- எம் பேரன்புக்குரிய வானொலிக் கலைஞர்களிலொருவர் அமரர் இராஜேஸ்வரி சண்முகம். அவரது காலகட்டத்தில் அவரது குரலுக்கு அடிமையாக நாமனைவருமிருந்தோம். அவருடன் பணியாற்றிய சக வானொலிக் கலைஞரும் ,ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் அவர்கள் அவரைப்பற்றிய நினைவுகளைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். அத்துடன் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் அரிய புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள்.காம் -
தமிழ் கலைகளில் வானொலிக்கலை என்பதும்ஓர் அங்கமாகியது. வானொலித்தமிழ் எனும்வடிவம் தோற்றம் பெற்றது. இவற்றுக்கு வழிவகுத்தது இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு. இலங்கை வானொலித்தமிழ் தனித்துவம்நிலைநாட்டிய அந்தநாள்கள் மனமகிழ்வுக்குரியவை. இலங்கையிலும்தமிழகத்திலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும்பலநாடுகளில் இருந்தும் ‘வானொலித்தமிழ்’ என்ற கருத்து கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு பொற்காலம்இருந்தது, அப்பொழுது இலங்கைத்தமிழ்ஒலிபரப்பாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது யாவும் சென்னை வியாபாரத்தமிழால் செழுமை குன்றிப்போயுள்ளன. மூத்த ஒலிபரப்பாளர்களின் ஆளுமைமிக்க அனுபவங்கள் பேணப்படாது புறக்கணிக்கப்படுகின்றன. இப்படிப்பல்வேறு விடயங்கள் இன்றைய வானொலி ஒலிபரப்புக்கள் தரம்குன்றிப்போவதற்குக் காரணிகளாய் அமைந்துள்ளன. இவற்றுக்கு மத்தியிலும் வாழ்வின் பெரும் பகுதியை இலங்கை வானொலி தமிழ்ஒலிபரப்பில் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த, அரும் பெரும் அறிவிப்பாளர்கள் எமதுமனங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களில் ஒருவரை இந்தப்பகுதியில்பதிவிடுவது மனதுக்கு மகிழ்வு தருகிறது. இலங்கை வானொலி என்றதும் எமதுமனங்களில் எழுந்து வரும் அறிவிப்பாளர்கள்வரிசையில் உயர்ந்து நிற்பவர் வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள். மயில் ஆடினால் அழகு, குயில் கூவினால் இனிமை, இராஜேஸ்வரி சண்முகம்அவர்கள் அறிவிப்பு நிகழ்த்தினால் இனிமையோ இனிமை. இலங்கைத் தமிழ்ப் பெண்களுள் கலை ஆளுமைகளில் சிறந்து விளங்கினார்.
12வயதுச்சிறுமியாகப் பேச்சுப்போட்டியில் பரிசு பெற்றவர், 14 வயதில் இலங்கைவானொலி கலையகத்திற்குள் காலடி பதித்தார். நாடகப்போட்டியொன்றில் கண்ணகியாக நடித்த இராஜேஸ்வரிபிச்சையாண்டிப்பிள்ளை என்ற சிறுமியின் நடிப்பினால் கவரப்பட்ட வானொலிநாடகப் பேராசான் சானா அவர்கள் வானொலி நிலையத்துக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். இராஜேஸ்வரி அவர்கள் சானா அவர்களின் நாடகப்பட்டறையில் வளர்ந்தார். வானொலி, மேடை நாடகத்துறைக்கும் வளம் சேர்த்தார். இவரது தமிழ் உச்சரிப்பு, நாடக நடிப்பு பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்களைக்கவர்ந்து கொண்டது. இலங்கையின் புகழ்பெற்ற நாடக,திரைப்பட இயக்குநர் லெனின் மொறாயஸ்இயக்கத்தில் சி.சண்முகம் எழுதிய ‘மாந்தருள் மாணிக்கம்’ என்ற நாடகமே இவரதுமுதலாவது மேடையேற்றமாக அமைந்தது. புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துஆளுமைமிக்க நடிகையாக முத்திரை பதித்தார். தான்தோன்றிக்கவிராயர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் எழுதியஆறுமுகநாவலர் பற்றிய பேச்சு வானொலியில் ஒலித்த நாள் 26.12.1950. தொடர்ந்து 62 ஆண்டுகள் அந்தக் கலைக் கோவிலில் தமது குரலால் வானொலிக்கலைப்பூசை செய்தார். சில்லையூர் செல்வராசன் அவர்களின் ‘சிலம்பின் ஒலி’ வானொலி தொடர்நாடகம்இவருக்கு அந்த நாட்களில் பெரும் புகழைப்பெற்றுக் கொடுத்தது. அதே போல கர்ணன் மேடை நாடகத்தில் குந்திதேவியாக நடித்தும் புகழ்சேர்த்தார். பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்கள் குந்திதேவி பாத்திரமாக மாறியஇராஜேஸ்வரி அவர்களது நடிப்பை மிக உன்னதமாகப் பாராட்டியுள்ளார்.
வானொலி நாடகக்கலைஞராக 1952ல் தெரிவானவர்,பகுதி நேர அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிரந்தர அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர் எனவானொலிக்கலையில் சாதனை புரிந்தார். பொங்கும் பூம்புனல் ஜனரஞ்சகமாய் அமைய, பொதிகைத்தென்றல் இலக்கியமயமாகியது. பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி பெண்களுக்கெனப்படைத்தார்ஆனால்,ஆண்களும் கேட்டு மகிழ்ந்தமை வரலாறு. இசையும் கதையும், ஒலிமஞ்சரி, இசைச்சித்திரம் என காற்றலையில் படைத்த கலைகள் பல.
“இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில், இராஜேஸ்வரியின் குரல் மூத்தது, முதிர்வினையுடையது. நிலையத்தின் அடையாளக்குரல்களில் ஒன்று ஆகியுள்ளது. வானொலிக்கலைச்சொல்லில் அடயாள மெட்டு (Singnature tune)என ஒன்றுஉண்டு. இராஜேஸ்வரியின் குரல் அத்தகையது.” என்று பேராசிரியர் க.சிவத்தம்பிஅவர்கள் வாழ்த்தியுள்ளார்.
“சகோதரி ராஜேஸ் அவர்களையும் கணவர் எழுத்தாளர் சண்முகம் அவர்களையும்நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்.என் வானொலி வாழ்வில் குறிப்பாக நான்இசையும் கதையும் நடாத்திய காலத்தில் சகோதரி ராஜேஸும் தரம் குன்றாதநிகழ்ச்சிகளை நடாத்தி கணிசமான ரசிகர்களை ஈர்த்திருந்தார்.வவுனியாநகரசபை மேடையில் நானும் ராஜேஸ் அவர்களும் இன்னும் சில வானொலிநடிகர்களும் நண்பர் சண்முகம் எழுதி இயக்கிய மேடை நாடகத்தில் நடித்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது.” என்று மூத்தஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
“தமிழில் குயில் பாடியிருந்தால் எப்படியிருக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால், தமிழில் குயில் பேசினால் எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும். அதுவானொலித்தமிழ்க்குயில் இராஜேஸ்வரி சண்முகம் பேசுவது மாதிரி இருக்கும்.” என்று கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தியிருந்தார்.
“பவளவிழா கண்ட இலங்கை வானொலியில் அன்று சிறுவர் நிகழ்ச்சியொன்றின்மூலம் பிரவேசித்த திருமதி இராஜேஸ்வரி சண்முகம், பின்னர் வானொலி நடிப்புத்துறையிலும் ஒலிபரப்புத்துறையிலும் பங்கேற்றுத் அதனது ஒலிபரப்புவாழ்க்கையில் பொன்விழா கண்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, இலங்கைவானொலிக்கும் பெருமை தருவதாக அமைகிறது.” என இலங்கை வானொலிதமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி அருந்ததி சிறிரங்கநாதன் அவர்கள்பாராட்டியுள்ளார்.
“இராஜேஸ்வரி சண்முகம் தனது சிறந்த குரல் வளத்தினாலும், சுத்தமான தமிழ்உச்சரிப்பினாலும் இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் ஆயிரக்கணக்கானஇரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.” என்று சுந்தா என ஒலிபரப்புத்துறையில்வரலாறு படைத்த வீ.சுந்தரலிங்கம் அவர்கள் வாழ்த்தியுள்ளார்.
“திரைவானில் ஓர் இளமைக்குயில் இராஜேஸ்வரி என்றால், அலைவானில் ஓர்இளமைக்குயில் அவரும் இராஜேஸ்வரி.” என்று தோழியை வாழ்த்தியுள்ளார்விசாலாட்சி ஹமீட் அவர்கள்.
“திறமை மட்டும் இருந்தால் போதாது. ஓர் அறிவிப்பாளருக்கு அர்ப்பணிப்பும்ஆர்வமும் அவசியம் என்று அறிவிப்பாளர் பயிற்சி நெறிகளில் நிபுணர்கள்வலியுறுத்திக் கூறுவார்கள். இந்த அறிவுரையை ஏற்று அர்ப்பணிப்புடன் தன்கடமையைச் செய்த காரணத்தினால் நேயர்களின் அபிமானத்தைப் பெற்றவர்இராஜேஸ்வரி. இளம் ஒலிபரப்பாளர்கள் இதனைக்கருத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பல இராஜேஸ்வரிகள் ஒலிபரப்புத் துறையில் குயில்களாகிஇனிமையாகக் கூவ முடியும்.” என்று, முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர்என்.சிவராஜா அவர்கள் வாழ்த்தினார்.
“ஒலிபரப்புத்துறையின் இராஜகோபுரத் தீபம் என ஒளிர்ந்து, அதை வெகு நன்றாகப்பிரகாசிக்க வைத்தவர் இராஜேஸ்வரி சண்முகம்.சர்வதேச தமிழ் ஒலிபரப்புநிலையங்களில் அறிவிப்பாளராகச் சேர்ந்து கொள்ளும் யுவதிகள்இராஜேஸ்வரியைத் தமது மானசீகக் குருவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.ஒலிபரப்புவிற்பன்னர்களிடம் உரிய பயிற்சிகளைப் பெற முடியாது தத்தளிக்கும்அவர்களுக்கு, இராஜேஸ்வரியின் தனித்துவமான திறமைகள் வழிகாட்டியாக, தோன்றாத் துணையாக அமைவதை அவதானித்திருக்கிறோம்.” இவ்வாறு பதிவுசெய்துள்ளார், செய்தி அளிக்கையாளர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமுன்னாள் உதவி இயக்குநர் நாயகம் வி.என்.மதியழகன் அவர்கள்.
“இற்றைக்கு 20-25வருடங்களுக்கு முந்திய காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளைஒலிபரப்பி பாராட்டைப் பெற்றுவிடுவது என்பது இலகுவான விடயமல்ல. அதுவும்திரைப்படப் பாடல்களைக் கொண்டே ஒலிபரப்பப்படும் வர்த்தக சேவையில், பலநிகழ்ச்சிகளை நடத்தி இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டங்களையும்பாராட்டுக்களையும் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் பெற்றுக்கொண்டார்என்பதற்கு அவரது கலைத்திறன், ஒலிபரப்புத்திறன், நேயர்களின் இரசனைக்குஏற்றவாறு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் திறமை என்பவற்றையே காரணமாகக்கூறலாம். தேசிய சேவையிலும் அவரது பங்களிப்பு சகரதும்பாராட்டைப்பெற்றிருந்தது.” எனப் பதிவிட்டுள்ளார் இலங்கை வானொலியின்மூத்த அறிவிப்பாளர் எஸ்.நடராஜன் அவர்கள்.
இலங்கை வானொலியில் பணியாற்றிவந்த காலகட்டத்தில் 90 வீதமானநிகழ்ச்சிகளிலும் விளம்பரங்களிலும் இந்த இரு குரல்களின் இணைவை வானொலி நேயர்கள் இரசித்துவந்தனர். அந்த வகிபாகத்துக்குரிய அன்புஅறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்: “1967ம் ஆண்டு பகுதி நேரஅறிவிப்பாளர் தேர்விலே நானும் திருமதி இராஜேஸ்வரி சண்முகமும், இன்னும்மூவரும் தெரிவாகி 6 மாதகால பயிற்சியும் ஒன்றாகவே பெற்றோம். 1969ன்இறுதியில் தான் சகோதரி இராஜேஸ்வரி அறிவிப்பாளராக இணைய முடிந்தது. அன்று முதல் எமது சேவைக்கு ஒரு புதுத் தெம்பு கிடைத்தது என்றால் அது வெறும்புகழ்ச்சியில்லை. காரணம் பெண் அறிவிப்பாளர்களில் நாடகத்துறையின் நல்லதேர்ச்சியுடன் விளங்கிய அவரால் எமது விளம்பரங்கள் புது மெருகு பெற்றன. நேயர் ஆக்கங்களில் பாத்திரப்படைப்புகளுக்கு உணர்ச்சி பொங்க அவரால் உயிர்கொடுக்க முடிந்தது. ஆண் அறிவிப்பாளர்களின் திறமைக்குக் களமாயிருந்த‘இசையும் கதையும்’ இவரது வருகைக்குப் பிறகு பெண்ணின் மன உணர்வுகளைவெளிப்படுத்தும் அற்புதமான கதைகளுக்குக் களமாக அமைந்தது.’பூவும்பொட்டும்’ பெருமை பெற வைத்த இவரது உழைப்பும் காலத்தால் மறக்கமுடியாதது.” என்று பதிவிட்டுள்ளார்.
“அனுபவம் வாய்ந்த இந்த ஒலிபரப்பாளர் செய்தி வாசிப்பாளராகவும் பலருடையகவனத்தைப் பெற்றவர். தெளிவான சரியான உச்சரிப்பு, பிறமொழிச் சொற்களைஉரிய சப்த நலனுடன் உச்சரித்தல், செய்தியின் பின்னணித் தகவல்களைப்பவ்வியமாகச் செய்தி ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் போன்ற பலஅத்தியாவசிய உறுதிப் பொருள்களைத் தம்வசமாக்கியதனால், இவர் செய்திவாசிப்பு கச்சிதமாகப் பெரும்பாலும் அமைவதுண்டு.” என, கலை-இலக்கியவிமர்சகர்,முன்னாள் ஒலிபரப்பாளர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் பதிவு செய்தார்.
“வானொலி விளம்பரத்துறையில் பீ.எச்.அப்துல் ஹமீதும், கே.எஸ்.ராஜாவும்கொடிகட்டிப்பறந்த காலத்தில் இவர்கள் இருவருக்கும் இணை கொடுக்கக் கூடியபெண்அறிவிப்பாளராக இராஜேஸ்வரி சண்முகம் மிளிர்ந்தார்.” என்றுஒலிபரப்பாளர் தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
பேரான பேரெல்லாம் பாடிவைக்க
பேசேன் நான், மூங்கையிவன் ஏது பாட?
புஸ்வானம்பூவானை வாழ்த்துதல் போல்
புவனத்தின் புதுவானே இது மேக வாழ்த்து
ஈரிழையாய் தமிழோடுன் குரலினையும்
ஈசலதாய் எங்களிரு செவிகள் பாயும்
கண்ணொளியை செவிகளுக்கே தந்து செல்வாய்
கமுகுக்குள் இசை மீட்டும் காற்றைப்போல
காகங்களிடைப்பாடும் குயிலே - இது
காம்புக்கோர் பூ வடித்த வாழ்த்துப்பாட்டு.
என்று ராசேஸ்வரி சண்முகம் பெயர்பதித்து வாழ்த்துரைத்தார் கவிஞர் - ஒலிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள்.
இவ்வாறு பல ஆற்றலாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்து மகிந்துவானொலிக் கலைப்பணியில் சளைப்பின்றி ஓய்வின்றி உழைத்த இராஜேஸ்வரிசண்முகம் அவர்கள் தாயகத்தைத் தாண்டி இந்தியாவிலும் பட்டங்கள் வழங்கிமதிப்பளிக்கப்பட்டார். 1996ல் ஐரோப்பியத்தமிழ்க்கலையகத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பியக்கலைச்சுற்றுலாவில் மோகன்-ரங்கன் இணைந்த அப்சராஸ் குழுவினரின்இன்னிசைவார்ப்புகள் இசை நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கலந்து கொண்டார். பிரான்ஸ்-பரிஸ் நகரத்தில் முதல் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான இரசிகர்களின்இதயம் கவர்ந்தார். தொடர்ந்து சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, இலண்டன் என நிகழ்ச்சிகள் அமைந்தன. வானொலி நேயர்களாகத் திகழ்ந்தவர்களை இரசிகர்களாக நேரில் சந்திக்கும்சந்தர்ப்பம், தங்கள் அபிமான அறிவிப்பாளரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனஇரண்டும் சங்கமித்த அழகான தருணங்களை மிக மகிழ்வோடு அனுபவித்தார்.
அவருடன் இணைந்து நாடகங்களில் நடித்தவர்கள், ஒலிபரப்பில் இணைந்துபணியாற்றியவர்கள் எனப் பலரை புலம்பெயர்ந்த நாடுகளில் நேரில் பார்த்துப் பேசிஉறவை நீடித்தார்.
“தமிழைத் தமிழாக உச்சரித்தால் தான் அழகு. எனக்குத் தமிழ் கற்றுத்தந்தஆசான்கள், எப்படி தமிழை உச்சரிக்க வேண்டுமென அன்றுசொல்லித்தந்தார்களோ அதே போலத்தான் இன்றுவரை உச்சரித்து வருகிறேன். உச்சரிப்பு உச்சரிப்பு என்று நச்சரித்து நச்சரித்து அடிக்கடி எச்சரித்ததால்தமிழைக் குதறித்துப்புவோர் கூட, தப்பாமல் தமிழ் பேச முன்வரக்கூடும். முயன்றுபாருங்கள். தமிழ் வாழவேண்டும்.” என, 2003ம் ஆண்டு எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் தொகுத்து வெளியிட்ட‘ஈழத்து மாண்புறு மகளிர்’ என்ற நூலில் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள்பதிவிட்டுள்ளார்.
இவர் தமது இனிமைக்குரல் வளத்தால் மாத்திரம் புகழீட்டியவர் என்று கூறிவிடமுடியாது. கடமை,கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு என்பவற்றை மிகக் கவனமாகக்கைக்கொண்டுவந்தார். சக அறிவிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுவதிலும்இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் தனித்துவமாக விளங்கினார். ஒரு பெரிய குடும்பத்தலைவியாக இருந்த பொழுதிலும் அந்தப் பொறுப்புக்களுடன் தனது வானொலிக்கலைப்பணியையும் எவ்வித தடங்கல்களுமின்றிமேற்கொண்டுவந்தார். இலங்கை வானொலியில் இருபெரும் ஆளுமைகளான பீ.எச்.அப்துல் ஹமீத், கே.எஸ்.ராஜா ஆகிய இருவரோடும் இணைந்து நிகழ்ச்சிகளிலும், விளம்பரங்களிலும் குரல் வழங்கி சாதனை புரிந்தவர்.
இலங்கைமணித்திருநாட்டின் இணையற்ற ஒரு பெண் ஒலிபரப்பாளரானஇராஜேஸ்வரி சண்முகம் அவர்களை, இன்றைய இளம் ஒலிபரப்பாளர்கள் தேடிஅறிந்திடல் நன்று. அவர் வழங்கிய நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்பது இந்தத் துறையில்நீங்களும் ஒரு சிறந்த அறிவிப்பாளராகத் திகழ வழிவகுக்கும். உலகெங்கும் இயங்கிவருகின்ற தமிழ் ஒலிபரப்பு நிலையங்கள் அவரைநினைவுகூர்ந்து பெருமைப்படுத்தியுள்ளன. இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் ‘நான்’ என விழிப்பதைத் தவிர்த்தேபேசுவார்கள். எப்பொழுதும் ‘நாம்’ என்ற சொல்லே அலங்கரித்து நிற்கும். ஆனால் இப்பொழுது அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் வேளையில்“நான்” என்று பெயரைத் தெரிவிக்கின்றார்கள். தனியார் ஊடகங்களிலேயேஇப்படியான விடயங்கள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இராஜேஸ்வரி சண்முகம் போன்ற மூத்த ஒலிபரப்பாளர்களை நினைக்கின்றவேளையில் அவர்கள் இந்த ஒலிபரப்புத்துறையில் பதித்து வைத்துள்ளவரைமுறைகளையும் சீர்தூக்கிப்பார்ப்பது எமது தமிழ் ஒலிபரப்புத்துறையைநேர்த்தியாகப் பேணுவதற்கு வழிவகுக்கும். வயதால் பணியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்ட பொழுதிலும் ஒலிபரப்புக் கலைக்குஓய்வு வழங்காது செயற்பட்டு வந்தவர் 2012 மார்ச் 23ல் நிரந்தரமாகவே ஓய்வுஎடுத்துக்கொண்டார். இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் மார்ச் மாதத்திலே தான். 1938 மார்ச் 16ம் திகதி பிறந்தவர், 2012 மார்ச் 23ல் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால்காலமானார். “ஆயுள் உள்ளவரை இந்தக்குயில் கூவிக்கொண்டே இருக்கும் என்று கூறிஉங்களிடமிருந்து விடைபெறுபவர் இராஜேஸ்வரி சண்முகம்” என உரைத்தார். அவ்வாறே செயற்பட்டார். ஓய்வு பெற்றபின்னரும் வீட்டில் அவர் இருந்ததில்லை. வானொலிக்கூடத்துக்கு தினமும் வந்திருந்தார் என்பதும் பதிவாகி உள்ளது. தமிழ் ஒலிபரப்புக்கலை இந்த உலகில் தொடரும் வரைஅறிவிப்பாளர் ‘வானொலிக்குயில்’ இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் புகழ்நிலைபெற்றிருக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.