வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
2009 - 1
அற்றைத் திங்களின் அவ்வெண்ணிலவு அப்போதும் காய்ந்துகொண்டிருந்தது. குன்றுகள்தான் ஒவ்வொன்றாய்ப் பறிபோய்க்கொண்டிருந்தன. மக்கள் திகிலடைந்திருந்தனர். தங்கள் கனவு ராஜ்யம் அழிந்துபோகும் நிர்க்கதி. அது மன மெய்களின் மொத்தமுமான ஸ்தம்பிதமாக இருந்தது.
உலகத் தமிழரங்கில் வெளிச்சமிடப்பட்ட நாடக மேடை தகர்ந்துகொண்டிருந்ததில் எங்கெங்கும்தான் அந்த நிர்க்கதி. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் வீதியிலிறங்கியிருந்தனர். ‘Stop the Geanocide’ என்ற சுலோக கொடிகள் இளைஞர்கள் கையில் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தன.
கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவத்தின் கையில் வீழ்ந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கருணா அம்மான் கிழக்குப் புலிகளின் பெருவலிமையுடன் பிரிந்துவிட்டாரென்று அறிந்தபோது வந்துவிழுந்த ஏக்கத்தை, வன்னியிலிருந்து சென்ற இருநூறு திறல் படைத்த அதிரடிப் புலி வீரர்களால் அவர் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளிவந்து போக்கியது. இப்போது முற்று முழுதாய்த் தெரிந்தது, கருணா அம்மான் அன்று தோற்கடிக்கப்படவில்லையென.
2004இன் அந்த நிலைமையில் அவர்கள் பெரிய நம்பிக்கையீனம் எதனையும் அடைந்துவிடவில்லை. கிழக்கு முற்றாக பறிபோயிருந்தபோதும் அவர்கள் பெரிய மனப் பாதிப்பைக் கொண்டுவிடவில்லை. ஆனால் அப்போது வன்னியின் பெரும் பகுதியும் பறிபோயிருக்கிறது. கிளிநொச்சி, மாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய சில கோட்டைகளே எஞ்சியிருந்த அந்த நிலைமை அவர்களை அடிவேர்காண அதைத்தது.
ஒவ்வொரு செய்தியிலும் அதிர்ந்துகொண்டுதான் குணசீலனும், ஆனந்தராணியும் ட்ராக்ரரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
மறுநாள் இரவே ட்ராக்ரர் கிடைத்தது. ஏற்றக்கூடிய சாமான்கள் ஏற்றியாகின. நகைகளை துணிகளில் நன்கு சுற்றி கவனமாக வைத்தானது. ஆனந்தராணியின் சம்மதம் கிடைத்த மறுநாள் இரவில் இராமநாதபுரத்தை நோக்கி அவர்கள் சாமான்களோடு புறப்பட்டார்கள்.
ஆனந்தராணியும் பிள்ளைகளும் முன்பகுதியில் பாதுகாப்பான ஓரிடத்தில்; அமர்ந்திருந்தனர். குண்டு குழிகளை ட்ராக்ரர் கடக்கும்போது பின்னால் நடந்தும், பிறகு மட்கார்ட்டில் ஏறி அமர்ந்தபடியும் வந்துகொண்டிருந்தான் குணசீலன். ட்ராக்ரரின் உறுமலும், அது கக்கிய கரும்புகையின் அளவும் இராமநாதபுரத்தைச் சென்றுசேர்கின்ற நம்பிக்கையை அவன் மனத்தில் கேள்வியாக்கியிருந்தன. போய்ச் சேர்ந்தாலே போதுமென்று ஆனந்தராணி எண்ணியிருக்கலாம்.
இரணைமடுக்குள பாதையில் சென்று, வட்டக்கச்சிப் பக்கமாய்த் திரும்பி, இராமநாதபுரத்தை நோக்கி அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அங்கே உறவினர் ஒருவர் வீட்டில் சாமான்களை வைத்துவிட்டு தங்களை விதி அனுப்பும் இடத்துக்கு அவர்கள் செல்வார்கள். உறவினர் ஒருவேளை ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்தால்…? தீர்மானமாய் எதைச் சொல்லவும் முடியாது. ‘அப்ப பாத்துக்கொள்ளுவம்’ என்பது குணசீலனின் எண்ணமாக இருந்தது.
விடிபொழுதில் இருந்தாற்போலிருந்து சொன்னாள் ஆனந்தராணி. “நேற்றைக்கு வருஷப் பிறப்பு. ஒருதருமே நினைக்கேல்ல.” அது அவளுள் கொஞ்சம் நிம்மதி செறிந்துவிட்டதின் சாட்சியாகவிருந்தது. ஞாபகத்தில் நிலைக்கக்கூடிய நாள்தான். குடாநாட்டிலிருந்து எல்லாம் இழந்து வந்தவர்கள் ஓரளவு வீடு வாசலென நிலைபேறடைகிற சமயத்தில் அதையும் துறந்து செல்லுதலென்பது ஞாபகத்தின் உச்சமேறக்கூடிய நாள்தான். பிறகு எதை நினைத்தாளோ, அவளிடமிருந்து ஒரு கேள்வி பிறந்தது. “யேசப்பா பிறந்த அந்த முதலாம் தேதியில உலகம் எப்பிடியப்பா இருந்திருக்கும்?”
அந்தச் சூழ்நிலையில் அப்படியான ஒரு கேள்விக்காக அவன் வேறுவேளைகளில் சினத்திருப்பான். ஏன் அந்தக் கேள்வியை கேட்டாளென்று அனுமானிக்க முடியாதிருந்த நிலையிலும் சிரித்துக்கொண்டு சொன்னான். “அப்பவும் சண்டை இருந்தது… கலகம் இருந்தது… அவலம் இருந்தது… இடப்பெயர்வு இருந்தது… பயமும் பசியும் தண்ணிவிடாயும் எல்லாம் இருந்தது.”
பாதையில் இறக்கிய சாமான்களோடு சிலர் அமர்ந்திருந்தார்கள். சிலர் சாமான்கள் ஏற்றிய வண்டிகள் லாண்ட் ரோவர்களில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் சைக்கிள்களில், இன்னும் சிலர் கால்நடைகளில் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் இராமநாதபுரத்தை அடைந்தனர்.
“வருஷத்துக்கு அடுத்த நாளில என்ன விசேஷமம்மா?” ட்ராக்ரரிலிருந்து இறங்கியபோது மூத்தவள் தாயைக் கேட்டாள். “இந்தக் கரச்சலுகளுக்குள்ள இதை நான் அயர்த்துப் போனன், செல்லம். இண்டைக்கு உன்ர பிறந்தநாளெல்லே!” என்று மகளை அணைத்தாள் ஆனந்தராணி. குணசீலன் எட்டி அவளது தலையை மட்டும் தடவிவிட்டான். வாழ்த்து, பரிசு எல்லாம் உள்ளடங்கிய ஒரு தடவல். அது இன்னொரு முக்கியமான நாளென்று பின்னர் தெரியவந்தது. உறவினர் வீட்டிலே சொன்னார்கள். “கிளிநொச்சியைவிட்டு இயக்கம் வெளிக்கிட்டிட்டுது.”
ஆனந்தராணி திடுக்கிட்டாள். “அப்ப… கிளிநொச்சிச் சனம்…?”
“கூடவே அள்ளுப்பட்டு போகுதுகளாம் புதுக்குடியிருப்புக்கு.”
“மாதாவே!”
ஆனந்தராணியின் அந்த அவலக் குரல் சனங்களையா, தனது வீட்டையா நினைத்தென குணசீலனுக்குத் தெரியாதிருந்தது.
2009 - 2
சிறிது காலத்திற்கு முன் வீடுகளில் வாழ்க்கை அரிதாகவேனும் இருந்துகொண்டிருந்தது. வலிந்து கொண்ட சிறிது நம்பிக்கை இருந்தது. ஆனால் கிளிநொச்சியைவிட்டு இயக்கம் வெளியேறிவிட்டதென்ற நிச்சயமான தகவலில் அவர்களது சகல நம்பிக்கைகளும் நசித்துப் போயிருந்தன. கிளிநொச்சி வீழ்ந்ததென்பது ஒரு நகரின் வீழ்ச்சியல்ல. அது தமிழீழமென்ற கனவுலகின் தலைநகரது வீழ்ச்சியாகவே இருந்தது. நம்பிக்கை இருந்த காலத்தில் தமிழீழம் நின்றிருந்த இடத்தில், அப்போது எதுவித நம்பிக்கையுமற்ற வெறுமை நின்றுகொண்டிருந்தது. அது நாளையென்ற கேள்விக்குறியாய் வளைந்திருந்தது.
இராமநாதபுரத்தில் ஆட்களற்ற வீடொன்றில் ஒண்டிக்கொண்டிருந்த சாமிக்கு, அன்றைக்கு குப்பி விளக்கைக் கொளுத்துகிற எண்ணம் இருக்கவில்லை. கொளுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு மேல் எரிந்துவிட அதற்குள் எண்ணெயும் இருந்திருக்கவில்லை.
மூலையில் கிடந்த பதர் மூட்டையில் படுத்திருந்த பூஸி எழுந்து அவரருகே வந்தது. முதுகை வளைத்து முறித்தபடி நின்றது. சாமியிடம் உணவை எதிர்பார்க்கிற பழக்கமேதும் அதனிடம் இல்லை. அது தனது உணவைத் தானே தேடுகிற பூஸி. பக்கத்தில் நின்றுவிட்டு திண்ணையிலிருந்து இறங்கி எங்கோ போய் மறைந்தது.
தெருவில் பேச்சுச் சத்தம் கேட்டது. என்ன பேசியிருப்பார்கள்? என்ன நடக்கும், எங்க போக, என்ன செய்ய என்பதாகத்தானே பேச்சுகள் அப்போது இருந்துகொண்டிருந்தன? அப்போது யாரோ ஒருவரின் குரல் தெளிவாக எழுந்தது. “விரோதி வருஷம் இன்னும் பிறக்கேல்ல. அதுக்குள்ளயே இந்தளவு அல்லோலகல்லோலம் வந்திருக்கு. வருஷம் பிறந்தாப் பிறகு என்னமாதிரி இருக்குமோ?”
சாமிக்கு அந்த அவலம் இல்லை. அவ்வாறான அனுபவத்தை அல்லது அவலத்தை எதிர்கொள்ள அவர் முப்பது வருஷங்களாகத் தயாராகியிருந்தார். அப்போது நடப்பதையும், இனி நடக்கப்போவதையும் அவர் தீர்மானித்துவிட்டிருந்தவர். வாழ்க்கைக்கு ஒரு வாய்பாடு இருப்பதுபோல அரசியலிலுமுண்டு. அது மேலே மேலேயென்று போகிற உயர்வுபற்றிய கணிதம். அதையே ‘அஃதிறந்து ஊக்குதல்’ என இலக்கியம் சொல்லியது. அளவெல்லைபற்றியதுதான் அதுவும். அந்த தரவுகளின் மூலம் அவர் கண்டடைந்த தெளிவினால் அடைந்தது அது.
அந்த அறிவைத்தான் இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டில் அவர் ஒரு கடிதமாய் எழுதினார். அதை, தலைவர், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், வன்னி என்று மேல்விலாசமிட்டு அனுப்பினார். பின்புறத்தில் கே.பி.எம்.முதலி, தம்பலகாமம் என அனுப்புநரின் விலாசத்தை எழுதவும் அவர் தவறவில்லை.
போன தடவை தம்பலகாமம் போனபோது சீவலி சந்ரசேகர சுகதேகியாய் இருந்தாள். கமலா பெர்னாந்தோபிள்ளை காலமாகியிருந்தாள். முன்புதான் அவரைக் கண்டு சீவலி அழுதாள். அப்போது சிரித்துக்கொண்டு வரவேற்றாள். வயது ஒருவரை காம, குரோதங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. பெரும்பாலான சமயங்களிலும். அங்கே அவள் இருக்கும்வரை அவரது விலாசத்துக்கான இடமொன்று என்றும் இருந்துகொண்டிருக்கும்.
தன்னை ஒரு சூன்யத்திலிருந்து மீட்டெடுக்க அவர் பிரக்ஞையோடு செய்த முயற்சிதான் அந்த எழுத்து. இருளுக்கும் வெளிச்சத்துக்கும், பிரக்ஞைக்கும் சித்தசுவாதீனத்துக்கும் இடையிலான புள்ளி மறைகிற நிலையில், ஓர் ஆவேசத்தில்போல் அவர் அதைத்தான் செய்தார். அது அவரது மனச் சமநிலையைப் பாதுகாத்துக் கொடுத்தது.
ஒரு வலிப்புபோல அந்த மனநிலைக் கொதிப்பு திகைந்து மனத்தை உலுப்பிய பின்னால், அதன் மூலம்பற்றி அவர் எண்ணிப் பார்த்திருக்கிறார். அப்பொழுது இருட்டில் ஒரு புள்ளியாய் அவருக்குத் தெரிகிறது, தம்பலகாமத்தில் வந்த 1977இன் இனக்கலவரமும், உச்சபட்ச மரண பயத்தில் உயிருறைந்து கட்டிலுக்கடியில் கரந்திருந்த இரண்டு நாள்களினதும் காலம். சல மல உபாதையும், அவற்றின் வீச்சமுமாய் அந்த பழைய மரத் தளவாடங்கள் போட்டுவைத்திருந்த பூட்டிய அறையில் கிடந்து அவர் அனுபவித்தது நரகம். அவர் அதிலிருந்து மீண்டு மேலுமொரு மரண யாத்திரையில் வடக்கே ஓடிவந்து சேர்ந்தார்தான். ஆனாலும் எந்தவகையிலும் 1977இன் அந்த நாள்களும் அவை அவர் மனத்தில் விழுத்திய புள்ளியும் அவருக்கு மறக்கவில்லை.
போராட்டமும் அழிவுகளும் அவருக்கு அங்கேயிருந்துதான் தொடங்கின. தனிப்பட்ட வாழ்வின் அவலங்கள் அந்த அழிவை இரட்டிப்பாய், மும்மடங்காய் வெகுப்பித்தன. 1980இல் அல்வாயைவிட்டு ஒரு இரவு நேரத்தில் கிளம்பியபோது அவர் தேர்ந்திருந்த கறுப்புடை அவரது மனத்தின் அடையாளமாய் இருந்தது. மனத்தை மூடிய இருளின் அடையாளம். அன்றுவரை அந்த அடையாளத்தை அவர் மாற்றவில்லை.
அன்றிலிருந்து ஜனாதிபதிக்கு, பிரதம மந்திரிக்கு, உள்துறை அமைச்சருக்கு என அவர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். பின்னால் அன்ரன் பாலசிங்கத்துக்கு, 2004இன் பின்னால் கருணா அம்மானுக்கு, டக்ளஸ் தேவானந்தாவுக்கு, ஒருபோது இரா.சம்பந்தனுக்கும் அவர் கடிதம் எழுதினார். யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவுக்கு, சமான பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நோர்வே அமைச்சகத்துக்கு எழுதினார். 25-30 பக்கங்களில் எழுதினார். அவருக்கு குறைய எழுத தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு நல்ல பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் எழுத அவருக்கு கல்வியிருந்தது. 2006இல் அவர் வே.பிரபாகரனுக்கு எழுதிய கடிதம்தான் கடைசியானது. அதன் பின்னர் அவர் யாருக்குமே எழுதியதில்லை. எழுதினார் தன் மனத்துக்குள்ளாக. அனுப்பினார் தன் மனத்துக்குள்ளாக. மீட்சி அந்தவகையில் அவருக்கு வசப்பட்டது.
முகவரிதாரர் அதை வாசிக்கவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால் அது கட்டாயமில்லை. முகவரியில்லாமல், யாருக்கோ எழுதிய ஒன்றோ இரண்டு கடிதங்கள் உறை ஒட்டிய நிலையில், கசங்கிப்போய் இன்னும் அவரது பையின் அடியில் கிடக்கின்றன. அது அவரது கவனத்திலுமில்லை. எழுதுவதற்கு அதை அனுப்பவேண்டும் என்கிற முன்நிபந்தனையில்லை.
1977இன் மரணத்தின் உறைபயத்திலிருந்து ஓடிவந்தவர் இப்போது அதை அரவணைத்து நடந்துதிரிகிறார். என்றும் அருகிலிருந்ததும்தான் அது. தன்னுடன் கூடப் பயணித்துவரும் மரணத்தை அவர் கண்டபடியே இருக்கிறார். அது எல்லோருடனும்போலத்தான் அவருடனும் பயணிக்கிறது. சாமி அதை அலட்டிக்கொள்வதில்லை.
அது மனிதன் பிறந்த காலத்திலிருந்து அவன்கூட இருப்பது, அது எங்கிருந்தோ தருணம் பார்த்திருந்து இறங்கி வந்ததில்லை, கூடவிருந்து அவனது உணவில் பங்கெடுத்து வளர்ந்து பெருக்கிறது, என்றைக்கு மனிதனைவிட வளர்கிறதோ அன்றைக்கு அது அவனைக் கவ்வுகிறது. இறப்பு அவ்வாறே நிகழ்கிறதென்ற தரிசனம் பெற்றவர் சாமி.
இதை சாமிபோல் முன்பேயும் பலர் புரிந்திருந்தார்கள். அதனால்தான் பூஜ்யத்துடனான கணிதம் காணப்பட்டது. அதுவே பிறந்தநாளின் கணிப்பிலும் செயல்படுகிறது. உடனிருக்கும் மரணத்தை இழுத்துக்கொண்டு ஒரு வருஷம் வாழ்ந்த பிறகுதான் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதுபோல ஐம்பது வருஷங்களை வாழ்ந்த பிறகுதான் ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட முடியும். பூர்த்தியின் பின்னரே விழா. அது நிச்சயமாக அருகிலிருந்து கவ்வ தருணம் பார்த்திருந்த மரணத்தை அத்தனை வருஷங்களில் கடந்துசென்றதின் அர்த்தமான விழாதான். அதனால்தான் வாழும் கணங்களில் இந்த உலகத்தின் மூடிகளை விலக்கி உண்மையைக் காணும் தவனம் அவரில் மிகையாக இருந்திருந்தது. அவ்வாறு கண்டதே அவர் எழுத்திலும் வந்தது.
அவரது எண்ண வெளிப்பாடு மொழியின் வரிவடிவமான எழுத்தாக இருந்தது. காலகாலமாய் நிலைத்து நிற்கக்கூடிய எழுத்து. இலக்கியமாகிய, வரலாறாகிய, புராணங்கள் இதிகாசங்களாகிய எழுத்து. அவர் எழுத்தின் ஒலி வடிவத்தை பிரயோகிக்கும் வசதியீனராய் இருந்தார். அவரது குணவியல்புக்கும் அது ஒத்துவரவில்லை. அவரது மனநிலையை கிறேக்கு, பிறழ்வென எண்ணியிருந்த வகையில் சக மனிதர்கள் அவரை அணுகவுமில்லை.
அந்த அவரின் உன்னிப்பு வாழ்வின் பல தரிசனங்களைக் கண்டடைய உதவியது. போலவே நிகழ்காலத்தின் இருட்டுக்குள் நடந்த சம்பவங்களின் மூலத்தைக் காட்டி, வருங்காலத்தை எச்சரிக்கையுமாக்கியது. அவர் இப்படி நடக்குமென பலருக்கு எழுதியவை அப்படியே நடந்திருந்தன. அதை வாசிக்க நேர்ந்திராவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான்.
அவர் அலைந்துகொண்டிருந்ததுகூட நிகழ்வுகளைத் தேடித்தானே?
மனிதர்களின் கண்கள், முகங்கள், நடத்தைகள்மூலம் அவர்களின் அகத்தின் இருள் கண்டார் சாமி. வனமறுத்து ஊடாடிய பலரின் இரகசியங்கள் அவருக்கு அவ்வாறுதான் தெரிந்திருந்தன. எவ்வளவு பயங்கரங்களை அந்த இரகசியங்கள் விளைக்கக்கூடியனவாய் இருந்தன! 2006இல் மேதகுவுக்கு அவர் எழுதிய கடிதம் ஒரு பெரும் இரகசியத்தை திறந்து காட்டிய எழுத்துக்களால் நிரவியிருந்தது.
அது அவர் வனமறிந்த காலத்திய கதை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 2006இல் அது நிகழ்ந்திருந்தது.
அது வைகாசி மாதமாக இருந்தது. வளர்பிறைக் கால பெரிய நிலா பூரணை நெருங்குவதைத் தெரிவித்தது.
பெருநிலாக் கண்ட சாமிக்கு வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலில் பொங்கல் உடனடியாக ஞாபகமாயிற்று. அது அவருக்கு நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த முள்ளிக் கிழவியின் கதைகேட்டலுக்கான வாய்ப்பாகத் தெரிந்தது. அந்தத் தடவையிலாவது அவர் ஒரு கதை அவளிடம் கேட்கவேண்டும். சாமி பையை எடுத்தார். பெருவழி நடந்தார்.
அவர் வற்றாப்பளையை அடைந்தபோது அன்றுதான் வெயிலின் கொதி அடங்காத பகலில் பொங்கல் முடிந்திருந்தது. இன்னும் வெய்யில் தாழாதிருந்ததில் சனங்கள் நிழல்களில் ஒதுங்கி சோர்ந்திருந்தனர்.
முள்ளிக் கிழவி முந்திய தினங்களில் அங்கே வந்திருந்தாளா, அன்றைக்கு அவள் அங்கே கதை விரிக்கும் வாய்ப்பிருக்கிறதா என்ற விசாரிப்பில் கிடைத்த பதில் அவரை உற்சாகப் படுத்தவில்லை. அவள் விரும்பியபோது வருவாள் என்றார் கடை வைத்திருந்த மனிதர். அங்கே தொடர்ந்திருப்பதில் நன்மையில்லை, எங்காவது போய் அலைந்துவிட்டு வரலாமென சாமிக்கு எண்ணம் வந்தது. எதற்கும் வெய்யில் தணியவேண்டும். அவர் ஒரு முதிர் மருத மர நிழலின் கீழே போயிருந்தார்.
அவரைக் காணாத, அவர் கண்ட இரண்டு கண்கள் அவரது கவனத்தை அப்போது கவர்ந்தன. மேலே அவர் வெளியே அலைந்து வருகிற எண்ணத்தை மறந்தார். அந்தக் கண்களை அவர் அறியவேண்டும்.
அவருக்கு எதிரேயிருந்த மரத்தடியில் ஒரு குடும்பம் தங்கியிருந்தது. தாயாக இருக்கக்கூடிய ஒரு முதியவள். அவளது பிள்ளைகளாக இருக்கக்கூடிய இரண்டு பெண்களும், ஒரு ஆணும். மூத்தவளின் பிள்ளைகளாகத் தோன்றிய இரண்டு சின்னதுகள். இரண்டாவது பெண்ணின் குழந்தை மடியிலிருந்தது. அவளது கணவனாகத் தென்பட்ட ஒரு வாலிபன் அவளருகே இருந்தான். முதியவளின் மகனாக அவளுக்குப் பின்னால் இருந்தவனுக்கு பன்னிரண்டு பதின்மூன்று வயதிருக்கலாம்.
பொங்கியிருந்தார்கள் என்பதை பொங்கல் பானை அருகிருந்து சொல்லிக்கொண்டு இருந்தது. ஒரு நேர்த்தி அல்லது வருஷாந்திர அம்மன் கைங்கர்யம் பூர்த்தியான நிறைவு அவர்களது முகங்களில் இறைந்திருந்தது. அந்த இளைஞனிடத்தில் அவை இருக்கவில்லையென்பதை அவர் கவனித்தார். அந்தக் கண்களின் பரபரப்பு, அவ்வப்பொழுது அவன் அவர்களது கேலி கிண்டல்களுக்கு சேர்ந்து சிரித்திருந்தாலும், மனம் அங்கே இல்லையென்பதை அவனது கண்களின் பரபரப்பு அவருக்குச் சொல்லியது. தனது ஏதோவொரு காரியம் தாமதப்படுவதான பரபரப்புத்தான் அவனில் இருந்ததென சாமி எண்ணினார். அவர்களுக்குத் தெரியாத ஒரு காரியமாக இருக்குமெனில், அது அவன் மட்டுமறிந்த ஒரு ரகசியமாகவே இருக்கமுடியும்.
அவன் சராசரியைவிட உயரமானவனாக இருந்தான். வெய்யிலில் கறுத்த மேனியனாக இருந்தான். காலநிலைகளைப் பொருட்படுத்தாது ஊரடித்த உடம்பென்று கட்டுறுதி சொல்லிக்கொண்டிருந்தது. குழந்தை அவ்வப்போது அவனில் தாவியது. எடுக்கி மடியில் வைத்திருக்க, மறுபடி தாவி தாயிடம் சென்றது. அதனால் வெளிக்காட்டாத ஒரு எரிச்சலையும் அவன் தன்னுள் கொண்டிருந்தான்.
வன்னியிலுள்ள ஒரு சாதாரண கூலி விவசாயக் குடும்பமாக அது இருக்க முடியும். அவர்களின் கலகலவென்ற சிரிப்பும், சத்தமான பேச்சும் கிராமிய நாகரீகம் கொண்டவர்களென்பதை தெளிவாகவே காட்டியது. அதன் மொழி, வெளிப்பட வாழ்தலின் கூறாயிருந்தது. அது வன்னியின் மொழி. அதில் அவர் அவதானித்த விஷயம், அவை அந்த உயரியிடத்தில் காணப்படவில்லை என்பது.
அது மேலும் அவரை அக்கறைப்படுத்தியது.
அவனது கதையை அவர் அடுக்க முற்பட்டார்.
அவர்கள் பொங்கல் முடிய அன்று மாலையே திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். பின்னர் எப்படியோ இரவை அங்கே தங்கி மறுநாள் காலையில் புறப்படுவதென்று தீர்மானமாகியிருக்கிறது. அவனுக்கிருந்த அவசர காரியம் அவனை அந்தரப்பட வைத்தாலும், மற்றவர்களின் அபிப்பிராயத்துக்கு மாறாக எதையும் சொல்லமுடியாதவனாக அவன் இருந்தான். அவர்களின் முடிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் வலு இல்லாதவனாகவும் அவன் இருந்தான். அது அவர்களிலே அவன் தங்கியிருந்தான் என்பதை அர்த்தப்படுத்தியது. இவ்வளவும்கொண்டு அவரால் இன்னொரு முக்கியமான அம்சத்தை அனுமானிக்க முடிந்தது. அவன் அவ்வூர்க்காரன் இல்லை. அயலூர்க்காரனெனினும், அந்த அடையாளத்தை அவன் வெளியிலே காட்ட பிரியப்படாதிருக்கிறான். அவர்களது அடையாளத்துக்குள் தன்னை மறைப்பது அவனுக்கு மிகுந்த சிலாக்கியமாய் இருக்கிறது. அது அவனது காரியத்தின் சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது. ஆக… அவன் ஒரு ரகசியத்துள் இறங்கியிருக்கிறான். அது ரகசியத்துள் நடத்தும் ஒரு சதியே. அச் சதியும் ஒரு பின்னலாய் பெரும் பரப்பில் விரிந்திருக்கிறது.
அது உண்மையாக இல்லாமல்கூட இருக்கலாம். அவனது கண்களிலிருந்து அவர் திரட்டிய கதை அதுதான். அவர் அதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கோவில் முன் வாசல் பூட்டியானது.
இரவு விழுந்தது.
பந்த வெளிச்சங்களும், எண்ணெய் விளக்குகளும் கண்ணகி அம்மனின் கண்களாய் தகதகவென சுடர் விரித்துக்கொண்டிருந்தன. நிலவும் ஒரு பந்தமாய் மேலேயிருந்து அலைக்கழியாச் சுடர் கிளர்த்தியது. நெற்றி நிறைந்த விபூதியும் சந்தனமுமாய் இருந்த முதியவளின் கண்களில் பரவசம் மினுங்கித் தெரிந்தது.
நேரஞ்செல்லச் செல்ல குளிர்மை காற்றில் ஏறத் துவங்கியது. சிரிப்பு கதையாகி, அதுவும் அடங்கி வந்தது நிலா சரிய. துண்டுகளையும், துவாய்களையும் விரித்துக்கொண்டு அவர்கள் படுத்தனர்.
சாமி மரத்தோடு சாய்ந்த நிலையில் காத்திருந்தார்.
விடியல் தெரிய எழுந்தவர்கள் வெய்யிலுக்கு முன்னர் வீடு சேர்கிற அவசரத்தில் புறப்பட்டனர். உயரியிடம் சைக்கிள் இருந்திருந்தது. பின்னால் தன் மனைவியையும் குழந்தையையும், முன்னால் மூத்தவளின் இரண்டு குழந்தைகளையும் ஏற்றிய பின், அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு வந்து மற்றவர்களை ஏற்றிச் செல்வதாகச் சொல்லிக்கொண்டு விரைவாய் சைக்கிளை மிதித்தான். அந்தக் குடும்பத்தை பின்தொடர தயாரான சாமி, புறப்பட தயாராகியவர்களிடம் கேட்டார்: “நீங்கள் இந்தப் பக்கம்தானோ?”
“இஞ்ச முள்ளியவளையில சைவப் பள்ளிக்குடத்தடி, சாமி” என்றாள் முதியவள்.
சாமி வேகமாக நடக்கத் தொடங்கினார். உயரி திரும்ப வந்து மற்ற மூவரையும் ஏற்றிக்கொண்டு போவதற்குள் அவர் சைவப் பள்ளிக்கூடத்தை அடையவேண்டும். அவருக்கு அதிர்ஷ்டமிருந்தது. பின்னால் வந்த ஒரு ட்ராக்ரர்காரன் அவரது முதுமைக்கு ஓரிடமளித்தான். பெட்டியில் குலுங்கிக்கொண்டு அமர்ந்திருந்த சாமி, சைவப் பள்ளிக்கூடத்தடியில் இறங்கினார்.
சிறிதுநேரத்தில் உயரி மீதிப்பேரை ஏற்றிக்கொண்டு வந்துசேர்ந்தான்.
உள்ளே சென்றவன் இரண்டு மணியளவில் வீட்டைவிட்டுப் புறப்பட்டான். பயணத்தை எவ்வாறு செய்ய தீர்மானித்திருந்தானோ? ஆனால் சைக்கிள் கொண்டுவரவில்லை. நடையிலே அவனது பயணம் தொடங்கியது. தளர்வுறா மனத்தோடு சாமி பின்தொடர்ந்தார். ஒரு கிமீவரை நடந்ததும் பின்னும் முன்னும் பார்த்துவிட்டு அவதானமாய் காட்டுக்குள் இறங்கினான் உயரி. அது மாங்குளம் காட்டை வவுனியாவோடு இணைத்துக்கொண்டு கிடந்த பெருங்கானம். அது வவுனியாவை சுழன்று சென்றால் அனுராதபுரக் காடாக விரிந்தது. தொப்பிகல காட்டுக்கும் அங்கிருந்து தொடுப்பிருந்தது. தென்னிலங்கைவரை நெடித்துக் கிடந்த வனப் பரப்பு அது. பின்னால் பார்வையெட்டிய தூரத்தில் வந்துகொண்டிருந்த சாமி அதைக் கண்டார். அவன் வனம் புகுந்த மய்யம் கண்டு தானும் அதனுள்ளே நுழைந்தார்.
அந்த வழிபோல் அப்பெருங்கானத்தில் பல வழிகளை பலமுறை கடந்திருக்கிறார் சாமி. அப்போது இயக்கத்தின் ஊடாட்டம் நிறைய இருந்திருந்தது. இரண்டு தடவைகள் அவரை எதிர்கொண்டு அவரைக் கேள்விக்கும் உட்படுத்தியிருந்தார்கள். ‘சாமி தவஞ்செய்யப் போகுதோ?’ என்று கேலியாகத்தான் அந்த விசாரணை ஆரம்பித்தது.
அதற்கு அவர், ‘என் தவம் கலைத்த அப்சரஸ் இங்கேதான் போய் மறைந்தாள். தேடிக் கண்டு சாபமிட போகிறேன்’ என்றார் அவர்களது மொழியிலேயே.
‘ரம்பையாய் இருந்தால் எரித்துவிடாதீர், சாமி. என்னை அணங்காய் வருத்துபவள் அவள்தான். கண்டால் இயக்கத்திலுள்ள கதிரவன் காடெல்லாம் திரிந்து உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறான், காத்திருக்கிறான் என்ற தகவலை அவளிடம் சொல்லவேணும்.’ சிரித்துக்கொண்டே சொன்னான் அந்த இளைஞன்.
‘நல்லது. அதுவே உமது பிணிக்கு மருந்தெனின் அவ்வண்ணமே ஆகட்டும்.’
முன்பும் வனம் இரகசியங்களைக் கொண்டிருந்தது. அதற்கான இரகசியங்கள் அவை. பின்னால் துவராடை இல்லாத பிக்குகளும், ராணுவ உடம்பில் சாதாரண உடையணிந்தவர்களும், ஏதேதோ இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளும் திரிந்தபடி இருந்தார்கள். முந்திய காலங்களில் வனம் தன் வழியென்ற ஒன்றையே இரகசியமாய்க் கொண்டிருந்தது. ஆனால் அப்போதோ வழிகளே பல இரகசியங்களைக் கொண்டிருந்தன.
சூரியன் செம்மஞ்சள் நிறைமடைகிற நேரத்தில் மறுபடி அந்த உயரியை அவனறிந்திருக்கக்கூடிய வேறு சிலரோடு தூரத்தில் சாமி கண்டார்.
அது ஒரு சந்திப்பு. இரண்டு திசைகளிலிருந்து ஊர்ந்து வந்து வனத்துள் செய்த ரகசிய சந்திப்பு. சந்திப்பே ரகசியமானதெனில் அவர்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் எத்தகைய ரகசியமாய் இருந்திருக்கவேண்டும்! அத்தகைய ரகசியம் எத்தனை பயங்கரம் நிறைந்ததாய் இருக்கக்கூடும்!
சாமியின் கறுப்புடை அவர் மறைந்திருக்க அனுகூலம் செய்தது. அவர்கள் யாரும் அவரைக் கண்டிருக்கவில்லை. மேலே அணுகமுடியாத ஓரெல்லையில் சாமி தன்னை நிலைநாட்டினார். அது சொற்கள் தடங்குப்பட்டு வந்தாலும் சிலவற்றையேனும் கேட்கக்கூடிய தூரமாகவிருந்தது. கிளி பாதர்… கிளைமோர்… மிதிவெடிகள்… விதைப்பு ஆரம்பம் போன்ற சில முன்பின் தொடர்பறுந்த சொற்களைக் கேட்டார் சாமி.
அப்போதும் ஊகம்தான். ஆயினும் வெகு சாத்தியமான ஊகமாய் இருந்தது அது. உயரியும் மற்றவர்களும் ராணுவத்தின் கீழியங்கும் துணைக் குழுவினைச் சார்ந்தவர்கள். உயரி குடிமனைக்குள் ஊடுருவி, அங்கே ஒரு பெண்ணை மணந்து சாதாரணன்போல் ஒழுகி, வன்னியில் புலிகளின் நடமாட்டத்தை மற்றும் அரசியல் சார்ந்தோரின் அடையாளத்தை காட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறான். ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியால் பலபேர் குறிவைக்கப்பட்டது அவ்வாறாகவே நடந்திருக்கிறது. எல்லைக் காவலுக்கு வரும் கணவர்களினதும், தகப்பன்களினதும் மரணங்கள் அவர்களால் விளைகின்றன.
அதற்கு மேலே, கீழே இல்லை.
அவரது முதிர்ந்த தேகம் நடுங்கியது.
வெளியிலிருந்தபடி தகவல்களை உளவெடுப்பது ஒன்று. அது எந்தப் போர்க் காலத்திலும் நடைபெறக்கூடியதான சம்பவமே. ஆனால் உளவாளிகளே ஊடுருவி உள்ளுறைந்திருப்பின் அது மகத்தான சேதத்தை விளைக்கக்கூடியது. அது ஒரு துரோகத்தின் மேல் நிகழ்த்தப்படுகிறது. அதில் முக்கிய பாத்திரத்தை உயரி வகித்துக்கொண்டிருக்கிறான்.
சாமிக்கு இனி அங்கே வேலையில்லை. இனி அந்த இடம் அவருக்கு ஆபத்தும். அங்கிருந்து அவசரமாய்த் திரும்பியவர் இருண்டுவிட்ட பொழுதில் மாங்குளம்- முல்லைத்தீவு பாதையில் ஏறினார்.
இடையில் சில தொண்டு நிறுவனங்களின் வாகனங்களையும் இயக்க வாகனங்களையும் எதிர்ப்பட்டார். தோளிலே பை, நீண்டு தொங்கும் வெண் தலைமுடி, நீண்ட வெண் தாடி… அதுதானே சராசரியான ஒரு சந்நியாசியின் கோலம்! அவரது பயணத்துக்கு விக்னமேதும் ஏற்படவில்லை. சைவப் பள்ளிக்கூடத்தடியில் ஒரு பூட்டிய கடையின் திண்ணையில் போய் அமர்ந்தார்.
மறுநாள் பத்து மணிக்கு மேலேதான் எழும்பினார் சாமி. உயரி வீட்டிலேயே சென்று தண்ணீர் கேட்டார்.
“எங்கயெங்கயோ அலையிறியள். இந்த வயசில இதெல்லாம் என்னத்துக்கு, சாமி? இருங்கோ. கஞ்சி அடுப்பில, ஒரு வாய் குடிச்சிட்டுப் போகலாம்” என்றாள் அந்த வீட்டு முதியவள்.
அந்தக் குடும்பத்தைப்பற்றி பல விஷயங்களை அறிந்தார் சாமி. பூநகரிச் சமரில் ஒரு காலையிழந்து அப்போது நிதர்சனத்தில் இருக்கும் ஞானசேகரன், இயக்கத்துக்கு வாகனமோட்டும் தனபாலன், கூலித் தொழிலாளியான பிரியன், பள்ளி செல்லும் கணநாதன் என எல்லாம் தெரிந்தார்.
இரண்டு மணியளவில் கிளிநொச்சி போக மாங்குளமூடாக தமிழீழ போக்குவரத்துக் கழகத்தின் பஸ் சேவை இருப்பதறிந்து மகிழ்ச்சியோடு புறப்பட்டார் சாமி.
இதெல்லாம் அவரின் உன்னிப்பான கவனத்தின் விளைவல்லவா? அன்று கிளிநொச்சி திரும்பியதும் இரவிரவாய் அவர் எழுதியதுதான் மேதகுவுக்கான அவரது 25-30 பக்க கடிதம். இன்றைக்கு கிளிநொச்சி பறிபோயிருந்த நிலையில் அவருக்குத் தெரிந்தது, அவரது கடிதம் விலாசதாரர் கையைச் சென்றடையவில்லையென்று.
வெளியே தெருவில் கேட்ட பேச்சரவம் அடங்கியிருந்தது.
அப்போது மரங்களில், கூரையில் மழை சடசடத்து வீழ்ந்தது.
அவர் சற்று ஓய்வுக்காய் தன்னை நிலத்தில் சரித்தார்.
பூஸி அவசரமாக உள்ளெ பாய்ந்து வந்து தன்னைச் சிலுப்பி மழைநீரை உதறியது. பின் தொனியெழுப்பி தன் வரவைக் காட்டிக்கொண்டு சப்பட்டை நெல் மூட்டைகளில் மறுபடி ஏறியது.
விடி காலையில் படலைகளில் எழுந்த சந்தடியில் சாமி கண்விழித்தார். இன்னும் இருட்டு கலையாத கடை யாமம். சிலர் அவரிருந்த வீட்டுப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே வந்தனர். அவர்களது கைகளில் கம்புகள் இருந்தன. பிரதீபன் உபயோகித்ததைவிட மொத்தமாய், நீண்டதாய் அவை. “வெளிக்கிடுங்கோ... எடுக்கிறதுகளை கெதியா எடுங்கோ… பின்னால ஆமி வந்திட்டான்… எப்ப ஷெல் விழுந்து வெடிக்குமோ தெரியா… ம்... கெதியாய்…”
சாமி காலைக் காட்டி, “ஏலாதப்பன்… நடக்க கிடக்க ஏலாமல் இருக்கிறன்… நான் இப்பிடியே இதில ஒதுங்கியிடுறனே…”
சளார்… சளாரென நீண்ட கம்பு பேசியது. சாமி பதைத்தெழுந்து பையைத் தூக்கினார். அதுபோல் வேறிடங்களிலும் அந்த சளார் சத்தங்கள் எழுந்தன. சாமி சுறுக்கென வெளியே வந்தார். இருவர் மூவராய்… குடும்பம் குடும்பமாய்… சனங்கள் இராமநாதபுரம் பாதையில் தருமபுரம்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர். தங்களைக் காப்பதற்கான நடவடிக்கையென பலர் அதைக் கருதாதிருந்தனர். இன்னுமின்னுமாய் தாங்கள் யுத்தத்திற்குள் இழுக்கப்படுவதை அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் அதை வெளிவெளியாய் முணுமுணுத்தனர்.
இயக்கம் ஒருவகையில் தன்னிலை இழந்திருந்திருந்தாய்ப் பட்டது. ‘ஆமி வாறான்..’ அதில் அவர்கள்தானே குறி? சனங்கள் எதற்காக?
மழை தூறத் தொடங்கியது.
சனங்கள் நடையை விரைவுபடுத்தினர்.
தருமபுரம் பாதையைச் சமீபிக்க தெரிந்தது, வட்டக்கச்சியிலிருந்தும் சனங்கள் கிளம்பி வந்துகொண்டிருந்தது.
நன்கு விடிந்திருந்த அப்பொழுதில் தனக்கு முன்னால் பாதையோரமாய் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணைக் கண்டார் சாமி. தன்னோடு கூட வருபவளுக்காய் மெதுவாக உழக்கிக்கொண்டிருந்தாள். கூடவந்த பெண்ணின் இடுப்பிலேயிருந்த மூன்று வயதளவான குழந்தை அவர் தாண்டித் தாண்டி நடப்பதைப் பார்த்து சிரித்தபடி வந்தது. அதன் முகத்தில் ஒரு திருவிழாக் கண்ட குதூகலம். அவரும் சிரித்தார்.
மதியமளவில் ஜனசாரி பரந்தன்-முல்லைத்தீவு பாதையில் ஏறியது. அது நேரே புதுக்குடியிருப்பு-மாத்தளன் சந்தியைத் தாண்டி முல்லைத்தீவு செல்லும் பாதை. களைப்படைந்திருந்த சனம் சந்தியிலே சிறிது தாமதித்தது.
அப்போது சிரிக்கும் குழந்தையை வைத்திருந்தவள் மூன்று குழந்தைகளும், தாய் தகப்பனுமாயிருந்த ஒரு குடும்பத்தைக் கண்டு ஓடிப்போய் கதைத்தாள். தெரிந்தவர் அல்லது உறவினராய் இருக்கலாம். குடும்பத்தோடு நின்றவள் ஏதோ சொல்லி கண்ணீர்விட்டாள். அப்போதும் தன் கையிலிருந்த பையை அவள் இழந்துவிடக்கூடாத அவதானத்தோடு இறுக்கமாய்ப் பற்றியிருந்தாள்.
சிரிக்கிற குழந்தையின் தாயோடு வந்தவளுக்கு கால் ஊனமென்பது பிறகுதான் தெரிந்தது சாமிக்கு. பொய்க்கால் பொருத்தியிருந்தாள். முன்னாள் இயக்ககாரியாய் இருக்கலாம். மிதிவெடியில் காலைப் பறிகொடுத்த பொதுசனமாகவும் இருக்கலாம்.
சிறிதுநேரத்தின் பின் ஜனங்கள் மறுபடி நடக்கத் துவங்கினர்.
வட்டக்கச்சிப் பகுதியிலிருந்தும், முரசுமோட்டைப் பகுதியிலிருந்தும், இராமநாதபுரப் பகுதியிலிருந்தும் மும்முனைகளில் அப்போதும் மக்கள் திரள்திரளாய் வந்தபடி இருந்தனர். அவர்களுக்கிடையே மொத்தமான, நீண்ட கம்புகள் ஆங்காங்கே உயர்ந்து தெரிந்தன. ‘சாய்ச்சுத்தான் கொண்டுவருகினம்’ என நினைத்தார் சாமி.
மாலையளவில் அடங்கியிருந்த மழை வலுக்கத் துவங்கியது.
செந்நிறமாய் பாதையெங்கும், கானெங்கும் வெள்ளம் அடித்தோடியது. செம்மண் பரவிய பாதையின் சதுப்புக்குள் சேறடித்த சிவப்புப் பாதங்களை பதித்தபடி மழையினுள்ளே நனைந்துகொண்டு அவர்கள் தருமபுரத்தை அடைந்தனர்.
அது மேலே புகமுடியாதளவுக்கு பாதை ஜனங்களால் நிறைந்திருந்தது.
சேறும் சுரியுமாயிருந்த பூமியில் மக்கள் ஒதுங்கவும் இடமில்லாதிருந்தனர். தம் குழந்தைகளையாவது நனையாமல் காக்க தறப்பாள்களால் அவர்களை மூடினார்கள். அத்தகைய சூழ்நிலையில்தான் அன்றைய இரவை அவர்கள் கழிக்கப்போகிறார்கள். அவர்கள்மேல் எழுதப்பட்டிருந்த வல்விதி அப்போது நிகழ்கிறது.
சிலர் தம் நடைத் துன்பத்தை, நிகழ்கால அவலத்தை மறந்தனர். தாங்கள் ஒரு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்களென்று அவர்களாவது எண்ணினார்கள். பெருவாரியானவர்களின் கூச்சலுக்குள் அவர்களின் குரல் முனகலாய் நசிந்திருந்தது. சங்கவி எதுவும் நினைக்காமலே ஒரு மரத்தோரத்தில் சென்று அமர்ந்தாள். கூட அவளது சிநேகிதி. கார்த்திகாவை மடியில் இருத்திக்கொண்டு தார்ப்போலினை எடுத்து தன்னையும் குழந்தையையும் சிநேகிதியையும் மூடினாள். இருந்தபடியே சனங்களின் அசைவுகளைக் கண்டுகொண்டிருந்தாள்.
சாமியும் எங்கோ ஒதுங்கினார். எங்காவதுதான் எவரும் ஒதுங்கினார்கள். ஜன வெக்கை மழைக் குளிரைத் தணித்திருந்தது. சாமியை யாராவது கவனித்திருந்தால் மறுபடி அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது அவரை யாரும் கண்டிருக்கவில்லை.
[தொடரும்]