பொலிகையூர் சு.க சிந்துதாசனின் “கடலின் கடைசி அலை” கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு 17.11.2013 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யா/பொலிகண்டி இ.த.க பாடசாலை மண்டபத்தில் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை ஆ. முல்லைத்திவ்யன் நிகழ்த்தினார். நூலின் வெளியீட்டுரையை பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞமான த. ஜெயசீலன் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் (உரிமையாளர், செல்லமுத்தூஸ் புடவையகம், நெல்லியடி), சிறப்புப்பிரதியை பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சே. செல்வசுகுணாவும் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரைகளை இ. இராஜேஸ்கண்ணன், தானா விஷ்ணு ஆகியோரும் ஏற்புரையை நூலாசிரியர் சு.க சிந்துதாசனும் நிகழ்த்தினர்.
நூலின் பின்னட்டைக் குறிப்பிலிருந்து…
வாழ்வில் என்றாவது ஒருநாள் மீட்சி பெறுவோம் என்றிருந்த சொற்ப நம்பிக்கையும் உருக்குலைக்கப்பட்ட காலங்களின் பதிவுகள் இவை. இழுக்க இழுக்கக் குறையாத நினைவுகள் காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டோடி அகப்பட்ட பொருளெல்லாவற்றையும் தீராத திசையெல்லாம் அடித்துச் செல்வதுபோல் இந்த மக்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். சிதைக்கப்பட்டார்கள். அந்த அலைச்சலும் சிதைவும் அனுபவமும் வலியும் இந்தக் கவிதைகளில் ததும்பி வழிகின்றன.
அவர் அனுபவித்த வலிகளை, தான் சொல்ல நினைத்ததைப் பதிவாக்கியிருக்கிறார். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்துக்கவிதைகளில் புறநிலையான சித்திரிப்பே அதிகம் வெளிவந்துள்ள நிலையில் அகநிலையான சித்திரிப்போடு வந்திருக்கும் இக்கவிதைகள் கவனத்தைக் கோருவனவாகவும் அமைந்துள்ளன. வலிகளின் வழிச்சுமையைக் குறைத்து ஒளியை நோக்கி நகர்வதற்கு இத்தொகுப்பு வழிசமைக்கும் என்று எண்ணுகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.