- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் --
- பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை மற்றும் கவிதைகளை எழுதிவருபவர். நட்சத்திரவாசி என்னும் புனைபெயரில் இவர் அன்று பதிவுகள் இணைய இதழில் எழுதிய கவிதைகளிவை. இவரது வலைப்பதிவு: நட்சத்ரவாசியின் தளம் (https://natchathravasi.wordpress.com/). -
பதிவுகள் டிசம்பர் 2010 இதழ் 132
கடைசி வேட்டை -
ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்\
பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது
யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான்
மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில் என்னை காண்கிறேன்
எனது தேசத்தில் எனக்கிருந்த வீடும்,ஊரும் இல்லாமல் போயிற்று
என்னை ஆண்ட காதலியவளின் முகமும் கூட
ஒரு மின்னல் வெட்டென வந்து போகிறது அவ்வப்போது நினைவுகள்
எனது குழந்தைகளிடன் நான் கொண்ட பாசம் கண்ணீராய்
வானத்தில் ஊர்ந்து போகிறது வெண்ணிற மேகக் கூட்டமாய்
அது எங்கோ மழையாய் பெய்யக் கூடும் என் சோகம் சொல்லி
எனினும் வறண்ட பாலையில் தூசிக்காற்றாய் சுழலும்
உயிரின் பொடிதுகள்கள் உயிராக வேண்டி தியானிக்கின்றன
அவனோ ஏழு வானங்களுக்கு மேல் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான்
அவனுக்கு தெரியாததல்ல தனிமையும்,உவர்ப்பும்
மந்திரத்தால் அவனை வசியம் செய்து எனதுயிரை என்னிடம்
சேர்க்கும் வல்லமையுடையவன் யாரோ எப்போது வர கூடுமோ
எனினும் நான் காத்திருக்கிறேன்
எனது ஊரின் ரம்மியமான பொழுதுகளை குடித்து
காதல் போதையை கிரகித்து ஊன் அழிய சிதிலமாய்
போகுமிந்த உயிர்கூட்டில் கடைசி வேட்டை எப்போதோ சொல்லிவிடு
அதற்கு முன்னால் எனக்கொரு சேதியனுப்பவேண்டும்.
2.
பதிவுகள் டிசம்பர் 2009 இதழ் 120
அரவிந்தம் நனைத்த பொழுதுகள்
என் பால்ய நதியின் நீரருவி
பாய்ந்து வழிகிறது
ஒவ்வொரு பொழுதிலும் புன்னகை பூத்து
நண்பனாய் வந்து முதலில்
சேர்ந்து கொண்டவன் நீ
எனது பிஞ்சு கைகளைப் பிடித்து
முத்தம் தந்த சூடு இன்னும்
தகித்து முடியவில்லை
இலக்கணங்களை புரட்டி
எழுது கோலெடுத்து மை எழுதினாய்
எனது கண்களில்
ஒரு நிரந்தரச் சித்திரம் போல
இடையில் சிறு பொழுதொன்றில்
அழுது கொண்டே அஜீத்தும்
நம்ம்மிடையே நின்று கொண்டு
முகங்களை பார்க்கிறான்
அப்போது தான் அந்த தோணி
உருவானது
நம் மூவரையும் சுமந்து கொண்டு
சீறிப் பாய்ந்து முன்னே செல்கிறது
காற்றில் கலந்து வரும் வாசனையில்
அரவிந்தம் எப்போதும் நினைத்துக்
கொள்ளும் பொருட்டு
எங்கோ ஒரு மூலையில்
இடவலம், அற்று.
3.
பதிவுகள் டிசம்பர் 2009 இதழ் 120
நீ இல்லாத அறை புழுக்கமாயிருக்கிறது
ஒரு பழைய நினைவை இழுத்து வந்தது
ஒரு பழைய நினைவை இழுத்து வந்தது
மெல்லிய காற்று வெறும் பொழுதொன்றில் இதமாய்
அதனொரு சூழலில் அறை பற்றிய
சித்திரம் காட்சிப்படுத்தப்பட்டது
அறை வாசலின் திரைச்சீலை
காற்றில் படபடக்கிறது
அதன் சுழல் திசைவழியில்
அதனைப் பற்றிப் பிடித்தவாறு
நின்றிருந்த அவள் சிரிப்பொலி தோய்ந்த முகம்
மெல்ல மறைந்து ஒலிநாதமாகிறது
படுக்கையில் கிடந்தவாறு ஏதேதோ
பேசிய பேச்சுக்கள் வரிகளாக மிதக்கின்றன
மெல்ல இருமை கவிந்து வெளிச்சம்
மேலெழும்புகையில் ஓடிச்சென்றொளியும்
அவளின் கரம்பற்றி அறைக் கதவோடு
சாய்த்து நிறுத்தி கொடுத்த இதழ் முத்தம்
நினைவுக்கு வெளியிலும் வெடிக்க
உதட்டை துடைத்து நாணமுடிகிறது
மெல்ல உயரும் அவள்
முகத்தில் பயம் கலந்துவிட
கரம் விட்டு ஓட எத்தனித்து
போக முடியாமல் அதிர்ந்தெழுந்து
அக்னியில் சமைந்தோம்
அறை இப்போது புழுக்கமாயிருக்கிறது.
தீக்குஞ்சுகள்
எரியும் தீயினை பாருங்கள்
எரியும் தீயினை பாருங்கள்
ஒரு சிறிய முனையின்
சொல்லொன்று பற்றியதோ
அக்கினியை சமைக்க
எந்தவொரு வல்லமை வந்ததோ
அதன் எரிதலிலும் படர்தலிலும்
வெவ்வேறு நிறமிருக்க
என்ன காரணமோ
எரிந்து கொண்டிருக்கும் ஒரு பொறி
உயர்ந்து மேலெழுந்து
பறந்து உயர்தலிலும்
என்ன ஒரு வேகம்
பொடிந்து விழும்
சிறு தீக்குஞ்சுகள்
கண்முன்னே மரிக்க
பதறாதோ மனம்
அவை படபடத்து படபடத்து
குஞ்சுகளை பொரிக்கின்றன
எந்த ஒரு இயலாமையும்
காட்டிக்கொள்ளாமலே
சிறு சொல்லெடுத்து நானும்
அக்கினி சமைக்க
வென்று விட்டதோ உலகை
அதனொரு தழல்.
4.
வெறுமொரு சலனம்
எனது ஆண்மையின் சூரியன்
உதிக்க துவங்கியது வழக்கமற்ற பொழுதில்
காலம் கலைத்து போட்ட நினைவுகளில்
அதன் வேர்கள் சொற்களாகின்றன
பட்டம் பூச்சியின் சிறகு அதிர்வது போல
அதன் விரைப்பு தொடங்குகிறது
நீ இல்லாத கணங்களை நினைத்தப்படி
நிறைவேறாத காமத்தை சுமந்தபடி
நீ விட்டு சென்ற வலியின் துயரம்
என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
மெல்ல உயர்ந்து திரண்ட மேகமாகி
கனிய துவங்கி கொள்ள
காத்திருக்கிறது என் காலம் அதன் நேர்கோட்டில்
பிடித்து செல்லப்படாத கன்றின் குதித்தல்
எதைப்பற்றியதாகவும் இல்லை எனும்படி
நீ எப்போது என்னுடன் இருப்பாய்
என்பது தெரியாதாகையால்
நான் சுமக்கும் உனது கனவுகள்
எளிதில் இறக்கிவிட முடியாததாய் இருக்கிறது.
பாழ்வெளியில் வீசும் காற்றின் நினைவுகளில்
உனது முகங்காண துடிக்கும் என் ஆவலில்
வெப்பகிரணமான ஆயிரம் வர்ணங்கள்
என் துயரினும் பெரிதான இப்படியான
பொழுதுகளை கட்டப்பது குறித்து
இப்போதே சொல்லிடு
இல்லையென்றால் எனக்கு நானே தண்டனை
அளித்துக் கொண்டு குருதியில் நனையும்
காமத்தை காலால் எட்டி மிதித்து
எறிய வேண்டிவரும்
வலி முற்றி போகுமுன்னரே
சிறு வண்டி பூட்டி தயராக வைத்திரு
வெப்பம் மெல்ல இறங்கியதும்
இரத்தமணம் கேட்டு வரும் மிருகங்களை
காணாதிருந்திட வேண்டும்
அறுந்து கிடக்கும் என் குறிவளர்ந்து
பெரிதாவதற்க்குள் நான் போய்விடவேண்டும்
பரவும் குருதியில் சூரிய அஸ்தமானம்
வெறுமொரு சலனம் மாத்திரமே.
5.
பதிவுகள் செப்டம்பர் 2009 இதழ் 117
என்றாலும் கவிதையே
பதினைந்து வருடமாக
நானும் பார்த்துகொண்டிருக்கிறேன்
அந்த இற்றுப் போன் கிளையை
ஒடிந்து விழவும் இல்லை
முறித்து எடுக்கவும் இல்லை
பலசமயமும் மனைவி
விறகு எரிக்க இல்லை
என்ற போதும்
அந்த மரத்துக்கு
இற்று போன கிளை
என்னவோ கொள்ளை
அழகு தான்.
மழை காலங்களில்
எறும்புகள்
தானியங்களை
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து வேறெங்கும்
கொண்டு செல்வதை தவிர்த்து
வேறு வேலை ஏதேனும் வேலை உண்டோ?
பூக்களின் வாசத்தை கண்டும்
காணாமலும் போய்க்
கொண்டிருக்கிறது
ஒரு வண்டு
என்னை சமன்குலைய
செய்யும்
உத்தேசத்துடன்
மௌனமாய் உதிர்ந்து
விழுந்து கொண்டிருக்கிறது
ஓர் ஆலிலை
கார்டூன் நெட்வொர்க்கில்
டோமுக்கு பயந்து
ஓடும் ஜெர்ரிக்கு
அது பயன்படக் கூடும்
என்பதை தவிர்த்து
வேறென்ன யோசிக்க முடிகிறது
இப்போது?
ஆடு கரையும் போது
ஏன் கரைகிறது என்று
நினைக்காமலில்லை
என்றாலும்
கரைந்து விட்டு தான்
போகட்டுமே என்பதான
மனசை போலொரு
மனசா உனக்கு?
இரவில் எழுப்பச் சொல்லி
ஒரு நட்சத்திரம்
உறங்கி போனது
நட்சத்திரங்களை பற்றி
யாரும் கவலை
கொள்வதில்லை என்ற போதும்
நடத்திரம் என்றோ
விண்மீன் என்றோ
எப்படி வேண்டுமானாலும்
அழையுங்கள்
ஆனால்
பகற்பொழுதில் காட்டச்சொல்லி
தொந்தரவு தராதீர்