கடந்த ஞயிற்றுக்கிழமை (21-12-2014) காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடாக்கிளையின் குளிர்கால ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும் கனடா ஸ்காபரோவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்த விழாவில் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவரான திரு. குணசிங்கம் வைத்தியகலாநிதி திருமதி குணசிங்கம் ஆகியோர் லண்டன் ஒன்ராறியோவில் இருந்து வருகைதந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
விழா ஆரம்பத்தில் முதலில் மங்களவிளக்கேற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டது. தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து இயல், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. புதிய தலைமுறையினர் விரும்பி ரசிக்கும் திரையிசை நடனங்களும் அவ்வப்போது இடம் பெற்றன. நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர்களும், மாணவர்களின் பிள்ளைகளும், குறிப்பாக அடுத்த தலைமுறையினர் இந்த நிகழ்ச்சியில் அதிகமாகக் கலந்து கொண்டனர். திரு. பரம்ஜி ஞானேஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். கனடா கிளையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். இதைவிட காங்கேசந்துறை வடபகுதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வருவதால் அங்கு மீள்குடியேற்றம் நடைபெறாமல் இருப்பதும், பாடசாலையை மீண்டும் காங்கேசந்துறையில் இயங்கச் செய்ய எப்படியான நடவடிக்கைகள் சாத்தியம் என்பது பற்றியும் சங்கக் காப்பாளர்களில் ஒருவராக பி. விக்னேஸ்வரன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு, அது சம்பந்தமாகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட விவரண ஒளிப்படமும் காண்பிக்கப்பட்டது.
அங்கிருந்து ரி.இ.ரி (TET – Canada) தொலைக்காட்சியால் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்கக் காப்பாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்கள் தற்போது தெல்லிப்பளையில் தற்காலிகமாக இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி மாணவர்களுக்கு எந்த வகையில் எம்மால் உதவிகள் செய்யப்படுகின்றன என்பதையும், இன்னும் என்னென்ன செய்ய முடியும் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். இராப்போசனவிருந்தைத் தொடர்ந்து செயலாளர் திரு. யோகரட்ணம் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.