இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி. பேசிய வெளி - சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3, 4, 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தன, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.
இரண்டாம் நாள் அரங்கில் பேசிய ஜமுனாவுக்கு முன் பேசிய சேர்ந்த சந்திரலேகா (இவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்) கோணிச் சாக்குடனும் முதுகில் பிணைக்கப்பட்ட கூடையுடனும் கலந்து விட்ட பெண்களின் வாழ்க்கையை சித்திரம் போல் தீட்டிக் காட்டியிருந்தார். இவர்களின் கட்டுரைகளில் விரிந்த ஈழ நிதர்சனம் ஒரு வகை என்றால், றஞ்சி, ஆழியாள், நளாயினி ஆகியோரின் பேச்சில் வெளிபட்ட புலம்பெயர் தமிழர் வாழ்க்கை அனுபவங்கள் வேறு வகையானவை. 1980களில் தொடங்கி வெவ்வேறு சூழ்நிலைகளில் அகதிகளாக சென்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக காதல், குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவை நிகழ்ந்த வரலாற்று சூழ்நிலைகளின் பின்புலத்தில் வைத்து இவர்கள் விளக்கினர். தவிரவும் தமிழர்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் அகதிகள் எதிர்கொள்ள வேண்டிய சட்டத் திட்டங்கள், இனவெறி, பண்பாட்டு குழப்பங்கள் குறித்தும் இவர்கள் பேசினர். ஆழியாள் அவுஸ்திரெலியாவில் தஞ்சம் புக விழையும் அகதிகள் - தமிழர்கள் மட்டுமல்லாது ஈரானியர், சிரியர்கள், சுதானைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் - முகங்கொடுக்க வேண்டிய அரசு கட்டுபாடுகள் குறித்து பல புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த யாழினி முகாம்களில் உள்ள உள்நாட்டு தமிழ் அகதிகளுக்கென முன்னெடுக்கப்பட்ட நாடக நிகழ்வுகளை அவர்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளாக ஆக்கிக் கொண்டதையும் இதன் மூலம் தங்களுடைய வேதனையை, ஆற்றாமையை வெளிபடுத்தியதையும் பற்றிய உளவியல்சார்ந்த அவதானிப்புகளை முன்வைத்தார். கொழும்பிலிருந்து வந்திருந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மதுசூதனன் ஈழப் போராட்டம் ஈன்ற இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் போராளிப் பெண்களின் தற்கால வாழ்க்கை நிலைமைகளின் பின்னணியில் வைத்து விளக்கினார். போரும் போராட்டங்களும் உருமாற்றி, முடிவில் அழித்த வாழ்க்கைகளுக்கு ஆறுதல் அளிக்கவல்ல எதுவும், படிப்பினைகள், மாற்று சிந்தனை உட்பட எதுவும் இல்லாத அவல நிலையை மிக கவனமாக சித்தரித்தார் - அவரது பேச்சையும் சிந்தனையையும் ஊடறுத்த கனத்த மௌனமும் பேசியது.
ஈழ யதார்ததங்களை வித்தியாசமான நோக்கில் வைத்து அலசிய இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் தற்கால தமிழகத்தில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றியும் கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. ஷீலு அவர் சார்ந்திருக்கும் பெண்கள் குழு இயற்கை விவசாயத்தைக் கைக்கொண்டதன் பொருளாதார, வரலாற்று பின்னணி குறித்தும், பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள பெண்களுக்கு வாழ்வாதார உரிமைகள் தேவை என்பது பற்றியும் பேசினார். பிரேமா ரேவதி, பெண்கள் சந்திக்கும் சவால்களை அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியது குறித்து பேசினார் - விவசாயம், வனவளம், கடல்வளம் ஆகிய மூன்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவையாக இருக்கும் நிலைபோய் பன்னாட்டு மூலதனக் குவிப்புக்கும் இலாபத்துக்குமானமாக மாறியுள்ள சூழலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார "வளர்ச்சி" என்று சொல்லப்படுவதைக் கொண்டு விளக்கினார் - யாருக்கான, எதற்கான வளர்ச்சி என்பது குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பினார். கல்பனா கருணாகரன் இத்தகைய சூழலில் பெண்களின் வாழ்க்கையை "மேம்படுத்த" அரசு கையாண்டு வரும் சமாளிப்பு செயல்பாடுகளை பட்டியலிட்டு, அவை பெண்களின் கடன்சுமையைகூட்டி அரசை அண்டி வாழும் நிலைமையை நிரந்தரப்படுத்தினாலும், பெண்கள் எவ்வாறு இத்தகைய மாற்றங்களுக்கு முகங்கொடுக்கின்றனர், அவற்றை தமக்கு சாதமாக்கிக் கொள்கின்றனர் என்பது பற்றி பேசினார். கேப்ரியல் டீட்ரிச் இந்து பாசிசத்தின் எழுச்சி, தமிழகத்தில் சில தலைவர்கள் பொறுப்பின்றி இதற்கு ஆதரவாக பேசும் போக்கு, சமயத்தின்பால் பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, அதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது என்று பல்வேறு விஷயங்களை விவாதித்தார்.
சென்னைக்கு வடக்கே உள்ள அரக்கோணம் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் பெண்கள் மத்தியில் வேலை பார்த்து வரும் பர்நாட் பாத்திமா ரேஷன் கடையில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை எதிர்த்தும், தாசில்தாரின் முறைகேடான பாலியல் நடத்தையை கண்டித்தும் போராடிய தாயரம்மா, சென்ஸம்மா போன்றவர்களின் கதையையும் அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் தனக்கு முன்னுதாரணமாக அமைந்ததைப் பற்றியும் பேசினார். கவின் மலர், சாதி கடந்த காதல், மணம், (அ)கௌரவ கொலைகள் பற்றியும் பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கிளைக்கும் சாதியடையாளம் குறித்தும், பிள்ளை பெற்று கொள்ளாது இருத்தல் என்பதன் அரசியல் குறித்தும் பேசினார். சுஜாதா கண்ணகி அறிஞர் அண்ணாவின் எழுத்துகளில் பெண் பிம்பம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, குடும்பம் என்பது எவ்வாறு இன்பம் துய்ப்பதற்கான வெளியாக புதிய வகைகளில் அடையாளப்படுத்தப் படுகிறது, மனைவி-வேசி என்ற பாகுபாடு எவ்வாறு கையாளப்படுகிறது குறித்து விவாதிக்கும் கட்டுரையை வாசித்தார்.
இந்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மூன்று பிரதேசங்களை பற்றியதாக இருந்தன. ஈழம் - நாம் அதிகம் பேசாத மலையகம் உட்பட - தமிழகம், புலம்பெயர் நாடுகள். இந்த மூன்று தளங்களிலும் பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருக்கின்றன, எங்கு வேறுபடுகின்றன, இவற்றை ஓப்பிட்டு பார்ப்பதற்கு தோதான வரலாற்று சூழல், நிகழ்வுகள் என்னென்ன, இனம், மொழி, தேசம் சார்ந்த அடையாளங்களை சாதி, பாலினம், சமயம் என்பன போன்றவை எவ்வாறு ஊடறுக்கின்றன, உழைப்பும் மறுஉற்பத்தியும் பெண்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ள விதங்கள் என்று பல விஷயங்களை உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக இந்த கருத்தரங்கம் அரங்கேற்றியது.
புலம்பெயர் கவிஞர் ஆழியாளின் நூல் வெளியீடு முதல் நாள் அமர்வில் நடந்தது. வெளியீட்டு விழாவுக்கு முன் ஆழியாளின் "கறுப்பி" கவிதையை மையமாகக் கொண்ட அப்பெயரிட்ட நாடகப் பனுவல் சென்னையை சேர்ந்த மரப்பாச்சி குழுவினர் வாசித்தனர். நாடு விட்டு நாடு சென்ற உழைக்கும் வர்க்க தமிழ்ப் பெண்களின் வாழ்வனுபவங்களை பற்றி பேசும் பனுவல் அது. இரண்டாவது நாள் பொது நிகழ்வாக எழுத்தாளர்கள் பாமா, தமிழ்ச்செல்வி, சுகிர்தராணி மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த நாடகத்துறை செயல்பாட்டாளர் யாழினி யோகேஸ்வரன் ஆகியோர் வாழ்வும் படைப்பும் என்ற தலைப்பில் தங்கள் வாழ்க்கை அனுபவம்-படைப்பாக்கம் இவற்றின் இணையும் புள்ளிகள் பற்றி பகிர்ந்துகொண்டார்கள். அமர்வு தொடங்குமுன் பேராசிரியர் அரசு அரங்கில் பேசவிருந்த பெண் எழுத்தாளர்களை பற்றிய ஆழமான அறிமுகவுரையை வழங்கினார். நல்ல இலக்கிய பாடமாக அமைந்த அவரது உரையைத் தொடர்ந்து புதியமாதவி அரங்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
இரண்டு நாட்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டு விவாதங்களை அவற்றின் சாராம்சத்தோடு இயைந்த உணர்வுரீதியான பரிமாணத்தை மொத்த விவாதத்திற்கும் சேர்த்த இந்நிகழ்வு பெரும் மன உந்துதலை ஏற்படுத்தியது.
பின்குறிப்பு
இந்த இரு நாட்களும் நடந்த பகிர்வையும், சிரத்தையான விவாதங்களும் திசைமாறிப் போகும் வகையில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின் இடையீடு இருந்தது. ஈழத்தில் உள்ள நிலைமைகளைப் பேசிய அரங்குகளில் கூட அவருடைய ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை. அங்கு வந்திருந்த பலருக்கு ‘வெள்ளை வான் கதைகள்’ படம் பற்றித் தெரியவும் இல்லை. அப்படம் குறித்து ஊடறு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து பலர்முன் பேச வேண்டும் என்ற கோரிக்கை அமைப்பாளர் எவருக்கும் வரவும் இல்லை. இருந்தும், அவருக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் நாள் அவரது போராட்டம் தன்னுடைய எதிர்ப்பு அட்டையோடு அரங்கில் அமர்ந்திருப்பதும் அவர் கொண்டு வந்த துண்டு பிரசுரத்தை விநியோகிப்பதும்தான். அவற்றை பேராசிரிய வீ. அரசுவே அனைவரிடமும் கொடுத்தார். அவரை அங்கிருந்து வெளியே செல்லுமாறுகூட யாரும் சொல்லவில்லை மாறாக இருக்கையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என்றும் வீ.அரசு கூறினார்.
அரங்கு முடிந்தபின் பிரச்சினை குறித்து அவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அ. மங்கை எடுத்த முயற்சிக்கும் லீனா மறுத்துவிட்டார். பலகாலம் கழித்து இப்படி ஒரு ஈழம் - புலம்பெயர் சூழல் - தமிழகம் என்ற புள்ளிகளில் பெண்கள் கலந்துரையாடுவது அதற்கென பங்கேற்பாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள்வரை தங்கள் சொந்த செலவில் வந்து கலந்துகொண்டது என உருவான ஒரு கலந்துரையாடலை தன் பக்கம் திருப்ப லீனா அவர்கள் காட்டிய முனைப்பை கண்டு கலந்துகொண்டவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.
இரண்டாவது நாள் பொது அரங்கிலும் அவர் அரங்கில் இருக்க யாரும் தடை செய்யவில்லை. ஆனால் சிறப்பான ஒரு பதிவை பாமா அவர்கள் உணர்வெழுச்சியோடு வாசித்து முடித்ததும் லீனா தான் அந்த அரங்கில் பேசவேண்டும் என்ற புதிய கோரிக்கையை எழுப்பினார். அரங்கு முடிந்தபின் அதுகுறித்து பேசலாம் என அரங்கின் தலைவர் புதியமாதவி பலமுறை அவரை வேண்டியும் அவர் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் உரத்து பேசத் தொடங்கினார். பேராசிரியர் வீ. அரசுவும் மேடைக்கு வந்து பேசுவதற்கு தடையில்லை என்றும் பேச்சாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தில் பேசி முடித்துவிட்டால் பேச நேரம் வழங்குவதாக கூறியபோதும் லீனா தன்னுடைய “அமைதியான போராட்டத்தை” நடத்தி கூட்டம் நடக்கவிடாமல் செய்தார். அமைதியாக ஒழுங்கமைக்க எடுத்த முயற்சிகள்பலனற்றுப் போனது. நிலைமை கைமீறியது.
வருந்தத்தக்க முறையில் எங்களை செயல்படவைத்த அந்த “அமைதிப் போராட்டத்தை” ஒருவேளை நாங்கள் அனுமதித்து இருந்தால் மிகுந்த சிரமங்களுக்கிடையே ஒருங்கு திரட்டப்பட்ட ஒரு முக்கியமான கலந்துரையாடல் அரைகுறையாக நிறுத்தப்பட்டு இருக்கும். பேசப்படாத வலிகளும் பேசமுடியாத சூழல்கள் தரும் பேரச்சமூட்டும் நிசப்தமும் பலருக்கு தொடந்திருக்கும்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பேசப்பட்ட அரிய விஷயங்களை விவாதிக்க, மாணவர்கள் இவை போன்ற விவாதங்களில் பங்கேற்க சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி பீடங்கள் வெளி ஏற்படுத்திக் கொடுத்தள்ள சூழலில் தேவையற்ற இடையீடுகள் நடைபெற்றது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இந்த இடையீட்டுக்கு காரணமான ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் பற்றியும் ஆவணப்படத்துக்குரிய அறம் குறித்தும் விவாதிக்க அதற்கென களம் அமைத்து விவாதத்தை வேறு தளங்களில் முன்னெடுப்பதுதான் முறையாகும் என்று ஊடறு றஞ்சியும் ஆழியாளும் கருதினர்.
இப்போது தனது குறுக்கீட்டைக் குறித்துத் திரித்துச் செய்திகளை லீனா வெளியிட்டு வருகிறார். அவர் செய்த வன்முறை (உடல், சொல், செயல் ரீதியாக) பற்றிய பதிவே இல்லாமல் தன்னை ஒரு அப்பாவியாகக் காட்டிக்கொள்வதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் அப்பட்டமான கயமை. அந்த இரு நாள் கலந்துரையாடல் நிகழ்வே அவரது ‘வெள்ளை வான் கதைகள்’ குறித்துத்தான் என்பது போலவும் அந்த சூழ்ச்சியை முறியடிக்கவே தான் அறப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் பதிந்து வருவது நகைப்புக்குரியது. தான் எடுத்த படம் குறித்த மோதலை மட்டும் மையப்படுத்தும் அவரது செயலுக்கும் அதைக் குறித்த வலைப்பதிவுகளில் எந்தவித சிந்தனையும் இன்றி பலரும் தத்தம் தீர்ப்புகளை வழங்கி மகிழும் நிலைமையையும்கண்டு தமிழகத்தில் நிலவும் அரசியல் உணர்வு பற்றி மனம் நோவது தவிர, வேறு வழி இல்லை.
அரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்ட இளம் தோழர் ஒருவர் இலங்கை குறித்து நாம்பொதுவெளியில் அறிய முடியாத பல தகவல்களைக் கேட்டு குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார். உண்மைநிலவரம் அப்படி இருக்க தனி மனித உட்பூசல்களுக்கும் குழுவாத மோதல்களுக்கும் முன்னுரிமை கொடுக்கமுடியாத/ தேவையில்லாத சூழலில் நாம் இயங்குகிறோம். கூட்டுச் செயல்பாடுகளின் அரசியல், தத்துவச்செறிவு, முரண்களை அங்ஙீகரித்த தோழமைக் கனவுகளை அடைகாக்க வேண்டிய கடமையை நினைவில்கொண்டு மேலும் பல பகிர்தல்களை முன்னெடுப்போம் என நம்புகிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.