வணக்கம், தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக - ‘தமிழர் திருநாளாக’ - தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்த தைப்பொங்கல் நாள்- இது எமது அடையாள நாளாகும்.
இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்கங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் - தமிழர்களின் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் இப்பொங்கல்நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்றே கொள்ளப்படுவதும் வழமையாகி விட்டது.
இந்த முடிவுக்கமைவாக, « தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் » என்ற விருதுவாக்கிய வெளிப்பாடுடன் ஐரோப்பிய பெருநகரான பாரீசில் 2007ம் ஆண்டிலிருந்து மக்களரங்கு நிகழ்வாகக் கொண்டாடிவருகிறோம் பிரான்சில் எட்டாவது தடவையாக 2014ம் ஆண்டிற்கான பொங்கலை பாரீசு மாநகரில் புலம்பெயர் தமிழர் திருநாளாக நிகழ்வரங்காக்குகிறோம். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கிறார்கள் சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க், புகழ்பெற்ற வாழும் தமிழ் வானொலி தொகுப்பு மேதை பி.எச். அப்துல் ஹமீட் மற்றும் இலண்டன் வாழ் இசைக் கலைஞன் சந்தோஷ், பாரீசு வாழ் நடனக் கலைஞன் பிறேம கோபால் அவர்களும் நிகழ்கலை அரங்கலாளர்களாகப் பங்;கேற்கின்றனர். இவர்களுடன் ஈழநாட்டியத்தை உருவாக்கும் முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறைப் பீடாதிபதி பாலசுகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். இவர்களுடன் பிரான்சு நாட்டு நகரசபை மாநிலங்களவை உறுப்பினர்களும் பல்லின சமூக-பண்பாட்டுத்துறை செயற்பாட்டார்களும் கலந்து கொள்கிறார்கள்.
எதிர்வரும் காலங்களில் தமிழர் கால் பதித்திருக்கும் அனைத்திடங்களிலும் இப்பொங்கல் நாள் பெரும் ஒன்றுகூடல் நிகழ்வாகப் பரிணமிக்க வேண்டுமென்பதே எங்களது விருப்பமாகும். இதற்கு தமிழ் ஊடகங்கள் பெரும் பங்காற்றிட வேண்டியது தார்மீகக் கடமை. இந்நிகழ்வுக்கான சிறப்பான பிரச்சார முன்னெடுப்புகளை தாங்கள் எம்முடன் இணைந்து மேற்கொள்ள முன்வருவீர்களானால் இந்நிகழ்வு தொடர்பான வெளிப்பாடுகளை தங்களது ஊடகங்களில் வெளியிட எம்மாலான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குவோம். தமிழால் ஒன்றுபடும் « தமிழர் திருநாள் » சிறப்பினை மக்களிடம் காவிச்செல்லும் அரும்பணியைத் திட்டமிட்டு செயற்படுத்துவீர்களென அன்புடன் எதிர்பார்க்கிறோம். நிகழ்வு பற்றிய முழுமையான விபரங்கள் இங்கே
க. முகுந்தன்
செயலாளர்
சிலம்பு சங்கம்
பிரான்சு 2014
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.