கீதாரி நாவலின் ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி கவிதையில் தொடக்கமாகி, சிறுகதையில் நடைபழகி, நாவலில் விருச்சமாகி நின்கின்றார். பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். குறிப்பிடத்தகுந்த தற்காலப் பெண்ணிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரின் படைப்புகள் பல கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள சிறப்பிற்குரியன. அந்த வகையில், ஆசிரியரின் அறிமுகச் செய்திகளையும், கீதாரி நாவலின் கதைச் சுருக்கத்தையும், விமர்சனத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.
ஆசிரியர் பிறப்பு
திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர் குளத்தில் 04.05.1971 ஆண்டு பிறந்தவர் சு.தமிழ்ச்செல்வி. தந்தை சுப்பிரமணி ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாய் முத்துலட்சுமி. இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், கடைசியாகப் பிறந்தவர் சு.தமிழ்ச்செல்வி.
கல்வியும் ஆசிரியப் பணியும்
பிறந்த ஊரான கற்பகநாதர் குளத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர். ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு இடும்பாவனம் என்னும் ஊரில் முடித்தவர். எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் கன்யா குருகுலத்தில் படித்தவர். திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்.
சொந்த ஊரில் பயின்ற பள்ளியிலேயே ஆறு வருடம் ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்பணிக்கிடையில் அஞ்சல் வழியில் பி.லிட்., எம்.ஏ., பட்டங்களைப் பெற்றவர். திருமணமாகிக் குழந்தை பிறந்தவுடன் கற்பகநாதர் குளத்தில் செய்துவந்த தற்கால ஆசிரியப்பணியை விட்டுவிட்டு விருத்தாச்சலத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார். பின்பு அரசு ஆசிரியப்பணி கிடைத்தது. சொந்த ஊரிலேயே ஆசிரியப் பணியில் அமர்ந்த முதல் பெண். அரசுப் பணியில் அமர்ந்த முதல் பெண் சு.தமிழ்ச்செல்வி.
திருமணம்
நாவலாசிரியர் சு.தமிழ்ச்செல்வியின் திருமணம் கவிஞர் கரிகாலனுடன் நடந்தது. கவிஞர் கரிகாலன் தன்னுடைய கவிதைகளால் மட்டுமின்றி 'நிலாவை வரைபவன்' என்கின்ற நாவலின் வாயிலாகவும் 'களம் புதிது' என்கின்ற இதழின் மூலமாகவும் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவராகக் காணப்படுகிறார்.
கவிஞர் கரிகாலனும் அரசுப்பள்ளி ஆசிரியர். இருவரும் விருத்தாச்சலம் பெரியார் நகர் என்கின்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளை ஒன்று என்று மொத்தம் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். சு.தமிழ்ச்செல்வி விருத்தாச்சலம், கார்குடல் என்னும் சிற்றூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
கீதாரி நாவலின் கதைச்சுருக்கம்
இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மாள், வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு மகனோடு வளசையில் (குடிசை) இருக்கிறார். ஒரு நாள் இரவில் மழை பெய்கின்றது. அந்நேரத்தில் மனநலம் குன்றிய கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வருகின்றாள். இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். அப்பெண்ணிற்குப் பிறசவம் பார்ப்பது ராமு கீதாரிதான். ஆட்டிற்குப் பிறசவம் பார்த்த அனுபவம் இங்கு உதவுகிறது. அந்தக் குழந்தைகளின் பெயர் மூத்தவள் சிவப்பி, இளையவள் கரிச்சா. மறுநாள் காலையில் ஊர் மக்களைக் கூப்பிட்டு தகவலைக் கூறுகிறார். ஒரு குழந்தையைத் தான் வளர்த்துக் கொள்கிறேன் என்று இராமு கீதாரி உறுதியளிக்கிறார். கரையாங்காட்டுப் பண்ணைக்காரர் சாம்பசிவம் இன்னொரு குழந்தையை நான் எடுத்து வளர்க்கிறேன் என்கிறார். ஆனால், இப்போது என்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது. காரணம் எனக்கு இரண்டு மனைவிகள். ஏனென்றால், வளர்ப்பதில் பிரச்சனை வரும். அதனால் அக்குழந்தை பள்ளிக்குச் செல்லும் பருவத்திலும் வந்து வாங்கி கொள்வதாகவும் உறுதியளிக்கிறார்.
கூறியது போன்று ஆறு வருடங்கள் கழித்து சிவப்பியை வாங்கிக் கொண்டு செல்கிறார் கரையாங்காட்டுப் பண்ணையார் சாம்பசிவம். சாம்பசிவத்திற்கு இரண்டு மனைவிகள் அதனால், அந்தப் பெண்ணை வீட்டு வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தி வளர்க்கிறார்.
ராமு கீதாரி - இருளாயி பெற்றேடுத்த மகள் முத்தம்மாளும் அவளுடைய கணவரும் பொறாமை கொண்டு தங்களுடன் வந்து தங்குமாறு அழைக்கின்றனர். அதனால், ராமு கீதாரி - இருளாயி இருவரும் தனியாகக் கரிச்சா, வெள்ளைச்சாமியை குடிசையில் விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
கரிச்சா, வெள்ளைச்சாமியோடு உதவியாக வளசையில் இருக்கிறாள். வளர்ந்து பெரியவள் ஆகின்றாள். தான் பெரிய மனுசி ஆனதைத் தன்னுடைய அக்கா சிவப்பியிடம் போய்க் கூறுகின்றாள். சிவப்பி தான் பெரிய மனுசி ஆனதையும், தான் படுகின்ற துன்பத்தையும் கரிச்சாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். அதனால், ராமு கீதாரியிடம் செல்லுமாறு அறிவுறுத்துகிறாள் சிவப்பி. அவ்வாறு செல்லாமல் மீண்டும் கரிச்சா வெள்ளச்சாமி குடிசைக்கு செல்கிறாள். சிவப்பி ஒரு நாள் ராமு கீதாரி இருக்கும் இடத்திற்குச் சென்று கரிச்சா இங்கு வந்தாளா என்று கேட்கிறாள். கரிச்சாவிற்கு நடந்த செய்தியைச் சிவப்பி மூலமாக அறிந்த ராமு கீதாரியும் இருளாயியும் தன் மகள் முத்தமாள் வீட்டிற்கு அழைத்துச் சென்று கரிச்சாவிற்குச் சடங்குகளைச் செய்து முடிக்கின்றனர். சில நாள் கழித்து சரிச்சாவை பெண் பார்க்க வருகின்றனர். பெண் பார்க்க வந்த கூட்டத்தினர் வெள்ளையனையும், கரிச்சாவையும் இணைத்துத் தவறாகப் பேசுகின்றனர். ராமு கீதாரி வெள்ளைச்சாமிக்கும் கரிச்சாவிற்கும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தனிக்குடிசை போட்டுக் கொண்டு இருக்குமாறு பணித்துவிட்டு தன்னோட மகள் மருமகனோடு சேர்ந்து வாழ்கிறார்.
அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சி கரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கும் போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சிவப்பியைத் தத்தெடுத்து வளர்த்த கரையன்காட்டு பண்ணைக்காரன் சாம்பசிவம் வெள்ளச்சிக்குப் பாலியல் துன்புறுத்துவதால் தற்கொலை செய்து இறந்துவிடுகிறாள். இச்செய்தி தெரியாமல் கரிச்சா ஒருநாள் தன் அக்கா சிவப்பியைப் பார்க்கச் செல்கிறாள் அப்போதுதான் சிவப்பி இறந்துவிட்ட துக்கச் செய்தியை அறிந்து மனம் நொந்து போகின்றாள்.
தொடக்கத்தில் தயக்கம் இருந்தாலும் கரிச்சாவும், வெள்ளைச்சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையைத் தவிர, எவ்விதச் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை நடத்தினர். ஆனால், சரியான மேய்ச்சல் நிலம் இல்லாததால் சிதம்பரம் என்ற ஊருக்கு நகர்ந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. தன் மனம் மாறுவதற்கு இது ஒரு நல்ல நேரம் என்று கரிச்சாவும் நினைத்துச் செல்கிறாள். ஆனால், நடப்பதோ வேறு நிகழ்வு. அங்குதான், ராமு கீதாரியின் மைத்துனன் வீட்டில் வெள்ளைச்சாமியின் அண்ணன் பெரியசாமி இருக்கிறான். பெரியசாமியும் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக மனைவி, குழந்தைகள், மைத்துனன், கொளுந்தியாள் என்னும் உறவுகளோடு வாழ்ந்து வருகிறான்.
குறிப்பிட்ட ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற ஆடுகளை விற்று வெள்ளைச்சாமிக்கு சொந்த ஊரில் இராமநாதபுரத்தில் நிலம் வாங்குவதற்கு தன்னுடைய மகள் முத்தமாளின் கணவனையும் வெள்ளைச்சாமியையும் அனுப்புகிறார் ராமு கீதாரி. அதன்பின்பு சிதம்பரம் வந்த வெள்ளைச்சாமி அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணன் பெரியசாமியைச் சந்திக்கிறான். அப்போதுதான் குழந்தையின்மையைக் காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியைத் திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவியும், அண்ணனின் மைத்துனன் ஓடையப்பனும் முடிவு செய்கின்றனர். வெள்ளைச்சாமியும் மற்றொரு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறான்.
இந்தச் செய்தி கரிச்சாவின் காதில் படுகிறது. தன் மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளைச்சாமி இவ்வாறு மனசு மாறிவிட்டான் என்று வருத்தப்பட்டு, கரிச்சா வெள்ளைச் சாமியைப் பிரிந்து ராமு கீதாரியிடம் வந்து சேர்கின்றாள். ராமு கீதாரியோ பயங்கர பண நெருக்கடியில் இருக்கிறார். வெள்ளைச்சாமியிடம் ராமு கீதாரி கரிச்சாவோடு சேர்ந்து வாழச்சொல்லியும் அவன் கேட்கவில்லை. அதனால், ராமு கீதாரி மனம் வருந்தி வெள்ளைச்சாமிக்குச் சாபம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். வெள்ளைச்சாமியின் திருமணம் ஏதோ ஒரு காரணத்தினால் நின்று விடுகின்றது. ஆனாலும், கரிச்சாவை மீண்டும் அழைக்க வெள்ளைச்சாமி வரவில்லை.
வெள்ளைச்சாமியைப் பிரிந்து வந்த சில நாட்களிலே அவள் கருவுற்றிருப்பதை இருளாயிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைச் சரிசெய்ய வந்த மருத்துவர் மூலம் அறிகின்றாள். ஆனால், வெள்ளைச்சாமியிடம் போகாமல் தானே சுயமாக நிற்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் ராமு கீதாரியிடம் ஆடுகளைப் பிடித்துக் கொடுக்க சொல்லி வளர்க்கிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது. ஆண்குழந்தையை நன்றாகப்படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கின்றாள். ஆட்டைப் பிடிக்கவும், கட்டிவைக்கவும் தங்களுடைய ஆடு மேய்க்கும் தொழில் அனைத்தையும் தன் மகனுக்குக் கற்றுக்கொடுக்கிறாள். ஒருநாள் இரவில் சரிச்சா பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். இறுதியில் ராமு கீதாரி கரிச்சாவின் மகனை வளர்க்கிறார்.
விமர்சனப் பார்வையில் கீதாரி நாவல்
‘கீதாரி’ என்னும் நாவலில் ராமு கீதாரி என்ற பாத்திரம் தான் ஆட்டிற்குப் பிறசவம் பார்த்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட கற்பிணிப் பெண்ணிற்குச் துணிச்சலாக பிறசவம் பார்த்த தன்மையானது ராமு கீதாரியின் மனிதாபிமானத்தையும் துணிச்சலையும் காட்டுகின்றது.
சேது – இராமாயி இவர்களின் மகன் வெள்ளைச்சாமி. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்றெடுத்த மகள் சரிச்சா இருவரையும் தான் பெற்றெடுத்த பிள்ளைபோல் எந்தவிதப் பாகுபாடு இல்லாமல் நன்கு வளர்ப்பதும், இருவரும் அண்ணன் தங்கை என்ற அன்போடு வளர்வதும் அன்பின் உச்சநிலையை நாவலாசிரியர் சு. தமிழ்ச் செல்வி காட்சிப்படுத்தியுள்ளார்.
கீதாரி குடும்பத்தைச் சேர்ந்த சேது – இராமாயி இருவரும் அதிக வருமானம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் திட்டக்குடிச் சுந்தரமூர்த்திப் பண்ணையாரிடம் வேலை செய்து வருகின்றனர். அவரிடம் கடன் பெற்று ஆடு, மாடு வாங்கி வளர்த்தும் வருகின்றனர். பின்பு சேதுவின் மனைவி இராமாயிக்கும் சுந்தரமூர்த்திப் பண்ணையாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இச்செய்தி சேதுவின் செவிக்கு எட்டுகிறது. மனைவியைத் தண்டித்தும் கேட்காததால் உலக்கையால் மண்டையில் அடித்துக் கொலை செய்துவிடுகிறார். அதனால், பண்ணையார் கடனைத் திருப்பிக்கேட்கிறார். தான் வைத்திருந்த ஆடு, மாடு விற்றுக் கடனை அடைக்க நினைக்கிறார். ஆடு, மாடு திருடு போய்விடுகிறது. இதனால், இறுதியில் மனம் நொந்து இறந்துவிடுகிறார். இது மாதிரியான செயல்பாடு இன்றை கால நடைமுறைச் சூழலை எடுத்தியம்புகிறது.
சேது – இராமாயி இருவரும் இறந்து விடுகின்றனர். இவர்கள் பெற்றெடுத்த பெரியசாமி, வெள்ளைச்சாமி இருவரையும் சுந்தரமூர்த்திப் பண்ணையாரிடம் இருந்து மீட்கிறார் ராமு கீதாரி. இவர் வெள்ளைச்சாமியைத் தான் வளர்த்துக்கொண்டு, பெரியசாமியைத் தன்னுடைய மைத்துனன் வீட்டில் வளர்க்க அனுப்புவது ராமு கீதாரியின் தன்னலமற்ற போக்கைக் காட்டுகிறது.
அண்ணன் தங்கையாக வளரக்கூடிய வெள்ளைச்சாமிக்கும் கரிச்சா இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது இடையர்குல மக்களிடையே காணப்படும் குலவழக்கமாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறு திருமணம் நடைபெற்றதாக இந்நாவலில் சித்தரித்திருப்பது மீள் பார்வைக்குரிய செய்தியாகக் காணப்படுகின்றது.
பெரியசாமியின் மனைவியின் அண்ணன் ஓடையப்பன். பெரியசாமியின் தம்பி வெள்ளைச்சாமி பெற்ற தாய் தந்தையில்லாத கரிச்சாவைத் திருமணம் செய்தவன். திருமணமானவன் என்று தெரிந்திருந்தும் அந்தப் பெண்ணிற்கு பணம் கொடுத்து ஒதுக்கிவிட்டு, தங்கச்சியைத் திருமணம் செய்யது வைக்க ஏற்பாடு நடக்கிறன்றது. ஒரு பெண்ணிற்கு நல்வாழ்வு கொடுக்க நினைத்து, ஒரு அனாதைப் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க நினைப்பது என்பது ஓடையப்பனின் மனிதாபிமானமற்ற செயலும், சுயநலமும் இக்காலச்சூழலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
வெள்ளைச்சாமிக்கு மற்றொரு திருமண ஏற்பாடு நடைபெறுவதை அறிந்த கரிச்சா ராமு கீதாரியிடம் முறையிடுகிறாள். ராமு கீதாரி வெள்ளைச்சாமியிடம் நேரில் சென்று சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியடைகிறது. அதனால் ராமு கீதாரி வெள்ளைச்சாமிக்குச் சாபமிடுகிறார். சாபமிடக்கூடிய செயல் அன்றும் இன்றும் கிராமத்து மக்களிடையே இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வதை ஆசிரியர் பதிவு செய்திருப்பது இடையர்களின் வாழ்வியலை எடுத்துரைப்பதாக அமைகின்றது.
கரிச்சா மீது அன்பாக இருந்த வெள்ளைச்சாமிக்கு, குழந்தையின்மையைக் காரணம் காட்டித் திசைதிருப்புவதால், சரிச்சா மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதனால், கரிச்சா தனியாக வாழத்திட்டமிடுகிறாள். ராமு கீதாரியின் உதவியோடு ஆடு வாங்கி வளர்த்து வருகிறாள். கணவனைப் பிரிந்து வந்த சில நாட்களில் தான் கற்பம் அடைந்ததைத் தெரிந்துகொள்கிறாள். ஆண்குழந்தையையும் பெற்றெடுக்கிறாள். அவனுக்கு குலத்தொழிலைக் கற்றுக்கொடுக்கிறாள். நன்றாகப் படிக்க வைக்க நினைக்கிறாள். எதிர்பாராமல் ஒரு நாள் இரவில் பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். இறுதியில் ராமு கீதாரிதான் கரிச்சாவின் மகனையும் வளர்க்கிறார். இவ்வாறு ஆதரவற்ற குழந்தைகளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்க்கக்கூடிய நல்ல கதாப்பாத்திராக இந்நாவலில் தொடக்கம் முதல் இறுதிவரை உலாவவிட்டிருப்பது கதையைப் படிக்கும் வாசகர்களுகு ஒருவிதமான உந்துதலைத் தரும் என்பதில் ஐயமில்லை.
கரையாங்காட்டுப் பண்ணையார் தான் வளர்த்த சிவப்பிக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதால் இறந்துவிடுகிறாள். திட்டக்குடி பண்ணையார் சுந்தரமூர்த்தி சேது மனைவி இராமாயோடு கள்ளத்தொடர்பு வைத்தால் சேதுவால் இராமாயி கொலை செய்யப்படுகிறாள். பண்ணைக்காரர்கள் நிலவுடைமையாளர்கள் அதனால் அடுத்த பெண்களின் மீது பாலியல் இச்சையை வலுக்கட்டாயமாகவும், பணத்தின் வாயிலாகவும் தினிப்பவர்கள் என்பதைக் கீதாரி நாவலில் பெண்களுக்கு ஏற்படும் துயர நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடையர்கள் நிலவுடைமையாளர்களால் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும்,
ஆட்படுகின்றனர். இவர்களின் வாழ்க்கை ஒரு நிலையில்லாத நாடோடி வாழ்க்கை என்பதையும் இந்நாவலின் வாயிலாக ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி சுவைபடச் சித்தரித்துள்ளார். நாவலைப் படிக்கப் படிக்க அடுத்து என்ன நடப்போகின்றது என்ற ஒரு அவாவினை ஏற்படுத்துகிறது கீதாரி.
துணைநூற் பட்டியல் :
தமிழ்ச்செல்வி, சு. டிசம்பர்.2008, கீதாரி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.