பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கப்பட்டார். இவரது 'இளங்கோவன் கதைகள்" சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற பெயரில் புதுடில்லியிலுள்ள பிரபல இந்தி மொழிப் பதிப்பகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது. அண்மையில் (27 செப்டம்பர் 2012) புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'புலச் சிதறலுக்குள்ளானோரின் குரல்கள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில்ää 'இளங்கோவன் கதைகள்" இந்தி மொழிப் பதிப்பான 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. இந்நூல் குறித்து இந்தி மொழிப் பேராசிரியர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் கலாநிதி என். சந்திரசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்தி மொழிப் பேராசிரியரும் நூலினை இந்தியில் மொழிபெயர்த்தவருமான பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். 'ஈழத்து இலக்கியத்தில் சிறுகதை வளர்ச்சி" குறித்து நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் சிறப்புரையாற்றிச் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்தியாவின் பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் 'பவளாயி" நாவலை 'உஸ்பெஸ்க்" மொழியில் மொழிபெயர்த்த உஸ்பெஸ்க்தான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் லோலா மக்துபாää இலண்டனைச் சேர்ந்த நாவலாசிரியர் இரா. உதயணன்ää மற்றும் இந்தி மொழிப் பேராசிரியர்கள் பலரும் இக்கருத்தரங்கில் உரையாற்றினர். 'இளங்கோவன் கதைகள்" ஏற்கனவே இலங்கை இலக்கியப் பேரவை - இலக்கிய வட்டத்தின் விருதினை (2006) பெற்றதாகும். ஈழத்து எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத் தொகுதி (15 கதைகள்) இந்தி மொழியில் முதல்முறையாக வெளியிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புதுடில்லித் தமிழ்ச் சங்கத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிலும் வி. ரி. இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். டில்லியிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இளங்கோவன் சுற்றிப்பார்க்க ஒழங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வுகளுக்குக்குப் பின்னர் அக்டோபர் 2 -ம் திகதி நாமக்கல்லில் நடைபெற்ற நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் பரிசளிப்பு விழாவிலும் வி. ரி. இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரது மனைவி பத்மா இளங்கோவனுக்கு வழங்கப்பட்ட சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினையும் மனைவியின் சார்பில் பெற்றுக்கொண்டார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.