வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம் கடந்த வெள்ளியன்று 14 ஆம் திகதி அமெரிக்காவில் வேர்ஜினியா மாநில மருத்துவமனையில் காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவருக்கு வயது 83. 1966 ஆம் ஆண்டு முதல், ஆரம்பத்தில் வீரகேசரியின் இணை ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் 1983 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார். 1983 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அதன்பின்னர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு நீண்டகாலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்தார். அவருடைய அன்புத்துணைவியாரும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள். இலங்கையின் வடபுலத்தில் மாதகலில் பிறந்திருக்கும் சிவப்பிரகாசம் 1958 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார பட்டதாரியானவர். அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம் மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார். பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் , லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகியது.
கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கே சிவகுருநாதன் உட்பட மேலும் சிலருடன் ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரிய பொறுப்பை திறம்பட மேற்கொண்டிருந்தவர். சிவப்பிரகாசம். இதழியல் துறையில் பல்வேறு நுட்பங்களையும் இங்கேதான் முதலில் கற்றுக்கொண்டார். தினகரனில் பணியாற்றிய காலப்பகுதியில் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பல பயண இலக்கிய கட்டுரைகளையும் எழுதியவர்.
1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்து சில மாதங்களிலேயே மாலைத்தினசரியாக மித்திரன் பத்திரிகையை சிவப்பிரகாசம் அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான இதழ்களையும் அறிமுகப்படுத்தினார். தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக்கல்லூரிக்கும் சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.
வீரகேசரியில் க. சிவப்பிரகாசம் பிரதமஆசிரிய பொறுப்பிலிருந்தபோது இலங்கை அரசியலிலும் தமிழ்ச்சமூகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக 1971 ஜே. வி. பி. கிளர்ச்சி, 1972 இல் இலங்கை, ஸ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கத்தில் ஜனநாயக சோஷலிஸ குடியரசானது. பல்கலைக்கழக பிரவேசத்தில் தரப்படுத்தலினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தப்பின்னணிகளுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - தமிழ் இளைஞர் பேரவை தோற்றம், யாழ். மேயர் துரையப்பாவின் படுகொலை, தந்தை செல்வா எம்.பி. பதவி துறப்பு. காங்கேசன் துறைத்தொகுதி இடைத்தேர்தல், வட்டுக்கோட்டைத்தீர்மானம், ட்ரயல் அட் பார் வழக்கு, 1977 இல் ஜே. ஆர், ஜயவர்தனா தலைமையில் ஐ.தே.க. ஆமோக வெற்றியுடன் அரசு அமைத்தது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானது. அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத்தீர்மானம், முருங்கன் காட்டினுள் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட மூவரின் படுகொலைகள், புலித்தடைச்சட்டத்தின் உருவாக்கத்திற்கு தூண்டுகோலாக இருந்த வீரகேசரியில் மாத்திரம் வெளியான ஒரு பரபரப்பான புலிகளின் பிரசுரம், 1977, 1981 கலவரம், யாழ். நூலகம், ஈழநாடு எரிப்பு, எம்.பி. வெ. யோகேஸ்வரன் உயிர்தப்பிய சம்பவம், தமிழர் கூட்டணி எம்.பி.க்களின் வெளியேற்றம், 1983 இனச்சங்காரம் , இலங்கைத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்வு இப்படிப்பல.
இத்தகைய நெருக்கடியான தருணங்களில் தமிழ் மக்களின் குரலாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உலக அரங்கில் முன்வைக்கும் ஊடகமாகவும் விளங்கிய வீரகேரியின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர் .க. சிவப்பிரகாசம் பயண இலக்கியம் எழுதுவதிலும் ஆற்றல் மிக்கவர் அவரது சோவியத் பயணக்கதை நூல் ‘ சிரித்தன செம்மலர்கள்’ 1975 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் நாட்டுக்குச்சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்துகொண்டார். இந்தப்பயணக்கதை பின்னர் 1976 ஜூலையில் வீரகேசரி பிரசுரமாக வெளியானது. இனக்கலவர் காலத்தில் தமது அனுபவங்களையும் ஆங்கிலத்தில் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். வீரகேசரி நிறுவனத்தில் ஊழியர் நலன்புரிச்சங்கத்திலும் சிவப்பிரகாசம் தலைவராக பதவி வகித்தவர். பல நல்ல திட்டங்கள் இவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.