அண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை சாவகச்சேரியில் 114 'டச்சு றோட்'டில் அமைந்துள்ள திருக்கணித பதிப்பகத்தில் அச்சிட்டு 2008ல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலினை நூலாசிரியர் தனது மனைவியான காலஞ்சென்ற ஆசிரியை சேதுநாயகி வைரமுத்து அவர்களது நினைவுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தில் தனது ஆசிரியப் பணிக்கு வாழ்க்கை முழுவதும் ஆதர்சனமாகவும், உறுதுணையாகவும் விளங்கியவர் தனது மனைவியார் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூலின் முதற் தொகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி (Translation 1 & 2) மொழிபெயர்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி உரையாடலுக்கும் (Conversation) , மூன்றாவது பகுதி கடிதங்கள் எழுதுவதற்கும் (Written Message) நான்காவது பகுதி இலக்கணத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நூலின் அநுபந்தம் ஒன்று பொன்மொழிகளுக்காகவும், அநுபந்தம் இரண்டு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பிரிவுகளில் ஆங்கில வசனங்களும், அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. உரையாடல் பகுதியில் தொலைபேசி உரையாடல், நேரடி உரையாடல் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. மேற்படி நூலின் இரண்டாவது பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு மொழிபெயர்ப்புக்காகவும், இரண்டாவது பிரிவு இலக்கியப் படைப்புக்காகவும், மூன்றாவது பிரிவு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நூலின் இலக்கியப் படைப்புப் பகுதியில் English is a master key , Pleasures of Reading, Hobbies, The Education, My Aim in Life , Let Us Learn More English And Good English மற்றும் Good Manners ஆகிய ஒரிரு பக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நூலாசிரியர் தனது முகவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்: "மொழியினைக் கற்றலென்பது பல சவால்களுடனும், கற்கும் செயற்பாடுகளுடனும் தொடர்புபட்டுள்ளது. கற்பவர்கள் தொடர்ச்சியான செய்முறை மாதிரிகளூடாக மொழி விதிகளையும், மொழி மீதான அவர்களது திறமையினையும் இயல்பாக்கிக்கொள்ளவேண்டும். தற்போது பாடசாலைகளில் பாவிக்கப்படும் ஆங்கில மொழிக் கற்றலுக்கான நூல்களை வாசித்த பின்னர் நான் இந்த நூலினை எல்லாத் தரத்திலுமுள்ள மாணவர்களுக்காக வடிவமைத்துள்ளேன். இந்நூல் உள்ளடக்கியுள்ள பாடங்களும், பயிற்சிகளும் எங்கள் குழந்தைகளை அவர்களின் ஆங்கில மொழித்திறமையினை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன். ஆங்கிலத்தை உங்களது நன்மைக்காகவும், பயனுக்காகவும் நீங்கள் பாவித்துக்கொள்வீர்களென்று நான் நம்புகின்றேன்."
இந்நூலின் இரண்டாவது தொகுதியின் பிரிவுகளில் ஒன்றான 'இலக்கியப் படைப்பு' என்னும் பிரிவிலுள்ள Pleasures Of Reading என்னும் குறுங்கட்டுரையினை ஒரு பதிவுக்காகக் கிழே தருகின்றோம்:
'Reading maketh a full man" said Bacon one of the famous English writers, If anyone wants to learn any language he must read more and more books of the language, which he wants to learn. For an example let us think that someone wants to learn English. So, he must read more English books. One could read books on different subjects like history, geography, physics, chemitry and biology for the purpose of studying. It is very helpful for a science student to read books on Science and about greatest scientists and their discoveries. Some can read books on astronomy and can have a keen knowledge in stars and other planets in the sky. Story books, novels, magazines and comics could be read not only for pleasure but also to gather some knowledge.
Education is a life long process. Everyone has to study from his birth to death. Let us think of the greatest writers like Shakespeare and Bacon. They had become great men by reading a lot of books. Everyone should make it a habit to read good books. Today the market is full of bad books. Parents and teachers should take pains to avoid children reading these books. Reading a good book is like associating a good friend. The good books are our faithful friends. Our friends may change or die, but our books will always with us. A good book is a good companion for a man living alone. To a person suffering from some illness , A book could give him much relieve.
It is very useful to have a library in every school and village. It is also good to have a library at home. Reading is useful not only for the school children but also for the adults. We can gain both pleasure and knowledge by reading good books.
ஓய்வுபெற்ற ஆசிரியர் வைரமுத்து அவர்களின் மேற்படி நூல்களை வாசித்தபொழுது எனக்கு என் பாடசாலைக் காலகட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. A.S.K அவர்களிடம் ஆங்கிலம் கற்றதுதான் நினைவுக்கு வருகின்றது. நான் அவரிடம் சிறிது காலம் மாலை நேரங்களில் ஆங்கில இலக்கணம் படித்திருக்கின்றேன். அவரே எழுதி வெளியிட்டிருந்த ஆங்கில நூலின் மூலம் அவரது ஆங்கில வகுப்பினை வெற்றிகரமாகக் கடக்க முடிந்தது. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தலை தனது பணிகளிலொன்றாக இறுதிவரை தொடர்ந்திருக்கின்றார். ஆசிரியர் வைரமுத்து அவர்களும் ஓய்வு பெற்ற பின்னரும் இறுதி வரையில் மாணவர் கல்விக்காக தொடர்ந்து தனது சேவையினை ஆற்றியிருக்கின்றார். தனது எழுபதுகளின் இறுதியில் மேற்படி நூல்களை அவர் எழுதி வெளியிட்டிருப்பது வரவேற்புக்கும், பாராட்டுக்குமுரியது. ஓய்வு பெற்றதும் ஓய்ந்து ஒடுங்கிக் குடங்கி விடாது, உற்சாகத்துடன் தொடர்ந்தும் அவர் பணியாற்றீயிருப்பது ஏனைய முதியவர்களுக்கும் உற்சாகத்தினையும், ஊக்குவிப்பினையும் கொடுக்கும் தன்மை மிக்கது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு மிகுந்த பயனையும் விளைவிப்பது. இன்று ஆங்கிலம் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களை இணைக்கும் பொது மொழியாக இருப்பதனாலும், ஆங்கிலத்தில் உலகின் பன்மொழி இலக்கியப் படைப்புகள், அறிவியல் நூல்கள் போன்றவை மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாலும், மேலும் பன்னாட்டு வர்த்தகச் செயற்பாடுகளில் பாவிக்கப்படும் பிரதான மொழியாக ஆங்கிலமிருப்பதனாலும் ஆங்கில மொழியினைக் கற்பதன் அவசியம் அதிகரித்திருக்கின்றது. மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறமையினை அதிகரிப்பதற்கு இவை போன்ற நூல்களின் அவசியம் உணரப்பட்டிருக்கின்றது. இந்த நோக்கின் அடிப்படையில் மறைந்த ஆசிரியர் வைரமுத்து அவர்களின் கல்விச் சேவையும், நூற் பங்களிப்பும் முக்கியமானவை.
நூல்கள்: Practice English Every Day (Volume 1 & Volume 2)
அச்சுப்பதிவு: Thirukkanitha Pathippaham, 114 Dutch Road, Chavakachcheri