கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற வெள்ளிக்கிழமை பாராட்டுவிழா ஒன்று ஸ்காபரோவில் நடைபெற்றது. சென்ற ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி 2015 இல் இந்த நிகழ்வு ஸ்காபரோ, 3300 மக்னிக்கல் அவென்யூவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றி, கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப் பாடல், மௌன அஞ்சலி ஆகியவற்றுடன் பாராட்டு விழா ஆரம்பமானது. கனடா தேசிய கீதத்தை செல்வி சாலினி மணிவண்ணனும், தமிழ் தாய் வாழ்த்தை செல்வி சங்கவி முகுந்தனும் இசைத்தனர். எழுத்தாளர் குரு அரவிந்தனை கனடா எழுத்தாளர் இணையத்துடன் இணைந்து கனடாவில் உள்ள பல தொடர்பு சாதனங்கள், மன்றங்கள், சங்கங்கள் என்பன அவரைக் கௌரவித்திருந்தனர்.
கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் குரு அரவிந்தனுக்கு ஆசியுரை வழங்கினார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்களின் தலைமை உரை அடுத்து இடம் பெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் உதயன் பத்திரிகை சார்பாக ஆர். என். லோகேந்திரலிங்கம், வெற்றிமணி பத்திரிகை சார்பாக டாக்டர் கதிர் துரைசிங்கம், தமிழர் செந்தாமரை பத்திரிகை சார்பாக ராஜி அரசரட்ணம், கீதவாணி வானொலி சார்பாக நடா ஆர். ராஜ்குமார், ரிவிஐ தொலைக்காட்சி சார்பாக ப. விக்னேஸ்வரன், தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகை சார்பாக சாள்ஸ் தேவநாயகம், தூறல் இதழ் சார்பாக சிவா சிவலிங்கம், தமிழ் ஆதேஸ் இணைய இதழ் சார்பாக எழுத்தாளர் அகில், இ-குருவி பத்திரிகை சார்பாக நவஜீவன் அனந்தராஜ், தளிர் இதழ் சார்பாக சிவலிங்கம், விழாக் குழுவினர் சார்பாக எஸ். ஜே. சோதி ஆகியோர் உரையாற்றினர்.
ஊடகவியலாளரின் உரையைத் தொடர்ந்து மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் சிவ கௌரிபாலன் நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கச் செயலாளர் மீ. யோகரட்ணம் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கக் காப்பாளர் தங்கராசா சிவபாலு, ஜனகன் பிக்ஸேஸ் சார்பாகக் கலகலப்பு தீசன், சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத் தலைவர் அமிர்தராஜன் தேவதாசன், சொப்கா பீல் குடும்ப மன்றம் சார்பாக ஏ. ஜேசுதாசன் ஆகியோரும் உரையாற்றினர். மன்றங்கள் சார்பான உரையைத் தொடர்ந்து பேராசிரியர் சுப்ரமணியன் ஐயர், பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன், சிந்தனைப்பூக்கள் எஸ்.பத்மநாதன், நாடக நெறியாளர் என். சாந்திநாதன், கணபதி ரவீந்திரன், செந்தில் செல்லையா, ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன.
இந்த பாராட்டு விழாவில் ‘கனடா தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற 340 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றும் அப்போது வெளியிடப்பட்டது. எழுத்தாளர் இணைய முன்னாள் தலைவர் திரு. தங்கராசா சிவபாலு அவர்கள் இந்த நூலை அறிமுகம் செய்து வைக்கும்போது, இது போன்ற ஆவண நூல் கனடியத் தமிழர் இலக்கியத்தில் இதுவரை வெளிவரவில்லை என்பதைக் குறிப்பிட்டார். சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பல்துறைப் பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகள், இன்னும் பல குறிப்புகள் இந்த நூலில் முக்கிய ஆவணமாக இடம் பெற்றிருக்கின்றன. இதைவிடக் குரு அரவிந்தனின் படைப்பிலக்கியங்கள் பற்றிப் பல்துறை விற்பன்னர்கள், அரசியல் பிரமுகர்கள் எழுதிய ஆக்கங்களும், குரு அரவிந்தனுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. தினக்குரல், தமிழ் ஆர்தெஸ் போன்ற வற்றில் வெளிவந்த குரு அரவிந்தனின் நேர்காணலும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றது. அன்றைய நிகழ்வின் போது, ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரான எந்தவித ஆர்ப்பாடமும் இல்லாமல் இலட்சக்கணக்கான வாசகர்களைச் சர்வதேச ரீதியாக உருவாக்கியிருக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் இலக்கிய சேவையைப் பலரும் பாராட்டி மேடையில் உரையாற்றியிருந்தனர். சென்ற வாரம் கனடா வந்திருந்த ஆனந்தவிகடன் நிர்வாக அதிபர் ஸ்ரீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டது போல வாராவாரம் 10 லட்சம் பிரதிகள் விறபனையாகும் விகடனில் குரு அரவிந்தனின் பல கதைகள் இதுவரை வெளிவந்;தது மட்டுமல்ல முக்கியமாக விகடன் தீபாவளி மலர், பவளவிழா மலர், காதலர்தின மலர் போன்றவற்றில் வந்த குரு அரவிந்தனின் ஆக்கங்களையும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஊரும் உறவும், கல்வியும் கல்லூரியும், பரிசும் விருதும், புனைவும் புதினமும், இயலும் இசையும் என்ற முக்கிய தலைப்புகளின் கீழ் இந்த நூலில் உள்ள ஆக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குரு அரவிந்தனின் தந்தையாரின் பிறப்பிடமான காங்கேசந்துறையில் உள்ள மாவிட்டபுரம், தாயாரின் ஊரான சண்டிலிப்பாய் போன்ற ஊர்களைப் பற்றி இலக்கியச் சுவையோடு கூடிய அருமையான தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இவரது தந்தையான அ.குருநாதபிள்ளை அவர்கள் நடேஸ்வராக்கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். குரு அரவிந்தன் கல்விகற்ற காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி, உயர் கல்வி கற்ற தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி, பட்டயக் கணக்காளர் நிறுவனம், கணக்காளராக இருந்த மகாராஜா நிறுவனம் போன்ற வற்றையும் இங்கே ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். பரிசுகளும் விருதுகளும் பகுதியில் இவர் பெற்ற பரிசுகளும் விருதுகளும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த ‘அணையாததீபம்’ என்ற சிறுகதை மூலம் இவர் முதலில் அறியப்பட்டாலும், கனடா உதயன் பத்திரிகையில் இவர் பெற்ற தங்கப் பதக்கத்துடன்தான் இவரது இலக்கியப் பயணம் கனடாவில் ஆரம்பமாகி இருக்கின்றது. நீர்மூழ்கி நீரில் மூழ்கி என்ற நாவலை மகாஜனக் கல்லூரி 100 ஆண்டு விழாவின்போது மகாஜனமாதாவிற்கு இவர் சமர்ப்பணம் செய்திருந்தார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் விகடனில் வெளிவந்து பலரையும் ஆச்சரியப்பட வைத்த இந்தக் குறுநாவலான ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’, கலைமகள் இதழ் வருடாவருடம் நடத்தும் குறுநாவல் போட்டியான ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற ‘தாயுமானவர்’, யுகமாயினி இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற ‘அம்மாவின் பிள்ளைகள்’ போன்ற இவர் பெற்ற சில முக்கிய பரிசுகளைப் பற்றி இந்த நூலில் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
புனைவும் புதினமும் பகுதியில் இவரது நாவல்கள் சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியம் போன்ற குறிப்புகள் இருக்கின்றன. தைபிறந்தால், எங்;கள் வீட்டுத் தோட்டம், குவா குவா வாத்து போன்ற இவரது சில சிறுவர் பாடல்களும் இடம் பெற்றிருக்கின்றன. இயலும் இசையும் பகுதியில் இவர் திரைக்கதை வசனம் எழுதிய மூன்று படங்கள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. இதைவிட மகாஜனக் கல்லூரி 100 விழாவின் போது தொடர்ந்து மூன்ற முறை மேடை ஏற்றப்பட்ட இவரது மேடை நாடகம், சிறுவர் நாடகங்கள் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. குறித்த நேரத்தில் ஆரம்பமாகிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைந்த, அரங்கம் நிறைந்த குரு அரவிந்தனின் இந்தப் பாராட்டு விழா பலராலும் பாராட்டப்பட்டது. குரு அரவிந்தனின் குடும்பத்தின் சார்பாக ஆனந் அரவிந்தன், கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பாக செயலாளர் சிவநயனி முகுந்தன் ஆகியோரின் நன்றி உரையுடன் விழா இனிதே முடிவுற்றது. நீண்ட நாட்களின் பின் அதிக அளவில் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட சிறந்த விழாவாக இந்தப் பாராட்டு விழா அமைந்திருந்ததை, விழாவிற்கு வருகை தந்த பலரும் நினைவூட்டினர்.