பொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாக, 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உட்காயங்களைப் பேசும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு த. அஜந்தகுமார் தனதுரையை முன்வைத்துள்ளார். அதில் சிந்துதாசன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''கவியரங்குகள் பலவற்றில் பங்குகொண்டவர். மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். சிறுகதைதள், கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதி வருபவர். இவரது கவிதைக் குரல் அனைவரையும் கட்டுப் போடும் ஆற்றல்கொண்டது. அறிவிப்பு, பாடல் துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் அகப்பட்டு வாழ்ந்தவர்.'' பொலிகையூர் சு.க. சிந்துதாசன் தனதுரையில் ''இத்தோடு என் வாழ்வு முடிந்ததாய் எண்ணிய தருணங்கள் மீண்டும் மீண்டும் என்னுள் உயிர்ப்புற அவ்வப்போது என் விழிகளுடன் சேர்ந்து நான் கொட்டியவையே இக்கவிதைகள். இவையெல்லாம் கனவுதானா என்ற சந்தேகங்கள் நம்பமுடியாதபடி அடிக்கடி இன்றும் என்னுள் வந்து போகிறது. என்னைச் செதுக்கும் ஏதோவொரு சக்தி நான் செதுக்கவும் துணை புரிவதாய் ஒரு உணர்வு. எவை எவையெல்லாம் என்னை அழுத்திப் போனதோ அவற்றையெல்லாம் கவிதைகளாக்க நான் முயன்றுள்ளேன். நெருடல்களில் உழன்று நித்திய வலியில் தவித்து எதையும் எவருடனும் பரிமாற முடியா சம்பவிப்புக்களை என் நெஞ்சத்துள் புதைத்து ஏக்கங்களை அளவுக்கதிகமாய் தேக்கி நான் வீங்கி வெடித்ததன் விளைவே இக்கவிதைகள்'' என்கிறார்.
சாயம் போன சுவர் (பக்கம் 15) என்ற கவிதை போருக்கு பின்னரான சூழலை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகின்றது. பணக்காரர்களாக வாழ்ந்தவர்கள் ஆசை ஆசையாக கட்டிய வீடுகளும், வீடு போன்ற ஒன்றை கட்டிக்கொண்டு அன்றாடம் தமது வாழ்வைக் கழித்தவர்களும் இன்று எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சில வீடுகள் இருந்த தடயங்கள்; எதுவுமே இல்லாதிருப்பதையும், இன்னும் சில வீடுகள் இடிபாடுகளுக்கு மத்தியில் எப்படி உருக்குலைந்து இருக்கின்றது என்பதைப் பற்றியும் நன்கு உணர்த்துகின்றது இக்கவிதை. மனிதர் தவிர்ந்த ஏனைய ஜீவராசிகள் வாழ்ந்துவரும் ஒரு பாழடைந்த இடம் பற்றி அக்கவிதை மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.
சாயம் போன சுவர்
ஆங்காங்கே,
மின்னல் கீற்றுக்களாய்
வெடிப்புக்கள்.
வெடிப்புக்களை நிறைத்தபடி
எறும்புகளின் ஊர்வலம்.
வர்ணப் பூச்சுக்கள்
பட்டை பட்டைகளாய் கிளம்பி
முகங்காட்டும்,
பல தோற்றங்கள்.
துடைப்பான் பட்டு
பலகாலம் ஆனதை உணர்த்தும்
தூசிப் படலம்..
நீ பற்றிய என் புரிதல் மொழி (பக்கம் 24) என்ற கவிதை காதலின் வலியையும், சுமையையும் உணர்த்தி நிற்கின்றது. காதலின் ஆழத்தை உணர்த்தும் இக்கவிதையில் அவள் பற்றிய புரிதலை, மௌனம் என்பது மொழியாக்கிவிடுமா? என்று கேட்டிருக்கும் விதம் ரசனைக்குரியது.
உனது இறுதிப் பார்வைகளை
இன்றும்,
மொழிபெயர்க்க முடியாதவனாய்
நான்.
என்னை நிறைக்கிறது
நீ தந்துபோன சுமை.
உன் ஞாபகங்களை
மீட்கிறது,
ஊதிப்பெருத்த வலி..
போர் நிகழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் ஒருவித அச்சத்தோடுதான் தமது வாழ்க்கையை கடத்தி வந்தார்கள். எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்கும் என்றே தெரியாத அந்த இக்கட்டான சூழ்நிலை சராசரி மனிதனது அன்றாட வாழ்வியலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதையே கீழுள்ள வரிகளிலிருந்து புரிந்துகொள்ள இயலுகிறது. அதாவது நேரடியாக கண்ட அல்லது கேள்விப்பட்ட விடயங்கள் கனவிலும் வந்து அச்சமூட்டுவது இதன் மூலம் புலனாகின்றது. சொப்பனத்தில் ஒரு போர் (பக்கம் 29) என்ற அந்த கவிதையின் சில வரிகள் பின்வருமாறு...
இனந்தெரியாத் திசைகளில் இருந்து
ஏவப்பட்ட பல்வேறு குண்டுகள்
எனைச் சுற்றி
வீழ்ந்து வெடிக்கின்றன..
அப்பளம் பொரிவது போல்
சுற்று முற்றிலும்,
துப்பாக்கி ரவைகள்
வெடித்துக் கொண்டிருந்தன..
புரியாத பாஷைகளில் பேசியவாறு
மூர்க்கமாய் படைவீரர்கள்
எனை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்..
.... திடுக்கிட்டு எழுகிறேன்
படுக்கயறை பூட்டிக்கிடந்தது.
ஒரு இரவைத் தின்ற கிரவல் வீதிப் பயணம் (பக்கம் 38) என்ற கவிதை இரவுகளில் பயணம் செய்வதில் உள்ள அவஸ்தையைப்பற்றி அழகாக விளக்கி நிற்கின்றது. சிறிய கவிதை என்றாலும் அது சொல்லியிருக்கும் செய்தி ஆழ்ந்து நோக்கத்தக்கது. யுத்தத்தினால் சிதைவடைந்த வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் குன்றும் குழியுமாக இருப்பது நினைவில் இருந்தாலும், எதிர்பாராத இடங்களில் இருக்கும் குழிகளில் தடுக்கி விழப்போவது பற்றி கவிதை எடுத்துரைக்கின்றது. அத்துடன் பயந்து வருவதிலேயே பயணமும் முடிந்துவிடுகின்றது என சொல்கின்றார் கவிஞர் சிந்துதாசன்.
கடும்பனி குளிரெடுக்க
முன்னும் பின்னும் அசைந்தவாறு
உந்துருளியின் வேகத்தை
ஆரோகணிக்கிறேன்..
முடியவில்லை..
குளிரும் அதனுடன்
இணைகிறது..
கணக்கு வைத்திரந்த
சில குழிகளைத் தவிர
மற்றையவை எல்லாம்
எனைத் திடுக்கிடச் செய்தன..
எனது சேரிடம்
வந்தபோது
இரவைப் பயணம் தின்றிருந்தது!
உயிர்ப்புறம் ஞாபகங்களில் சமையும் கணங்கள் (பக்கம் 64) என்ற கவிதையும் போரின் வடுக்கள் பற்றியே பேசியருக்கின்றது. ஒரு வரலாற்றின் பக்கத்தையே மாற்றியமைத்த யுத்தமானது மக்களின் ஜீவிதத்தையே கேள்விக்குறியாக்கியது. எல்லாமே மாறிப்போன அந்த போர் சூழலில், நேற்று போல் இன்றும் மணம் வீசியபடியிருக்கும் காட்டுமல்லி மட்டும், இன்னும் அதேபோல் வாசம் வீசுகிறது என்று ஒரு உண்மைiயும் அழகாக சொல்லியிருக்கின்றார்.
விட்டுப்போன குடிவளவை எண்ணித் தேய்ந்த, நாட்களின்.. நம்பிக்கைகள்.. உடைந்து நொறுங்கிற்று.. கறையான்களுக்கு உணவளித்தபடி உருக்குலைந்து போகும் வளவு வேலிக் கம்பிக் கட்டைகள்.. எனைக் குடிபெயர்த்த இறுமாப்பில் மனை நிலத்தின் மையத்தில், இயந்திரத் தகடாய் ஒரு பேய்க் குடில், அதில் பல்லிளித்தபடி தெரிகிறது கோரமுகம்.. பேய்கள் தின்ற வாழ்வில் ஞாபகங்களை உயிர்ப்பிக்கிறது.. என் குடிமனை முற்றத்து ஆத்தி மரக் கொப்பில் தொங்கும், வெளிறிக் கிழிந்த உடுதுணி.. எல்லாமே மாறிற்று.. நேற்றுப் போல் இன்றும் மணம் வீசியபடி இருக்கும் காட்டுமல்லியைத் தவிர..
இந்தத் தொகுதியில் போரியல் சார்ந்த பல கவிதைகளும், அகம் சார்ந்த ஓரு சில கவிதைகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவரது எதிர்கால இலக்கியப் படைப்புக்கள் இன்னும் சிறப்பாக வெளிவர என வாழ்த்துக்கள்!!!
நூல் - கடலின் கடைசி அலை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பொலிகையூர் சு.க. சிந்துதாசன்
வெளியீடு - அலைகரை
விலை - 250 ரூபாய்
நூல் விமர்சனம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.