‘அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதும்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’
என்ற அடிப்படையில் எழுந்த சிலப்பதிகாரம் சமணத் துறவியான இளங்கோவடிகளின் கவித்துவ ஆற்றலில் மலர்ந்தது. சேர,சோழ, பாண்டிய ஆட்சிகளை உள்ளடக்கி மூன்று அத்தியாயங்களில் 5270 அடிகளில் சிலப்பதிகாரம் விரிகிறது. உலகில் உள்ள இலக்கியங்கள் அனைத்திலும் சிறப்புப் பெற்ற இலக்கியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம் என ‘கமில் சுவெலபிள்’ என்ற அறிஞர் கூறியிருந்தார். தமிழில் புகழ்மிக்க ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பெருமிதங்கொண்டார் பாரதி.
கோவலனை மணந்த கண்ணகி பின்னர் நடனமங்கையான மாதவியின்பால் கோவலன் ஈர்ப்புண்டு, தனது செல்வத்தை இழந்து மீண்டும் தன் கணவன் தன்னிடம் வந்து சேர்ந்தபின் மதுரைக்கு கணவனோடு செல்லும் பயணம் கோவலனின் இறுதிப் பயணமாகிறது. பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லனினால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனினால் கொலை செய்யப்படுகின்றான். தன் கணவன் கள்வன் அல்ல என்பதை பாண்டிய மன்னனுக்கு நிரூபித்து, தனது கற்பின் வல்லமையினால் மதுரையை எரித்த மாதரசியின் கதைதான் சிலப்பதிகாரம். இத்தகைய மிகச் சிறந்த காவியத்தை இந்தியாவில் நாட்டியங்களுக்கான பாடலை தானே இயற்றி இசையமைத்து இறுவெட்டுகளாக வெளியிட்டு நாட்டியத்துறையில் தனிமுத்திரை பதித்து வருபவரும், இந்திய நாட்டியத்துதுறையில் மிகப் பிரபல்யமாகப் பேசப்பட்டு வருபவரான நாட்டியப் பேரரசு ஆர். முரளீதரனின் நெறியாள்கையில், இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளுக்கெல்லாம் சென்று நாட்டிய விருந்து அளித்து வருபவருமான கலைமாமணி உமா முரளி ஆகியோருடன் இணைந்து லண்டன் வாழ் ஆசிரியர்களான நாட்டியவிசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா, ஸ்ரீமதி சாந்தி பிரதாபன் ஆகியோரும் முக்கிய பாத்திமேற்றிருந்தார்கள்.
நாட்டியப் பேரரசு ஆர் முரளீதரன் கோவலனாகவும், லண்டன் வாழ் நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா கண்ணகியாகவும், கலைமாமணி உமா முரளி மாதவியாகவும், லண்டன் நாட்டிய ஆசிரியை ஸ்ரீமதி சாந்தி பிரதாபன் பாண்டிமாதேவியாகவும்... போன்ற முக்கிய பாத்திரங்களை ஏற்று அவற்றிற்கான குணசித்திரங்களை மிகச் சிறப்பாக நாட்டியத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். லண்டனில் நாட்டிய ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா, ஸ்ரீமதி சாந்தி பிரதாபன், ஸ்ரீமதி விநோதினி சண்முகநாதன், ஸ்ரீமதி சாந்தி தர்மேந்திரா, ஸ்ரீமதி மேனகா ரவிராஜ், கலைமாமணி சாமுந்தீஸ்வரி ஆகியோரின் நாட்டிய மாணவர்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து பல்வேறு பாத்திரங்களை ஏற்று அற்புதமாகச் சித்தரித்திருந்தார்கள்.
மனிதநேயம் அறக்கட்டளை’ என்ற அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற ‘சிலப்பதிகாரம்’ என்ற அழகிய காவியம் பார்வையாளர்களை வேறொரு உலகிற்கே அழைத்துச் சென்றிருந்தது என்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறந்த காப்பியத்தின் சிறப்புக்களை நவஜோதி ஜோகரட்னம் தொகுத்து வழங்கியிருந்தார். ‘சிலப்பதிகாரம்’ நாட்டிய நாடக வடிவில் இந்தியக் கலைஞர்களுடன் லண்டன் வாழ் கலைஞர்களும் இணைந்து முன்னெடுத்தமை மிகவும் பாராட்டுக்குரிய விடயம். தொடர்ந்தும் இது போன்ற வௌ;வேறு கலைவடிவங்கள் இத்தகைய கலைஞர்களால் பரிணமித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென வாழ்த்துகின்றது மனம்...!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
31.12. 2012