அவர் ஆரம்பத்திலும், இடையிலும், கடைசி வரையிலும் சொல்லி வந்ததை நாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். “எனக்கு விமர்சனத்தில் நம்பிக்கை இல்லை. எதையும் வாதித்து நிறுவி விட முடியாது”
இது உண்மையும் கூட. அடிப்படையான உண்மை. அதற்காக நம் வேறுபட்ட பார்வைகளை, அவற்றைச் சொல்லும் கருத்து உரிமையை, ஒர் எல்லை வரைய வாதமிடும் அவசியத்தை மறுத்து விடுவதோ உதறுவதோ சரியில்லை. இது உபநிடத காலத்திலிருந்து இங்கும், சாக்ரடீஸ் காலத்திலிருந்து அங்கும் கருத்துலகில் அங்கீகரிகப்பட்டு தொடர்ந்து வருவது.
செல்லப்பாவின் கீதோபதேசத்துக்கு நன்றி என்று ஒரு ஆரம்ப கட்டத்தில் காட்டமாகப் பதிலளித்த க.நா.சு தான், “செல்லப்பா எந்த புத்தகம் பற்றியும் ஏதும் சொல்லியிருக்கிறாரா, என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்தறிந்து கொள்ள நான் கட்டாயம் விருப்பப் படுவேன். அது பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார், அவர் பார்வை என்ன என்று அறிந்துக்கொள்ள நான் கட்டாயம் விருப்பப்படுவேன்” என்றும் சொல்லியிருக்கிறார். ஆக, எந்த க.நா.சு சரி? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தின் சூட்டில் நிஷ்டூரமாக எழுதுபவரா, இல்லை பின் சாவகாசமாக எழுதும்போது கருத்துச் சொல்பவரா? இதையே செல்லப்பாவோடு நேரில் பேச நேர்ந்திருந்தால் அவர் தாராளமாக, நிதானமாகக் கேட்டு தன் தரப்பு பார்வையையும் சொல்லியிருப்பார். நான் க.நா.சு.வோடு நேரில் பேசிய எந்த சந்தர்ப்பத்திலும் என் எந்த காட்டமான கருத்துக்கும் நிஷ்டூரமாக பதில் சொன்னவர் இல்லை. ஆனால் செல்லப்பா துவந்த யுத்தத்திற்கு தயாராகிவிடுவார். உடனே உரத்த குரலில் சண்டை போட ஆரம்பித்து விடுவார். அதற்குப் பின்னர் வருகிறேன்.
எழுத்து சிறுபத்திரிகை மரபை மாத்திரம் அல்ல. வணிக நோக்கில் தொடங்கப்பட்ட இடைநிலைப் பத்திரிகைகளையும் குணம் மாற்றியது. மிகப் பெரிய மாற்றம் கல்கி பத்திரிகையிலிருந்து வெளிவந்து அது போல தானும் ஒன்று தொடங்க ஆசைப்பட்டு நா.பார்த்தசாரதி தொடங்கிய தீபம். நா பார்த்த சாரதி மணி பல்லவம், பொன் விலங்கு, குறிஞ்சி மலர் பாண்டிமாதேவி, சமுதாய வீதி, என்ற வகையில் சுமார் பத்திருபது நாவல்கள் எழுதியவர். தமிழ்ப் பண்டிதரான அவர் புதுக்கவிதையைக் கேலி செய்தவர். ,செல்லப்பா புடவை விக்கறவன் மாதிரி தன் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு விற்க அலைவதைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது என்று சொன்னவர். கடைசியில் செல்லப்பா பக்தராகவே ஆனவர். தன் தீபம் பத்திரிகையில் அவர் ஆரம்பத்தில் என்ணிப்பாராத எழுத்துக்களையெல்லாம் விரும்பி பிரசுரித்தார். அது கட்டாயம் விற்பனையைப் பெருக்க அல்ல. தீபம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பிற்காலத்தில் கற்பனை செய்தாரோ அவற்றுக்கெல்லாம் களம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவரைப் பற்றிக்கொண்டது. மணிக்கொடி வரலாறு, சரஸ்வதி காலம், எழுத்து வரலாறு, சிறுபத்திரிகை வரலாறு என்றெல்லாம் சந்தையில் விலைபோகாதவற்றையெல்லாம் வருந்தி எழுதவைத்து தீபத்தில் பிரசுரித்தார். தீபம் இல்லையெனில் அவை எழுதப் பெற்றிருக்கும் என்று எண்ண முடியாது. இது சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையின் அர்ப்பணிப்பு கொண்டு வந்த மாற்றம்.
மணிபல்லவம் எழுதி புகழ் பெற்ற நா. பார்த்தசாரதி, அல்ல அவர். க.நா.சு. தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் எல்லாம் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றதற்கு மூல காரணம் நா.பா தான். இந்த மனமாற்றம் நா. பா. பெற்றதற்கு மறுபடியும் மூல காரணம் செல்லப்பா தான். நா.பா என்ன கெஞ்சியும் பிடிவாதம் தளராத மனிதர் சி.சு.செல்லப்பா ஒருவர் தான். சாஹித்ய அகாடமி பரிசு தரும் பணத்துக்கு மேல் செலவு செய்து பரிசு பெற்றவர்கள் உண்டு. அது அவர்களுக்கு ஒரு கௌரவ பிரசினை யாக இருந்தது. சாஹித்ய அகாடமியின் பரிசு பற்றி சிந்தனையே இல்லாதவர்களுக்கு அதை துச்சமாக நினைத்தவர்களுக்கு பரிசு சென்றது உண்டு. நா.பா காரணகர்த்தராக இருந்ததால். அந்தப் பணம் பெரிதாகத் தோன்றிய காலகட்டத்தில் அதைப் பெற்றவர்கள் உண்டு. க.நா.சு அந்த நிலையில் தான் இருந்தார். கடைசி காலத்தில் ஊரில் இருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கேட்டு எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாக உணர்ந்தார். ஆனால் எங்கும் தான் எழுத நினைத்ததைத் தான் எழுதினார். நா.பா தனக்கு சாஹித்ய அகாடமி பரிசுக்கு ஏற்பாடு செய்து தன் அந்த சமயத்திய பணத்தேவையைத் தீர்த்ததற்காக, நா.பாவின் எழுத்தைப் பாராட்டிவிடவில்லை. நா.பாவும் அதை எதிர்பார்க்க வில்லை. குங்குமம் எதிர்பார்த்தது என்று தஞ்சை பிரகாஷ் எழுதியதி லிருந்து தெரிகிறது.
நா.பா. வின் மனமாற்றத்திற்கு செல்லப்பாவின் நட்புதான் காரணம் என்று நான் சொல்வேன். நா.பா தான் மாறினாரே ஒழிய நா.பா செல்லப்பாவை மாற்றமுடியவில்லை. அவர் பிடிவாதம் அவரிடம் கடைசி வரை ஜீவித்திருந்தது. செல்லப்பாவுக்கு அந்த சாஹித்ய அகாடமி தரும் ரூ 50,000 அவசியம் தேவை. பல பணக் கஷ்டங்களிலிருந்து அவர் விடுபட்டிருப்பார் ஆனால் விளக்கு பரிசு பணத்தைத் தொட மறுத்தது போல நா.பா வின் கெஞ்சலுக்கு செவி சாய்த்தவரில்லை. ஆனால் சாஹித்ய அகாடமியை விட விளக்கு பரிசை அவர் மதித்தார். அது இலக்கியத் தரம் அறிந்து தந்தது. சாஹித்ய அகாடமி பரிசு இடைத் தரகர்களின் பேரமும் சிபாரிசும் முன் வருவது. நா.பா செய்ததும் சிபாரிசு தான். ஆனால் சுயலாபம் வேண்டாத, உரியவர்களை, இது காறும் மறுக்கப்பட்டவர்களைத் தேடி சிலரை இரைஞ்சிக் கொடுக்க ஏற்பாடு செய்தது. நா.பா இடைக்காலத்தில் தான் செல்லப்பாவிடம் நெருக்கம் கொண்டார். ஆனால் வல்லிக்கண்ணன் ஆரம்ப காலத்திலிருந்தே செல்லப்பாவுடன் நெருங்கி இருந்தவர். ஆனால், சாஹித்திய அகாடமி பரிசு கொடுப்பதைத் தீர்மானிக்கும் கடைசி மூவரில் வல்லிக்கண்ணன் ஒருவராக இருந்த வருடத்தில், பரிசைத் தீர்மானிக்கும் கடைசி பட்டியலில் சி.சு. செல்லப்பா இருந்தார். ஆனால் வல்லிக்கண்ணனின் தேர்வு வேறு ஒருவராகத் தான் இருந்தது. வாழ்க்கையில் நாம் காணும் விடம்பனங்களில் இதுவும் ஒன்று என்று மனம் சமாதானம் கொள்ள வேண்டும்.
இந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று. செல்லப்பாவின் எழுத்து புனர் ஜீவிதம் அளித்த புதுக்கவிதை எதிர்பாரா இடங்களில் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து விட்டது. பண்டித உலகில், மில்லியன் கணக்கில் விற்கும் வெகு ஜன பத்திரிகைகளில். நுழைந்த இடங்களில் எல்லாம் விளைந்தது கவிதை தானா என்பது வேறு விஷயம். அவரவர்க்கு ஏற்ற சொரூபம் அது அடைந்த போதிலும், புதுக்கவிதை என்றே அவை சந்தைக்கு வைக்கப்பட்டன. கருணாநிதி எழுதும் கவிதை ஒரு வடிவம், கனிமொழியினது இன்னொரு வடிவம், சிற்பி, மு மேத்தாவினது வானம்பாடி பக்கங்களில் இன்னொரு வடிவம், ஞானக்கூத்தனுக்கு வேறொன்று, இலங்கை முற்போக்கு சாடியது புதுக்கவிதை யானாலும், அதையே கோயம்புத்தூர் முற்போக்கு ஈரோடு தமிழன்பன் எழுதினால் அதற்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதி ஆசீர்வதிப்பதும் என்னவோ அதே தான்.
12 வருட எளிய வறுமை நிறைந்த, ஏளனம் செய்யப்பட்ட வாழ்க்கையில் எழுத்து தமிழ் இலக்கிய சூழலையே மாற்றி அமைத்து விட்டது. இலக்கியச் சிறு பத்திரிகை, தமிழ்ப் பண்பாடல்ல என்று எழுத்தாளர் சங்கம் தீர்மானம் நி/றைவேற்றிய விமர்சனம் என்பதும் புது மரபாக ஸ்தாபிதம் பெற்றது. கடைசியாக முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பரிக்ஷார்த்தமாக முயலப்பட்டாலும், யாப்பற்ற கவிதை, சுயேச்சா கவிதை என்று என்னென்ன பேரிலோ தாற்காலிக நாமகரணம் அன்று பெற்றாலும், 1947-ல் பிரசுரமாகி எவ்வித பாதிப்புமற்று மறக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தியின் பங்கீட்டுக் கடை பற்றிய கவிதை 1959-ல் மறு பிரசுரம் பெற்றதும், அதுவும் தற்செயலாக எவ்வித திட்டமோ முனைப்புமோ இல்லாது, பிச்சமூர்த்தி கொடுத்தாரே என்று பிரசுரம் பெற்றது, ஒரு பெரிய சூறாவளியையே கொண்டு வந்து பழைய குப்பை கூளங்களையெல்லாம் வீசி எறிந்தது.
1972 வருடம் க.நா.சு. செல்லப்பா இருவருக்குமே மணி விழா வருடம். தில்லியில் இருந்த நான் சென்னையில் செல்லப்பாவுக்கு ஒரு மணிவிழா கூட்டம் நடந்தது என பத்திரிகையில் படித்தேன். L.L.A கட்டிடத்தில். அதில் மு.வ வும் கலந்து கொண்டாரா? மங்கலாக ஒரு புகைப்படம் நிழலாடுகிறது.
ஆனால் தேவ சித்திர பாரதி (முகம்மது இப்ராஹீம்) ஜெயகாந்தன் பக்தர். அவர் ஞானரதம் என்று ஒரு மாதப் பத்திரிகை வெளியிட்டு வந்தார். அவர் புதிய தலைமுறை எழுத்தாளர் களுக்கு மிகவும் நெருக்கமானார். ஞான ரதம் சுந்தர ராமசாமி, தருமு சிவராமூ, ந.முத்துசாமி, ஞானக் கூத்தன், ராமசாமி, பின் நான் எல்லோருக்கும் ஞானரதத்தில் தாராளமாக இடம் கொடுத்தார். முதலில் ஞானரதம் டிஸம்பர் 1972 இதழ் க.நா.சு. வெள்ளி விழா சிறப்பு மலராக வெளிவந்தது. அதில் நானும், சிவராமூவும் எழுதியிருந்தோம். “க.நா.சு வும் கோவிந்தாக்களும் என்று க.நா.சுவைச் சுற்றி அவரது சிஷ்யகோடிகள் செய்யும் கோவிந்த நாம கோஷ்டி பஜனை பற்றி நான் எழுதியிருந்தேன். இந்த இதழில் தான் க.நா.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையின் இலக்கிய அர்ப்பணிப்பை அது கொணர்ந்த மாற்றத்தைப் பாராட்டி, எழுதியிருந்தார் என்று என் நினைவு.
இதற்குச் சற்றுப் பிறகு, ஞானரதம் தன் மார்ச் 1973 இதழை சி.சு. செல்லப்பா மணி விழா இதழாக வெளியிட்டது. அதிலும் நானும் சிவராமூவும் எழுதியிருந்தோம். இன்னும் பலர் எழுதியிருந்தனர். எனக்கு இப்போது நினைவில் இல்லை. நான் எழுத்து பத்திரிகை எதிர்கொண்ட பகைமை, எதிர்ப்புக்கள், எல்லாம் மீறி அது புதுக்கவிதை, இலக்கியச் சிறு பத்திரிகை மரபு, பின் விமர்சன மரபு ஒன்று, எல்லாமே தற்கால தமிழ் இலக்கியத்தில் இல்லாத மூன்று புதிய மரபுகளை தன் எளிய தோற்றத்தையும் மீறி ஸ்தாபித்துள்ளதைப் பற்றி எழுதியிருந்தேன். இந்த எழுத்து தான் தான் தொடங்கிய ஆறு மாதகாலத்தில் ஜீவிதம் இழந்ததென்று க.நா.சு. உதறி எறிந்த பத்திரிகை என்றோ என்னவோ எழுதியிருந்தேன். இவை நான் கண்ட மாற்றங்கள்.
ஒரு மலரில் க.நா.சு வின் சிஷ்ய கோடிகளின் பஜனை மண்டல கூச்சல் பற்றி. இன்னொரு மலரில் க.நா.சு. ஜீவன் இழந்தது என்று அலட்சியம் செய்த எழுத்து பத்திரிகையின் சாதனைகள் பற்றி.
இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது வழக்கம் போல் செல்லப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். என்னுடன் இருந்தது கி.அ. சச்சிதானந்தம்.
அன்று க.நா.சு. பற்றி ஞானரதம், இதழ்கள் இரண்டிலும் நான் எழுதியதைக் குறிப்பிட்டு பெரிதாக சத்தம் போடத் தொடங்கி விட்டார். என்னிடம் எந்த விளக்கத்தையும் அவர் கேட்பதாயில்லை.வரட்டும். வந்தால் ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு என் வருகைக்காகக் காத்திருந்தவர் போல, “என்ன என்று நீங்கள் எல்லாம் க.நா.சுவை நினைத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு எழுத ஒருத்தன் இடம் கொடுத்தான் என்றால் அதற்காக கண்டபடி எழுதிவிடுவதா? உங்களுக்கெல்லாம் என்ன பக்குவம் வந்திருக்கிறது, க.நா.சு வை பற்றி அப்படி எழுதுவதற்கு? இரண்டு பேரும் சேர்ந்து இதாண்டா சந்தர்ப்பம் கிடைத்தது என்று மனதில் வந்ததையெல்லாம் எழுதித் தீர்த்துவிட்டீர்களே. என்னைப் பத்தி நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்க எனக்கே கூச்சமா இருக்கு. இப்படியா எழுதறது? கொஞ்சம் கூட நிதானம் இல்லாது?
என்று திட்டித் தீர்த்து விட்டார். கூட இருந்தது சச்சிதானந்தம். அவருக்கு இது ஞாபகம் இருக்கோ என்னவோ. அவர் சண்டை போடுகிறவர் இல்லை. என்ன கருத்து வேறு பாடு இருந்தாலும், அமைதியாக, அதே சமயம் தீர்மானமாகச் சொல்வாரே ஒழிய குரல் எழுப்ப மாட்டார். அந்த காலங்களில் எங்கள் எல்லாரையும் விட செல்லப்பாவிடம் மிக நெருக்கமும் சினேகமும் கொண்டிருந்தவர் சச்சிதானந்தம் தான். அவர் அமைதியாகக் கேக்ட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.