வணக்கம். ‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாள் 13.11.2016 (ஞாயிறு)
இடம்
Grand Pasific Hotel (KL)
Jalan Tun Ismail, Kuala Lumpur, 50400 Jalan Ipoh, Kuala Lumpur.
(ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)
நேரம் பிற்பகல் 2.00
கலை இலக்கிய விழா 8 இன் சிறப்பு அம்சங்கள்
1. ஆளுமைகளும் ஆவணங்களும்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய சண்முக சிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் நேர்காணல்கள் வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக அரிய சில புகைப்படங்களையும் இணைக்கப்பட்டுள்ளன.
விமர்சன நூல்
பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் ஒரு படைப்பாளனின் எல்லா படைப்புகளும் பாராட்டத்தக்கவை என மேம்போக்காகக் கொண்டாடப்படுகின்றன. ‘வல்லினம்’ இவ்வாறான மனநிலைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளும் முழுமையாக வாசிக்கப்பட்டு அவற்றை ஒட்டிய விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டு நூல்வடிவமாக்கப் பட்டுள்ளன.
2. மொழிபெயர்ப்பு நூல்
சண்முக சிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட எட்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்கள் மத்தியில் பரவலான அறிமுகம் இக்கதைகளுக்கு இருப்பதாலும் தமிழில் பதிப்பிக்க இன்னும் பிற சாத்தியங்கள் உள்ளதாலும் ஆங்கிலத்தில் இக்கதைகளை மொழியாக்கம் செய்து உலக வாசகர்கள் மத்தியில் மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டு செல்லும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3. சிறுகதைப்போட்டி
மூத்த படைப்பாளிகளை முன்னிலைப்படுத்தும் அதேவேளை புதியப் படைப்பாளிகளையும் கண்டடைய இவ்வாண்டு திட்டமிட்டோம். அவ்வகையில் சிறுகதைப்போட்டி நடத்தப்பட்டது. சுமார் 132 எழுத்தாளர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இது மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. புதிய எழுத்தாளர்களை அடையாளம் காண முடிந்தது. சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களை விமர்சனம் செய்து அதைச் செழுமையாக்கும் பணி ஜனவரி 2017இல் நடத்தப்படும். சடங்கு பூர்வமாக எதையும் நடத்த விரும்பாத வல்லினம் ஒரு போட்டிக்குப் பின் அதன் ஆக்கங்களை வெற்றி – தோல்வி என இரு நிலையில் பகுக்காமல் அதில் பங்குபெற்றவர்களை மேலும் வளப்படுத்த பட்டறைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
நிகழ்வில் தங்களது பங்கேற்பையும் வல்லினம் இலக்கியச் செயல்பாடுகளில் தங்களது பங்களிப்பையும் பெரிதும் வரவேற்கிறோம். தொடர்புக்கு 016-3194522 (ம.நவீன்)
நன்றி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.