இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழகத்தின் நாகர்கோயிலில் விருட்சமாக வளர்ந்து நின்ற ஒரு புளியமரத்தைச்சுற்றி நிகழும் கதையை இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் சுந்தரராமசாமி. இக்கதை விஜயபாஸ்கரன் சிறிது காலம் நடத்திய சரஸ்வதி இதழில் தொடராக சில அத்தியாயங்கள் வௌிவந்தது. சிற்றிதழ்களுக்கு வழக்கமாக நேர்ந்துவிடும் இழப்பிலிருந்து அந்த சரஸ்வதியும் தப்பவில்லை. அதனால், சுந்தரராமசாமி அதனை முழுநாவலாகவே எழுதி முடித்து 1966 இல் வெளியிட்டார். அதன் முதல் பிரதி வெளியானபோது கல்கி இதழில் சிறந்த நாவல்களின் வரிசையில் ஒரு புளியமரத்தின் கதை பற்றிய சிறிய அறிமுகத்தை படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். உடனே அதனை கொழும்பில் வாங்கி வாசித்தேன். அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், காட்சிகள் மனதில் மங்கிப்போன சித்திரமாகவே வாழ்ந்தன. அதில் வரும் ஆசாரிப்பள்ளம் சாலையை ஏனோ மறக்கமுடியவில்லை.
அதன்பின்னர் சுந்தரராமசாமியின் கதைகள், நாவல்கள், கட்டுரைகளையும் நேர்காணல்களையும் படித்திருந்தாலும், அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை கனவாகவே மனதில் நீண்டிருந்தது. மெல்பன் வாசகர் வட்டத்தை கடந்த இரண்டு வருடகாலமாக ஒருங்கிணைத்துவரும் தீவிர இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவகுமார், தொலைபேசியில் அழைத்து, “இந்த மாதம் சு.ரா.வின் புளியமரத்தின் கதை பற்றி பேசப்போகின்றோம் “ எனச்சொன்னதும் வியப்படைந்தேன்.
அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல், பல பதிப்புகளையும் கண்டது. அத்துடன் இந்திய மொழிகளிலும் ஒரு சில பிறநாட்டு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதுடன், நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கத்தக்க நாவல் என்று சிலாகித்தும் பேசப்பட்டது. மெல்பன் வாசகர் வட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக்கொண்டாடுமுகமாக கடந்த ஞாயிறன்று வாசகர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இலக்கியப்பிரதிகளை அயராமல் தொடர்ந்து வாசித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்துவரும் தீவிர வாசகர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்திருந்தனர்.
மிலேனியம் வருடத்திற்கு முன்பின்னாக பிறக்கும் ஒருவர் வாசகராகும் பட்சத்தில், அது என்ன ஒரு புளியமரத்தின் கதை..? அந்தமரத்தில் என்ன இருக்கும்? அது எப்படி வளரும் ? அதன் பயன்பாடு என்ன ? தாவரவியல் பாடத்திற்கான எளிய விளக்கங்களுடன் அமைந்த நூலா..? எனவும் கேட்கவும் கூடும்!
சுந்தரராமசாமி தீர்க்கதரிசனத்துடன் அன்று எழுதிய புனைவிலக்கியம், இன்று காலம் கடந்தும் பேசுகிறது. அதற்குக்காரணம் அதில் வரும் சம்பவங்கள், மாந்தர்கள், காட்சிகள் இன்றைய காலகட்டத்திலும் வருகின்றன. குமரி மாவட்ட மக்களின் பேச்சுத்தமிழை ஏனைய பிரதேச மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பின் இணைப்பாக சில சொற்களுக்கு விளக்கமும் தந்துள்ளார் ஆசிரியர்.
சுதந்திரத்திற்கு முற்பட்ட கதையை இந்நாவலில் வரும் தாமோதர ஆசான் சொல்கிறார். திருவிதாங்கூர் மகாராஜாவும் வருகிறார். தாமு, காதர், இசக்கி, ஐயப்பன், கடலைத்தாத்தா முதலான நினைவில் நிற்கும் மாந்தர்கள். அவர்களின் இயல்புகள் இன்றைய மாந்தருக்கும் பொருந்துகிறது.
புளியமரம் பூசிக்கப்படுகிறது. அத்துடன அதனை வேரோடு அழிக்கவும் சதி நடக்கிறது. அதனை பட்டுப்போகச்செய்ய நச்சுத்திரவம் ஊற்றப்படுகிறது.
இக்காலத்திலும் இது நடக்கிறது. இலங்கையில் வடபுலத்தில் கிளிநொச்சியில் மக்கள் நடமாடும் ஒரிடத்தில் நிழல்தந்த நீண்ட கால விருட்சத்தின்வேர்களில் நச்சுத்திரவம் ஊற்றப்பட்டதாக சமீபத்தில்தான் ஒரு செய்தி வெளியானது. ஒரு புளியமரத்தின் கதையிலும் தேர்தல் வருகிறது. மக்களின் வாக்குகளை பிரிக்கவும் சதி நடக்கிறது. இன்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் இதுதானே நடக்கிறது!
அன்றைய வாசகர் வட்டத்தின் சந்திப்பில் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ஒவ்வொருவரும் மிக நெருக்கமான உறவையும் உணர்வை இந்த நாவல் தமக்குத் தந்திருப்பதாக ஒருமித்துச் சொன்னார்கள். மெல்பன் வாசகர் வட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கிவைத்த எழுத்தாளரும் தொல்பொருள் ஆய்வாளரும் சூழல் சுற்று பாதுகாப்பு தன்னார்வத் தொண்டருமான திரு. முத்துக்கிருஷ்ணனும் தமிழகத்திலிருந்து ஸ்கைப்பில் தொடர்புகொண்டு நேரடியாகப்பேசி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். அவரை வாசகர்கள் எம். கே. என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசகியான திருமதி பிரேமா அவர்கள் தனது வாசிப்பு அவதானத்தையும் பகிர்ந்துகொண்டதுடன் வாசகர் வட்டத்தின் ஈராண்டு நிறைவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த கேக்கையும் வெட்டிப்பகிர்ந்தார். இத்தகைய இனிய மாலைப்பொழுதில் ஒரு புளியமரத்தின் கதையை கலா பாலசண்முகன், விஜிராம், சாந்தி சிவக்குமார் , தினகரன், அசோக், கருப்பையா ராஜா, சுதன், சுப்ரா , வரதராஜன் ஆகியோர் மதிப்பீடு செய்தனர். மேலும் சிலர் இவர்களின் உரைகளை கூர்ந்து அவதானித்தனர்.
சாந்தி சிவக்குமார், நாவலிலிருந்து சில பாத்திரங்கள் பேசும் வசனங்களையும், சுந்தரராமசாமியின் அங்கதம் கலந்த உரைநடையையும் சிலாகித்துப்பேசினார்.
காலவெள்ளத்தில் அள்ளுண்டுபோகாத இலக்கியப்படைப்பாக கொண்டாடப்படும் ஒரு புளியமரத்தின் கதையை மீள்வாசிப்புக்குட்படுத்திய மெல்பன் வாசகர் வட்டத்திற்கு எமது பாராட்டும் வாழ்த்துக்களும். எனினும் தமிழகத்திலிருந்து ஸ்கைப்பின் ஊடாக தொடர்புகொண்டு வாழ்த்திய முத்துக்கிருஷ்ணன் தனது ஆதங்கத்தையும் சொல்லத்தவறவில்லை. வாசகர் வட்டத்தில் நூல்கள் பற்றிய தமது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்பவர்கள், காற்றோடு பேசிவிட்டுப்போய்விடுகிறார்கள். தங்கள் நயப்புரையை எழுதி ஊடகங்களில் வெளியிடத்தவறிவிடுகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 24 நூல்களாவது பேசப்பட்டிருப்பது நல்ல முன்னேற்றம். எனினும் வாசகர்கள் தமது அனுபவத்தை எழுத்தில் சமர்ப்பிப்பதன் மூலம்தான் மற்றவர்களிடத்திலும் நூல்கள் பற்றிய அறிமுகத்தை நகர்த்த முடியும் என்று முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈராண்டை நிறைவுசெய்துள்ள மெல்பன் வாசர் வட்டம் தொடர்ந்தும் ஆரோக்கியமாக பயணிக்கவேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.