'கூலித்தமிழ்’ என்ற நூல் வெறுமனே மலையகத்தவரின் அவல வரலாற்றைச் சொல்லுகின்ற நூல் அன்று. அது, கற்க வழியற்றுக் கிடந்த தோட்டத் தமிழரின் போர்க்குணத்தையும், இலக்கியப்படைப்புக்களையும் புலப்படுத்துகின்ற நூல். தோட்டத் தொழிலாளர்கள் அவலம் பற்றி ஈழத் தமிழர்களும் கேட்டும் கேளாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். அவர்களும் இணைந்து குரல்கொடுத்துச் சகோதரத்தமிழரின் அவலத்தைத் தணித்திருக்கலாம். அன்றைய ஈழத்தமிழரின் செயலுக்காக நான் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறேன். ஈழத்தமிழர் அசட்டையாக இருந்தார்கள் என்றால், தமிழ்நாட்டுத் தமிழரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். தமிழகத்திலிருந்து புதுவாழ்வு தேடிவந்த சகோதரா;கள் இலங்கை மலைநாட்டில் அடிமைகளாக வாழ்ந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களும் மவுனிகளாகவே இருந்துவிட்டார்கள். அவர்களையும் மன்னிக்க முடியவில்லை. மலையகத் தமிழரின் பிறந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது; புகுந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது என்பது சோகமான உண்மை” என்று தமிழறிஞரும், வழக்கறிஞருமான செ. சிறிக்கந்தராஜா லண்டன் ‘சொறாஸ்ட்ரியன்’ மண்டபத்தில், சென்ற ஏப்ரல் 25ஆம் திகதி மு.நித்தியானந்தனின் நூல்வெளியீட்டில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் பேசுகையில் “ஒக்ஸ்போர்டு; ஆங்கில அகராதி தரும் விளக்கத்தின்படி, 1638ஆம் ஆண்டுக்கு முன்னரே ‘கூலி’ என்ற சொல் ஆங்கில மொழி வழக்கில் வந்துவிட்டது என்பது தெளிவாகிறது. ‘கூலியாள்’ என்ற பொருள் தரும் ‘கூலி’ என்ற சொல் பிரித்தானியர் தமிழ்நாட்டுக்குள் நுழையுமுன்னரேயே ஆங்கில அகராதியில் ஏறிவிட்டது. திருக்குறளில் ‘கூலி’ என்ற சொல் பயிலப்பட்டிருந்தாலும், அது சம்பளம், வேதனம் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. கூலியாள், கூலிக்காரன் என்ற பொருளில் அல்ல. எந்தத் தமிழிலக்கியத்திலும் ‘கூலி’ என்ற சொல் ‘கூலிக்காரன்’ என்ற பொருளில் கையாளப்படவில்லை” என்று தெரிவித்தார்.
‘‘இலங்கையின் தேயிலைத்தோட்டங்களில் இந்தியத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப்பற்றி புதுமைப்பித்தன் ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையிலே விபாpத்துச் செல்கிறார். ஆனால், பிற்பட்ட காலங்களில் எங்களின் தொப்புள்கொடி உறவான மலையகத் தமிழர்களைப் பற்றித் தமிழகத்தில் எந்த அக்கறையும் கரிசனையுமே இல்லாது இருந்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு மு.நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’ நூலை வாசித்ததும் மனதில் எழுந்தது. வட, கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மலையகத் தமிழர்களின்
பிரச்சினை குறித்து வழங்கவில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது” என்று இவ்விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்த தமிழகத்தின் ஆவணப்பட இயக்குநரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.
மலையக இலக்கியத்தின் ஆரம்பகால எழுத்துப் பதிவுகளை அவர் ஐரோப்பிய நூலகங்களிலும் தமிழகத்திலும் தேடி, ஆய்வு செய்து முக்கிய ஆவணமொன்றை நம்மிடம் கையளித்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. இந்த நூலில் அவர் தந்திருக்கும் தகவல்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பிரிட்டனிலேயே ‘கூலித்தமிழ்’ வகுப்புகளை அந்தக்காலத்திலேயே நடாத்தியிருக்கிறார்கள் என்கிற அபூர்வமான தகவல்களை எல்லாம் இந்த நூலில் பார்த்து வியப்புற்றேன். தமிழகத்தி;ல் மலையகத்தமிழர்கள் மீது கவனத்தை ஈர்க்கும் முக்கிய பணியை இந்த நூல் தொடக்கி வைத்திருக்கிறது” என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் நடாமோகனின் வரவேற்புரையோடு ஆரம்பமான இவ்விழா செல்வி. சிவபாலனின் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்துடன் ஆரம்பமானது.
‘‘இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றிய மலையகத்தமிழர்கள் அடையாளம் அற்றவர்களாக, தாங்கள் உழைத்து மாண்டதற்கான ஆதாரங்களே இல்லாதவர்களாக உலவி வருகின்றனர். வாக்குரிமை பறிக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டு, உழைக்கவும் சாகவுமே சலுகை வழங்கப்பட்ட இனமாக மலையகத் தமிழினம் உழல்கிறது. நூறு ஆண்டுகால ஒடுக்குமுறையிலிருந்து இனசமத்துவம் கோரியும், பிறருக்குள்ள மரியாதை தங்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்றும் மலையகத்தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். மலையகத் தொழிற்சங்கங்களும் பிற சமூக அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சமூகப் போராட்டத்திற்கு அறிவுலகில் தத்துவார்த்த விளக்கம் தரும் அறிவுஜீவிகளும் மலையகத்தில் உருவாகி வருகின்றனர். இந்த மலையக அறிவுஜீவிகளில் மலையக ஆய்வாளரும் விமர்சகருமான மு.நித்தியானந்தன் முன்னணி இடத்தை வகிக்கிறார். அவரின் ‘கூலித்தமிழ்’ என்ற ஆய்வுநூல் மலையகத்தாயின் கழுத்தை அலங்கரிக்கும் மலர்மாலையாகும்’’ என்று திரு.எஸ். ராமலிங்கம் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
“மொழிவழி நுணுக்கங்களும், அகராதியில் அனுபவமும், வரலாற்று ஞானமும், விமர்சன ஆற்றலும் கொண்ட நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’ நூலில் இடம்பெற்றுள்ள ஏழு கட்டுரைகளும் ஏழு முத்துக்களாகும். ஆதாரங்களைத்தேடி ஆவணப்படுத்தும் இந்நூல் தேர்ந்த வரலாற்று ஆசிரியனின் சீரிய பணியை வெளிப்படுத்துகிறது. லண்டன் மேடைகளில் நூல் விமர்சனங்களின் போது அவர் வெளிப்படுத்தும் திறனாய்வு ஆற்றல் ‘கூலித்தமிழ்’ நூலுக்குப் பெரும் கனதியைச் சோ;த்திருக்கிறது” என்று இலக்கிய ஆய்வாளர் மாதவி சிவலீலன் தனது உரையில் தெரிவித்தார்.
‘ஆற்றலும் அறிவும் தேடலும் மிகுந்த மு.நித்தியானந்தனின் இந்த நூல் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண வாசகா;களும் வாசித்து, மலையகம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய வகையில் சுவையாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் எப்போதோ வெளிவந்திருக்கவேண்டும் என்ற ஆதங்கம் என்னுள் இருந்தாலும். இப்போதாவது வெளிவந்தததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் அவர் எழுதிய ஆக்கங்கள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவரவேண்டும்’ என்று ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் தெரிவித்தார்.
‘யாழ்ப்பாணத்தில் ‘வைகறை’ வெளியீட்டின்மூலம் தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம்.ராமையா, சி.வி. வேலுப்பிள்ளை ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வெளிக்;கொணர்ந்ததன் மூலம் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு நித்தியானந்தன் அரும்பணியாற்றியுள்ளார். இலக்கியம், விமர்சனம், நாடகம், பதிப்புத்துறை என்று அவரது ஈடுபாடு விரிந்ததாகும். ஆயினும், தனது ஆக்கங்களை நூலுருவில் கொண்டுவருவதற்கான கரிசனை அவரிடத்தில் இல்லை என்பதை அவருக்கு எடுத்துணர்த்தி, இந்த நூலை வெளிக்கொணர்வதில் அவருக்கு நான் பெரும் உற்சாகம் கொடுத்திருக்கிறேன்’ என்று பதிப்பாளர் பத்மநாப ஐயர் பேசுகையில் குறிப்பிட்டார்.
“க்ரியா’வின் வெளியீடாக வெளிவந்துள்ள ‘கூலித்தமிழ்’ என்ற இந்த நூல் நூலாசிரியர், நூலடக்கம், நூல்வடிவம், நூல்பிரசுரம் என்ற இவை அனைத்திலும் ஒரு நூல் எப்படி அமையவேண்டும் என்பதற்கான எளிமையான - இலக்கியமான இலக்கணம். நூலாசிரியருக்கு என்று ஓர் இலக்கணம் எழுதப்பட்டிருந்தால், அதற்கு அப்படியே அமைவான நூல் ஆசிரியராக நித்தியானந்தன் திகழ்கின்றார். அவருக்கு வயது எதுவாக இருந்தாலும் அவருடைய வாழ்வின் வசந்தம் இப்போதுதான் வீசுகிறது. அந்த வசந்தத்தில் பூத்த மலர்கள்போன்ற இரண்டு குழந்தைச் செல்வங்களைத் தொடர்ந்து பூத்த மலராக இந்த நூலும் அமைகிறது. வசந்தம் இனிப் பூத்துச் சொரியும்” என்று நாழிகை ஆசிரியரும், கவின் கலை விமர்சகருமான எஸ்.மகாலிங்கசிவம் நூலை வெளியிட்டுப் பேசுகையில் குறிப்பிட்டார்.
“சாதாரணமாக லண்டனில் நூல் வெளியீடுகள் என்றால் இருபது இருபத்தைந்து பேரைத் தாண்டாத சூழ்நிலையில், மண்டபம் நிறைந்த இந்த வெளியீட்டு விழா நூலாசிரியருக்குப் பெரும் வெற்றியைத் தந்துள்ளது. உயர்ந்த நூலின் பதிப்பும், இதமாக வாசிக்கக் கூடிய அச்சாக்கமும் இந்த ஆராய்ச்சி நூலுக்கு புதிய அழகைக் கொடுத்திருக்கிறது. தென்றல், தேனுகா இந்த இனிய அழகிய மழலைகளின் கரங்களில் இந்த நூலை வழங்கி, நூல் வெளியீட்டினைத் தொடங்கியமை நூல் வெளியீட்டில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தது” என்று சட்டத்தரணி எஸ்.பி.ஜோகரட்னம் தெரிவித்தார்.
“இந்த வெளியீட்டு விழாவில் திரண்டிருக்கும் மக்களை நோக்கும்போது எனக்குப் புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது. நூல் வெளியான சில மாதங்களிலேயே மறு பதிப்பை வேண்டி நிற்பது மேலும் உத்வேகத்தைத் தருவதாய் அமைந்திருக்கிறது. நூல் வெளியான குறுகிய காலப்பகுதிக்குள் ஈழத்து ஏடுகளிலும், தமிழக சஞ்சிகைகளிலும், புலம்பெயர் மாசிகைகளிலும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் நிறையவே வந்திருப்பதும் நிறைவு தரும் நிகழ்வுகளாகும்” என்று நூலாசிரியர் மு.நித்தியானந்தன தனது ஏற்புரையில் தெரிவித்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.