கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் 'கண்ணீர் வரைந்த கோடுகள்' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து, வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
'பொதுவாக இளைய கவிஞர்களின் தொகுதி என்றால் அதில் காதல் கவிதைகள் அதிகம் இருக்கும். அல்லது பள்ளி வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்தக் கருத்துருவத்தை மாற்றுகிறது கஹட்டோவிட்ட நிஹாஸாவின் கண்ணீர் வரைந்த கோடுகள். .... உள்ளே பல புதுமையான கவிதைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அநேகமான கவிதைகள் பெண்ணின் சுதந்திர வாழ்க்கைக்கான ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைச் சுட்டி நிற்கின்றன. ஏனையவற்றுள் இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சினை, அரசியல் உரிமைகள், நாட்டின் சமாதானம், தாய்மை என்று பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் மிகக் குறைவாக காதலும், காதல் தோல்வியும் பேசப்படுவது சிறப்பம்சமாகும். இன்னொரு சிறப்பம்சம்... இவர் இதுவரை பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர் அல்ல என்பது. அனாவசியமான படிமங்கள், குறியீடுகள் என்பவற்றைக் களைந்து மிக இயல்பான கவிதை மிடுக்கோடு இவரது கவிதைகள் வெளிக்கிளம்பியுள்ளன' என்று கெகிராவ சஹானா தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் பணிப்பாளரான அல்ஹாஜ். எம். இஸட். அஹ்மத் முனவ்வர், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ்.வை. ஸ்ரீPதர், கவிஞர் காவூர் ஜமால் ஆகியோர் இக்கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகளை வழங்கியுள்ளார்கள். பதிப்புரை வழங்கியிருக்கும் வேகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பஹமுன அஸாம் தனது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்....
'புது யுகம் காணும் வெற்றியின் பயணத்தில், வேகம் பதிப்பகமானது மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. அந்த விதத்தில் பத்திரிகைத் துறையில் ஒரு புதுத் தடம்பதித்துள்ள வேகம் பத்திரிகையானது புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் உற்சாகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ... நிஹாஸா நிஸாரின் ஆக்கங்களைப் பார்க்கும் போது ஒருவிதக் கவலைதான் குடிகொண்டது. காரணம் அழகான தமிழ் வளமும், சொற்கள் வசனங்கள் என்பவற்றை தனது ஆக்கங்களில் கையாளப்பட்டிருந்த அமைப்பும் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் இத்தனை காலமாக அவை தூசு தட்டப்படாது இருந்ததை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. ஆரம்பக் காலத்திலேயே இவரை இனங்கண்டு, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பட்டை தீட்டப்பட்டிருந்தால், இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளராக இருந்திருப்பார்'.
நிஹாஸா நிஸார் தனது முன்னுரையில் 'தெவிட்டாத தேன் சொரிக்கும் இக்கவிதா வனத்தில் சிறகசைக்க வந்ததொரு சிட்டுக்குருவி போல இச்சின்னத்தொகுதி உங்கள் கரங்களில் இன்று தவன்று கொண்டிருப்பது வெறும் கனவென்றே எண்ணத்தோன்றும். கவிதையின் ஆரம்ப நாதம் அடிமனதில் அலாரம் அடித்தது. மனதில் முகாமிடும் ரணங்களை மொழிபெயர்க்கத் தெரியாத கணங்களில் மனதை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் எனது யௌவனத் தேடல்களின் கண்களில் ஆங்காங்கே தட்டுப்படும் வரிகளில் மனம் லயிக்கும். அவ்வரிகளை என் டயரிக்குள் எழுதிப் பத்திரப்படுத்துவேன். இரவுகளின் ஏகாந்தத்தில் உள்ளம் வாசித்து அமைதி பெறும். கவிரசனையின் ஆரம்பச் சுவையை இருதயம் கொஞ்சம் கொஞ்சம் சுவைப்பது புரிந்தது. ... முதன் முதலில் பூமியில் கால் பதிக்கும் குழந்தையின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் குறை காணாது தப்புக்களைத் தண்டனைக்கு அப்பாற்படுத்தி கை தூக்கி விடுவது நற்பண்புகளின் உச்சம். அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் எனது முதல் பாதச் சுவடான இக்கன்னித் தொகுப்பை உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன்' என்கிறார்.
சாயம் போகும் நினைவுகள் என்ற கவிதையில்
ஆயிரம் முறை நீட்டும் மனப்புயலின்
தலை நீட்டலுக்கிடையில்
த்ரீஜீ போனுக்கு ரீலோட் ஏத்த
மாதம் தோறும் பணம் கேட்கையில்
அம்மாக்களின் இருதயங்களில்
ஆலமரம் சரியும் அரவம்....
என்று குறிப்பிடுகிறார். கையடக்கத் தொலைபேசி இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் சிறியோர், பெரியோர் அனைவரிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. எனினும் அதனால் ஏற்படும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அவசர யுகத்தில் அவசியமாகிப் போன கைத்தொலைபேசிகள் ரீலோட் என்ற பெயரில் காசை அழித்து விடுகின்றது. அந்த கருத்தைத் தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது.
இது அங்குல இடைவெளி என்ற கவிதையில் வெறுமை நிலை வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடும்போது ஏற்படும் மனவருத்தம் இந்த வரிகளில் இவ்வாறு எடுத்தாளப்பட்டிருக்கிறது.
அன்புகாட்டாத நேசங்கள்
முளைக்கப் பார்க்கும்
பெண்மையின் அபிலாஷைகள்
கண் முன்னே
கலையப்படும் போது - அது
தருகிற வழியும்... ரணமும்...
வேதனையாகி விரக்தியாகிறது...
மன உறுதிகள் குழைந்து
வீரம் தளர்ச்சியுற்று
உடம்பைக் கூறுபோடுகிறது...
இது என்ன தான் நவீன யுகம் என்றாலும் இன்றும் கூட பெண்களை அடக்கியாள எண்ணும் ஆண்கள் கிருமிகளாக ஆங்காங்கே காணப்படுகின்றமை துரதிருஷ்ட நிலையாகும். ஒடுக்கப்பட்டு அடுப்பங்கரைக்குள் அடைப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு 'தாகிக்கும் இதயம்' என்ற கவிதையில் இவ்வாறு சோகமிசைக்கிறது.
வாழ்வில்
அறியாத பக்கங்களை
தெரியாதென விட்டுவிட்டேன்...
அன்று அறியப்படாத - சில
பக்கங்களை அனுபவிக்கிறேன்
இன்று
அடுப்பங்கரையினுள்ளே
அடைபட்டுக்கொண்டு...
உரிக்கப்படும் உரிமைகள் என்ற கவிதையில் மானிட நேயம் வெளிப்படுகின்றது. செத்த பிணங்களாய் அனைத்து பிரச்சனைகளை சகித்த காலங்களும், இனவெறி அரக்கனின் அட்டகாச ஆட்சியின் அவலங்களும் போதும் என்று ஆவேசப்படும் நிஹாஸா அந்தக் கவிதையின் வரிகளை இவ்வாறு வடித்திருக்கிறார்.
பாழ்பட்ட மண்ணில்
கால்பதித்த மக்கள்
சீர்கெட்ட சனத்தால்
சீரழிந்தது போதும்...
வாள்பட்டு நித்தம்
சீர்கெட்ட மக்கள்
சிதைந்தொழிந்தது போதும்...
நூலின் 32வது பக்கத்தில் அமைந்திருக்கும் காத்திருப்பு என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை நாட்டார் பாடலின் சாயலில் அமைந்திருக்கிறது. சந்த ஒழுங்கு பேணப்பட்டு கவித்துவத்துடன் புனையப்பட்டிருக்கும் அந்தக்கவிதை கீழ்வருமாறு....
நெஞ்சில கைய வச்சா
சத்தமும் இல்ல
ஆனா நான்
சாகவும் இல்ல!
ஓடுதில்ல ஒருவேல
நெனப்பெல்லாம் உங்கமேல
நொந்து கிடக்கிறேன் நான்
நொடிப்பொழுதில் வாங்க..
தேய்ந்து போற என்ன
தேற்றிவிட்டுப் போங்க
அடுத்து முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் சீதனம் கேட்டு திருமணம் செய்யும் ஆண்வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைகிறது. அதற்கு உதாரணமாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.
பெண்களை
வாழ வைக்க
வக்கில்லாதவன்
பெற்றுக் கொள்ளும்
பிச்சைக் காசு...
மஹர் கொடுத்து
மணம் முடிக்கத் துணியாத
நீங்களெல்லாம் - ஏன்
காற்சட்டை அணிந்த
ஆண்கள் என்று
சொல்லிக் கொள்கிறீர்
எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நிஹாஸா நிஸார் மிளிர வேண்டும். இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
E-mail:- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Websites:- www.rimzapoems.blogspot.com
www.rimzapublication.blogspot.com