கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில், தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலாநிதி நீலமலர் செந்தில்குமார் அவர்களின் An Endless Refuge என்ற ஆங்கில் நூல் அண்மையில் ரொறன்ரோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் உரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல எழுத்தாளர்களைப் பலதடவைகள் கௌரவித்திருக்கின்றது. அந்த வகையில் கலாநிதி நீலமலர் அவர்களையும் கௌரவிக்கும் பாக்கியம் இன்று எழுத்தாளர் இணையத்திற்குக் கிடைத்திருக்கின்றது. கலாநிதி நீலமலர் அவர்களின் இலக்கியக் கருத்துரையைச் செவிமடுக்க வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் வணக்கம்கூறி, அவரைப்பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.
கலாநிதி நீலமலர் அவர்களின் தாத்தாதான் தமிழ் அறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். தமிழ் மீது கொண்ட அதீத பற்றுக் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பணி நீக்கம் செய்யப்படாலும் மனம் தளராது தொடர்ந்தும் தாய் மொழிக்காகப் போராடியவர். அவர் தனது மகனுக்கும் மறைமலை அடிகளாரின் பெயரையே சூடியிருந்தார். கலாநிதி நீலமலர் அவர்களின் தந்தையான மறைமலை இலக்குவனார் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது உரையைப் பல தடவைகள் நான் கேட்டிருக்கின்றேன். குறிப்பாக உலகத்தாய் மொழி நாளன்று சண் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. கலாநிதி நீலமலரின் தாயாரும் ஒரு பேராசிரியராவார். திருமதி நீலமலர் செந்தில்குமார் அவர்கள் எதிராஜ் கல்லூரியில் கல்வி கற்றவர். சென்னையில் வசிக்கும் இவர் தொடக்கத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.
An Endless Refuge என்ற இவரது ஆங்கில நூல் சென்ற தை மாதம் 2016 இல் புதுடில்லியில் நடந்த உலகப் புத்தகக் காட்சியின் போது வெளியிட்டு வைக்கப்பட்டது. ‘நீலாசெந்தில்’ என்ற புனைப் பெயரில் இந்தப் புதினம் எழுதப்பட்டிருக்கின்றது. அவருடன் கலந்துரையாடிய போது இதை எழுதுவதற்கு ஒன்பது மாதங்கள் தனக்கு எடுத்ததாகவும், கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சியையும், சிஎன் கோபுரத்தையும் வியப்போடு இரசித்தாகவும் மேலும் குறிப்பிட்டார். எப்படி நாங்கள் எல்லாம் அகதிகளாகப் புலம் பெயர்ந்து கனடாவில் தஞ்சமடைந்தோமோ அதே போல இலங்கையில் இருந்து இந்தியா சென்று தஞ்சம் அடைந்த ஒரு குடும்பத்தின் அகதியான சுதாகரைச் சுற்றியுள்ள கதைதான் இந்த An Endless Refuge என்ற புதினமாகும். இலக்கிய ஆர்வலர்களாகிய நீங்களே இந்தக் கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். இதைவிட இவர் தமிழிலும் சில சிறுகதைகள் எழுதியிருக்கின்றார். இவரது கணவர் கலாநிதி செந்தில்குமார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மிகுதியை அவரே உங்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லுவார். இச்சந்தர்ப்பத்தில் கலாநிதி நீலமலர் அவர்களைத் தனது நூலை அறிமுகம் செய்து வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
குரு அரவிந்தனின் உரையைத் தொடர்ந்து கலாநிதி நீலமலர் செந்தில் அவர்கள் தனது நூலை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளர் திருமதி. மு. சிவநயனியின் நன்றியுரையுடன் நூல் அறிமுக நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.