சென்ற முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை 01-07-2012 மாலை 6:00 மணியளவில் சொப்கா (SOPCA) என்றழைக்கப்படும் பீல்குடிமக்கள் ஒன்றியத்தின் கனடா பிறந்த தினக் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளோடு மிசசாகாவில் உள்ள ஸ்குயர்வண் முதியோர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் பாடப்பட்டு கனடிய தேசியக் கொடி மகாஜனாக்கல்லூரி பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான திரு. கே. நவரட்ணம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாடலும், சொப்கா மன்றத்தின் கீதமும் இடம் பெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் கனடா பிறந்த தினக்கொண்டாட்டத்தை சொப்பா அங்கத்தவர்களோடு ஒன்று சேர்ந்து பிறந்ததினக் கேக் வெட்டித் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து சொப்கா மாணவி ஜெனிற்ரா ரூபரஞ்சனின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.
அதைத் தொடர்ந்து சொப்கா மன்றத்தின் உபதலைவர் குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் சொப்கா அங்கத்தவர்களின் தொகை இவ்வருடம் அதிகரித்திருப்பதாகவும், அதன் அங்கத்தவர்கள் தன்னார்வத் தொண்டர்களாக சீடாபிறே பூங்காவின் பராமரிப்புத் தேவைகளுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதம் கல்விப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தவிருப்பதாகவும், 2013 தை மாதம் சொப்காவின் கலாச்சார விழாவைக் கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்தார்.
யாழினி விஜயகுமாரின் நடனத்தைத் தொடர்ந்து விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட மிஸசாகா கிழக்கு குக்ஸ்வெல் மாகாணசபைப் பிரதிநிதி டீபிகா டமிர்லா உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து மிஸசாகா கிழக்கு குக்ஸ்வெல் பாராளுமன்றப் பிரதிநிதி திரு. லிஸோன் அவர்களின் உரை இடம் பெற்றது. தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றிய சிலருக்கும், கனடா தினப் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து அபிராம் சந்திரமோகன், சிவாணி சிவசெல்வச்சந்திரன், துஜன் கிஷ்ணகுமார் ஆகியோர் பங்குபற்றிய கனடா பற்றிய தகவல்களை எடுத்துச் சொல்லும் நகைச்சுவை உரையாடல் இடம் பெற்றது.
சொப்பகா மாணவிகளின் நடனத்தைத் தொடர்ந்து அழகன் சின்னத்தம்பியின் பாடல் இடம் பெற்றது.; சந்திரமோகனின் கனடாவைப் பற்றிய கவிதையைத் தொடர்ந்து, கனடா பிறந்த தின உரையைச் சொப்கா மாணவர்களான பிரியங்கா ஜெயரட்ணம் ஆங்கிலத்திலும், அருண் பற்குணசிங்கம் பிரெஞ்சு மொழியிலும் நிகழ்த்தினர். அடுத்து சொப்கா மாணவர்களின் நகைச்சுவை நடனம் இடம் பெற்றது.
பிரதம விருந்தினர் திரு. பொ. கனகசபாபதி அவர்களின் உரையைத் தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சொப்கா இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம் பெற்றன. அபிநயா ரங்கநாதனும், சூரியா ரட்ணமும் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்கள். இறுதியாக சங்கச் செயலாளர் செல்வி. ராகுலா சிவயோகநாதனின் நன்றியுரை இடம் பெற்றதைத் தொடர்ந்து வருகை தந்தோர்க்கு இரவு உணவு வழங்கப்பட்டு, சொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் இனிதே முடிவுற்றது.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.