அவுஸ்திரேலியா - சிட்னியில் அண்மையில் அடுத்தடுத்து மறைந்த ஈழத்தின் மூத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) காவலூர் ராஜதுரை ஆகியோரின் படைப்பிலக்கிய மதிப்பீட்டு நினைவரங்கு எதிர்வரும் 20 ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் Preston - Darebin Intercultural Centre இல் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலரும் சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள ஈழத்தின் மூத்த இலக்கியத்திறனாய்வாளரும் இலங்கை வானொலி மற்றும் The Island , வீரகேசரி முதலான நாளிதழ்களின் மூத்த ஊடகவியலாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன், கண்டி அசோக்கா வித்தியாலய ஸ்தாபகர் நடராஜாவின் துணைவியார் இலக்கிய ஆர்வலர் திருமதி லலிதா நடராஜா ஆகியோர் அமரர்கள் எஸ்.பொ. - காவலூர் ராஜதுரையின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைப்பர். கலாநிதி கௌஸல்யா ஜெயேந்திராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் சட்டத்தரணி ரவீந்திரன் தலைமையுரை நிகழ்த்துவார்.
காவலூர் ராஜதுரையின் படைப்பிலக்கிய உலகம் குறித்து எழுத்தாளர் ஆவூரான் சந்திரன், வானொலி ஊடகத்துறை பற்றி மெல்பன் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் திரு. நவரத்தினம் அல்லமதேவன் ஆகியோரும் எஸ்.பொ.வின் படைப்பிலக்கிய உலகம் குறித்து திருமதி மாலதி முருகபூபதியும் அக்கினிக்குஞ்சு இதழில் எஸ்.பொ. வின் பங்களிப்பு தொடர்பாக அதன் ஆசிரியர் யாழ். பாஸ்கரும் மரபு இதழில் எஸ்.பொ. வின் எழுத்துக்கள் தொடர்பாக அதன் ஆசிரியர் திரு. விமல் அரவிந்தனும் உரையாற்றுவர். இலக்கியத்திறனாய்வாளர் திரு. கே.எஸ். சிவகுமாரன் எஸ்.பொ. -காவலூர் தொடர்பான நினைவுரையை நிகழ்த்துவார்.
நூல் விமர்சன அரங்கு
இந்நிகழ்ச்சியில் நினைவரங்கைத்தொடர்ந்து இடம்பெறும் விமர்சன அரங்கில் மெல்பனில் வதியும் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்ல மறந்த கதைகள் பற்றிய விமர்சன உரைகளை எழுத்தாளர் திரு. ஜே.கே. ஜெயக்குமாரன் மற்றும் சமூகப்பணியாளர் திரு. ஜூட் பிரகாஷ் ஆகியோர் நிகழ்த்துவர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.