சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர். நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார். தபின் உரை நிகழ்த்தும்போது சயந்தனுடன் ஒரு நாடகத்தில் நடித்த அனுபவத்துடன் நாவல் பற்றிய உரையினை நிகழ்த்தினார். நாவலில் வரும் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை வாசிக்கும்போது யுத்தத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட வடுக்களே ஞாபகங்களாக வருகின்றன எனக்குறிப்பிட்டார்.
சசீவன் தனது உரையில் நாவலின் கதைப்போக்கு, அமைப்புக்கு வெளியே இருந்து வருகின்ற தனிமனித சாட்சியம் ஆகியன இதுவரை வெளிவந்த அரசியல் நாவல்களில் கவனத்திற்குரியதாக ஆறாவடுவை வெளிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
துவாரகன் மற்றும் ரமேஸ் ஆகியோர் நாவல் தங்கள் வாசிப்புக்கு இன்னமும் கிட்டாத நிலையில் ஆறாவடு பற்றி இணையத்தளங்களில் வெளிவந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு ஏற்கனவே வெளிவந்த அருளரின் லங்கராணி, செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை', விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி', 'கசகரணம்' ஆகியவற்றுடன் இந்நாவலுக்கு இருக்கக்கூடிய வித்தியாசத்தை உரைநிகழ்த்தியோருடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் சத்தியபாலன், யோ.கர்ணன், சித்தாந்தன், தானாவிஷ்ணு, யாத்திரீகன், அஜந்தகுமார், றஜீபன், செல்மர் எமில்,செல்வமனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.