- 24-06-2019 அன்று மகாஜனக்கல்லூரியில் எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்திய மகாஜனக்கல்லூரி நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன் -
வணக்கம். எனது உரையை ஆரம்பிக்கு முன், கனடாவில் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து எம்மை வழி நடத்தியவர்களும், மகாஜனன்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்து எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுமான முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்த அனைவருக்கும் அகவணக்கம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.
‘கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன்
துரையப் பாபுகழ் துதிப்போம்’
இந்த வரிகள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட, காலத்தால் அழிக்க முடியாத மகாஜனன்களின் இதயத்தில் பதிந்து விட்டதொன்றாகும். இன்று ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் திக்கெல்லாம் மகாஜனாவின் புகழ்பரப்ப அன்று அடிக்கல் நாட்டியவர்தான் எங்கள் கல்விக் கலைஞன் பாவலர் துரையப்பாப்பிள்ளையாவார்.
இந்தப் பாடல் வரிகளைக் கல்லூரிக் கீதத்தில் எமக்காக விட்டுச் சென்றவர், எமக்குத் தமிழ் அறிவைத் தந்து தமிழ் உணர்வைப் புகட்டிய எமது ஆசான், அமரர் வித்துவான் நா. சிவபாதசுந்தரனராவார். கல்லூரியில் படித்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் கனடாவில் பழைய மாணவர் சங்க நிர்வாகசபை கூட்டங்களிலும் சரி, ஏனைய நிகழ்ச்சிகளின் போதும் சரி நிகழ்ச்சி தொடங்கும் போது, கல்லூரிக் கீதத்தை நாங்கள் இசைப்போம். அனேகமான நாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் எமது கல்லூரிக் கீதத்தின் மூலம் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை எப்பொழுதும் மீட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எமது நினைவுகள் எல்லாம் நாம் கல்விகற்ற கல்லூரியைச் சுற்றியே இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதுண்டு. ‘பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் கல்லூரியை இங்கே இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று இன்றைய தலைமுறையினர் எங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குப் புரியுமோ இல்லையோ, ‘எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையை எங்களால் மறக்க முடியுமா?’ என்ற பதில்தான் அவர்களுக்காக எம்மிடம் இருக்கும்.
சமூக மேன்மைக்கான கலை, இலக்கியங்களின் பெறுமதியை மகாஜனன்களுக்கு உணர்த்திய கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எங்கள் கலை, இலக்கியப் பயணம் புலம் பெயர்ந்த மண்ணிலும் இன்று ஆரோக்கியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கே கலை இலக்கிய விழாக்கள் நடந்தாலும் அங்கே கட்டாயம் குறைந்தது ஒரு மகாஜனனின் பங்களிப்பாவது இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் கல்லூரிக்கு அந்த நிகழ்வுகள் எப்பொழுதும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.
புலம்பெயர்ந்த மண்ணில் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாப்பிள்ளையின் நிழலில் வளர்ந்த மகாஜனன்களின் கலை, இலக்கியப் பங்களிப்பு பற்றிச் சிறிது குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். நான் சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் போன்ற இலக்கியச் செயற்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால் அத்துறை பற்றிச் சிறிது குறிப்பிடுகின்றேன். தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. செய்யுள் இலக்கியத்தைப் புரிந்து கொள்வது கடினமானது என்ற எண்ணம் ஒரு சிலருக்கு ஏற்பட்டதால், வசன நடையில் எழுதப்பட்ட சிறுகதை, புதினம் போன்றவற்றின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பியது. இதன் காரணமாக இன்று தமிழ் சிறுகதைகளும், புதினங்களும் தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் ஊடகங்களும் மிகவும் பேருதவியாக இருந்தன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன. இப்படியான அறிமுகத்தால் புதிய தளங்கள் கிடைத்ததால், பல சிறுகதை ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பெருகத் தொடங்கின. இந்த வகையில் புலம் பெயர்ந்த மகாஜனன்களால் சில விடயங்களைத் துணிச்சலோடு எழுதக்கூடிய துணிவும் அவர்களிடம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில், தமிழ் கலை, இலக்கியவளர்ச்சிக்கு ஆரோக்கியமான செழுமையைத்தந்த பாடசாலைகளின் வரிசையில் மகாஜனாவும் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று புலம் பெயர்ந்த மண்ணிலும் மகாஜனாவின் பெயர் கல்வியில், விளையாட்டுத் துறையில், கலை, இலக்கியத் துறையில் நிலை நாட்டப்பட்டிருக்கின்றது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர், இதற்கு அத்திவாரமிட்டவர் வேறுயாருமல்ல, எங்கள் ஸ்தாபகர் தலைமை ஆசிரியராக இருந்த தெ.அ. துரையப்பாப்பிள்ளை ஆவார். 1972 ஆம் ஆண்டு ஜூலைமாதம் வெளியான மல்லிகை இதழின் அட்டைப்படத்தை அலங்கரித்த படம் மகாஜனாக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடையது என்றும், அவரது இலக்கிய ஆளுமையை மதித்து அவரைக் கௌரவித்திருந்தார்கள் என்றும் முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஒருமுறை பழைய மாணவர் சங்க நிகழ்வில் எமது புதிய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற பல விடயங்கள் பகிரப்படாவிட்டால் வெளியே தெரியாமலே போய்விடலாம்.
1910 ஆம் ஆண்டு பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தெல்லிப்பழையில் இருந்த அமெரிக்கன் மிஷன் கல்லூரியை விட்டு விலகி திண்ணைப் பள்ளிக் கூடம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இந்துக்களே அதிகமாக இருந்ததால் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி மகாஜனக் கல்லூரி உதயமானது. சரஸ்வதி வித்தியசாலை என்ற பாலர் பாடசாலை ஒன்று அருகே இருந்ததால், பின்நாளின் இந்த இரண்டும் இணைந்து இன்றைய மகாஜனாவானது. இப்படியாகப் பாவலர் துரையப்பாப்பிள்ளை அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாஜனக் கல்லூரி அவரைத் தொடர்ந்து அமரர் காசிப்பிள்ளை சின்னப்பா, அதன்பின் பாவலரின் மகன் அமரர் தெ.து. ஜெயரத்தினம் ஆகியோரின் வழிநடத்தலில் இன்று பல திசைகளிலும் புகழ் பரப்பி நிற்பதற்கு, யுத்தத்தின் பேரழிவில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பிய பெருமை எமது மகாஜனக் கல்லூரி அதிபர்கள், உபஅதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களுக்களுக்கும் உரியதாகும்.
‘மகாஜனன்’ நூற்றாண்டு மலரைக் கனடாவில் தொகுத்த போது, அதில் முக்கிய பங்கு வகித்ததால், மகாஜனக் கல்லூரியின் வரலாற்றை ஓரளவு என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. எமது ஸ்தாபகரின் ஆளுமையைப் பற்றி அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டதால் வியப்பாக இருந்தது. தெல்லிப்பழை மக்களின் நலன் கருதி அவர் மிகவும் துணிச்சலோடு மிஷனறியினரின் ஆதிக்கத்தில் இருந்து இந்துக்களை மீட்டெடுத்தார் என்றே குறிப்பிட வேண்டும். ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவந்த மகாஜனன் நூற்றாண்டு மலர் தொகுப்பு 395 பக்கங்களைக் கொண்டிருந்தது. அதில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பல மகாஜனன்களின் ஆக்கங்களும், புகைப்படங்களும் பிரசுரமாகியிருக்கின்றன. இந்த நூற்றாண்டு மலரில் ‘மகாஜனாவும் ஒளிப்படத் துறையும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். போர்ச் சூழலால் முழுமையான விபரங்களைச் சேகரிக்க முடியாவிட்டாலும், அப்போது கிடைத்த விபரங்களைத் தொகுத்திருந்தேன். கலைத்துறையில் நன்கு அறியப்பட்ட விஜயசிங்கம், கதிர் துரைசிங்கம், ஜெயசிங்கம், உ.சேரன், குரு அரவிந்தன், மாவை நித்தியானந்தன், அ. கேதீஸ்வரன், மு.க. சிவகுமாரன், எஸ் சுரேஸ்ராஜா, க. நவம், மா. தியாகேஸ்வரன், நிர்மலன் நடராஜா, குகன் காசியஸ், பாடகி சுமங்கலி அரியநாயகம், விஜே ஆனந், சி. தெய்வேந்திரன் போன்றோரின் பெயர்கள் அப்போது ஒளிப்படத்துறையில் அறியப்பட்டனவாக இருந்தன.
பாவலர் துரையப்பாப்பிள்ளையைத் தொடர்ந்து கலை, இலக்கியத்துறையில் பலர் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். பின்வருவோரில் கனடாவில் உள்ள சில மகாஜனன்களும் அடங்குவர். திரு. க. சின்னப்பா, நா. சிவபாதசுந்தரன், செ. கதிரேசர்பிள்ளை, அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், மகாகவி உருத்திரமூர்த்தி, தமிழ்ஒளி சண்முகசுந்தரம், மயிலங்கூடலூர் பி. நடராசன், சிவநேசச்செல்வன், சோமகாந்தன், பொ. கனகசபாபதி, பார்வதிநாதசிவம், சண்முகலிங்கன், குகசர்மா, குரும்பசிட்டி சிவகுமாரன், குரு அரவிந்தன், மாவைநித்தியானந்தன், கோகிலா மகேந்திரன், சேரன், ஆதவன், விஜயேந்திரன், சபேசன், ஊர்வசி, ஒளவை, த. கனகரத்தினம், க. சண்முகலிங்கம், ஸ்ரீரஞ்சனி, எஸ். சாந்தபவானி, என். சாந்திநாதன், கேதீஸ்வரன், விஜயசிங்கம், கதிர் துரைசிங்கம், எஸ். சிவதாசன், பாவை ஜெயபாலன், எஸ். ஜெகதீசன், எஸ் முருகையா, கே. கந்தசாமி, எஸ். சரவணபவன், எஸ். உதயகுமார், எஸ் ஹம்ஸத்வனி, எஸ். செல்வரத்தினம், எம். சத்தியமூர்த்தி, மாவை நித்தியானந்தன், ஏ.ரவி, நிரு நடராஜா, பாரதி சேந்தனார், எஸ். தெய்வேந்திரன், சுரேஸ்ராஜா, குகன் இராமநாதன், ஜி. ஸ்ரீகுமார், ஏ. புராந்தகன், எம்.பி. மகாலிங்கசிவம், எம். மதிமாறன், ஜி. பாலசுப்ரமணியம், விஜே ஆனந், ரி. விஜேந்திரன், எஸ். செந்தில்செல்வி, வி. வர்ணராமேஸ்வரன், வை. மாலதி, பி. பாலமுரளி, ஏ. யசோதா, எஸ்.ரி. செந்தில்நாதன், அரியநாயகம் சுமங்கலி போன்றோரின் பெயர்கள் மகாஜனன் நூற்றாண்டு மலரில் கலை, இலக்கியத் துறையில் நன்கு அறியப்பட்டவர்களாகப் புகைப்படங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த நூற்றாண்டு மலரில் 167 ஆம் பக்கத்தில் அ.ந.கந்தசாமி, மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ.முருகானந்தம், எம். பார்வதிநாதசிவம், பி. நடராஜன், ஆ. சிவநேசச்செல்வன், கே. சண்முகலிங்கன், திருமதி. கோகிலா மகேந்திரன், குரு அரவிந்தன் ஆகிய ஒன்பது பேரின் பெயர்களும் புகைப்படங்களுடன் பிரசுரமாகியிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தபோது நடந்த பாராட்டு விழாவில் இந்த ஒன்பது எழுத்தாளர்களின் பெயர்களையும் சொல்லி ‘மகாஜனாவின் நவரத்தினங்கள்’ என்று அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்டது எங்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. இதைவிட மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்த, அதிபர்களான திரு. கிருஸ்ணபிள்ளை, திரு. பொ. சோமசுந்தரம், திரு து. ஜெயரத்தினம், திரு. பொ. கனகசபாபதி, திரு. எம். மகாதேவன், திரு. த. சண்முகசுந்தரம் ஆகிய ஆறு அதிபர்களிடமும் நான் கல்வி கற்றிருக்கின்றேன் என்பதில் பெருமைப் படுகின்றேன்.
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், தற்போது காப்பாளராகவும் இருப்பதால் பாவலரின் வழியில் சென்ற எனக்குச் சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. சிறுவர் பாடல்களைத் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் ஒலி, ஒளித் தட்டுக்களாக வெளியிட்டேன். தாய் மொழியாம் தமிழ் மொழி, குவா குவா வாத்து நீ எங்கு போனாய் நேற்று, எங்கவீட்டுத் தோட்டத்து சின்னச் சின்னச் செடிகளில் காலை நேரம் மலர்ந்திடும் வண்ண வண்ணப் பூக்களாம், ஞாயிறு திங்கள் செவ்வாய்.., தை பிறந்தால் வழிபிறக்கும் பொங்கலோ பொங்கல் போன்ற இலகுவான பாடல்கள் மாணவர்களுக்குப் பிடித்தமானவை. புலம் பெயர்ந்த மண்ணில் பிறந்த மாணவர்களுக்கு ஏற்றதாகவும் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இதைவிட தமிழ் மொழியை வாசிக்க முடியாத இளம் தலைமுறையினருக்காக இசையும் கதையும் என்ற ஒலி நாடாக்களையும் உருவாக்கி இருக்கின்றேன்.
பாவலர் துரையப்பாப்பிள்ளையில் ஆரம்பித்து திரு. க. சின்னப்பா, து. ஜெயரத்தினம், எம். மகாதேவன், பி. குமாரசாமி, எஸ் சிவசுப்பிரமணியம், ஏ. இராமசாமி, பொ. கனகசபாபதி, கே. எஸ். இரத்தினேஸ்வர ஐயர், பொன் சோமசுந்தரம், த. சண்முகசுந்தரம், வி. கந்தையா, கே. நாகராஜா, பி. சுந்தரலிங்கம், திருமதி. எஸ். அனந்தசயனன் ஆகியோரைத் தொடர்ந்து இன்று திரு. எம். மணிசேகரன் அவர்கள் பொறுப்பெடுத்து மிகவும் திறமையாகக் கல்லூரியை கொண்டு நடத்துவது பாராட்டுக்குரியது. அதிபருடன் இணைந்து திறமபடச் செயலாற்றும் உபஅதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் உதவியாளர்கள் என்லோருக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்களையும், நன்றியையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். மகாஜனாவின் பெயரும், புகழும் தொடரும்வரை பாவலர் துரையப்பாப்பிள்ளையின் புகழும் தொடரும் என்று கூறி, நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி.
Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>