“தம்மையா சிதம்பரப்பிள்ளை ‘சமதர்மக் கூட்டுறவுச் சிற்பி’” என்ற தொகுப்பு நூல் நேற்று எனது கைக்குக் கிட்டியது. பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் நூலாக இருந்தது. அவருடைய தலைமைத்துவப் பண்பையும், ஆளுமையையும் பக்கங்கள் ஊடே பற்றிக் கொண்டே மெல்லென நகர முடிந்தது. அத்துடன் அவரது தன்னலமற்ற சமூகப் பணிகளையும் நினைவு கூர வைத்தது. எமது வரலாற்றின் மிகத் துன்பம் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் யாழ் மண்ணில் வாழ்ந்தவன் நான். அக்காலத்தில் அவரது நட்பும் ஆதரவுக் கரமும் கிட்டியது எனக்கு கிடைத்த பாக்கியமாகும். எனக்கு மட்டுமல்ல வடமராட்சி மண்ணில் வாழ்ந்த பலரும் அவரால் மகிழ முடிந்திருக்கிறது. எமது வாழ்வும் பணியும் எங்களுக்காக என்றிருக்கக் கூடாது. மக்களுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக, அவர்கள் துயர் துடைப்பதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்பதை தனது வாழ்வின் கூடாகச் செய்து காட்டியவர் அவர். அவரது வாழ்வின் பல அத்தியாயங்களை நூலின் பக்கங்களுடே தரிசிக்க முடிந்தது.
மறந்துவிட முடியாத சாதனையாளன் - பேராசிரியர் சிவத்தம்பி, யுகமனிதர் - பண்டிதர்.கலாநிதி.செ.திருநாவுக்கரசு, அமரர் சிதம்பரப்பிள்ளையின் பன்முகத் தோற்றம் - கி.நடராசா, தலைவர் நம்ப முடியாத எளிமையும் வலிமையும் - குப்பிளான் ஐ.சண்முகம், மனிதநேயத்தின் மனச்சாட்சியாக வாழ்ந்தவர் - சி;கா.செந்திவேல், சாதிமத பேதமற்ற கூட்டுறவாளன் - செ.சதானந்தன், சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் சில நினைவுகள்- புலோலியூர். ஆ. இரத்தினவேலோன், தரிசனம் மிக்க கூட்டுறவு வாண்மையாளர் - பா.தனபாலன், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் கர்ஜனை குறையவில்லை – வீ.எஸ்.சுவாமிநாதன், ஆளுமை மிக்க நல்லாசிரியப் பெருந்தகை – ச.விநாயகமூர்த்தி, தேம்பி அழுகின்றன நூல்கள் - த.அஜந்தகுமார், அமரர் சிதம்பரப்பிள்ளையின் நினைவுப் பதிவுகள்- பேராசிரியர்.சபா.ஜெயராசா. இவை தவிர வ.சிவராஜசிங்கம், ந.பார்த்தீபன், டொக்டர்.தி.ஞானசேகரன், சு.குணேஸ்வரன், பேராசிரியர்.எஸ்.சிவலிங்கராஜா, க.சிதம்பரநாதன், செ.கு.சண்முகநாதன், வைத்தியகலாநிதி.ஆ.கேதீஸ்வரன், இ.இராகவன், ஆ.இரகுநாதன், வேல்நந்தகுமார் ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. ம.பா.மகாலிங்கம் அவர்கள் மாஸ்டருடன் நடாத்தி உதயன் பத்திரிகையில் (22.06.2008) வெளியான செவ்வியும் இடம்பெறுகிறது. அந்தச் செவ்வியில் ஓரிடத்தில் தெணியான், குப்பிளான் சண்முகம் போன்ற எழுத்தாள நண்பர்களுடன் எனது பெயரையும் குறிட்டதை கண்டபோது மனம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. மறுகணம் துணுக்கிட்டது. பெரிதாக எதுவும் செய்யாத எனது பெயரையும் மறக்காத பரந்த அவரது உள்ளத்தை நினைத்து மீண்டும் பரவசத்தில் ஆழ்ந்தேன். தமது எல்லோரது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரித்தவரான சிதம்பரப்பிள்ளை மாஸ்டரின் மறைவின் துயர் கனத்த பாறையாக நெஞ்சை அழுத்துகிறது.
தனக்காக அன்றி தனது சமூகத்தின் வளர்ச்சிகாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரின் பிரிவானது உற்றார் உறவு குடும்பம் என்பதற்கு அப்பால் முழுச் சமூகத்தினதும் ஆழ்துயராக மாறுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய பெருந்தகை ஒருவர்தான் சிதம்பரப்பிள்ளை மாஸ்டர். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் என்றால் அரிசியும் பருப்பும் மானிய விலையில் கிடைக்கச் செய்யும் நிறுவனம் என்பதற்கு மேலாக, அதனை மக்களின் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் பங்காளியாக்கிய பெருமை அவரைச் சாரும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மிகு ஆர்வம் கொண்டவர்.
நூல் வெளியீடுகள், திரைப்படக் காட்சிகள், இலக்கியக் கருத்தரங்குகள், ஈழத்து நூல் விற்பனை நிலையம் என அவர் ப.நோ.கூ.ச ஊடாக தொடக்கி வைத்த நற்பணிகள் ஏராளம். படைப்பாளிகளாகவும், இரசனையாளர்களாகவும் தமிழிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாக நின்று ஒத்தாசையும் ஆதரவும் வழங்கியதுடன் நூலாசிரியர்களுக்கு உதவிக் கரம் நீட்ட என்றுமே தயங்காதவர். உதாரணத்திற்கு மண்ணின் மைந்தரான சிரித்திரன் சுந்தரின் கார்ட்டூன்கள் அடங்கிய நூலை வெளியிட்டு வைத்தமை நேற்று நடந்தது போலப் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது. நண்பர் டொக்டர்.கனக சுகுமாரின் முதல் உதவி நூல் அவ்வாறே வெளியிடப்பட்டது. தான் ஆற்றிய நற்பணிகளுக்காகச் சிலுவை சுமக்க நேர்ந்த போதும் தளர்ந்து விடாது, சுதாகரித்து எழுந்து மக்களுக்கு மீண்டும் அயராது பணியாற்றினார்.
இவற்றிற்கான அத்திவாரம் அவரது இளவயதிலேயே ஏற்பட்டிருக்கிறது. சமதர்மக் கொள்ளையை தனது வாழ்க்கை இலட்சியாக வரித்துக் கொண்ட அவர் அதில் என்றுமே தளர்ந்ததில்லை. தனது வளர்ச்சிக்காக கொள்கையைக் கைவிட்டதில்லை. தனக்காக, தனது குடும்பத்திற்காக என எதையும் சேர்த்து வைக்காது சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதை நினைக்கும்போது அவர் உருவம் ஓங்காரமாக உயர்ந்து நிற்கிறது.
அவருடன் பழகக் கிடைத்த நாட்களை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது. மறைவு மனத்தை அழுத்துகிறது. இருந்தபோதும் அவரது இழப்பை சாதாரண இழப்பாகக் கொள்ளாது, சவாலாகக் கொள்ள வேண்டும். அவரின் பணிகளில் வெற்றிடம் ஏற்படாதிருக்கும் வண்ணம் அவரது பணிகளை முன்தொடர வேண்டும் என்பது எனது அவா. இந்தக் கருத்தே நூல் முழுவதும் இழையோடுகிறது. சொல்லில் அன்றிச் செயற்படுவோமாக.
கட்டைவேலி நெல்லியடி ப.நோ.சங்கத்தின் கலாசாரக் கூட்டுறவு பெருமன்றத்தால் வெளியிடப்பட்ட நூல் இது. செ.சதானந்தன் மற்றும் பு.இராதாகிருஸ்ணன் இணைந்து தொகுத்தது. விலை ரூபா 200 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.