நான் விஜய் தொலைக்காட்சியினரின் 'சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்த்தவனல்லன். அவ்வப்போது பார்த்து வருபவன். 'சுப்பர் சிங்கர்' அறிமுகப்படுத்திய பாடகர்களில் இளம் பாடகி பிரியங்கா தனித்து ஒளிர்கின்றார். இவருக்குக் கலையுலகில் நீண்டதோர் எதிர்காலமுண்டு. இவரது குரல் தனித்துவமானது; இனிமையானது.
"மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை" - கவிஞர் வாலி.
கவிஞர் வாலியின் சிறந்த பாடல்களிலொன்று. இடம் பெற்றுள்ள திரைப்படம் 'மேஜர் சந்திரகாந்த்'. இத்திரைப்படத்தின் மூலமே நடிகர் சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படத் தொடங்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் நாகேசும், ஜெயலலிதாவும் சகோதர, சகோதரிகளாக வருவார்கள். மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பெண்களைத் தன் வலைக்குள் இழுத்து ஏமாற்றும் ரஜனிகாந்த் என்னும் பாத்திரத்தில் நடிகர் ஏ.வி.எம். ராஜன் நடித்திருப்பார். அவரிடம் ஏமாந்த பெண் விமலாவாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொள்வார். பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.குமார்.
இத்திரைப்படத்தில் வரும் ரஜனிகாந்த் என்னும் பெயரையே தான் அறிமுகப்படுத்திய மராட்டிய நடிகரான சிவாஜி கெயிக்வாட்டிற்குச் சூட்டி உச்சநட்சத்திரமாக்கியவர் கே.எஸ்.பாலச்சந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் இப்பாடற் காட்சி மிகவும் சிறப்பாக, மறக்க முடியாத வகையில் பாலச்சந்தரின் முத்திரை பதிக்கப்பட்ட வகையில் படமாக்கப்பட்டிருக்கும். சமையல் பாத்திரங்களே இசைக்கருவிகளாக, ஜெயலலிதா பாடுவது இயங்காத வானொலிப்பெட்டியிலிருந்து பாடல் ஒலிப்பதுபோல், பார்வையாளர்களைத் தந்திரமாக ஏமாற்றும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சியில் ஜெயலலிதாவின் நடிப்பு மறக்க முடியாத வகையில் அமைந்திருக்கும். பாடலுக்கான அவரது நடன அசைவுகள் மறக்க முடியாதவை. திரைப்படத்தில் இப்பாடலைப் பாடியிருப்பார் பி.சுசீலா. நெஞ்சை ஈர்க்கும் காலத்தால் அழியாத கானமது. இப்பாடலை இளம் பாடகி பிரியங்கா தன் தனித்துவம் மிக்க இன்குரலில் மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார். கேட்டுப்பாருங்கள்.
பிரியங்கா குரலில்: https://www.youtube.com/watch?v=YUbCm6-5yQo
மேஜர் சந்திரகாந்த் படத்தில் பி.சுசீலா: https://www.youtube.com/watch?v=wW5Rgov83Ck
பாடல் முழுமையாகக் கீழே:
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின்
பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின்
பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது
உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது
உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
செக்க சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன
செந்நிற இதழ்கள்
செக்க சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன
செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை
மயக்கம்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை
மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைக்கும்
மனம் உண்மையை மூடி
மறைக்கும்
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லித் தந்தாரோ