பாரிஸ் பெரு நகர மையத்தினுள் அமைந்திருக்கும் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்களை பார்த்தவுடன் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம் நான் சென்றிருந்தது குடும்ப கொண்டாட்டத்திற்கோ, ஆண்டு விழாவுக்கோ, மதம் சார்ந்த நிகழ்வுக்கோ அல்ல. புலம்பெயர் வாழ்வில் எமது அடுத்த தலைமுறையினர்க்கு நாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் பிரான்ஸ் சிலம்புச் சங்கம் ஏற்பாட்டில் 19.01.2014 அன்று நடாத்தப்பட்ட எட்டாவது புலம்பெயர் தமிழர் திருநாள் நிகழ்வு. இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக, புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் வானொலி தொகுப்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க வெளி முற்றத்தில் அழகான கோலப் பின்னணியில் அடுப்பு வைத்து விறகிட்டு தீ மூட்டி மட்பானையில் பொங்கல் நிகழ்வு தொடங்க, குழுமியிருந்த கலைஞர்கள் பறையடித்து முழங்க ஆடல் பாடலாக வெளியரங்கம் களைகட்டியது. பாரீஸ் பெருநகர மையத்தில் முதற்தடவையாக நடந்த நிகழ்வாகையால் பெரும்பான்மையோருக்குப் இது புதுமையானதாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஒளிப்படமெடுத்தபடி மலர்ந்த முகத்துடன் வருகைதந்தோர் காணப்பட்டனர்.
பிரான்சு கலைஞர்களுடன் இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த சந்தோஷ் குழுவினரும் பறையிசை முழக்கம் செய்தனர். இவர்களுடன் முன்னைநாள் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடாதிபதி பாலசுகுமார் அவர்களும் இணைந்துகொண்டு பறை வாத்திய இசையின் அருமையான தொன்மையையும் விபரித்து பறையை இசைத்தது சிறப்பாக இருந்தது. இவர்களுடன் மக்களும் கலந்து ஆடிப் பாட, குதிரையாட்டக் கலைஞர்களும் இணைந்துகொள்ள பல்லின பல்தேசியப் பார்வையாளர்களுடன் வெளியரங்கம் குதூகலித்தது. குவாதூப் வழி வந்த 160 ஆண்டுப் புலம்பெயர் நீட்சியின் தலைமுறை பெண் கலைஞர்கள் குதிரைட்டத்தில் ஈடுபட்டது சிறப்பாக இருந்தது.
இதேவேளையில், உள்ளரங்கில் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையிலான இசைக் கருவிகள், நூல்கள், பாவனைப் பொருட்கள், உணவு வகைகள் என கண்கொள்ளாக் காட்சியரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
காட்சியரங்கம். புலம்பெயர் வாழ்வில் வாரிசுகளாகி எம்முடன் வளரும் சிறார்கள் எமது பண்பாட்டு ஓவியக் கலைக்கூடத்திலும், கோலமிடல் போட்டியிலும் உற்சாகமாகப் பங்கேற்றது மிகுந்த நம்பிக்கையுடன் மகிழ்வைத் தந்தது. எமது வளரும் புலம்பெயர் வாரிசுகளுக்கு எம் பாரம்பரிய உணவுகளின் பெயர்கள் தொடர்பான புரிதலைப் பரிசோதிக்கும் வகையில் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களால் திடீரென நிகழ்த்தப்பட்ட போட்டியில் பலரும் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர். இந்நிகழ்வு அரங்கத்தினுள் புதியதொரு அதிர்வலையாகப் பரவி மகிழ்வூட்டியது.
மதிப்புக்குரிய தமிழ் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது கைபிடித்து எமது சிறார்கள் அகரம் எழுதிய காட்சி தமிழின் வாழ்வின் அர்த்ததை உணர்த்தியதாக பார்வையாளரை புளங்காகிதமடைய வைத்தது.
அரங்கத்தினுள் பல் வயதையும் கொண்ட ஆண்களில் பலரும் வேட்டி சட்டையுடன் எமது கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வலம் வந்தனர். கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுவானவர்கள் எனப் பலரையும் சந்தித்து உரையாடக்கூடியதாக இருந்தது.
மேடை நிகழ்வாக, சிறுவர்களின் நடனம், பாடல்கள் என்பன தமிழ்த் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் இருந்தமை இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பைத் தந்தது. கடும் குளிர் காலம், பசி வேளை என்பன மறந்து இந்நிகழ்வை மக்கள் அனைவரும் பொறுமையாக இரசித்ததை பதிவிடவேண்டும். குவதூலூப் வழி வந்த ஐந்தாம் ஆறாம் தமிழ்த் தலைமுறையினைச் சேர்ந்த பெண்ணின் ஆடல் அரங்கம் மறக்கப்பட முடியாததாக கால நீட்சியில் மூல அடையாளக் குறியீடாக இந்நிகழ்வு அதிர்வுகளை கிளறிவிட்டுள்ளது.
சிறப்பு விருந்தினர் உரையில், அப்துல் `ஹமீது அவர்கள், « ஒரு பிள்ளையின் தாய் மொழி அப்பிள்ளை தாயின் கருவறையில் தனது 13ம் வாரத்திலிருந்து கேட்கத் தொடங்கும் மொழியாகும். இது எம் சந்ததியினருக்கு அந்தந்த நாட்டு மொழியாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையின் பத்து வயதிற்குள் பத்து வகை மொழிகளைக் கற்கும் திறனுடையதென அறிஞர்களது ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அந்த வகையில் நம் சந்ததியினர் தமிழைக் கற்று அதன் வழி சிறக்க வேண்டும். இலண்டனில் எம் பாடகனொருவன் குறிப்பிடுவது போல் ‘I am a tamil, but i don’t know tamil ‘ என்ற அவலம் நிகழக் கூடாது. சூழல் மொழி வேறாயினும் வீட்டு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். இதற்காக முகுந்தன் போன்ற பல சமூக ஆர்வலர்கள் செயற்படுகிறார்கள். இப்படியானதொரு நிகழ்வரங்கை பிரான்சு மண்ணில் நிகழ்த்திய சிலம்புச் சங்கம் பெரும் பாராட்டுதலுக்குரியது. சங்கம் கண்டு வளர்ந்த தமிழின் பாராம்பரிய வாழ்வில் நான்காவது சங்கமாக சிலம்பு திகழ்வதை பாராட்டுகிறேன். » என கரவொலியுடன் கூறினார்.
எமது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் மூலத்தொடர்பின் தகவமைப்பு தொடரோட்டமாக அடுத்த தலைமுறையிருக்கு கையளிக்கும் மக்கள் நிகழ்வரங்காக இந்நிகழ்வை அமைத்திருந்தது சிலம்புச் சங்கம் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடவேண்டும்.
புலம்பெயர்வு வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி, சாதி, மத, தேச, அரசியல் பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகுந்த மனத் திருப்தியைத் தந்தது. விழா முடிவுற்று வீடு திரும்புகையில், பிரான்சில் தமிழ் வழி ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எனது மகனிடம் நிகழ்வைப் பற்றி கேட்டேன். தனக்கு மிகவும் சிறப்பாகவும் தனக்கு நன்றாகப் பிடித்திருப்பதாகவும் மலர்ச்சியுடன் கூறினான்.
வாழ்க்கை என்பது அஞ்லோட்டம் போன்றது எம்முன் சந்ததியினர் எம்மிடம் வழங்கிச் சென்ற வரலாற்று அடையாளத் தடியை புதிய மெருகுடன் அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்பதென்பது தார்மீகக் கடமை. இந்த அரிய செயலைப்புரியும் சிலம்புச் சங்கத்தை பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.