இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப் இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக்ககவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தளார் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தைஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப் கொடகே பதிப்பகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருது ஆகியனவற்றையும் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஒன்பதாவது எழுத்தாளர் விழா மெல்பனில் நடைபெற்றபொழுது அவர் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டார். அவரது பவளவிழாவை முன்னிட்டு குறிப்பிட்ட எழுத்தாளர் விழாவில் கலை, இலக்கிய சங்கத்தின் சிறப்புவிருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் அன்றையதினம் விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தெளிவத்தை ஜோசப் தமிழ் நாட்டில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த தமிழ் இனி மாநாட்டிலும் கனடா. இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடந்த இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொண்டவர். தெளிவத்தை ஜோசப் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனத்துறையில் நூல்களை எழுதியிருப்பதுடன் இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பையும் வழங்கிய முன்னோடி படைப்பாளியாவார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.