"இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது. எனினும்
சிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை என்பது தவிர யாதான கடல் போல் தான் தோன்றுகிறது.
தரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள் அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும்
அலைகள் குற்றுத்தாவரங்கள் அழிபட்ட மொட்டைக்கரை. இதுவல்ல எனது கடல்". - பிரம்மராஜன்.
இம்மாத ஆரம்பத்தில் 6 நாட்களாக (8th to 13th June 2018) இங்கு இலண்டனில் Whitechapel Gallery இல் கவிஞரும் புகைபடக் கலைஞருமான தோழர் சுகுணசபேசனின் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. “Transnational Proximities - நாடு கடந்ததும் அண்மையும்” என்ற கருத்தாடலில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கண்காட்சியில் சுவீடனை சேர்ந்த அனா லெயின் உம் தனது புகைப்படங்களையும் காட்சிப் படுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று பார்வையிடுவதற்கும், இரு கலைஞர்களுடன் சந்தித்து உரையாடுவதற்குமான ஒரு ஏற்பாட்டினை தோழர் எம். பௌசர் அவர்கள் மேற்கொண்டிருந்தார். அதன்படியே 09 ஜூன் 18, சனிகிழமை மாலை 4 மணியளவில் ஈஸ்ட்ஹாம் புகையிரத நிலைய வாசலில் சந்தித்து 12 பேரடங்கிய பேரணியாக ?? அந்நிகழ்வில் போய் கலந்து கொண்டோம்.
அழகானதும் அடக்கமானதுமான Gallery இல் அனைவரும் அமைதியாக புகைப்படங்களை ரசித்தனர். அனா லெயின் தனது புகைப்படங்களாக தமிழகத்தின் தலித்திய பெண்களின் காலடிகளை மட்டும் காட்சிப்படுத்தியிருந்தார். அழகற்றதும் அழுக்கு நிறைந்ததுமான வடுக்கள் நிறையப் பெற்ற காலடிகள் தலித்தியப் பெண்களின் ஆயிரமாண்டு கால அடக்குமுறைகளையும் சாதீயக் கொடுமைகளையும் புகைப்படங்களாக பேசி நின்றன.
சுகுணசபேசன் எமது வலி மிகுந்த சமூகத்தின் துயர் படிந்த கதைகளின் எச்சங்களை The last walk to the beach என்ற தலைப்பில் புகைப்படங்களாக பதிவு செய்திருந்தார். 2009 இல் ஒரு மானிட அவலமாக முற்றுப் பெற்ற எமது இனப்படுகொலையின் இன்னமும் மீளாத துயரங்களை, 2016 இல் அங்கு சென்ற அவர் அதனை படமாக்கியிருந்தார், அதனையே அவர் இங்கு காட்சிப்படுத்தியிருந்தார். ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. துயரங்களின் வடுக்கள் இன்னும் அகலவில்லை. இடுபாடுகளின் சிதைவுகள் இன்னமும் அகற்றப் பட வில்லை. மீள்கட்டுமானம் இன்னும் முறையே நடந்து முடிக்கப்படவில்லை. இவை பற்றியே இவரது படங்கள் எம்முடன் உரையாடி நின்றன. முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதையின் இன்றைய தோற்றமானது இங்குதான் அனைத்துமே நடந்தது என்பது போல் மௌனமாக காட்சியளித்தது. இவையனைத்துக்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அவர் எதேச்சையாக சந்தித்த ஒரு சிறுவனின் Negative தோற்றத்தில் அமைக்கப்பட்ட புகைப்படமானது ஒரு அசாதாரணமான அழகியலைக் கொண்டிருந்தது. ஒரு முகமறியாச் சிறுவனாக (A unknown Boy ) அந்தக் கடற்கரையில் அவர் சந்தித்துக் கொண்ட அந்தச் சிறுவனின் தோற்றமானது முடிவற்ற துயரங்களின் பதிவுறாத சாட்சியங்களில் ஒன்றாக எமக்குக் காட்சியளித்தது.
அற்புதமான புகைப்படங்கள் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பி நின்றன. எரியுண்டு போன எமது தேசத்தில் கொழுந்து விட்டெறிந்த தீச்சுவாலைகளின் உக்கிரமான தாண்டவங்களை இவர் படமாக்கவில்லை. அல்லது அத்தீயின் தகிக்கின்ற வெப்பத்தையோ அதன் எரிக்கின்ற உஷ்ணத்தையோ இவர் படங்கள் மூலம் எம்மால் உணர முடியவில்லை. ஆனால் அவரது பனித்திரை படிந்த குவியத்தின் மூலமாக அத்தீயிலிருந்த எழுந்த புகை மூட்டங்களை எமது விழித்திரையினால் பார்வையிட முடிந்தது. இதன் மூலம் சுகுணசபேசன் ஒரு புகைப்படக் கலைஞனாக வெற்றி பெறுகிறார்.
இரு கலைஞர்களுடனும் அனைவரும் மனம் விட்டு கலந்துரையாடினோம். படங்கள் எடுத்துக் கொண்டோம். அனா லெயின் எழுதிய “Practicing Art and Anthropology “ என்ற புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்தோம். ஆனால் அதன் விலை 55 பவுண்டுகள் என்றதும் அனைவருக்கும் கொஞ்சம் இலேசாகத் தலை சுற்றியது.
மொத்தத்தில் அனைவருக்கும் நிறைவளித்த ஒரு அற்புதமான மாலைப்பொழுதாக அது அமைந்திருந்தது. திரும்பும் வழியில் ஒவ்வொருவராக ஒவ்வொரு ரயில் நிலையத்தில் விடை பெற்றுக் கொண்டனர். என்னுடன் ஈஸ்ட்ஹாம் வரை மஜீதாவும் பத்மநாபஐயரும் வந்தனர். அவர்களும் அங்கிருந்து விடைபெற்று சென்ற பின் வீடு நோக்கி தனியே. சுகுணசபேசனின் புகைப்படங்கள் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பி நின்றன. முக்கியமாக அந்த முகமறியாச் சிறுவனின் தோற்றத்தை நோக்கியே எண்ணங்கள் சுழன்றன.
“ அவன் இப்போது எங்கிருப்பான்? என்ன செய்து கொண்டிருப்பான்? ஆகக் குறைந்தது உயிருடனாவது இருப்பானா? “
( உரையாடல் தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.