வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் மூன்று!
இறுதி யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது தெரிந்தது. எங்கிருந்து தொடங்கியது? எங்கிருந்தோ. வடக்கே பளையிலிருந்து, கிழக்கே மணலாற்றிலிருந்து, தெற்கே மாங்குளத்திலும், மேற்கே மன்னாரிலிருந்தும்கூட தொடங்கலாமென்பது ஊகமாக இருந்தது. அந்தக் கணிப்பீடுகளை உதறிக்கொண்டு அந்த நான்கு முனைகளிலிருந்துமே யுத்தம் தொடங்கியிருக்கலாம். கணிப்பீடுகளைப் பொய்யாக்குவதுதானே யுத்தத்தின் ஒரு உத்தி? முள்ளியவளை ஒதியமலை தனிக்கல்லடி மக்களுக்கு நான்கு திசைகளிலிருந்துமே யுத்தம் தொடங்கியதாய்த்தான் தெரிந்தது. நான்கு புறங்களிலிருந்தும் திசைகள் அவ்வப்போது குலுங்கிக்கொண்டிருந்தன. மக்களைப் பொறுத்தவரை வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும், வளர்ப்பு மிருகங்களையும்கூட விட்டுவிட்டு ஓடுங்கள் என்ற ஒரே செய்தியையே அது கொண்டிருக்கிறது. அது அவரவரின், அவரவர்களது குடும்பங்களின் உயிர் காப்பின் முன்நிபந்தனையாகும்.
அப்போது அவர்கள் தறப்பாள், சட்டி பானைகள், சாப்பிடும் இயத்துக்கள், மற்றும் சமையலுக்கான அரிசி பருப்பு ஆகியவற்றோடு, முடிந்தால் கொஞ்சம் மண்ணெண்ணெயும் ஒரு விளக்குமென எல்லாமெடுத்து தயாராகிவிட வேண்டும். ஓடிப் பழக்கமுள்ளவர்கள் அதை இலகுவாய்ச் செய்தார்கள். புதிதாக ஓடுபவர்களுக்கு கொஞ்சம் சிரமமேற்படும். தறப்பாள், அதை மிண்டி நிமிர்த்தும் தடிகள் கட்டைகள் சிலநேரம் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். மறக்கவும் செய்வார்கள். இன்னும் சிலர் யுத்தம் வரப்போகிறதென்று தெரிந்ததுமே வீட்டைமட்டும் விட்டுவிட்டு தளபாடங்களை, வளர்ப்பு மிருகங்களுடன், ட்ராக்ரரிலோ மாட்டு வண்டியிலோ ஏற்றிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே போய்விட்டிருந்தனர். இன்னும் சிலர் வீட்டையே கழற்றி ஏற்றிக்கொண்டு போனதும் உண்டு. கிணறு காவிகள்பற்றிய வடக்கின் கதையை அப்போது ஞாபகம்கொள்ள முடியும்.
2009 பிறப்பதற்குள்ளேயே நாகாத்தை வீட்டிலும் ஏறக்குறைய எல்லாம் எடுத்துவைக்கப்பட்டு தயாராகவிருந்தன. வளர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக மூன்று மூட்டைகளில் தேவையான எல்லாம் பொதிந்திருந்தார்கள். இருந்தும் அவர்கள் தாமதித்தார்கள். இறுதிக் கணமென ஒன்று எல்லோருக்கும் தேவைப்பட்டது.
மன்னார் விடத்தல்தீவு வேராவிலென யுத்தம் நகர்ந்தபோது மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தை நோக்கி மூட்டை முடிச்சுகளுடன் ஓடிக்கொண்டிருப்பதாய் காற்றுவழிச் செய்திகள் வந்தபோதே தயாரானவர்கள் அவர்கள். அந்த இடங்களிலிருந்து மக்கள் கிளிநொச்சியை நோக்கி ஏன் ஓடினார்களென்ற பெரிய கேள்வியொன்று அவர்கள் முன்னால் நின்று அந்தத் தாமதிப்பைச் செய்துகொண்டிருந்தது. ஆனால் மக்கள் அவ்வாறு ஓடியது அவர்களது திட்டத்தில் நடக்கவில்லையென்பது அவர்களுக்குத் தெரியாதுபோனது. அந்தத் திசையில் ஓடுவதற்கானபடிதான் எறிகணைகளும் ஷெல்களும் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. படையினரிடம் வியூகத்தின் வரைபடம் இருந்தது. அப்படியே சுற்றிவளைத்து புலிகளை ஒரு மையத்தில் இறுக்குவதுதான் அவர்கள் திட்டம்.
இந்தியப் படை கனரக ஆயுதங்களுடன் ஏற்கனவே இலங்கையில் இறங்கியிருந்தது. அது நிலைகொண்டிருக்கும் இடம் திட்டவட்டமாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் என்ன செய்யக்கூடுமென்பது ஒரு அச்சமாய் மக்கள் எல்லோரையும் அழுத்திக்கொண்டிருந்தது.
அமைதி காப்புப் படையாக வந்தபோதே வடக்கில் பெரும் இன்னல்களையும், அழிவுகளையும், அவமானங்களையும் மக்கள்மேல் விதைத்தவர்கள் அவர்கள். அவர்கள் விளைத்த உடல் மன மான அழிவுகளின் அச்சம் ஆழ உறைந்திருந்ததில்தான், 1995இன் இலங்கைப் படையினரின் வலிகாமம் யுத்தத்தில் லட்சக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து ஓடியிருந்தனர். அப்போதோ இலங்கைப் படையினருக்கு உதவியாக வந்திருக்கின்றனர். அவர்கள் பிரபாகரனை உயிருடன் பிடித்துக்கொண்டு போக வந்திருந்தார்களென்று ஒருமுறை பக்கத்து வீட்டு யவனிகா சொல்லிச் சிரித்திருந்தாள். அவர்களது பிரசன்னத்தின் அச்சம் ஒரு மூலையில் எவருக்கும் இருந்துகொண்டே இருந்தது. அப்படியான பெரும்படையணிதான் அதுவும். மூவாயிரம் பேரைக் கொண்டிருந்த படையணி. பாகிஸ்தானின் இலங்கை அரசுக்கான ஆயுத உதவியைவிட தம் நேரடிப் பிரசன்னத்தாலும், களநிலைமைகளின் செய்மதித் தகவல்களாலும் இலங்கைக்கு பெரும் வெற்றிச் சாத்தியத்தைச் செய்துவிடும் தீர்க்கம் அவர்களுக்கு இருந்தது. அதற்கான உபகரணங்களும், உபாயங்களும் அவர்களிடம் இருந்திருந்தன.
1990இல் இந்திய அமைதி காப்புப் படை இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்தப் படுகொலையின் பழிதீர்ப்பு வன்மமாய் அவர்கள் மனத்தில் இருக்கவில்லையென யார் திட்டமாய்ச் சொல்லக்கூடும்?
அந்தப் பரிதவிப்புக்குள்ளும் நாகிக்கு கணநாதனின் நினைப்பு அவ்வப்போது வந்து அதைத்துக்கொண்டிருந்தது. போன வருஷத்தில் மாரி துவங்கும்போது அது நடந்திருந்தது.
அந்த ஆண்டு ஓ.எல். பரீட்சை எழுதவிருந்தான் கணநாதன். அவனுக்கு கேத்திர அட்சர கணிதங்கள் விளங்கவேயில்லை. ஏ.எல். படித்த பிள்ளைகளிடமும், சில ஆசிரியர்களிடம் தேடித் தேடிப் போய் படித்துக்கொண்டிருந்தான். ஓ.எல். பாஸாகி குடும்பத்தில் படித்த முதல் ஆளாக வருவானென்ற தாயின் எதிர்பார்ப்பை, அவளுக்கு நேர்முன்னால் நின்று ஒருநாள் அடித்து நொருக்கினான் அவன்.
சில மாதங்களின் முன் பளையில் எறிகணை வீச்சு தொடங்கிவிட்டதென்றும், அங்கிருந்த மக்களை கிளம்பும்படி இயக்கம் சொல்லிவிட்டதென்றுமான முதல் நிலைத் தகவல் புலிகளின் குரலில் வெளிவந்த நேரத்திலிருந்து முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு யோசனையோடு திரிந்துகொண்டிருந்தான். ஏனென்று கேட்டதற்கு வாய் திறந்து ஒரு பதில் சொல்லவில்லை அந்தப் பிள்ளை. யுத்த உபாயமாய் இயக்கம் பளையைக் கைவிட்டு வடக்கு நோக்கி நகர, மக்களும் மூட்டை கட்டிக்கொண்டு கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு ஓடினார்கள். முரசுமோட்டை வட்டக்கச்சியென இடமுள்ள வெளிகளிலெல்லாம் தங்கினார்கள். இரண்டு மூன்று மாதங்களில் யுத்தம் சகல திசைகளிலும் ஒலிக்கத் துவங்கிவிட்டது. யுத்த அழிவுகளும் தோல்விகளும்பற்றிய செய்திகள் தெருவிலே வீசப்பட்டுக்கொண்டிருந்தன. வன்னி தப்புமா, குடாநாடும் கிழக்கும்போல் ஆகுமாவென்று ரகசியமாய் மக்கள் வினாவெடுத்தனர்.
ஒருநாளிரவு, ‘நான் இயக்கத்துக்குப் போப்போறனம்மா’ என்றுகொண்டு அடுப்படியிலிருந்த தாயிடம் வந்தான் கணநாதன். ‘அண்ணை இயக்கத்தில இருக்குதெண்டாலும், அவரால ஒண்டும் செய்யேலா இனிமே. இருக்கிறது நான் மட்டும்தான? இந்தநேரத்தில எங்கட படைவலுவை நாங்கள் பெருக்கவேணுமம்மா.’
‘அப்பூ…!’ என்று தலையில் கைவைத்தாள் நாகி. ‘நான் ஒண்டை முந்தியே இயக்கத்துக்கு விட்டுக்குடுத்திட்டன், அப்பு. என்னால இனி ஏலாது… ஏலாது. அம்மாவவிட்டுட்டு போயிடாத, கணா. நான் செத்துப்போவன்ரா.’
‘எங்கட படையணியில ஆக்கள் சரியான குறைவம்மா. ஒரு இயக்க அண்ணை சொல்லிச்சுது. ராசபக்ச யுத்தமெண்டு அறிவிச்சோடனயே போகத்தான் நெச்சன். எதுக்கும் சோதினையை எழுதியிட்டு பாப்பமெண்டிருந்தன். இனி ஏலாதம்மா. எங்கட கை வலுக்கவேணும்.’
‘நீயொருத்தன் போய் ஒண்டுமாயிடாது, கணா. உனக்கு வயதும் காணாதடா. அம்மா சொல்லுறதக் கேள்.’
‘என்னை மாதிரி இனி கனபேர் வருவினம். எங்களுக்கு ஆயுதத்தையும் தெரியும். அதைப் பாவிக்கவும் தெரியும். எனக்கு ஒண்டும் ஆவாதம்மா. அம்மாளாச்சி இருக்கிறா. நீங்கள்தான் இஞ்ச கவனமாய் இருக்கவேணும். சண்டை முடிஞ்சோடன வருவன். வந்து படிப்பன்.’
‘எதுவெண்டான்ன அண்ணையோட கதைச்சிட்டுச் செய், கணா.’
‘அண்ணையோட கதைச்சிட்டுச் செய்யிற நிலைமை இப்ப இல்லையம்மா.’
மூட்டிய அடுப்பு நூர்ந்துகொண்டிருக்கிற பிரக்ஞையின்றி தன்னுள் தகர்ந்துபோயிருந்தாள் நாகி.
மறுநாள். அது ஒரு அதிகாலை நேரமாக இருந்தது. முதல் மழை பெய்து பூமி குளிர்ந்திருந்தது. நீடிய வறட்சியின் பின் வன்னியின் முல்லை நில மரமெங்கும் தளிர் ஏறியிருந்தது. தேக்கு மர வளர்ப்புக் காட்டுக்குள்ளிருந்து சில்லென்ற காற்று இழைந்து வந்துகொண்டிருந்தது. இளவெய்யில் ஊறு செய்யாத குளிர்மை. எவர் மனத்தையும் பாதித்திராத சூழல்.
இதயத்தோடு நினைவுகளை அழுத்திச் சேர்ப்பதுபோல் எல்லாரையும் கட்டிப் பிடித்து, கண்கலங்க ஒருசில கணங்கள் நின்றுவிட்டு, றோட்டில் ஏறி எங்கோ நடந்துகொண்டிருந்த போரைநோக்கி கணநாதன் நடக்கத் துவங்கினான்.
அப்போதுதான் வளர்ந்தானா? அந்தத் தீர்மானந்தான் அவனை வளர்த்ததா? அம்மா… அம்மாவென்றும், சின்னக்கா பெரியக்காவென்றும் கொக்கொக்கென்று தாய்க் கோழிக்குப் பின்னால் திரிகிற குஞ்சுபோல வீட்டுக்குள் திரிந்துகொண்டிருந்த பிள்ளை அவன். நள்ளிரவில் ‘அம்மா…!’ என்று கூப்பிடுவதற்கு தாய் ‘ம்…!’ என்று முனக, முற்றத்துக்குப் போய் வேலியோடு நின்று திரும்பிப் பார்க்கையில், தாய் கதவு வாசலில் வந்து நிற்பது கண்டால்தான் அவனுக்கு ஒண்டுக்குப் போகும். அப்போது ஒரு இளைஞன்போல கையை வீசிக்கொண்டு எவ்வளவு உறுதியாக, என்ன கம்பீரமாயும் அழகாயும் நடந்துபோகிறான்!
கலாவதி எல்லாம் பார்த்திருந்தாள். ‘நீ நில்லடா, கணா, நான் போறன். நானிருந்து வாழுறதுக்கு கனக்க இஞ்ச இல்லை. இருந்து என்ன செய்யப்போறன்? எங்கயாச்சும் கண்டனெண்டா அவனையும் மண்டையில போட வசதியாயிருக்கும்’ என்று சொல்ல அவளுக்கு வாய்வரை வார்த்தைகள் வந்தன. குழந்தை அருகிலிருந்து எதையோ கீழே டங்கென்று போட்டதில், அதனுடைய எதிர்காலம்பற்றிய பிரக்ஞை கிளர்ந்தெழுந்து பேசாமல் விட்டாள்.
‘போட்டு வாறன்’ என்று ஒருநாள் சொல்லிவிட்டுப் போன பிரியன், பிறகு திரும்பவேயில்லை. ஒன்றரை வருஷம் ஆகியிருந்தது.
அவனது பார்வை பேச்சு நடத்தைகளில் அவன் இதயம் கள்ளம் நிறைந்து கிடந்ததை கலாவதி முன்பே கண்டிருந்தாள். அந்த மனநிலையோடு அவளுக்குக் குழந்தை பிறக்கும்வரை அவன் தங்கியிருந்ததே பெரிய விஷயமென்று அப்போது தெரிந்தது. அயல் அவளுக்கு உயரமாய், கறுப்பாய் ஒரு புருஷன் இருந்தானென்று அறிந்ததே போதும். அவனாலாகக்கூடிய அதியுச்சமான ‘பழி அழித்தல்’ அதனால் அடையப்பெற்றாயிற்று.
காதல் அப்போது கரை தட்டிவிட்டிருந்ததில் அவன்பற்றி இனி என்ன பேச்சு அல்லது நினைப்பு? ஆனாலும் சிலவேளைகளில் அவன் ஆத்திரமாக ஞாபகமாகிக்கொண்டுதான் இருந்தான். அவள் விரும்பாத மனமும், அவள் விரும்பாத முகமும், அவள் விரும்பாத உடம்புமாய் ஆகியிருந்தான் அவன்.
சாமி போன வருஷத்தில் ஒருநாள் அங்கே வந்திருந்தார். ‘பிரியன எங்க, காணேல்ல?’ என்று பொதுவாக விசாரித்தார். கலாவதி சாமியிடம் ஒளிக்காமல் விஷயத்தைச் சொன்னாள். சாமி நீண்டநேரம் மௌனமாயிருந்தார். திருஷ்டியெதையோ கண்டதுபோல் தலையை ஆட்டினார். பிறகு ‘நிலமை இப்ப நல்லாயில்லைத்தான, எல்லாம் சரியா வர வந்திடுவார், யோசியாதயும்’ என்றுவிட்டு போய்விட்டார்.
அன்றைய இரவில் வீட்டிலிருந்த மூவரின் மனங்களும் வெவ்வேறு நினைவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தன.
நேரமாக அவர்கள் திண்ணையில் பாயை விரித்துக்கொண்டு படுத்தார்கள். எழும்பி ஓட அதுதான் வசதி. அதை மட்டுமே செய்யக்கூடியதாகவும் இருந்தது. தூக்கம் எப்போதாவது வரலாம். அது அவர்கள் கையில் இல்லாதிருந்தது.
மௌனம் நிறைந்ததாய் வெளி இருந்தது.
அப்போது விண்வெளியில் காற்றை எதுவோ விசையாய்க் கிழித்துச் சென்ற சப்தங்கள் கேட்டன. வித்தியாசமான ஒரு பறவையின் கிரீச்சொலிபோல அது இருந்தது. மறுகணம் செவிப்பறைகள் கிழியும்படி எறிகணையொன்று வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது.
துடித்துப் பதைத்து எழுந்தாள் நாகி. “பிள்ளையளத் தூக்குங்கோடீ. ஆமி குண்டு போடுறான்” என்று அலறினாள். பின் சின்னதைத் தூக்கிக்கொண்டு முற்றத்துக்கு ஓடினாள். கலாவதியும் தயாநிதியும் மற்ற இரண்டையும் தூக்கிக்கொண்டு அவளுக்குப் பிறகால் ஓடினர்.
எதிரேயிருந்த பச்சைமரக் கூடல் தீப்பிடித்து சடசடத்து எரிந்துகொண்டிருந்தது. மேலும் இரண்டு எறிகணைகள் விழுந்து வெடித்த திசையில் கூக்குரல்கள் எழுந்துகொண்டிருந்தன.
மீண்டும் வீட்டுக்குள் திரும்ப அவர்களுக்கு அச்சமாக இருந்தது. எந்தநேரத்தில் அடுத்த குண்டு வந்து விழுமோ? முற்றத்தில் நின்றபடி காற்றைக் கிழிக்கும் சத்தமேதும் கேட்கிறதாவென செவிகளைக் கூர்மையாக்கி காத்திருந்தனர்.
“என்னடி செய்ய?” என்றாள் நாகி.
அது பதிலை எதிர்பார்த்துக் கிளர்ந்த கேள்வியாயில்லை. வெளிக்கிடுவதன் அவசியத்தைக் காட்டியதாக இருந்தது.
“விடியட்டுமம்மா, பாப்பம்.” தயாநிதி யோசித்துவிட்டுச் சொன்னாள்.
கிணற்றடி மேடையில் சென்று மடியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மாக்கள் இருவரும் அமரந்தனர். கிணற்றடிப் பக்கமாய் இருந்தது பதுங்கு குழி. கணநாதன் அங்கே இருந்தபோது அவனே வெட்டியது. சிறிதுநேரம் அவர்களோடிருந்த நாகி, அடுத்த வீட்டில் விழித்த சந்தடி கேட்டு வேலியோரம் சென்றாள். யாரையும் கூப்பிட அவளுக்கு தயக்கமாக இருந்தது.
அந்த வீட்டுப் பெடியன் யாதவனை, மும்முரமாக யுத்தத்துக்கு ஆளணி சேர்ப்பது சென்ற ஆண்டு ஆரம்பத்தில் நடந்தபோது இயக்கத்துக்கு பணம் கட்டி விடுவித்துவிட்ட வீட்டாருக்கு, பலாத்காரமாக பிடித்துச் செல்கிற அளவுக்கான புதியநிலைமை உருவானபோது பயம் வந்துவிட்டது. படுக்கையில், வீதியில் எங்கும் குறிவைத்து இளைஞர்கள் கவர்ந்து செல்லப்பட்டார்கள். முன்புபோல வீட்டுக்கொருவர் நாட்டுக்குத் தேவையான பகிரங்கமான பிரச்சாரத்தில் ஆளணி சேர்ப்பதாகவன்றி, வற்புறுத்தி இழுத்துச் செல்வது புதியநிலைமையின் அம்சமாக இருந்தது. வேறு வழி காணமுடியாத பெற்றோர் அவனை ஒதியமலையிலே தெரிந்த உறவினர் வீட்டில் கொண்டுபோய் ஒளித்துவைத்துவிட்டார்கள். ஆனால் எப்படியோ மோப்பம் பிடித்து ஒரு இரவு நேரத்திலே அங்கு போய் இயக்கம் அவனைப் பிடித்துக்கொண்டு போய்விட்டது. கணநாதன்தான் அதைக் காட்டிக் கொடுத்தானென்று பல நாட்களாக யாதவனின் தந்தை உறுமிக்கொண்டு திரிந்தார். தாய்கூட வாய்க்கு வந்தபடி அவனைத் திட்டித் தீர்த்தாள். கணநாதன் செய்யவில்லையென்று நாகி செய்த சத்தியங்களை அவர்கள் நம்பவேயில்லை. அதனால் அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையிலுமிருந்த நல்லிணக்க அச்சு அண்மையில் முறிந்துபோயிருந்தது. தாய்க்கும் தந்தைக்கும் தெரியாமல் யவனிகா எப்போதாவது தெருவிலே படலையிலே எதிர்ப்படுகிற நேரம் நின்று பேசுவாள். இப்போது கணநாதன் இயக்கத்துக்குப் போய்விட்ட நிலையில் யாரேனும் கூப்பிட்ட குரலுக்கு பதில்சொல்லக்கூடுமோ? எல்லாக் குடும்பங்களுமே வெகு அவதியில் திணறிக்கொண்டிருந்த அந்தநேரம் அவர்களது அறுந்த இடைவெளியில் ஒரு தொடுப்பை ஏற்படுத்தக்கூடும்தான். மனத்தைத் தெளிவாக்கிக்கொண்ட நாகி, “யவனிகா… யவனிகா…!” எனக் கூப்பிட்டாள்.
உள்ளே சலசலப்பு அடங்கி தெளிய யவனிகாவின் தாயார் கைலாம்போடு முற்றத்துக்கு வந்தாள். ஒரு அவலத்தின் வெளிப்படுத்துகையோடு தங்கள் முடிவைத் தெரிவித்தாள். “இனி இருந்து பாக்கேலாது பாருங்கோ… நாளைக்கு காலமை நாங்கள் வெளிக்கிடப் போறம்.”
“மருமோன் வாறதப் பாத்துக்கொண்டிருக்கிறம். வந்தோடன போயிடுவம். வர நேரஞ்செண்டாத்தான் என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. நிலமை மோசமாயிட்டுதெண்டா வெளிக்கிடவும்தான வேணும்?”
நாகி திரும்பிவந்தாள்.
நேரமாக ஆக கீழ்த் திசையில் விடியலின் கீறு தெரிந்தது.
எரிந்த பச்சைமரக் கூடல் இன்னும் தீய்ந்த வாடையைக் கிளர்த்தியபடி கணகணத்துக் கிடந்தது.
சிறிதுநேரத்தில் ஹயஸ் வாகனமொன்று வாசலில் வந்து நின்றது. “அப்பா வந்திட்டார்” என்று கூவினான் தயாநிதியின் மூத்த மகன் ஆனந்த்.
தனபாலன் வந்தான். “சனமெல்லாம் வீட்டைவிட்டு வெளிக்கிட்டுதுகள். ராராவாய் முள்ளிவளை, ஒதியமலை, தனிக்கல்லடியெல்லாம் எறிகணை வீசியிருக்கிறானெண்டா விடிய ஆமி ஊருக்குள்ள நுழைவான். கெதிப்பண்ணி வெளிக்கிடுங்கோ” என்று அவசரப்படுத்தினான்.
மூட்டைகளை வானுக்குள் தனபாலன் தூக்கிப்போட, இரண்டு காட்டுத் தடிகளை பின்புறமிருந்து எடுத்து வந்தாள் நாகி. அவற்றை மேலே வைத்துக் கட்டினாள் கலாவதி.
எல்லோரும் ஏற வான் புறப்பட்டது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.