கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக எதுவுமே சரியில்லை. உத்பாதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் அதற்கு அறிகுறியாக “கரு மேகங்கள் சூழுமாமே’ அப்படித்தான் கருமேகங்கள்: வெளியில் அல்ல, வீட்டுக்குள்.: எனக்கும் உடம்பு சரியில்லை. இரவெல்லாம் மார்பில் கபம், கனத்து வருகிறது. இருமல். உடம்பு வலி. போகட்டும் இது பருவகால உபத்திரவம். சரியாப் போகும் நாளாக ஆக என்று நினைத்து காலத்தைக் கடத்தினால், அது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. மருமகளுக்கும் அதே சமயத்தில் உடல் நிலை சரியில்லை. வீட்டில் இருக்கும் நான்கு பேரில் இரண்டு பேருக்கு அவஸ்தை என்றால். இதே சமயத்தில் நெட் இணைப்பு எங்கோ போய்விட்டது. அதை உடன் சரி செய்ய முடியாது. இணைப்பு திரும்பக் கிடைப்பதற்கு ஆறு நாட்களாயின.
இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலைபேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிகொண்டே தொலைபேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக்கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
“நான் எழுதி அதைப் படித்தா ஸ்வாமி ஒத்தன் புத்தகம் வாங்கப் போறான், இதற்குள் எல்லாம் வித்தேயிருக்கும்” என்பேன். அவர் புத்தகம் அனேகமாக எல்லாமே அதன் சர்ச்சை பூர்வமான எழுத்தை மீறி உடன் விற்று விடும். “நீங்க எழுதணும், அதுக்கு ஒரு மதிப்பு intellectual circle-ல் உண்டு.” என்பார். வேறு யாராவது இப்படிச் சொல்லியிருந்தால் அது சும்மா என் காதில் பூவைத்துப் பார்க்கும் காரியமாக இருந்திருக்கும். அவர் நிஜமாகவே இப்படி நம்புகிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் நம்பிக்கை அது. ஆனால் எனக்குத் தெரிந்த என் மதிப்பு என ஒன்று இருக்கிறதே. அவரும் என் எழுத்தின் சந்தை மதிப்பை வைத்தா சொல்கிறார்? இல்லையே. அவருக்கு என்னிடம் பாசமும் உண்டு. மதிப்பும் உண்டு. ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப்பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீகக் காரணத்துக்கானாலும் சரிதான்.
ரங்கநாதன் தெருபற்றிய என் கட்டுரை வெளியாகியுள்ளது பற்றி அவர் தொலை பேசியில் எனக்குத் தெரிவித்தற்கு இரண்டு நாட்களுக்கு முன்தான் வெகுநேரம் அவருடன் நான் திராவிட இயக்கம் பற்றிய அவர் புத்தகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு அனேக விஷயங்கள் புதிதானவை. பல பேரைப் பற்றிய விவரங்கள் எனக்கு அதிர்ச்சி தந்தவை. அதையும் அவரிடம் நான் சொன்னேன். அவ்வளவையும் நான் ஜீரணித்துக் கொண்டு பிறகுதான் எழுதவேண்டும்.எழுத முடியும். ஆரம்ப ஸ்தாபன கால அந்த மனிதர்கள் எல்லாம் ஒரே குணத்தவர்கள் இல்லை. சிலர் நடேசர் போன்றவர்கள் எளிய மனிதர்கள். தம் ஜாதியினரை மேம்படுத்த முனைந்தவர்கள். சிலர் நாயர் போன்றவர் கரிய மனது கொண்டவர்கள். படித்து முடித்து விட்டேன். எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். “சீக்கிரம் எழுதுங்கோ” என்று சொல்லி தொலை பேசியை வைத்தார் மலர்மன்னன். நான் கட்டாயம் எழுதுவேன் என்று அவருக்கு தெரியும். இருந்தும் அதைச் சீக்கிரம் படிக்கும் ஆவல் அவருக்கு.
இதை அடுத்து ஒரு நாள் ”பாரதி கதைகள் எல்லாம் புத்தகமா வந்திருக்கு. அனுப்பி வைக்கட்டுமா, இல்லை இன்னும் சுமையா இருக்குமா? “ என்று கேட்டார். “விவேகானந்தர் 150 வருட நினைவு ஒட்டி ராமக்ரிஷ்ண மடத்திலேயிருந்து ஒரு புத்தகம் வரப்போறது. அனேகமா அடுத்த மாதம் வந்துடும்” என்று வெகு உற்சாகத்தோடு சொன்னார்.
ஆனால் இப்படி திடீரென செய்துவிட்டாரே. மனுஷன் இப்படி என் எழுத்துக்காகக் காத்திருந்து கடைசியில் என்னைக் குற்ற உணர்வில் புழுங்கச் செய்துவிட்டார். நான் அவரை ஏமாற்றி விட்டதாகச் சொல்லமுடியுமோ என்னவோ, அவர் என்னிடம் ஏமாந்துவிட்டார். எப்படிச் சொன்னால் என்ன? அவரது உயிர் ஒரு குறையோடு தான் பிரிந்திருக்கிறது. அதற்குக் காரணன் நான்.
எங்கள் பழக்கம் முப்பது வருடங்களுக்கும் மேலாக நீள்வது. 1980-லிருந்து. ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அறியாத காலத்திலிருந்து. 1/4 என்று ஒரு காலாண்டு பத்திரிகை. அதுவரை யாரும் நினைத்திராத பெயரில். என்னமோ சொல்லி என்னை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார் மலர் மன்னன் என்ற பெயர் கொண்ட அதன் ஆசிரியர். அவரை முன் பின் கேட்டதில்லை. எழுத்து பத்திரிகை யிலிருந்து அவர் என்னைத் தெரிந்திருக்கிறார். அவரது அக்காவும் சி.சு.செல்லப்பாவும் ஒரே வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள். அதே 19-ஏ பிள்ளையார் கோயில் தெரு. நானோ, யார் கேட்டாலும் எழுதும் மனநிலை எனக்கு. இப்போதும் தான். நக்கீரன் பத்திரிகை கேட்டாலும் எழுதித் தந்தேன். பாடம் கற்றுக்கொண்டது நானல்ல. (நான் எழுதுவதை எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். நக்கீரன் தான் என்னை ஒதுக்கியது மேலிருந்து வந்த ஒரு தொலைபேசி மிரட்டலுக்குப் பின்)
1/4 பத்திரிகைக்கு நான் எழுதியது அச்சாகி பத்திரிகை வந்தது. அதைத் தவிர வேறு என் நினைவில் இருப்பது சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலின் முதல் இரண்டு அத்தியாயங்கள். ஒரு தடவை எழுதியது போல் அடுத்த தடவை எழுதாதவர். ஒவ்வொன்றும் வித்தியாசமாகவே இருக்க வேண்டும் என்று முயல்பவர். பத்திரிகை முற்றிலும் வித்தியாசமானது, இதுவரை எந்த இலக்கியப் பத்திரிகை யிலிருந்து வேறுபட்டது. பத்திரிகை எப்படி இருக்கவேண்டும்,. அதில் யார் யார் எழுதவேண்டும் என்ற ஒரு தீர்மானம் அந்தப் பத்திரிகையில் இருந்தது. என்னை எழுதச் சொன்னவர், என்னிடமிருந்து எதிர்பாராத ஒரு விஷயத்தைப் பற்றித் தான் எழுதியிருந்தேன். ஹிட்லரும் வாக்னரும். அந்த நீண்ட கட்டுரை இரண்டு இதழ்களில் வெளியாகியது. அது மலர்மன்னனுக்கு சந்தோஷத்தைத் தந்தது என்று வெகு காலம் பின்னர் தெரிந்தது. எழுத்து பத்திரிகையின் தொடக்க காலத்திலிருந்து அவர் என் எழுத்துக்களைத் தொடர்ந்து வந்துள்ளார் என்பதும், முதல் இதழிலிருந்தே என் எழுத்துக்களைப் பிரசுரிக்க வேண்டும் என்றும் அவர் எண்ணம் கொண்டிருந்தார் என்பதும் பின்னர் தெரிந்தது. “வாதம் விவாதங்கள்” தொகுப்பில் அவர் எழுதியிருந்த கட்டுரை தான் எனக்கு இந்த விவரங்களைச் சொன்னது. ஆனால் 1980-ல் இதெல்லாம் எனக்குத் தெரிந்திராத விவரங்கள். அவர் திட்டமிட்டு யாரை எழுதச் சொல்ல வேண்டும் என்பதில் அவருக்கு ஒரு தீர்மானம் இருந்தது என்பது 1/4 பத்திரிகையின் வெளிவந்த சில இதழ்களில் தெரிந்தது. பத்திரிகை அதிக காலம் நிற்கவில்லை. அது ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் இப்படி முயற்சிகளில் ஈடுபட தமிழ் நாட்டிலும் சிலர் சிந்தனையும் செயலும் செல்கிறதே என்பது மனம் ஆறுதல் கொள்ளும் விஷயம். இதை அடுத்து நான் சென்னை சென்ற போது, என் நினைவில் அனேகமாக அது ந. முத்துசாமியாகத் தான் இருக்க வேண்டும். மலர் மன்னனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மலர் மன்னனின் மகள் பத்மா சுப்ரமண்யத்திடம் நாட்டியம் கற்றுக் கொள்கிறாள் என்று தெரிந்தது. அவ்வளவு தான் எனக்கும் மலர்மன்னனுக்குமான தொடர்பு. பின்னர் அவரை நான் சந்தித்ததில்லை. இடையில் அவர் சில காலம் கணையாழி ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்விப் பட்டேன்.
ஒரு நீண்ட இடைவெளி. நான் சென்னை வந்த பிறகு தான், அதிலும் அனேகமாக 2005 அல்லது 2006-ல்- தான் நான் மலர்மன்னனை நேரில் சந்தித்ததும் நீண்ட நேரம் பேசியதும் அவர் எழுத்துக்களை தொடர்ந்து படித்ததும். அதற்கு நான் அரவிந்தனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
அல்பாயுசில் மரணிக்கப்பட்ட சிந்தனை என்னும் இணைய குழுமத்தில் தான் அவரது எழுத்துக்களைப் பார்த்தேன் என்று நினைவு. திண்ணையிலும் இருக்கலாம். ஹிந்து மத நிலைப்பாட்டிலும், அரசியலிலும் அவர் காட்டிய தீவிரத்தை அப்போது நான் படிக்க நேர்ந்தது எனக்கு சந்தோஷமும் ஆச்சரியம் தரும் அவரைப் பற்றிய புது விஷயமும் ஆகும். இந்த மலர் மன்னனை நான் அறிந்தவனில்லை. இதற்கிடையில் தான் ஒரு நாள் அரவிந்தன் நீலகண்டன் என்னைப் பார்க்க வந்து கொண்டிருப்பதாக தொலைபேசியில் சொன்னார். மதிய நேரம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் வாசலில் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார் அரவிந்தன். அவருடன் கூட வந்திறங்கியவர் ஒரு வெண் தாடிக்கார என் வயதினர்.
ஆரம்ப சில நிமிட திகைப்பிற்குப் பின் மலர்மன்னன் பலமாகச் சிரித்துக்கொண்டே என்னைத் தெரியவில்லையா? என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அரவிந்தன், “மலர் மன்னன்” என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். “எப்பவோ பார்த்தது, அதிலும் இப்போது இந்த தாடியோட….” பிறகு தான் தெரிந்தது அவருக்கு அரவிந்தன், நேசகுமார் எல்லோரோடும் நல்ல பழக்கம் என்று. நிறைய, எவ்விதத் தயக்கமும் இல்லாது மனம் விட்டு, சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் சுபாவம். 1980 லிருந்து தெரியும் என்றாலும் இப்போது தான் மலர் மன்னனை நேரில் மிக நெருக்கமாக, வெகு அன்னியோன்யத்துடன் பேசும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. 25 வருடங்களுக்குப் பிறகு.
கையில் எடுத்து வந்திருந்த புத்தகத்தைக் கொடுத்தார். “கானகத்தின் குரல்” போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜார்க்கண்ட் வனப்பகுதிகளில் வாழ்ந்து, பிரிட்டீஷ் அதிகாரத்துக்கு எதிராக வரி கொடுக்க மறுத்துப் போராடிய ஒரு பழங்குடி இளைஞனின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் வரலாறு. பிர்ஸா முண்டா என்று பெயர். ஜார்க்கண்ட் கட்ட பொம்மன். கிறித்துவனாக்கியும் கூட அவன் தன் வேர்களை, மரபுகளை மறக்காதவன். 30 வயதிலேயே சிறைக் கைதியாகவே நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டவன் அவன் முழு உருவச் சிலை கூட ராஞ்சியிலோ என்னவோ பத்திரிகையில் வெளிவந்த புகைப்படத்தில் பார்த்த நினைவு. அப்போது அமுத சுரபியில் எழுதி வந்தேன். எனக்கு புத்தகம் பிடித்திருந்தது.
மலர் மன்னன் எங்கெங்கெல்லாம் சுற்றி அலைந்திருக்கிறார், எங்கெங்கெல்லாம் தன் வாழ்க்கையை என்னென்ன பொது லட்சியங்களுக்காகக் கழித்திருக்கிறார் என்று சொல்ல இயலாது. எனக்கு பிர்ஸா முண்டா பற்றிய அந்தப் புத்தகத்தைப் படிக்கும் வரை மலர் மன்னனின் நீண்ட வாழ்க்கையப் பயணத்தைப் பற்றி எனக்கு ஏதும் அதிகம் தெரியாது. இங்கு வந்து அவருடன் பழக ஆரம்பித்தபிறகும் அவர் எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கிய பிறகும் தான் தன்னலமற்று ஒரு லட்சியத்தின் பின் எத்தகைய வாழ்க்கையையும் ஸ்வீகரித்துக் கொள்ளும் அவர் இயல்பையும் அது பற்றி அலட்டாது தம் இய.ல்பில் வருவதை ஏற்றுக் கொள்ளும் மனதும் ஒரு துறவிக்கே, வாழ்க்கையையும் மனிதரையும் மிகவும் நேசிக்கும் மனிதருக்கே அது சாத்தியம். அவர் துறவியாகவும் இருந்தார். வாழ்க்கையைத் துறந்தவர் அல்ல. ஜார்கண்டின் ஆதிவாசிகளிடையே, (அவர்களில் யார் நாக்ஸலைட் தீவிர வாதிகள், யார் சாதாரண குடிமக்கள் விவசாயிகள், வனவாசிகள் என்பது தெரியாது.) வாழ்ந்திருக்கிறார் அங்கு அவரை இழுத்துச் சென்றது எது? பின் வந்த ஐந்தாறு வருடங்களில் அவர் எழுத்துக்களை தொடர்ந்து முடிந்த வரை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முடிந்த வரை என்று நான் சொல்வது அவர் எங்கெங்கெல்லாம் எழுதுகிறார் என்று தேடிச் செல்ல என்னால் முடிந்ததில்லை. கண்ணில்பட்ட அத்தனை யையும் படித்திருக்கிறேன். இப்படி ஒரு மனிதரின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். என்னிடம் இல்லாத குணங்களைக் கண்டால் என்னால் வியக்கத் தானே முடியும்? இப்படிப் படித்ததெல்லாம் திண்ணையில் தான்.
அப்போது தான் தட்டுத் தடுமாறி கம்ப்யூட்டரில் தமிழில் எழுதப் பழகி வந்தேன். கம்ப்யூட்டரிலேயே எழுதலாமே, எதற்காக இருக்கிறது அது? என்று என்னைத் தூண்டியது அண்ணா கண்ணன் தான். கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்ததும், கொஞ்ச காலத்தில் கையால் எழுதுவதே பழக்கம் விட்டுப் போனதால் சிரமாமாயிற்று. ஆனால் முரசு அஞ்சலில் தட்டச்சு செய்து அமுதசுரபிக்கு ஒரு நாள் கெடுவில் அனுப்ப முடிகிறது தபால் செலவில்லாமல் என்றால் எவ்வளவு சந்தோஷம்.
அது தான் கனடா பத்திரிகையிலும் அவர்கள் என்னை ஒன்றரை வருஷம் சகித்து அலுத்துப் போய் போதும் என்று சொல்லும் வரை எழுத முடிந்திருக்கிறது. அமுதசுரபி, தமிழ் சிஃபி, தமிழ் ஹிந்து என நிறைய பத்திரிகைகளில் எழுத வழிகாட்டியது. நான் எங்கு எழுதினாலும் மலர்மன்னன் தொடர்ந்து விடாது படித்து வந்திருக்கிறார்.
ஒரு சமயம் மோன் ஜாய் என்ற ஒரு அசாமிய படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். யாரொ எனக்குப் புதியவர் மணி ராம் என்பவர் எழுதிய கதை அவரே இயக்கமும் அவரே திரைக்கதையும். லோக் சபா தொலைக்காட்சியில் பார்த்தது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி வந்திருக்கிறேன். லோக் சபா தொலைக்காட்சியில் விளம்பர வருவாய் தராத நல்ல படங்களைக் காணலாம் என்று. யாரும் செவிசாய்த்ததில்லை. அசாமில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பின்று படும் அல்லலுக்கிடையே பங்களாதேஷிலிருந்து வருபவர்கள் எப்படியோ தம்மை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். வெகு சகஜமாக ஊரில் உள்ளவர்களுடன் பழகிக்கொள்கிறார்கள். ஊர்க்காரர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் திருட்டுத் தனமாகக் குடியேறிய பங்களாதேஷிகள் முதலில் செய்யும் காரியம் தமக்கு ஒரு ரேஷன் கார்டை வாங்கிக்கொள்வது தான். இந்த வினோதங்களையும் வேதனைகளையும் அந்த படம் விவரித்திருந்தது. விஸ்வரூபம் படத்தைப் பார்த்துக் கொதித்து எழுந்தது போல, மோன் ஜாய் படத்தைப் பார்த்து எந்த அசாமிய முஸ்லீமோ, திருட்டுத்தனமாக குடியேறிய பங்களாதேஷ் முஸ்லீமோ ரகளை செய்யவில்லை.
அந்தப் படத்தைப் பற்றி நான் எழுதியதை திண்ணையில் படித்து உடனே எனக்கு மலர்மன்னனிடமிருந்து தொலைபேசி வந்தது. ”நானும் அந்தப் படம் பார்த்தேன். ரொம்ப நல்ல படம். அசாம் நிலமையைச் சொல்லும் படம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது படமும், நீங்கள் அதைப் பற்றி எழுதியதும்.” என்றார். இந்த சானலில் படம் வருகிறது பாருங்கள் என்று அவருக்கு நான் சொல்லவில்லை. ஆனால் பார்த்திருக்கிறார். அவருக்குத் தெரிந்திருக்கிறது. பசித்தவனுக்கு சோறு கிடைக்கும் இடம் தெரிந்து விடும். ஆனால் சினிமாவில் இவ்வளவு ஆர்வம் உண்டு. அது அசாமிய படத்தையும் ஒதுக்காது. அதில் படம் பார்ப்பதற்கும் மேலாக அந்தப் படம் அதன் அரசியலையும், மக்கள் அரசால் ஏமாற்றப்படுவதையும் கூட படித்தறியும், ஒரு படத்தின் பரிமாணங்கள் எங்கெங்கோ பாயும் எனபதை நான் அறிவேன். அவரும் அறிந்திருந்தார். எனக்கு ஜொஹான் பருவா என்று ஒரு பெயரைத் தெரியும். இப்போது மணி ராம் என்று இன்னொரு பெயரையும் தெரிந்து கொண்டேன்.
சென்னை வந்தபிறகும் அதிகம் சந்தித்துக்கொண்டதில்லை. ஒரு நாள் பஸ்ஸுக்காக மௌண்ட் ரோட் ஸ்டாப் ஒன்றில் காத்திருந்த போது எதிர்ப்பட்டார். என் கூட ரவி இளங்கோ. இவர் ரவி இளங்கோ, சிறந்த சினிமா ரசிகர். உலக சினிமா அத்தனையும் அத்துபடி இவருக்கு” என்று அறிமுகம் செய்து வைத்தேன். தினம் ராத்திரி பத்து பதினோரு மணிக்கு மேலே ஒன்றிரண்டு டிவிடி பார்க்காமல் இரவு கழியாது: என்றேன். “அடேயப்பா, உங்க ஃப்ரண்டு வேறே எப்படி இருப்பார்” என்று அவர் ப்ராண்ட் உரத்த சிரிப்பு.
சென்னையில் இருக்கும் போதே அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியவிலலை. பங்களூர் போன பிறகா அது சாத்தியமாகப் போகிறது? ஒரு நாள் அவரிடமிருந்து தொலை பேசி வந்தது. “நான் இப்போ பங்களூரில் இருக்கிறேன். நான் வரட்டுமா? எப்படி வருவது என்று வழி சொல்லுங்கள்’ என்று விசாரித்து வந்தார். இங்கு அவராகக் கேட்டு வந்தும் நிகழ்ந்தது விடம்பனமா, சோகமா, இல்லை வேறென்ன சொல்வது? அவர் வந்தார். “வாருங்கள் என் அறையில் உட்கார்ந்து பேசலாம் என்று என் அறைக்கு அழைத்துச் சென்றேன் எனக்கு கொஞ்ச நாளாக ஜலதோஷம். மூச்சடைப்பு எல்லாம். அவர் வந்து உட்கார்ந்ததும் என் மருமகள் எனக்கு நெபுலைஸைஸேனுக்காக எல்லாம் தயார் செய்து என் வாயை அடைத்துவிட்டாள். “ நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். அவர் கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால் பேசமாட்டார். நெபுலைஸேஸன் முடிகிறவரைக்கும்”. என்றாள். பாவம், இவ்வளவு தூரம் தேடி வீட்டுக்கு வந்தவர் பேசுவதற்காக வந்தவர் இதையும் சிரித்து ஏற்றுக்கொண்டார். கடைசி வரை அவர் தான் பேசிக்கொண்டிருந்தார். நான் வாயடைக்கப் பட்டிருந்தேன். இப்படி எங்காவது நடக்குமோ?. நடந்தது.
ஒரு நாள் தொலைபேசி மணி அடித்தது. எடுத்து “ஹலோ” என்றால் எதிர்முனையிலிருந்து “ கீ முஷாய், கேமொன் ஆச்சேன்” என்று ஒரு குரல் வந்தது. ”ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? என்று வங்காளியில் விசாரணை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதும் தவறான இணைப்பில் எனக்கு அழைப்பு வந்ததோ என்று. இங்கே பங்களூரில் எனக்கு யார் வங்காளியில் பேசுபவர், அதுவும் திடீரென்று? “கீ சாய் அப்னாகே, கார் ஷங்கே கொதா போல்தா சாய், போலுன் தோ” (உங்களுக்கு என்ன வேண்டும்? யாரோடு பேசவேண்டும் சொல்லுங்கள்) என்றால், எதிர்முனை யில் பலத்த சிரிப்பு. “ஆமி ஜானி, ஆமி ஜானி, அப்னார் ஷங்கேய் கொதா போல்போ, ஆமி கே போலுந்தோ? என்று. (நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். உங்களோடு தான் பேசவேண்டும். சரி நான் யார் சொல்லுங்கள் பார்ப்போம்) என்று பதில் வருகிறது. “நா. ஆமி சின்த்த பாஸ்ச்சி நா, கமா கொரூன், ஆப்னி கே” (இல்லை, உங்களை அடையாளம் தெரியவில்லை. மன்னிக்கவும், யார் நீங்கள்?) என்று நான் சொன்னதும் மறுபடியும் பலத்த சிரிப்பு. எதிர்முனையில் ஒரே கொண்டாட்டமாக இருந்திருக்கிறது என் தவிப்பைப் பார்த்து. (ஆமி ஆப்னார் பந்தூ”) நான் உங்கள் ஃப்ரண்ட்தான் தெரியலையா?” என்று சொல்லி நிறுத்தி பின், ”என்ன சாமிநாதன் நீங்க. என் குரலைக்கூட அடையாளம் தெரியலையா, நான் தான் மலர்மன்னன் பேசறேன்” என்றார். எனக்கு இன்னம் ஆச்சரியமும் திகைப்பும். “நீங்க எப்படி வங்காளியிலே….. அதுவும் என்னோட வங்காளியிலே பேசலாம்னு எப்படித் தோணித்து. வங்காளி எங்கே கத்துண்டது?” என்று கேட்டேன். “என்ன சாமிநாதன். அதுக்குள்ளே உங்களுக்கு மறந்துட்டதா? நீங்க தானே ஹிராகுட்டிலே ரஜக் தாஸ்னு உங்க ஆபீஸ் சகா முக க்ஷவரம் செய்யற கடை எங்கேடா கிடைக்கும்னு தேடின கதையை எழுதியிருக்கறது மறந்து போச்சா. சரி நாமும் நம்ம வங்காளியை பேசிப் பார்ப்போமேன்னு தோணித்து.”
நீங்க எங்கே வங்காளி கத்துண்டு இவ்வளவு நல்லா பேசறீங்களே” என்று கேட்டேன். “நான் எவ்வளவு காலம் கல்கத்தாவிலும் அங்கே இங்கேயும் கடத்தியிருக்கேன். பேசி ரொம்ப நாளாச்சு என்றார். நான் 1950 களில் ஒரு குடும்பத்தோடும் நண்பனோடும் அன்னியோன்யமாக ஆறு வருஷம் பழகிக் கற்று, அதன் பிறகு யாரோடும் பேசும் வாய்ப்பு இல்லாது தடுமாறிக்கொண் டிருக்கிறேன். அவர் சரளமாக இபபடி பேசுகிறார் என்றால், எவ்வளவு காலம் கழித்திருப்பார். வங்காளத்தில்?. எவ்வளவு காலம் ஜார்க்கண்டில்?
எனக்குத் தெரிந்தது அவர் பத்திரிகை நிருபராக தமிழ் நாட்டில் இருந்தது தான். திராவிட முன்னேற்ற கழகத்தில் அண்ணாத்துரை யோடும், அவரோடான நெருக்கமான பழக்கத்தில் இன்னும் சிலரோடும் பழகியிருந்திருப்பார். இயல்பாக திராவிட கழகத்திலும் சரி, திராவிட முன்னேற்ற கழகத்திலும் சரி, வேறு யாரும் இந்தப் பாப்பானை தோழமையோடு உள்ளே பழக விட்டிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அண்ணா துரையோடு ஒருத்தர் தயக்கமில்லாமல், பழகமுடியும் கொஞ்சம் நட்பையும் ஏற்படுத்திக்கொண்டு வளர்க்க முடியும் என்று எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. காரணங்கள் எல்லாம் வாதித்து நிறுவ முடியாது. இவர்கள் வண்டவாளங்களை யெல்லாம் இன்னும் அதிகமாகவும் நன்றாகவும் வெகு காலமாகவும் அறிந்த திருமலை ராஜன் இதைக் கடுமையாக மறுப்பார். அங்கு ஒரு நல்ல ஜீவன், நாகரீக ஜீவன் கிடையாது என்று அடித்துச் சொல்வார்.
ஆனால் மலர்மன்னன் தன் நீண்ட காலத்திய அனுபவத்திலிருந்து சொல்வது வேறாக இருக்கும். ஒரு பத்திரிகை நிருபராக தமிழ் நாட்டின் அரசியலை, அதுவும் கழக அரசியல் நடவடிக்கைகளை யும் அவர்களில் பலரது சுபாவங்களையும் அவர் அறிந்திருக்கக் கூடும். கூடும் என்ன?. அறிந்திருக்கிறார். அன்ணாதுரை தீவிர கழகப் பிரசார காலத்திலும் பழகுவதற்கு இனியவராகவே இருந்திருக்கிறார். எளியவர், ஆடம்பரமில்லாதவர், பணத்தாசை இல்லாதவர். இப்படிப்பட்டவர் எப்படி இதில் எந்த குணமும் அற்ற, நேர் எதிரான அவரது தலைவரோடும் இன்னும் பல சகாக்களோடும், பழக, உடன் செயலாற்ற முடிந்திருக்கிறது என்பதெல்லாம் புதிரான விஷ்யங்கள்.
மலர் மன்னன் கடந்த பத்து வருடங்களில் திராவிட கழகம் பற்றியும், அது பற்றிப்பேசும் சந்தர்ப்பத்தில், அண்ணாதுரையுடனான தன் உறவு பற்றியும் அவரது சுபாவங்கள், ஆளுமை பற்றியும் அந்தந்த சந்தர்ப்பத்திற்கு வேண்டிய அளவு எழுதியிருக்கிறார். திமுக உருவானது ஏன்? என்று அந்த சந்தர்ப்பத்து நிகழ்வுகளையும் சம்பந்தப்பட்ட தலைவர்கள், நபர்களின் சிந்தனைகள், செயல்கள் பற்றியும். இப்போது திராவிட இயக்கம், புனைவும் உண்மையும் என்ற புத்தகத்தில் அதன் ஆரம்ப காலம் தொட்டு, சம்பந்தப்பட்ட தலைவர்களின் மன ஓட்டங்களையும், பேச்சுக்களையும் செயல்களையும் பற்றி எழுதியிருக்கிறார். இவற்றோடு பலரால் திண்ணையில் எழுப்பபட்டுள்ள பிரசினைகளைப் பற்றி தான் அறிந்த மாறுபட்ட தகவல்களையும் மறைக்கப்பட்ட் உண்மைகளையும் சளைக்காது, அயராது, எத்தகைய எதிர்வினைகளையும் பற்றிய கவலை இல்லாது தன் எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக எழுதப்பட்டு வந்துள்ள வரலாறுகள், இன்றைய தலைவர்களின் இன்று கோலோச்சும் சக்திகளின் ஊதிய பிரமைகளை, பிம்பங்களைக் காப்பாற்றும் தீவிர முனைப்பில், அனேகம் உண்மைகள் மறைக்கப்பட்டு வந்துள்ளன. தமிழ் நாட்டின் வரலாற்றில் தம் பங்கையும் ஆற்றிய பலர் இருட்டடிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையெல்லாம் பற்றி முன்னரே கருணாநிதி பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுத நேர்ந்த சந்தர்ப்பத்தின் போது, தமிழ் நாட்டின் ஒரு நூற்றாண்டு வரலாறு, அந்த வரலாற்றின் நாயகர்கள் பற்றிய உண்மையான பதிவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கும் உண்மைகள் பேசப்படும் தார்மீக சூழல் இல்லை. பி. ராமமூர்த்தி பேசியிருக்கிறார் ஒரு புத்தகத்தில். அதை அவர் கட்சியனரே பேசுவதில்லை. காரணம் அவ்வப்போது மாறி வரும் கூட்டணிக் கட்டுப் பாடுகள். காமராஜர் பற்றிய வரலாறு எழுதுபவர் இதை வெளியிட தகுந்தவர் கலைஞர் தான் என்று அங்கு சரணடைகிறார். ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் காமராஜர் என்று கருணாநிதி பேசியது அதில் இருக்குமா? என்னைக் கொலை செய்ய சிலர் சதி செய்தார்கள் என்று ஈ.வே.ரா குற்றம் சாட்டியது என்னைத் தான் என்று அண்ணாதுரை மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததும் ஈ.வே.ரா மன்னிப்பு கேட்டு வழக்கு வாபஸ் ஆனதும் எந்த திக திமுக தலைவரோ தொண்டரோ, எழுதுவார்.? வரலாற்றில் பதிவு செய்வார்? எந்த திக திமுக தலைவரின் உண்மையான குண நலன் பற்றியும் அந்தக் கட்சிகளின் உண்மை சொரூபம் பற்றியும் வரலாறு எழுதப்படும்? அரங்கண்ணல் வடக்கே சென்றால் அங்கு உள்ள யாதவ் தலைவர்களைச் சந்தித்து, ”நாமெல்லாம் ஒரே சாதி தான்,” என்று சொந்தம் கொண்டாடும் மன நிலை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு சக்தி வாய்ந்த தலைவரை திட்டமிட்டு நீக்க, ”இவர் என்னைக் கொலை செய்ய முயன்றார்” என்று வை கோ குற்றம் சாட்டப்பட்டதை எந்த திமுக தலைவர் இன்று ஒப்புக்கொள்வார்? கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோஷத்துக்கு திராவிட கட்சிகளில் என்ன அர்த்தம்? திராவிட மாயை எழுதும் சுப்பு தன் புத்தகத்துக்கு தகவல் திரட்டப் போனால் என்ன தடைகளை எதிர்கொள்ள நேர்கிறது? விடுதலையின் பழைய பக்கங்களைப் புரட்ட வீரமணி அனுமதிப்பாரா? கடைசியில் இவர்கள் மறைத்தும் கற்பித்தும் எழுதும் வரலாறு தானே வரலாறாகிறது? எது பற்றியும் உண்மை நடப்பு என்ன என்று நெஞ்சுக்கு நீதி பக்கங்களைப் புரட்டியா தெரிந்து கொள்ள முடியும்? ”பாப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பாப்பானை அடி” என்று ஒரு மகத்தான பகுத்தறிவு உபதேசம் செய்த பகுத்தறிவுப் பகலவன், அண்ணாதுரையின் மீது இருந்த காட்டத்தில் திமுகவுக்கு எதிராக ஒரு பிராமணருக்கு வாக்களிக்க தேர்தல் பிரசாரம் செய்ததை எந்த திக திமுக பதிவு செய்வான்?
இது இப்போது மட்டுமல்ல. ஆரம்பம் முதலே இப்படித்தான். நடேச முதலியார் பிராமண துவேஷம் கொண்டவரல்லர். ஆனால் தம் சாதியினர் ஏன் படித்து அரசு உத்யோகத்துக்கு வரவில்லை என்ற அங்கலாய்ப்பு கொண்டவர். தவறென்ன அதில்? ஆனால் இவர் கூட்டு சேர்ந்தது சங்கரன் நாயருடன். இவர் தான் திக திமுகவுக்கு சரியான மூல புருஷர். ஹைகோர்ட் ஜட்ஜ் தான். சென்னையில் பிராமணருக்கு எதிராக புலியெனப்பாயும் சங்கரன் நாயர் தன் சொந்த ஊர் மலபாரில் நம்பூரிதிரிகளைக் கண்டால் எலியெனப் பதுங்குபவர். “அங்கு கிராமத்துக்குப் போனால், அங்கே ஒரு நம்பூதிரிப் பிராமணன் உட்கார்ந்து கொண்டு, “எடா சங்கரா, நீ ஹைகோர்ட் ஜட்ஜாயோ” என்று அதிகாரமாக விசாரிப்பான். அதற்கு நம் சங்கரன் நாயர் மிகவும் பவ்யமாக “சகலமும் திருமேனி கடாட்சம் தன்னே “ என்று அவன் பாதங்களைத் தொட்டு வணங்கி பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று சொல்வது டி.எம். நாயர். எந்த மைலாப்பூர் பாப்பானும் அல்ல. சரி, இந்த டி.எம். நாயர் என்னும் கழகங்களின் ஆதிபகவன் என்ன செய்வார்: பாரதியே இவரைப் பற்றி எழுதுகிறார்: “ சென்னைப் பட்டணத்தில் நாயர் கட்சிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்” “பஞ்சமர், பாரதியார் கட்டுரைகள். ஆக இவர்களது ஆரம்பமே இந்த ரகம் தான். இதை நான் இப்போது தெரிந்து கொள்வது மலர் மன்னனின் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்” புத்தகத்திலிருந்து. இவையெல்லாம் அவர் பத்திரிகைகளையும் ஆவணங்களையும் தேடி ஆராய்ந்து எழுதியது. இம்மாதிரியான பழைய வரலாறுகள் மறைக்கப்பட்ட, அனேகர் எழுதுவதுக்கு தயங்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும். அது கழகங்களை மாத்திரம் அல்ல, அதன் பகுத்தறிவுப் பகலவன்கள், மானமிகுகள், கலைஞர்கள், பேராசிரியர்கள் எத்தகையவர்கள் என எல்லோரும் அறியத் தக்க தகவல்களாக (common knowledge) தமிழில் புழங்க வேண்டும். இப்போதோ இவை முனைந்து தேடிப்பிடிக்க வேண்டிய, திட்டமிட்டு மறைக்கப் படும் தகவல்களாகவே உள்ளன.
இவர்களில் சில விதிவிலக்குகள் உண்டு தான். இன்று நமக்குத் தெரியும் இரா செழியன் போன்றோர். இன்னமும் எனக்கு சற்றும் விளங்காத புதிராக இருப்பது அண்ணாதுரையின் ஆளுமை. பெரும்பாலான திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு, ஒரு போலியான இலக்கிய அந்தஸ்தும், நாகரீகப் பூச்சும் தந்தவர் அண்ணாதுரை. ஈ.வே.ரா வுக்கு ஒரு பாமரத்தனமான பாப்பன துவேஷம் தான் தெரியும். அதுக்கு ஏதோ கைபர் கணவாய், ஆரியப் படையெடுப்பு, திராவிட எழுச்சி என்றெல்லாம் முலாம் பூசியது, கால்ட்வெல்லிலிருந்து பொறுக்கி எடுத்து அதை ஏதோ சரித்திர உண்மையாக்கி கல்விக்கூடங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு மரியாதையை உண்டாக்கியது அண்ணாதுரை தான். இது போல எத்தனையோ சொல்லலாம். ஏன் செய்தார்?. இதையெல்லாம் அவர் நம்பித்தான் செய்தாரா, பின்னாட்களில் அவருக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஈ.வே.ரா. பொன்ற ஒரு முரட்டுத் தனமும் அதிகார மனப்பான்மையும் கொண்ட தலைமையின் கீழ் அடிமை போல் அன்ணாதுரை இருந்ததன் காரணமென்ன? இப்படி எத்தனையோ கேள்விகள், இதற்கான பதில்களை அருகில் இருந்து பார்த்த, பழகிய கழகத்துக்கு அப்பால் இருந்தவர்களிடமிருந்தே இவை வெளிவர சாத்தியம். அப்படிப் பட்டவர்களில் மலர்மன்னன் ஒருவர். அவர் தான் இது பற்றி எழுதவும் செய்கிறார். அவ்வப்போது எழும் வாய்ப்பிற்கேற்ப எழுதி வந்திருக்கிறார். எழுதிய புத்தகங்களிலும், அவ்வப்போது திண்ணை போன்ற இணைய தளங்களில் சர்ச்சை எழும்போது அவர் தரும் பின்னூட்டங்களிலும். ஆனால் ஒரு தொடர்ந்த பதிவாக, தன் வாழ்க்கை நினைவுகளாக அவர் அறிந்ததையும் பார்த்ததையும் முழுமையாக எழுதவில்லை.
அவரிடம் நான் கண்ட மிக அரிதான பண்பு, மென்மையும், தான் சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லும் தைரியமும். அன்றைய நெருக்கத்தின் காரணமாக இன்றைக்கு அவர் எதையும் மூடி மறைப்பதில்லை. இன்றைய மதிப்பீட்டை மனதில் கொண்டு அன்றைய நெருக்கத்தை அவர் மறுத்ததுமில்லை. அண்ணாத் துரை, கனிமொழி போன்றோருடனான உறவுகளை அவர் எழுதும் போது அவ்வப்போதைய உண்மைக்கு அவர் வர்ணம் பூசுவதில்லை.
அவர் திடீரென மறைந்து விட்டது, (எனக்கு இந்த இழப்பு திடீர் இழப்புத் தான்) சொந்த இழப்பு மாத்திரமல்ல, தமிழ்ச் சூழலும் வரலாறும் பெற்றிருக்கவேண்டியதைப் பெறாமலே போய்விட்டது. யாரானும் முடிந்தால் இதுகாறும் அவர் பின்னூட்டங்களாக எழுதியவற்றிலிருந்து அவ்வப்போதைய அரசியலையு,ம், அரசியல் அரங்கில் உலவிய மனிதர்களை பற்றிய அவ்ர பார்வையும் அனுபவமும் கொண்டவற்றைத் தொக்குக்க முடியுமானால், அவை உதிரியாக வீணாகாமல் நிரந்தர பதிவாக நிலைக்கும்.
(2)
எனது இரண்டாவது இழப்பு டோண்டு என்னும் விசித்திரமான பெயரில் உலவிய ராகவன் அவர்கள். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதே திருமலை ராஜன் தான். நான் சென்னை புற நகர் மடிப்பாக்கத்தில் இருந்த போது ஒரு நாள் திடீரென திருமலை ராஜன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். அவரை அன்று தான் முதலில் பார்க்கிறேன். உடன் டோண்டு ராகவனும். வயதானவர் ஆனால் என்னிலும் இளையவர். நல்ல தாட்டியான உடம்பு. திருமலை ராஜனை சிந்தனை மூலம் தான் தெரியும். எனக்கு கம்ப்யூட்டர் வாங்கி அதில் கொஞ்சம் தட்டுத் தடுமாறி கற்றுக்கொண்டு பின்னர் இணைய தளங்களில் அலைய ஆரம்பித்து அரவிந்தன் தான் என்று நினைக்கிறேன், சிந்தனையில் அறிமுகப்படுத்தி, பின்னர் தான் திருமலை ராஜனைத் தெரியும். ஆனால் இணையத்தில் தனக்கென ஒரு சாம்ராயத்தையே உருவாக்கி ஒரு மாதிரியான சர்வாதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த டோண்டுவைத் தெரியாது. அன்றைய சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக அப்போது தெரியாவிட்டாலும் பின்னாட்களில் விரிந்த உறவும் நட்பும் அதன் முக்கியத்வத்தைப் பின்னர் உணர்த்தியது. டோண்டு ராகவனுக்கு மடிப்பாக்கத்தை அடுத்த நங்கநல்லூரில் வீடு. வந்த முதல் நாளே அவரை எனக்கு கம்ப்யூட்டரில் ஏற்பட்ட சிக்கல்களைச் சொல்லி ஒரு அரை மணிநேரம் அவரிடம் பாடம் கற்றேன். அப்படியெல்லாம் ஒரு தடவை சொல்லி விளங்கிக் கொள்கிறவன் இல்லை நான். இதற்கு முன் அரவிந்தனிடமும் பாடம் கேட்டிருக்கிறேன். ”என்னடா இது?, அவர் அப்பாவையும், அவருடன் வந்த நண்பரையும் உட்கார்த்தி வைத்துவிட்டு அரவிந்தனை அழைத்துக்கொண்டு கம்ப்யூட்டரின் முன் உடகார்ந்து விட்ட குற்ற உணர்வு இருந்த போதிலும், அதைக் கொஞ்சம் தட்டித் துடைத்தேன். அதே காரியம் தான் திருமலை ராஜனுடன் டோண்டு வந்த போதும். இது எப்போதும் யார் வந்தாலும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் கொஞ்சம் கற்றுக் கொள்ளும் அல்லது கற்றதை நினைவு படுத்திக் கொள்ளும் காரியம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
முதல் சந்திப்பிற்குப் பின் கொஞ்சநாள் கழித்து ஒரு முன் காலை நேரம் டோண்டு மறுப்டியும் தரிசனம் தந்தார் ”சும்மா இப்படீ வாக்கிங் வந்தேன். அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போலாம்னு” என்றார். அப்போதிருந்து அந்த கணத்திலிருந்து நான் அவரை மிக நெருக்கமானவராக உணர்ந்தேன். நங்கநல்லூரி லிருந்து வாக்கிங் போகிறவர்கள் மடிப்பாக்கம் வருவதென்றால் அது வாக்கிங் என்கிற காரியத்தை அதன் இயல்புக்கு மீறி இழுக்கும் காரியம். வாக்கிங் போன உற்சாகத்துப் பதிலாக மனிதன் கால்களைத் துவள வைத்துவிடும். ஆனால் அதை அவர் வெகு அனாயாசமாகச் செய்பவர். அனேகமாக தினம் செய்பவர். அதிலும் பார்க்க அவர் கொஞ்சம் கனத்த சரீரி. ஒரு வேளை அதற்காகவே அப்படி ஒரு காலை நடைபயணத்தை மேற் கொண்டாரோ என்னவோ. அப்போது தான் அவர் வாக்கிங் பற்றிப் பேச்செடுத்தேன். “என்ன ஸ்வாமி இது, காலாற நடக்கிற நடையா இது? எப்படி ஸ்வாமி உம்மால் இது முடிகிறது? என்று கேட்டால், அதை “அதொன்னும் பெரிய விஷயமில்லை என்று ஒதுக்கி விடுவார்.
அப்போது முதலாக அவர் வரும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பற்றியும் நான் அறிந்தேன். எதுவும் துருவிக் கேட்டதில்லை. பேச்சு வாக்கில் வந்து விழும் செய்திகள் தான். ஆனால் ஆர்வமுடன் எங்கள் சம்பாஷணைகள் தொடரும். அவர் எங்கெங்கோ வெல்லாம் வேலை செய்திருக்கிறார். எங்கெங்கெல்லாமோ சுற்றி இருக்கிறார். அதெல்லாம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. இப்போது அவர் இத்தாலியன், ப்ரெஞ்ச், ஜெர்மன் மொழிகளிலிருந்து இங்கிலீஷ் மொழிக்கு எதானாலும், technical papers, projects, reports எல்லாம் மொழி பெயர்த்துத் தருகிறார். பணம் வருகிறது. குடும்ப க்ஷேமம் நடக்கிறது. எப்படி இவ்வளவு மொழிகள் கற்றுக்கொள்ள முடிந்தது. என்ன அவசியம் பற்றி? தெரியாது. நான் கேட்க வில்லை. இதெல்லாம் போக அவர் தன் பெயரில் ஒரு தளம் இணையத்தில் வைத்திருக்கிறார். Dongdu.blogspot.com Dos and Don’ts of Dondu சொன்னார். அதில் வேறு நிறைய, உலக விஷயங்கள், அரசியல் நிகழ்வுகள், குறிபபாக தமிழ் நாட்டு அரசியல் அலங்கோலங்கள் பற்றியெல்லாம். நிறைய எழுதுவார். டோண்டு என்று பெயர் வைத்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் தான் அவருடைய மொழியும், அதுக்கு வரும் பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களின் மொழியும். உண்மையில் அவர் தொடாத விஷயம் கிடையாது. தன்னைத் தாக்கி வன்முறையில் நாகரீகமற்ற மொழியில் எழுதுபவர்கள் அனைவருக்கும் இவரும் சளைக்காது பதில் சொல்லிக்கொண்டிருப்பார். இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று எனக்குத் தோன்றும்.
இடையில் ஒரு நாள், ”நான் நேத்திக்கு எழுதினதைப் படித்தேளா?” என்பார். ”இல்லை சார் இனிமேல் தான் படிக்கணும்,” என்பேன். ”ஆமாம் படிக்கறேளா,” என்று என் பதிலில் சந்தேகம் வந்து கேட்பார். ”எல்லாத்தையும் படிக்கிறதில்லை சார். நீங்க எழுதறது அத்தனையும் படிக்க நேரம் வேண்டும். அதோட நீங்க ஊரில் இருக்கற கழிசடைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண் டிருக்கிறீர்களே, உங்களுக்கு நேரம் எங்கேயிருந்து கிடைக்கிறது?” என்று கேட்பேன். “ஜனங்கள் இப்படித்தான் இருக்கான்னா அவாளோட தானே நாம் காலம் தள்ளியாகணும். பதிலுக்குப் பதில் கொடுத்துடணும். இல்லாட்டா, ”பாரு, வாயடைச்சுப் போச்சு பாரு பாப்பானுக்கு”ன்னு கும்மாளம் போடுவாணுங்க” என்றார்.
”இருந்தாலும் சார் வேறு உருப்படியான காரியம் நிக்கக் கூடிய காரியமா செய்யலாம். இப்ப இவங்களுக்கு உங்களைச் சீண்டறதிலே தான் குறி. இவனுகள்ளே ஒத்தனாவது உங்க பேச்சைக் கேட்டு மாறியிருக்கானோ?” என்று கேட்பேன். பாவம் மனுஷன் அனாவசியமா தன் நேரத்தை வீணாக்குகிறாரே என்று எனக்குத் தோன்றும்.
ஒரு நாள் இந்த ஆளை நம்பிப் பயனில்லை என்று என் ப்ளாக்கை சரி செய்து கொடுக்கறேன் பேர்வழி என்று, என் ப்ளாக்கின் ஃபார்மாட்டை மாற்றி, (எனக்கு என்று ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்ததே அவர் தான் Ve saa Musings என்றும் என்னை வெ.சா என்றும் வெங்கட் சாமிநாதன் என்றும் அழைப்பார்கள் என்றும் என்னை விமர்சகன் என்றும் சொல்வார்கள் என்றெல்லாம் எழுதிக்கொடுத்ததும் அவர் தான். அத்தோடு என் ப்ளாகிலேயே தன் ப்ளாக், இட்லிவடை ப்ளாக்கையும் சேர்த்து என் ப்ளாகைத் திறந்தாலேயே இட்லிவடையும் டோண்டுவையும் திறக்கத் தூண்டும் வகை செய்து கொடுத்துவிட்டுப் போனார். “உங்களுக்கு சிரமமில்லாமல் செய்து கொடுத்து விட்டேன்,” என்றார்.
அவர் மாதிரி ஒருவர் சளைக்காமல் சலித்துக்கொள்ளாமல், அவரைச் சீண்டும் சில்லுண்டிகளின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டும் இருப்பவரை எங்கு பார்க்கமுடியும்?
எப்படி இவரால் இவ்வளவும் செய்ய முடிகிறது? வியந்து வியந்து நான் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் கேட்டுவிட்டேன். சரியல்ல தான். ஆனாலும் கேட்டுவிட்டேன். ஒரு தடவை சிரித்துக்கொண்டே, “உங்களுக்குத் தெரியுமோ, நான் இப்போ திருக்குறளுக்குப் பரிமேலழகரின் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருத்தி சரி செய்துகொண்டிருக்கிறேன்.” என்றார். எனக்கு பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. “என்ன ஸ்வாமி இது, இப்படி ஒரு வேலையா?. பரிமேலழகர் உரை, அதை ஆங்கிலத்தில்?” எதற்கு?” என்று கேட்டேன். “ஆச்சரியமா இருக்கு இல்லையா? யார் என்ன பண்ணினா எனக்கென்ன வந்தது?. என் சொந்தக்காரன் ஒருத்தன் தில்லிலே இருக்கான். அவன் பண்ணீண்டு இருக்கான். திருத்திக் கொடூன்னான். ”அப்பா, நான் இந்த வேலையெல்லாம் காசுக்குத் தான் பண்ணுவேன். இவ்வளவு ஆகும். முதல்லே காசு கொடுன்னேன். அனுப்பினான். பண்றேன். அவ்வளவு தான்”: என்றார். எனக்கு அவர் சொன்ன பெயரைத் தெரியும். ஒரு மாதிரியான உறைந்த பண்டிதத் தனம். ஆங்கில அறிவு பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. இன்னொரு சுயப்ரதாப கல்லறைத் தமிழ்ப் பண்டிதத்திடம் நீண்ட கால சிக்ஷை. எப்படி இருக்கும் எல்லாம்?. “ஸ்வாமி அந்த ஆளுக்கு என்ன ஆங்கிலம் தெரியும்ணு நிச்சயமா ஒண்ணும் சொல்றதுக்கில்லை. அதிலும் பரிமேலழகர் உரையை என்னத்து இப்போ ஆங்கிலத்தில்? அதுக்குப் போய் உங்கள் நேரத்தைச் செலவிடுவானேன்?”
”எதானால் என்ன? அவன் உறவுக்காரன். கேக்கறான். நான் எல்லா வேலையையும் போல காசு வாங்கிண்டு பண்றேன். என்னவோ பண்ணீட்டுப் போறான்.” என்றார்.
அவர் நேரம் இப்போது எழுதும் முக்கியமானவர்களின் எழுத்துக்களையும் படித்துத் தான் வந்திருக்கிறார். ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் உட்பட. ஒரு முறை திண்ணையில் தான், நான் எழுதும் நினைவுகளின் சுவட்டில் தொடரைப் படித்து வந்தவர், பொறுமை இழந்து “எப்போது இவர் ஹிராகுட்டை விட்டு நகரப்போகிறார்?” என்று ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். யாரையும் விட்டு வைப்பதில்லை. அவரையும் மலர்மன்னனையும் சென்னையில், வாதம், விவாதம்” வெளியீட்டு அரங்கத்தில் பார்த்தேன். டிபிகல் டோண்டு தான்.
துரதிர்ஷ்டம் தான். என் துர்ப்பாக்கியம். நான் ஹிராகுட்டை விட்டு நகர்வதற்கு முன் டோண்டு நம்மை விட்டே நகர்ந்து விட்டார்.
அவர் அளவில் ஒரு போராளிதான். எல்லா அராஜக சிந்தனைகள் செயல்களுக்கும் தார்மீகமற்ற சொல்லாடல்களுக்கு அயராது தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறார். ஒரே குறை. அவர்கள் எல்லோரும் நான் பார்த்த வரை நாகரீகமும் பண்பும் அற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அது ஒரு சோகம் தான். நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னை அநாகரீமாகச் சாடியவர்களுக்கு அவர் நட்புக் கரம் நீட்டியவர். ஆனால் அந்த நட்புக் கரம் பற்றியவர்களோ “ பார்ப்பன “ என்ற துவேஷ அடைமொழி இல்லாது எந்த உறவையும் பேணத் தெரியாதவர்கள். இவர்களுடன் போராடித் தான் அவர் காலம் பெரும்பாலும் கழிந்தது என்பது ஒரு சோகம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.