அக்டோபர் புரட்சி பற்றி அறியாத முற்போக்குக் கருத்துடையோர் இருக்க முடியாது. இது ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.1917ம் ஆண்டில் நடந்தது. இரண்டாவது அக்டோபரில் நிறைவுற்றது. முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சி இதுவாகும். 1922ல் சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது இதுவெனலாம். இந்த மகத்தான நிகழ்வின் நினைவாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின ஆதரவில் பேருரையும் நூல் வெளியீடும் நடைபெற்றன.மகத்தான அக்டோபர் புரட்சி நினைவாக பேருரை செல்வி திருச்சந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வுக்கு திரு.பி.பி.தேவராஜ் தலைமை தாங்கினார் "பூகம் போல யுகப்புரட்சியாக அக்டோபர் புரட்சி எழுந்தது. புதிய எண்ணங்கள், புதிய சிந்தனைகள் என உலக சரித்திரத்தில் ஒரு புதிய திருப்புமுனையாக எழுந்தது. தொழிலாளர்கள், அறிவியலாளர்கள், பெண்கள் என அனைவரும் வீறு கொண்டு எழுந்தனர். அன்று எழுந்த சிந்தனைகள் மறந்தொழிந்து போகவில்லை. காலங் கடந்தவையாக மறந்தும் போகவில்லை. இன்றைய வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் ஊடுருவி நிற்கின்றன. பெண்களின் விடுதலைக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது" என்றார் திரு.பி.பி.தேவராஜ் தலைமை தனது தலைமையுரையில். இன்று வெளியிடப்பட உள்ள நூலான 'வடபுலத்தில் இடதுசாரி முன்னோடிகள்' பற்றியும் குறிப்பிட்டார். "உன்னத மனிதர்கள் பற்றிய நூல் இது. தமக்காக வாழாது சமூக முன்னேற்றத்திற்காக வாழ்ந்த மாமனிதர்கள் பற்றிய அருமையான நூல்" என்றார்.
நிகழ்வில் அடுத்ததாக செல்வி திருச்சந்திரன் தனது பேருரையை நிகழ்த்தினார். " அக்டோபர் புரட்சி- பெண்களின் பங்களிப்பு - பெண்கள் மீது புரட்சியின் தாக்கம்' என்ற தலைப்பில் அது நிகழ்ந்தது. 'அக்டோபர் புரட்சி பல பரிமாணங்களை உடையது' என ரொட்ச்கி கூறியுள்ளதுடன் ஆரம்பித்தார். ஆனால் அதன் அடித்தளமான முடியாட்சி வெற்றி கொள்ளப்பட்டது பெப்ருவரி புரட்சியில் ஆகும். இதில் பல பெண்களும் பங்கு பற்றினார்கள். வாக்குரிமை, அரசு உத்தியோகம் எனப் பல பெண்களுக்குக் கிட்டின. போல்ஸ்விக் கட்சி பெண்களுக்கான தனி அலகை ஆரம்பித்தது. வீட்டில் முடக்கபட்டிருந்த பெண்கள் வீறு கொண்டு எழுந்தனர். நாமம் கெட்டிருந்த பெண்கள் உயிர்த்தெழுந்து புரட்சிப் பாதையில் நடந்தனர். கொடிக்குப் பின்னால் தலையில் சிவப்புத் துணி கட்டி, மேற்சட்டையுடன் நலிந்த பாவாடைகளுடன் பெண்கள் வந்ததானது மத்திய வர்க்கத்திலிருந்து தொழிலாளர் சார்ந்ததாக மாறியதற்குச் சான்றாக இருந்தது."
புரட்சியில் பங்கு பற்றிய பல பெண்களைப் பற்றியும் அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் விரிவாகப் பேசினார். ஆனால் அதற்கு முன்னர் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. கடும்கோட்பாளர்களின் இறுங்குப் பிடியில் பெண்கள் சுதந்திரம் அடங்கிக் கிடந்தது. பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. அவர்கள் விரும்பியபடி திருமணம் செய்ய முடியாது. ஆண்களுக்குக் கீழ்படிந்து அடிமைகள் போல வாழ நேர்ந்தது.
திருச்சபையும் அதற்கு ஆதரவாக இருந்தது. பெண்கள் வீட்டுக்கு உரியவர்கள் விட்டுக் குடுக்க வேண்டியவர்கள் என அவர்கள் போதித்தார்கள். ஆனால் புரட்சிக்குப் பின்னர் 1918ல் Code of marriage சட்டம் இயற்றப்பட்டது. அதில் கணவனுக்கும் மனைவிக்கும் சமஉரிமை கொடுக்கப்பட்டது. அதில் சமயச் கிரியைகள் இல்லாத திருமணங்கள் வரவேற்கப்பட்டன. அரசில் அறிவு, தொழில் அறிவு போன்ற யாவும் பெண்களுக்கும் புகட்டப்படன. கருக்கலைப்பு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் அமைக்ப்பட்டன. பெண்களின் வேலைப்பளு குறைக்கப்பட்டது."
பெருமளவு விடயங்களை சுருக்கமாக நடையில் அழகான தமிழில் சொல்லிய உரையாக இருந்தது. இப் பேருரையின் முழு வடிவத்தை முழமையாக பெற்று இங்கு பதிவேற்ற எண்ணியுள்ளேன்.
பேராசிரியர்.சி.தில்லைநாதன் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். வடபுலத்தில் இடதுசாரி முன்னோடிகள் பற்றிய இந் நூலில் உள்ள கட்டுரைகளை ஆக்கியோர் முற்போக்கு இயக்கத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களாவர். அதனால் பல சுவார்ஸமான விடயங்களை இந் நூல் உள்ளடக்கியுள்ளது. தம்மையும் தமது சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்திக்காது சமுதாய மாற்றம் பற்றி எண்ணியவர்கள் பற்றிய நூல் இது. ஆரோக்கியமான அரசியல் உணர்வு வடபுலத்தில் ஏற்படுவதற்கு காலாக இருந்தவர்கள் இவர்கள். பூரண சுதந்திரம், இருமொழி ஆட்சி, தாய்மொழிக் கல்வி போன்றவை இவர்களது இலட்சியமாக இருந்தது" என்றார்.
முதற்பிரதியை பெற்றவர் திரு.ரீ.ஆர் அரியநாயகம் அவர்களின் புதல்வனான டி.ஆர்.அரியநாயகம் ஆவார். தொடர்ந்த கலந்துரையாடலில் திரு.தயாபரன், தோழர் கார்த்திகேசனின் மகள் மற்றும் எம்.கே.முருகானந்தன், அந்தனி ஜீவா போன்ற பலரும் கருத்துக்களை முன் வைத்தனர். முற்போக்கு கலை இலக்கிய மன்றம் ஒழுங்கு செய்திருந்து இக் கூட்டம் நவம்பர் 6ம் திகதி 2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை 58, தர்மரா வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html