மண்ணும் அதன் வாசமும் ஒருவனால் சுவாசிக்கப்படுகையில் அவனை தாலாட்டுகிற இயற்கை கூடவே வந்து குந்தியிருந்து பலகதைகள் சொல்லி மகிழ்வூட்டும்.அதே இயற்கை அவனை கைப்பிடித்து நகர்த்தும்.காலம் அவனை அடையாளப்படுத்துமாகில் நெருக்கமுடன் அணைத்து மகிழ்விக்கும்.அந்த மகிழ்வே அவனை ஆலிங்கனம் செய்யத்தூண்டும்.அந்தத் தூண்டுதலே அவனை எல்லாமாகி நிற்கவைக்கும்.அந்த எல்லாமாகி நிற்பவனிடம் வானம் சாமரை வீசும்.காற்று காதலைத் தூதுவிடும்.நானிருக்கிறேன் என மண் தன்னை விசாலப்படுத்தி வரவேற்கும்.பூக்கள் பூக்கவும்,செடிகள் துளிர்க்கவும் புத்துயிர்ப்பாய் கிராமம் கைகுலுக்கிக்கொள்ளும்.
இப்படித்தான் ஒரு கிராமம் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மண்ணில் புரட்டிஎடுத்து தனக்கெனவே வளர்த்தெடுக்கும். பெரிதாகும் எந்த உயிரும் பூத்தாலும்,காய்த்தாலும்,கருகிச் சருகாகும் வரை மனத்தில் அதே சுவாசத்துடனே வாழ்கின்றான்.அவனே வாழ்வில் அலைக்கழிப்பிற்கு ஈடு கொடுத்து கிராமத்தை விட்டு நகர்ந்தாலும் அந்த மண் தன்னுடன் உறவாடியவனை காலம் முழுதும் தன்னுடன் இணைத்தே பயணிக்கவைக்கும்.இதனால்தான் புலம் பெயரும் ஒவ்வொருவருவரும் மண்ணின் நினைவுகளுடன் வாழ்வதும் தவிர்க்கமுடியாமல் இருந்துவிடுகிறது.முதுமை வரை தொடரும் அழிவடையா ஞாபகச் சின்னங்களாகிவிடும்.அதனால் தான் புலம்பெயர் சூழலுக்குள் இருந்துகொண்டு அவனால் எழுதப்படும் எழுத்துகள் அனைத்தும் மண்சார்ந்தே பயணிக்கின்றன.இணுவில் கிராமத்தில் பிறந்து தன் இள வயதுக் கனவுகள், குறும்புகள், விளையாட்டு, உணவு, விளையாட்டு, உறவுகள், நண்பர்கள், பாடசாலைகள். ஆசிரியர்கள் எல்லாவற்றையும் இழக்கும்படியாக இனமுரண்பாடுகள்,யுத்தம் இவற்றால் நம்மைப்போலவே நாட்டைவிட்டு வெளிநாடொன்றில் வாழ்கின்ற சூழலுக்குள் வாழ்ந்தாலும் தமிழையும்,தன் கனவுகளையும் கவிதைக்குள் இருத்தி சுகானுபவம் பெறும் படைப்பாளனாக, கலைஞனாக, ஊடகவியலாளனாக மண்ணின் பெருமைகளை,கலை இலக்கிய பண்பாட்டினை கட்டியெழுப்பும் பலருள் ஒருவனாக தன்னை நிலைநிறுத்தி,இன்று ஒரு நூலையும் எமக்குத்தந்து படைப்புலகத்தில் கவிஞனாக அடையாளப்படித்தி நிற்கிறார் இணுவையூர் மயூரன் அவர்கள்.
ஈழத்துப்பித்தன் எனும் பெயரிலும் தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர்.ஊடகராகவும், 'குருத்து'இதழின் ஆசிரியராகவும் பலராலும் அறியப்பட்டவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற இக் கவிதை நூலைப் பற்றி பேசும் தகுதி எனக்குண்டா எனத்தெரியவில்லை.எனினும் எனக்குள்ளே முகிழ்த்த வாசிப்பறிவு அத் தகௌதியை உடையதாக்கும் எனவும் நம்புகிறேன்.
இணுவில் கிராமம் மண்சார்ந்த உழைப்பாளர்களையும்,கல்விமான்களையும்,கலைஞர்களையும் கொண்டதொரு கிராமம்.
குதிக்கால் செம்மண்ணில் பட நடந்தவனால்,அங்கு வளர்க்கப்படுகின்ற புகையிலைக்கன்றுகளிலிருந்து மேலெழும் வாசத்தை நுகர்ந்தவனாக,விழுதுகளில் ஊஞ்சலாடியவனால்,குளத்தில்,கேணியில் முங்கி எழுந்தவனால், திருவிழாக்களில்தன்னை இழந்தவனால்,ஊர் கூடி தேர் இழுத்த காலங்களுள் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்தியவனால்,ஏதாவதொரு ஒழுங்கை முகப்பில் கால் ஊன்றி மிதிவண்டி ஓடப்பழை விழுந்தெழும்பிய நாட்களுடன் ஒன்றிப்போனவனால் இலகுவில் மறந்துவிடமுடியாதபடி ஆயுள் முழுதும் கூட வரும்.அவனே கவிஞனாகில் எழுத்தில் வார்த்தைகளாய் நர்த்தனமிடும். இணுவையூர்.மயூரனின் கவிதைகள் அவற்றைக் காட்டிக்கொடுத்துவிடும்.
"..மட்டை வேலியில் தட்டி மகிழ்ந்ததும்
தகரப் படலையில் தடிகொன்டு அடித்ததும்
பொட்டுப் பிரித்து மரவள்ளி கிளப்பியதும்
பூவரசந் தடியால் அடி தர அம்மா கலைத்ததும்
பொக்கிசமாய் இன்னும் மனதுள் புதைந்து கிடப்பன..."
பிறரின் அனுபவங்கள் எனினும் நமது வாழ்வோடு ஒத்துப்போவதால் அவை சார்ந்த படைப்புக்களையும் உள்வாங்கும் மனநிலைக்கு நாம் இயல்பாக தள்ளப்பட்டுவிடுகிறோம். அப்படித்தான் இணுவையூர் மயூரனின் கவிதைகளும்.இடங்கள் தான் மறுபட்டிருக்கின்றனவே அன்றி நமது கிராமமும் அப்படியான அனுபவங்களையே பிரசவிக்கின்றன.
"... நாட்டினைப் பிரித்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கிறது.
ஆதலால்
நரை வீழ்ந்து
நடை தளர்ந்து போனாலும்- நம்
தடம் மாறிப் போகோம்..."
வாழ்வியல் அனுபவங்களை கவித்தொழில்நுட்பங்களுடன் எழுதும் போது கவிதைகள் அழகு சேர்க்கும்..அவை வாசகனை கவிதைகளுடன் பயணிக்கவைக்கும். வாசகனைத் துணைக்கழைத்து , கைகோர்த்து நடப்பதில் கவிதைகள் வல்லமை கொண்டிருக்க வேண்டும்.
இணுவையூர்.மயூரன் தன் கவிதைகள் மீதான அதீத கரிசனையினாலும்,தன்னுள் வளர்த்தெடுத்த பயிற்சியினாலும் நல்ல கவிதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் எனலாம்.கிராமத்து அனுபவங்கள்,நூலகம் பற்றிய எரியும் நினைவுகள்,தமிழீழம் பற்றிய தெளிவான சிந்தனை இப்படி தன் எண்ணச் சிதறல்களை நமக்குத் தந்திருப்பது புதிய அனுபவம்.புலம் பெயர் இதழ்களும் இவரின் கவிதைகளை அலங்கரித்திருக்கின்றன.கூடவே ஒலி ஊடகங்களிலும் இவர் கவிதைகள் ஒலித்திருப்பது மேலும் சிறப்பைத்தருகிறது.
நம் முன்னே நடத்தி முடிக்கப்பட்ட அவலங்களை எளிதில் கடந்துபோய்விடமுடியாதபடி காலம் அவ்வப்போது இடித்துரைத்தபடியே இருக்கும்.நூலக எரிப்பு ஒரு வரலாற்றுச் சாட்சியாகும். ஒவ்வொரு கவிஞனுள்ளும் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்திருக்கும். எழுத்தில் வடிக்கையில் இன்னும் இன்னும் மன ஆழத்துள் கோபத்தை விதைத்து அதன் மேலெழுந்து நிற்கும் கவிதை நமது முகத்தில் மீள மீள அறைந்தேசெல்லும். நமது கோபத்தை அங்கிருந்தாவது அன்று ஆரம்பித்திருக்கவேண்டும் என்கிற அக்கறையும் இல்லாமல் இல்லை.
தன் கவிதைகளை லாவகமாக நாம் ரசிக்கும்படியாக வடிவமைத்துள்ளார். இளவயதில் புலம்பெயர்ந்திருந்தாலும் தமிழைக் கற்றுணர்ந்து ஒரு படைப்பாளியாக நம்முடன் பயணிக்கும் கவிஞர் மயூரனைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
"நாட்டினைப் பிரிந்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கிறது."
தான் வாழ்கின்ற வாழ்வியலுக்குள் மூழ்கிப்போனாலும் அவ்வப்போது அலைக்கழிக்கும் ஊர் ஞாபகங்களை நிராகரித்து நகர்ந்துவிடமுடியாத ஒரு படைப்பாளனுக்கு தான் கற்ற கல்விச்சாலைகள், நண்பர்கள், ஆசிரியர்கள், சூழலில் அழகு சேர்க்கும் மரங்கள், பூக்கள், விளையாட்டு மைதானம், மெல்லியதாய் இழையோடும் சங்கீதம் மனதின் மூலையில் முடங்கி இறந்துவிடாமல் அவ்வப்போது துளிர்த்தபடி எழுந்தே நிற்கும் பசுமையாய் விடுமுறையில் போகையிலும் இவற்றையே முதலில் தேடும் மயூரனின் கவிதைகள் அவற்றை உணர்த்தி நம்மையும் நினைவுகளுக்குள் இழுத்து வாவென்று அழைத்துச் செல்கையில் மௌனமாய் கவிதைகளுடன் பயணிக்கவே மனது முந்தும்.
யுத்தம், இடப்பெயர்வு, இழப்பு, சோகம், நோவு, விரக்தி, நம்பிக்கை, நம்பிக்கையீனம் என வாழ்வின் தடங்கள் நகர்கிற சூழலில் கிடைக்கின்ற துரும்பாக கவிதைகளே நம்மிடம் மிஞ்சுன்றன. மயூரனின் கவிதைகளும் நமக்குக் கிடைத்திருப்பது மகிழ்வைத்தருகிறது.
வாசகர் மனங்களை இலகுவில் கவர்ந்துவிடும் கவிதைகளில் வார்த்தை ஜாலங்கள் அதிகமில்லை.சொற்களின் கட்டமைப்பில் ஒவ்வொரு வரிகளையும் ஒருங்கிணைத்து கவிதைகளைத் தந்திருக்கும் மயூரனின் கவிதைகள் யாவும் மீள,மீள வாசிக்கும் முனைப்பை ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்தும் என்பதே திண்ணம். பல நூல்களை அழகுற வெளியிடும் அகநாழிகை - இந்த நூலையும் வெளியிடுள்ளமையும், வடிவமைப்பின் நேர்த்தியையும் பாராட்டத்தான வேண்டும்.
'எதற்கும்
தயாராய் நான்
என் இருப்பை
நிலை நிறுத்த
எடுத்தடி வைக்கிறேன்'
எனக்குள் ஏற்படும் சோர்வு நிலையில் கையிலெடுக்கும் கவிதை நூல்கள் பலவற்றுள் இந் நூலும் அமைந்ததில் மகிழ்வே.இவரிடமிருந்து இன்னும் நிறையவே இலக்கிய உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.