இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்து பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் மெல்பனில் அண்மையில் Vermont South மண்டபத்தில் நிதியத்தின் தலைவர் திருமதி அருண். விஜயராணியின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போர்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிதிச்செயலாளர் திருமதி வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளையும் 2014-2015 ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கைகளை சமர்ப்பித்தார்.
இறுதியாக நடந்த நிதியத்தின் 25 வருட வெள்ளிவிழா வரவு - செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கலந்துகொண்ட நிதியத்தின் உறுப்பினர்களின் கலந்துரையாடலில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கான மாதாந்த நிதியுதவியில் மேலதிகமாக இலங்கை நாணயத்தில் ஐநூறு ரூபா வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவுக்கு அமைய அடுத்த ஆண்டு முதல் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் இலங்கை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் இலங்கை நாணயத்தில் இரண்டாயிரம் ரூபா வழங்கப்படும். மாணவர்கள் தமது கல்வித்தேவைகளுக்காக அதனை உரியமுறையில் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்ட மாணவர்களின் இலங்கை கண்காணிப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. புதிய பரிபாலனசபையின் தெரிவுக்கு முன்பதாக கடந்த இரண்டு ஆண்டு காலம் தலைவராக பதவியிலிருந்து பணியாற்றிய திருமதி அருண். விஜயராணி, உறுப்பினர்களுக்கும் நிதியத்தின் வெள்ளிவிழாவுக்கு பல்வேறுவழிகளில் ஆதரவு வழங்கிய அன்பர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.
அவரது சேவைகளை பாராட்டி பரிபாலசபையின் சார்பில் உறுப்பினர் திரு. நவரத்தினம் அல்லமதேவன் உரையாற்றி திருமதி அருண். விஜயராணிக்கு வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான புதிய பரிபாலன சபையும் தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர்: திரு. விமல் அரவிந்தன்.
துணைத்தலைவர்கள்: திரு. துரைசிங்கம் ( சிட்னி) ரவீந்திரராஜா ( கன்பரா)
செயலாளர்: திருமதி சத்தியா சிவலிங்கம்.
துணைச்செயலாளர்: திருமதி சாந்தி ரவீந்திரன்.
நிதிச்செயலாளர்: திருமதி வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா.
துணை நிதிச்செயலாளர்: திரு. லெ.முருகபூபதி.
பரிபாலனசபை உறுப்பினர்கள்:
மருத்துவக்கலாநிதிகள் மதிவதனி சந்திரானந்த், பரம்சோதி, திருமதி செல்வம் ராஜரட்ணம், திருவாளர்கள்: இராஜரட்ணம் சிவநாதன், நவரத்தினம் அல்லமதேவன், நடனகுமார், சாதானந்தவேல், கணேசலிங்கம்.
கணக்காய்வாளர்: திரு. ஆ.வே. முருகையா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.