- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் --
- எழுத்தாளர் திலகபாமா கவிதை, சிறுகதை, விமர்சனம் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பு செய்து வருபவர். பட்டி வீரன் பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருபவர். இவரது கவிதைத்தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 'கழுவேற்றப்பட்ட மீன்கள்' என்பது இவரது வெளிவந்த நாவலாகும். 'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்ப காலத்தில் இவர் தன் எழுத்துலகப் பயணத்தைத்தொடங்கியவர். பதிவுகள் இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன. அவ்விதம் வெளியான கவிதைகளே இங்கு பதிவாகின்றன. இவரைப்பற்றிய விரிவான விக்கிபீடியாக் குறிப்புகளுக்கு: https://ta.wikipedia.org/s/olr -
1.
பதிவுகள் ஏப்ரில் 2002 இதழ் 28
தவம்
கிடக்கும் கல்
சாபம் தந்ததாய் உன்
சாணக்கிய சிரிப்பு
கட்டிய தாலிக்காய்
உடைமை ப் பொருளாய் எனை
சந்தித்த உன்னிடமிருந்து
விமோசனம் தந்த வரமாய்
என் சிந்திப்பின் தித்திப்பு
காலால் தீண்டி
பெண்ணாய் மாற்றும்
அவதாரம் நாடாது
கலையை நெஞ்சில் கொண்டு
சிலையாய் மாற்றும்
சிற்றுளிக்கும்
தாங்கிய கைதனுக்கும்
காத்திருக்கும் என் தவம்
2.
பதிவுகள் மார்ச் 2002 இதழ் 27
பிறை நிலவு
நிறைக்கும் இரைச்சலிலும்
தனிமையில் தவிக்கும் மனது
கடல் நீர்த்துளிகளாய்
காணக் கிடந்த முகங்களிருந்தும்
மனம் பார்த்து புன்னகைக்கும்
இதழ் மட்டும் தேடியே
கனக்கும் தனிமையில்
மூழ்கும் மனது
பசியும் தூக்கமும்
பற்றிக் கொள்ள அந்தப் பசியில்
நெஞ்சு நிறைக்க தின்று
நினைவுகளோடு
மூச்சுமுட்டுமென்றுணர்கையில்
உண்பது நிறுத்தி
நினைவு தந்த போதையில்
தூங்குவதாய் பாவித்து
இறுதியில் விழித்திருக்கும் கண்கள்
பசியை கண்டலர
மறைய யத்தனித்து
நிஜத்தில் நிறைந்து நிற்கும்
கரையுமென்றண்ணிய பிறை நிலவாய்
காதலின் அவஸ்தை
3.
பதிவுகள் டிசம்பர் 2002 இதழ் 36
திரிசங்கு உலகு
விரியும் இதழ்களை
காணத் தராத மலர் இதழ் விரிப்பாய்
விரிந்து கிடந்தது எனக்குள் ஓர்
திரிசங்கு சொர்க்க உலகு
தங்கச் சருகு தின்று
வண்ண பேதம் தொலைத்து
காத்துக் கிடந்தன
மரங்கள் பச்சையாய்
பனியின் உறைதலும்
கதிரின் உஷ்ணமும்
வேறு பட்டு போகாத உணர்வு தரும்
சாபங்களும் , வரங்களும்
இற்றுப் போன இன்மைகளில்
தானாய் உயிர் பெறும்
அகலிகை கற்களும்
கௌதம கற்களும்
பேசிச் சிரிக்க
காதலில் காமத்தின் வாசம் மறக்கும்
இந்திரன்கள்
கணவனின் குரலுக்கு
கை நழுவ விட்டு வந்த
அதிரும் அரவை இயந்திரம்
தூக்கி யடித்து சிந்திப் போக
என் தன்மானங்களும் கனவுகளும்
வள்ளுவன் குரலுக்கு வாசுகி விட்டு
வந்த வடக் கயிற்றுடன்
தூக்கிலிட்டு கிடக்கும்
இன்றும் விட்டு வர முடியாத
அலுவல்களுடன்
சுருண்டு கொள்கின்றன
நான் விரித்து வைத்த திரி சங்கு உலகு
மக்கிய ஈர நெடியுடனும்
மல்லிகை வாசமுடனும்
நாளை என் மகள்
திணிக்கக் கூடும் தன் கனவு
விரிப்புகளை மெத்தைகளின் அடியில்
எந்த தலைமுறை காணும்
தன் கனவுகள்
பச்சை புல்வெளியாய் விரியும் நாளை
4.
பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39
என்று வரும் நமக்கான தினங்கள்
கும்பிட்டு கும்பிட்டு எமை
உணர்வுகளால் கல்லாக்கியது போதும்
ஓட விட்டு ஓடவிட்டுக் கறைகழுவி
கடல் கலந்ததும் போதும்
நின்று நமை உணர விடாது
ரங்க ராட்டினங்களாய்
வலித்த கையோடும்
சுற்றி விடும் ஆதிக்க கூட்டம்
அதை உணர மறுத்து
ஆராதிக்கும் கூட்டமாய் நாம்
கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை
நொடிகளும் எமக்கென்றில்லாத போது
தினக் கொண்டாட்டங்கள்
உணர்வுகள் திருடப்பட
விரிக்கப் படும் திரை மறைப்புகளாய்
உடல் சிதறிய கல்பனாக்களுக்கு
அஞ்சலி செய்யும் நீயும் நானும்
உணர்வு சிதறியும் உயிர்த்தெழும்
அடுத்த வீட்டு கமலாக்களுக்கு
வாழ்த்து சொல்ல வேண்டாம்
வலியை உணரும் நாளாவது வருமா?
என் உணர்வுகள் பேசப்பட்டால்
சுயமென உன் அங்கலாய்ப்புகள்
உனக்காக நான் சுயமிழப்பது
உன்மத்தமென நீ போட்ட திரைகள் கிழித்து
நாடகங்களை வெளிச்சத்திற்கு
கொண்டு வருவோம்
நாங்கள் நீட்டுவது சுட்டு விரல்களல்ல
எங்களை புரிய வைத்தலுக்கான கைகள்
உணர்வுதனை உணரவைப்பதற்கான மொழிகள்
வலிகளின் வலிகளை அறிய
வைத்தலுக்கான கண்ணீர் நெருப்புகள்
மதுரை எரிக்க கண்ணகியாயும்
மீண்டு எழுந்திட சீதையாயும்
எப்பவும் எரிதழல் மடி சுமப்பது இனி
எங்கள் வேலையல்ல
கோவலனோ, இராமனோ
புரிந்து கொண்டால்
புறப்படலாம் கைகோர்த்து
மறுப்பிருந்தாலோ உமை மறந்து
என் வாழ்வை நானே உருவாக்க
எரிதழல் அணைத்து விட்டு
சிரி இதழ் பூக்கள் சுமந்து புறப்படுவோம்
மகளிருக்கு மட்டுமல்ல
எல்லாதினங்களும்
நமக்கானதாய் உருவாக்க
5.
பதிவுகள் ஆகஸ்ட் 2003 இதழ் 44
காக்கை பொன்
பார்த்துப் பார்த்துச் சேர்த்திருந்த
காக்கை பொன்கள் மடி நிறைக்க
கிடந்த கல் கால் இடற
சிதறித் தெறிக்கும் என் சேமிப்புகள்
எனதானதாய் இல்லாது மின்னும்
என் கனவுகளின் சேகரிப்பை
சிதறவிட்ட உன் கல் தனம்
எதிர்பார்ப்புகள் எப்போதும்
நீ நிறைந்து சிந்தும் துளிகளை
எதிர்பார்த்து ஏன் இருந்தது
சிந்திப் போன மடிதனில்
மின்னுகின்ற பொன்கள்
வலிக்கின்றன புண்களாய்
அடி வயிற்றுக் கொதிப்பில்
அவை பெருத்துக் கனக்கலாம்
மடிதனில் இருந்த துளிகளையும் உதறுகிறேன்
கனவுகளை இப்போதெல்லாம்
நானே தொலைத்துக் கல்லாகின்றேன்
நிறைந்திருந்த கனவுகளைக் காலி செய்து விட்டு
வெறும் மடியானாலும்
நனவுகளோடு பயணிக்கிறேன்
கனமில்லாது மடி இலேசாயிருக்கிறது
6.
பதிவுகள் ஜனவரி 2004 இதழ் 49
அர்த்தமிழக்கும் காத்திருப்புகள்
வானம் பார்த்து பழகிய மனது
விதானம் பார்த்து கிடக்கின்றது இன்று
அர்த்தமிழக்கும் காத்திருப்புகள்
விடிந்து விடாத பொழுதுகளால்
தொலைந்து போகும் இரவு பகல்கள்
கரை தொட்டு மீண்ட அலைகள்
இறுகிப் போகின்றன
சலனங்களைத் தொலைத்து
வெளிச்சம் விடாது
மூடிய இமைகளுக்குள் தான்
வண்ண ஒளி கனாக்கள்
வந்து போகின்றன
ஈரேழு கடல்கள் கடந்து விட
முடிகிற எனக்கு
உனக்கான காத்திருப்புகள்
கடந்து விட முடியாதவையாய்
நீளப் போகின்றன
எதை உதறுவது
உனக்கான காத்திருப்பையா இல்லை
உன்னையேவா?
7.
பதிவுகள் செப்டம்பர் 2003 இதழ் 45
இனி...
சிறைகளின் தாழ்களை நான்
தூர எறிந்த பிறகும் கூட
சாவிகளைச் சரியாக
பொருத்தத் தெரியவில்லை என உன் வாதம்
பூத்து காயாகிக் கனிந்து
வெடித்துச் சிதறி வெளியேறி
விதை தூக்கி வானில் பறக்க
பூப்பதெப்படி
பால பாடம் சொல்லித் தருகிறாய்
உடைத்து கொண்டு வந்த
கண்ணாடிச் சிறைக்குள்லே
காயங்களுக்கு கட்டிடவென்று
இன்னுமொரு முறை சிறைப்படச் சொல்கிறாய்
தராசுத் தட்டுகளில்
எனக்கான எடைகள் கூடியிருக்க
சமநிலை கேட்டு
என் எடை குறைக்கச் சொல்கிறாய்
என் உணர்வுகளை சிதைக்கும் உன்
செயல்களும், வார்த்தைகளும்
விழிப் பார்வைகளும் ஏன்
உதாசீனங்களையும் கூட
விட்டு வைப்பதாயில்லை இனி நான்
8.
பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50
வேர்த்தாலி தொலைத்த கள்ளிப் பூ!
உனக்கே உனக்கு மட்டுமான
முல்லையாகத்தான் நான்
வேண்டுமென்றிருந்தாய்
காதல் வறட்சியால் நான்
கள்ளியாகிப் போனேன்
காற்றின் ஈரத்தை உண்டு
காத்திருப்பை முட்களாக சூடி
சூடிய முட்களுக்குள்ளும் ஈரம் மூடி
வானத்து முதல் துளி வீழ்ந்த போதும்
முட் கிரீடம்
எந்த ஆடும் மேய்ந்து விடாதிருக்க
குடும்ப கௌரவமாய் சுமத்தப் பட்டிருந்தேன்
சிறையிருப்புக்காய் குறைபட்ட போது
உனக்கென்ன
பட்டாம்பூச்சி கணக்காய்
சிறகுகளாய் இதழ்கள் இருக்கே
மண்ணோடு என் பூவையும்
கட்டி வைத்த வேர்கள் சொல்ல
முதல் முதலாய் இதழ்களை
அசைத்துப் பார்க்கிறது இந்த கள்ளிப் பூ
மேகமெங்கும் கள்ளிப் பூக்களும்
துளசிப் பூக்களும்
வானிலிருந்து தேன் மழை சிந்த
சிறகை விரித்து
வாழத் துவங்கியிருக்க
புலம்பும் வேர்கள்
இதழ்களை சிறகுகளாய்
அடையாளம் காட்டியதற்காய்
இழந்து விட்ட தேன் களுக்காய்
வேர்த்தாலிகளைத் தொலைத்து
இடம் பெயருகின்றன பூக்கள்
விதைகளாய் உருமாறி
9.
பதிவுகள் மே 2004 இதழ் 53 -
நான்!
நட்சத்திரக் கூட்டத்திடையே
ஒற்றை நிலவாய் நான்
என்றும் தனிமையில்
உணர்வில் நேச நெருக்கம்
நேர்ந்திட
நதி நீரில்
“நான்” தொலைந்து நீயாகியிருக்க
உனக்கு தெரியாமல் போன
என் முகம்
உன்னால் தொலைத்து விடமுடியாத
“நான்”கள்
நீர் பிடித்து தூக்கித்
தாகம் தீர்த்த
பச்சை மண் பானைகளோடு
கரைத்து போனது
என்
கனவுகளையும் சேர்த்து
வனைய முடியாமல் போனதற்காய்
வாளேந்தும் பரசு ராமர்கள்
காதலில்
களைந்து விடும் “நான்”கள்
சாத்தியமாக
மண்ணிலென்ன
கண்களறியா காற்றில் கூட
நீர் பிடித்து வருதல்
கை கூடிவரும்
உனக்கும் எனக்கும்
10.
யூலை 2004 இதழ் 55
அம்பின் கூர் சுமக்கும் வாசம்
நினைத்ததை சொல்ல முடியாமல்
போவதற்கு
சொல்வதை நம்பாது
எனன முட்டாளாய்
முன்னிறுத்தும் உன் பலவீனங்களும்
காரணமென அறிவாயா?
நான் மல்லிகையாய்
வாசம் வீசியிருக்க
அடைபட்ட குப்பியின் மேல்
எழுதப் பட்ட
“மல்லிகை வாசம்”
அச்செழுத்தை நுகராது
நம்பித் தொலைக்கிறாய்
எப்போவாவது வாசனையை
உணரப் புகும் அந்த வேளையில்
அம்புப் படுக்கையில்
சாகத் துணிகிறாய்
வரம்
அம்புப் படுக்கையில்
ரணமோடு வாழ்வதல்ல
சிகண்டியின் அம்பின் கூர்
பீஷ்மனையும் சாய்க்கும் என
நம்ப ஆரம்பிப்பதிலும் தான்
உங்களின்
பிரமச்சர்ய விரதங்கள்
முழுமை பெறும்
11.
பதிவுகள் அக்டோபர் 2004 இதழ் 58
மீள் பதிதல்!
வலியின் நினைவுகளில்
நனைந்து நமத்து போன பதிவுகள்
முன்னகர்த்தி போட்டு போட்டு
தொலைத்து விட்டன வேகத்தை
மெல்ல இழுக்கும் குரல்களால்
உணரவைக்க முடியாது போகலாம்
உடைத்து வெளிக்கிளம்பிய உணர்வுதனை
உள்ளங்கை ரேகைகளாய்
உணர்வுகள்
வாசிக்க முடிந்த போதும்
விடைகள்
நிகழ்தகவின் தீர்மானிப்பில்
நீ தீர்மானித்திருக்கும்
எதுவும் நிச்சயமில்லையென
உணரும் தருணத்தில்
தானே நிகழும்
மீள் பதிதல்கள்
என்னிடமிருந்து
உன்னிடம்
12.
பதிவுகள் க்டோபர் 2006 இதழ் 82
சிறைகள் பெயர்த்த கதை!
கவிதைக்குள் கதை.
சிறைகள் பெயர்த்த கதை.
முக்காடிட்ட தள்ளாமைக்குள்
மூழ்கியிருந்த உருவம் ஒன்று
உள்ளங்கை தீ வடுவுக்குள்
கரை தேடுது நினைவுகளோடு இன்று.
சூடிழுத்தது உன் அம்மாவா?
சொல் பேச்சு கேட்காததாலா
கோடிழுத்த என் கேள்விக்குள்
பெருமூச்சு தனை விட்டாள்?
பாட்டி வடுவுக்குள் வீழ்ந்து
நினைவுகள் எடுத்துப் போட்டாள்.
கன்னி வாடி ஜமீனில்
கன்னியாய் தானிருந்த நேரம்
கோட்டையுள்ளே உடையவரும்
வாயில் வெளியே முதலையாய்
உள்நுழைய காத்திருந்தவரும்
பிடிபட்டால் நிழந்து விடும்
சூறையாடலுக்குப் பயந்து
மூட்டிய தீயில்புகைக்கு பதில்
சூழ்ந்திருந்தது பெண்ணினம்.
வாயிற்கதவு உடைபட
வேக தீயில் வீழ்ந்தனர் வேகமாக.
வீழ்ந்த உடல்கள்
காற்றும் நுழைய விடாது மறுக்க
உயிர் உடல்கள் தின்னவெறுத்து
பெண்ணுடல்கள் அணைக்கமறுத்து
அணைந்து போனது தீ.
விருப்பமில்லா பெண்களை
தழுவ விரும்பாது தானே தீக்குளித்தது தீ?
கரித் தழும்போடு எழுந்தவர்கள்
விறகோடு விரட்டினர் வெள்ளையர்களை.
தருணங்கள் உணர்த்திய விடுதலை
வடுவோடு சொல்லிப் போன பாட்டி.
மூழ்கிய நான் திடுக்கிட
இருட்டுற நேரத்துல என்ன வாய்ப்பேச்சு
போகிற வழியில் எண்ணெய் வாங்கு
வீடு பெருக்கு விளக்கு பொறுத்து
வைச்ச உலையை பார்த்துக்கோ
குலசாமிக்கு விளக்கு போட்டு வந்திடுறேன்
சொல்லிப் போன அம்மா குரலில்.
அன்று கைவந்த
விடுதலை உணர்வைஉணர முடியாது
தேடுகின்றாள் பாட்டி.
வீடு வெளிச்சமாய் சுத்தமாய்
பெண் வாழ்வு யாரும் துடைக்க முடியா
அழுக்குகளோடு
விடுதலை இல்லா உழைப்போடு.
சூரியனும் துளைத்து உள் வர முடியா காடு.
ஆரியன் உள்நுழைந்து திருத்தி வைத்த வீடு.
கம்பி வெளி கிளி உலாவும் காற்று வெளிக் கூடு.
பூனைகளிடமிருந்து காப்பதாய் கோவலன்களின் கூப்பாடு.
வானவெளி சிறகு விரியும்
மாதவிகளில் பறத்தல் கோவலன்களுக்காக.
தத்தி நடை பயின்று கூண்டுச்
சிறையிருக்கும் சீதைகள் இராமன்களுக்காக.
வெளிகளோ உள்ளிருப்புகளோ
மாறுவதெப்போ அவரவர்க்காக?
மாறிய தருணத்தில் சாத்தியமான பொழுதுகளில்
களிப்பு கை சேரும் விடுதலைக்காக.
கொத்தப் போன தானியத்துள்
சிறையிருந்தது விருட்சம்.
தனக்குக் கிடைக்காத விடுதலை
தந்து விட கிளி கொண்டது விருப்பம்.
கூண்டுத் துளை வழி
வழிய விட்டது தானியத்தை.
தினம் தோறும் வார்த்தது
தான் குடிக்க இருந்த நீரை.
விதை வெடிச்சு சிறகாச்சு.
வேர் விட்டு செடியாச்சு.
கிளை வெடிச்சு மரமாச்சு.
வேரின் ஊன்றலில் ஒரு நாள்
கூண்டு பெயர்ந்து தூள் தூளாச்சு.
வான வெளி இன்று கிளிக்காச்சு
மாதாவி கண்ணகி எல்லை இல்லாதாச்சு.
விடுதலை என்பது
விட்டு விடுதலையாவதா?-குடும்பம்
கட்டுடைத்து போவதா? இல்லை நிதம்
சோறுபடைத்து மூழ்குவதா?
விடுதலை என்பது
பெண்ணை உணருவதா?-இல்லையவள்
தன்னை உணருவதா? மனித இருப்பின்
தன்மை உணருவதா?
விடுதலை என்பது
வெளியேற உழைப்பதா? நான்மட்டும்
தப்பிக் கொள்ள நினைப்பதா-வருங்காலம்
வெளியேற வாசலுமமைப்பதா?
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த
நேற்று உழைச்சாச்சு.
பற்றிய நெருப்பு கனலாய் எரிய
இன்று கனன்றாச்சு.
தொட்டது பூவாய் மலர்ந்திடவென்று
விதைத்தது நானாச்சு.
பட்டது போக உழைத்த பலனை
பார்க்கும் நாளாச்சு.
நாஜிகளின் வன்கொடுமை வாசலில்
ஒரு வாசகம்
வேலை செய்தால் விடுதலை யடைவாய்.
விடுதலை அர்த்தம் மரணமென்று
அவர் சொன்ன கதை பழம்பொருளாச்சு.
செக்கிழுத்தும் சிறையிருந்தும்
கப்பல் விட்டும் விதேசி விட்டும்
போராடிய காலங்கள் போயாச்சு.
விடுதலை அர்த்தமின்று வேறாச்சு.
சுருங்கிச் சும்மாடாய் போன உலகத்திலே
மனம் விரியவென்று வாய்ப்பிருக்க
திறந்த பலகணிகள் வழியாக
உள்நிழையுது பல அரக்கிறுக்கு.
நீண்ட இரவிருக்கு குளிரிருக்கு.
குடும்பஅமைப்பில்லா மேலைத் தேயத்திலே
மன வக்ரமிருக்கு வடிய விடும் கலையிருக்கு அதை
அள்ளித் தெளிக்குது கீழைத் தேயத்திலே
நீண்ட மரபிருக்கு வலுவிருக்கு
காவியங்கள் தந்த நம்ம தேசத்திலே அதை
மறந்திருக்கு புடிக்குது புதுக்கிறுக்கு
விற்க வலை வீசும் உலகமயமாக்கலிலே.
பெண்உடல் பண்டமாகுது,நுகர் பொருளாகுது,
இலக்கியத்துள்ளும் நீலிக் கண்ணீர் வடிக்குது
வணிகமயமாக்கலிலே.
சோம்பலிருக்குது, பீடம் தேடித் திரியுது,
ஆளைப் போட்டு ஏறி மிதிக்குது
உழைக்க மறந்த வீணர் கூட்டத்திலே.
ஆக்ரமித்திருந்த காலச்சுவடுகள்
போலிகளாய் உயிர்மைகள் போர்த்த உடல்கள்
விற்க வீசும் வலையிலே
விழுந்திடாது காக்கனும் பெண் உழைப்பு.
வெள்ளித் திரை ராமகிருஷ்ணன்களை
வேரறுக்கட்டும் சீதை ராதைகள்
கோபியர்கள் சூழத் திரிந்த கண்ணன்களுக்கு
தந்து போகட்டும் தனிமைச்சிறையிருப்பை ருக்மணிகள்
பச்சைத் தமிழன்கள் பச்சை தேவதைகளுக்கு
முந்தானை விரிக்கையில் முத்துலெட்சுமிகள்
சீறி எழட்டும்
கள்ளத்தனம் உடுத்தி திரியும் மனுஷ்ய புத்திரன்கள்
புதிய தாண்டவத்திலே புறம் காட்ட
பெண்ணின உழைப்பு
உணரத் தரும் விடுதலை உணர்வு
உழைப்பை சொல்லனும் உரத்துச் சொல்லனும்
உழைப்பு தரும் விடுதலையைகாணச் செய்யனும்
உண்மை சொல்ல சொல்லனும்
மண்ணோடு மக்களை நினைக்கச் சொல்லனும்
இலக்கியம் மண்ணில் வேரூண்றி கிளைக்கச் சொல்லனும்
விடுதலை என்பது உணர்வு.
உணர்வு தருவது உழைப்பு.
உழைப்பு தரும் தனித்துவம்.
தனித்துவம் தரும் விடுதலை.
விடுதலை கோசமல்ல.
விடுதலை போராட்டமல்ல.
விடுதலை உனக்கானதல்ல.
விடுதலை அவரவர்க்கானது.
அவரவர் உழைப்பில் சாத்தியமாகும்
சத்திய விடுதலை எல்லாருக்குமானது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.