‘முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தமிழக அறிவுலகிலும் சமூக மட்டத்திலும் ஆறாத காயங்களை ஏற்படுத்தி ஈழத்தமிழர்கள் பற்றிய சமூகப் பார்வையை முற்றாக மாற்றிப் போட்டிருக்கிறது. ராஜீவ்காந்தியின் மரணத்துக்குப்பின் பத்து ஆண்டு காலமாக ஈழத்து நிகழ்ச்சிகள் பற்றி எந்த எதிர்வினையும் காட்டியிராத தமிழகச் சூழலில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை அணுகும் பெரும்பாலானோரின் நோக்கங்கள் தமது நலன்கள் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன். இதற்காக ஆத்மார்த்தமாக அக்கறை கொண்டுள்ளவர்களை கொச்சைப் படுத்துவதாகக் கருதவேண்டியதில்லை. தமிழகத்தின் ஊடகங்களும் அரசியல் பிரமுகர்களும் ஈழப் பிரச்சினையை சுரண்டல் நோக்கத்துடனேயே பார்க்கிறார்கள் என்பதில் பெருமளவு உண்மை உண்டு என்பதில் சந்தேகமில்லை’ என ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ லண்டனில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ‘காலச்சுவடு’ என்ற தமிழக சஞ்சிகையின் பதிப்பாளர் சு.கண்ணன் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் லாபமில்லை
தமிழகத்தில் அமைந்திருக்கும் இலங்கை அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பற்றி எந்த அரசியல் பிரமுகர்களோ அமைப்புகளோ ஒரு போதும் அக்கறை காட்டியது கிடையாது. 2005 ம் ஆண்டு ரவிக்குமார் அவர்கள் இந்த அகதி முகாம்களைப் பார்வையிட்டு தமிழக சட்டமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை காலச்சுவடு முழுமையாக வெளியிட்டிருக்கிறது. இந்த அகதிகளைப் பற்றிப் பேசுவதில் தங்களின் அரசியலுக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்தான் இவர்களைப் பற்றி யாருமே அக்கறை கொண்டதில்லை. எந்த இழப்புக்களையும் சந்திக்காது உயர்- நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுஇ குடும்பங்களையும் சீராகப் பார்த்துக்கொண்டு மாலை வேளையில்; இசையையோ, இலக்கியத்தையோ, கலையையோ ரசிப்பதைப் போலத்தான் சிலருக்குப் புரட்சியைப் பற்றி பேசுவதும் சாத்தியமாகி இருக்கிறது. ஆழமான பரிசீலனையும் தீவிரமான உரையாடலுமே ஈழத்தமிழர் பற்றிய பிரச்சினைக்கு மிக முக்கியமானவையாக எனக்குப் படுகிறது. அடிப்படையான ஜனநாயகப் பண்புகளிலிருந்து இவை பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் காலச்சுவடு எஸ்.கண்ணன் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
‘பிரிட்டனின் தீவிர வலதுசாரிப் பத்திரிகையான Daily Telegraph போன்ற பத்திரிகைகள் நவ பாசிஷ கட்சிகளான பிரிட்டிஷ் தேசியக் கட்சி சார்பான கட்டுரைகளையோ, அறிக்கைகளையோ எழுத்துச் சுதந்திரத்தின்பேரில் அதனை அவர்கள் ஒருபோதும் அனுமதித்துப் பிரசுரிப்பதில்லை. இது மிக முக்கியமான அறம் சார்ந்த நிலைப்பாடாகும். இத்தகைய ஒரு பத்திரிகை தர்மத்தை காலச்சுவடு பின்பற்றவேண்டும்’ என நிர்மலா ராஜசிங்கம் தனது உரையின்போது குறிப்பிட்டார்.
திறந்த களம்
‘எதுவரை’ இதழின் ஆசிரியர் பௌசர் தனது தலைமை உரையின்போது இந்த தொடர்ந்த உரையாடல்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கும் ஒரு திறந்த களமாகும் என்பதனைக் குறிப்பிட்டார். எந்தக் குறுகிய அரசியல் நோக்கமோ ஒரு குறிப்பிட்ட சராசரி அரசியல் ஈடுபாடோ இன்றி சுயேட்சையாக உரையாடி கருத்தினைத் தெளிவுபடுத்திக்கொள்வதே இந்தக் கருத்தரங்குகளின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் இலங்கையில் தொடரும் இந்திய சீன மற்றும் மேற்கு நாடுகளின் தலையீடும், நலங்களும் பற்றிய கருத்தமவர்வில் கலந்துகொண்டு உரையாடிய அரசியல் ஆய்வாளர் சூ. பற்றிமாகரன் இந்திய உபகண்ட நிலப்பரப்பில் பல்வேறு நாடுகள் காணப்பட்ட போதும் இந்த புவியில் பிராந்தியத்தில் வாழும் மக்களிடையே இயல்பான, ஒன்றியைந்த கலாச்சாரப் புவியியல் உறவுகள் மிக நீண்ட காலமாகவே பேணப்பட்டு வந்திருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய மேலாண்மையை மீறி இலங்கை தொடர்பாக வேறு எந்த நாடுமே எந்த செயல்திட்டத்தையும் செயற்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார். இலங்கையில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாத வகையில் எத்தகைய பொருளாதார வளர்ச்சியையும் முன்னெடுப்பது சாத்தியமில்லை. இனங்களுக்கிடையே பாரிய முரண்பாடும், மக்கள் மத்தியிலே நீடித்த சந்தேகமும் நிலவி வரும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். ‘இன்று இலங்கையில் காணப்படும் நவதாராளவாதக் கொள்கையானது சமூகத்தின் ஒரு சாராரின் நலனுக்கே உகந்ததாக அமைந்துள்ளது. அரச வாய்ப்புகள் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கே கொண்டு சேர்வதும், வர்த்தக குழுவினரும் அரசியல்வாதிகளும் பரஸ்பரம் இணைந்து செயற்படுவதும் இந்தப் போக்கினை உறுதிப்படுத்தி உள்ளது. மலேசிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களும் மலேசிய சமூகங்களுக்கிடையேயான முரண்பாடுகளை தீர்த்தாக வேண்டிய அவசியமும் இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்’ என்று மார்க்சிய ஆய்வாளர் வி.சிவலிங்கம் தனது கருத்துரையில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் தீவிரம்
இலங்கையின் மனித உரிமை விவகாரத்தில் ஒரு காலத்திலுமே எந்தவித அக்கறையும் காட்டாதிருந்த அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகள் இலங்கை விவகாரத்தில் தீவிரம் காட்டுவதும்இ ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதும் அவர்களின் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவும் சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், போன்ற நம்பகமற்ற நாடுகளை சூழவைத்துக்கொண்டுள்ள நிலையில், ஓரளவு நம்பகத்தன்மைகொண்ட ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஜெனிவா மகாநாட்டில் வாக்களித்தமை இலங்கை இந்திய உறவுகளில் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகுமென்று ‘தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. ராசநாயகம் தனது கருத்துரையில் தெரிவித்தார்.
அரசியல் நாடகம்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்ட வரலாறு மோதல்களையும், முரண்பாடுகளையும் கொண்டதாகும்; படையெடுப்புக்களையும் குரோதங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த நாடுகளுக்கிடையிலான உறவு ஒருங்கிணைந்த உறவு என்று நோக்குவது தவறானதாகும். ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின்போது இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களின் விபரத்தை வெளியிடுமாறு ஐ.நா.சபையின் பிரதிநிதியாக இருந்த கோர்டன் வைஸ் எவ்வளவோ வலியுறுத்திய போதிலும் அதனை வெளியிடாது இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்க முயன்ற ஐ.நாடுகள் சபையானது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது ஒரு அரசியல் நாடகமாகும் என்ற கருத்துக்களையும் நிர்மலா ராஜசிங்கம் குறிப்பிட்டார்.
தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் மாதா மாதம் ஒழுங்கு செய்யும் இக்கருத்தரங்குத் தொடரில் நிறைந்த அரசியல், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பு அம்சமாகும்.
படப்பிடிப்பு: கே.கே.ராஜா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.