ஆய்வு அறிமுகம்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியத்திற்கு இணையில்லா வளம் சேர்ப்பவை தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களாகும். அவற்றுள் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த இலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று. இது தமிழ் இலக்கியத்திற்கே உரிய சிறப்பான இலக்கியமாகத் திகழ்கின்றது. “12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலே முதலில் தோன்றிய பிள்ளைத்தமிழ் ஆகும்”1. “இன்று மக்கள் இயக்கத் தலைவர்களான காந்தியடிகள், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ம.பொ.சி. ஆகியோர் மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்பெற்றுள்ளது”2 என்று கூறுகிறார் கு.முத்துராசன் அவர்கள். இவர் கூற்றின்படி இன்றளவும் வாழ்ந்து வரும் ஓர் இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சிறப்பு மிக்க பிள்ளைத்தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்ட நூல் ‘நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்’ ஆகும். இப்பிள்ளைத்தமிழ் கற்பனைச் சிறப்பு, அணிநலன், பொருள்நலன், மொழிநடை முதலிய இலக்கியச் சிறப்புகளோடு புராணச் செய்திகள், இறையுணர்வு, தமிழுணர்வு, சைவசித்தாந்தக் கருத்துக்கள், தலவரலாற்றுக் குறிப்புகள் போன்ற பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய சிறந்த நூலாகும். என்றாலும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அணிச்சிறப்பினைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் - அறிமுகம்

பெரும்பாலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்துப் பருவங்களையும், பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் என நூறு பாடல்களையும் கொண்டு அமையும். சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பருவத்திற்கு ஒரு பாடல், மூன்று பாடல்கள், ஐந்து பாடல்கள் என முப்பது பாடல்களைக் கொண்டோ, ஐம்பது பாடல்களைக் கொண்டோ அமைவதுண்டு. இது போலவே பாடல் எண்ணிக்கை, பருவஎண்ணிக்கை முதலியவற்றில் மிகுதியாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களும் ஒரு சில உள்ளன. அவற்றுள் ஒன்று தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் நூலாகும். இதைப் பாடியவர் நல்லதுக்குடி கிருட்டிணையர் என்ற புலவராவார். இந்நூல் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், பந்தாடல், பொன்னூசல், குதலைமொழியாடல், பாவை விளையாடல், கழங்காடல், அம்மானை, புதிய நீராடல் என பதினைந்து பருவங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தனை பருவங்கள் அமைந்த பிள்ளைத்தமிழ் நூல் இதுவொன்றே ஆகும். இந்நூல் காப்புப் பருவத்தில் பதினோரு பாடல்களும் செங்கீரை தொடங்கி பொன்னூசல் மற்றும் நீராடல் வரை பத்துப் பாடல்களும் பாவை விளையாடலில் மூன்று பாடல்களும் குதலை மொழி, கலங்காடல், அம்மானை முறையே இரண்டு பாடல்களும் என மொத்தம் 120 பாடல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இந்நூல் அளவில் பெரியதாகவும், அமைப்பில் புதுமையானதாகவும் போற்றப்படுகிறது.

அணி நலன்

அணி என்பது பொதுவாக அழகு எனப் பொருள்படும். பவணந்தி முனிவர்,

"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத் தோள் நல்லார்க்கு அணியும் போல்"3

என்று சுட்டுகிறார். தண்டியலங்காரம் கூறும் அணிகள் இலக்கியத்திற்கு அழகு செய்வனவாகும். கவிஞர் தான் கருதிய பொருளைப் பிறருக்கு எளிதாக உணர்த்தவும் அவர்களின் மனதை ஈர்க்கவும் பயன்படுத்தும் உத்தி முறைகளில் சிறந்தவை அணிகளாகும். “கவிஞர்களுக்குத் தம் கருத்தைத் தெளிவாகவும் விளக்கமாகவும் உரைத்தற்குத் துணையாக இருப்பவை அணிகள் என்பார் சுப்புரெட்டியார்”4. இவ்வணிகள் படிப்பவர்களுக்கு மிகுந்த இன்பத்தைத்தரவல்லன. தண்டியலங்கார ஆசிரியர் அணிகளை சொல்லணிகள், பொருளணிகள் என இரண்டாகப் பிரித்துக் கூறுகின்றார். இவர் குறிப்பிடும் அணிகளில் பல தி.சி.பி. தமிழில் அமைந்து அழகு செய்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன

1. உவமை    5. உயர்வு நவிற்சி
2. உருவகம்    6. சிலேடை
3. தற்குறிப்பேற்றம்    7. வேற்றுமையணி
4. இயல்பு நவிற்சி 8. சொற்பொருள் பின்வருநிலையணி – என்பனவாகும்.

உவமை

“உவமை அணி அணிகளின் தாய் என்று அழைக்கப்படுகிறது. உவமை என்பது கவிதைச் சுவையை மிகுவிக்கும் ஒரு சாதனமாகச் செயல்படுகிறது. கவிஞர்கள் உவமையைக் கையாளுவது பொருளை விளக்கவும் நீதியை வற்புறுத்தவுமே”5. “அணிகளில் அடிப்படையானதும் மிகுந்த பயிற்சி உடையதும் இலக்கியத்திற்கு இன்றியமையாததும் பல்வகை பொருளணிகளின் தோற்றக்களனாய் அமைவதும் உவமையாகும்”6. மேலும் “உவமை என்பது கவிஞன் கையில் உள்ள விளக்கு. பொருள் என்பது அவன் மக்களுக்குக் காட்டுகின்ற புறப்பொருள். கவிஞன் தன் கையிலுள்ள விளக்கால் புறப்பொருளை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றான்”7 எனவும் கூறப்படுகிறது. தி.சி.பி. தமிழில் இந்த உவமை அணியை ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இவரின் உவமைகள் மரபு உவமை, இயற்கை உவமை, தொகை உவமை, உவம உருபுகள் எனப் பல வகைகளில் பிரித்துக் காணத்தக்கனவாகும்.

மரபு உவமை

ஒரே எடுத்துக்காட்டைக் கூறுதல் பொதுவாக தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பொது இயல்பு எனலாம். பழங்காலம் தொட்டு இன்று வரை வழிவழியாக ஒன்றையே ஒன்றிற்கு உவமையாகக் கூறுவதே மரபு நிலை உவமையாகும். தொல்காப்பியர் உவமப் போலியில் குறிப்பிடும், ‘இதற்கு இதுதான் உவமை’ என்று கூறுவது மரபு உவமத்திற்குப் பொருந்தும் எனலாம். மகளிரின் கண்களுக்குக் குவளை, நெய்தல், மீன், வேல், மான், வண்டு போன்றவற்றை உவமையாகக் கூறுவது மரபு. மகளிரின் இடைக்குக் கொடி, துடி, நூல் போன்றவற்றையும் நடைக்கு அன்னம், பிடி ஆகியவற்றையும் முகத்திற்கு தாமரை, நிலவு ஆகியவற்றையும் உவமையாகப் பயன்படுத்துவது மரபு. தி.சி.பி. தமிழிலும் ‘பிடி நடை’ (பா.4), ‘விற்போல் நுதலால்’ (பா.29), ‘பளிங்கின் வெளுப்பான’ (பா.39), ‘முத்த நகை’ (பா.44), ‘முகில் அளகாடவி’ (பா.92) என்பன போன்ற பல மரபு உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இயற்கை உவமை

மனிதனின் முயற்சியும் ஆக்கமும் இன்றி இயல்பாக அமைந்தவற்றை இயற்கைப் பொருள்கள் என்று கூறலாம். இவ்வியற்கையை ஒன்றிற்கு உவமையாகக் கூறுமிடத்து அதனை இயற்கை உவமை என்பர். இவை மட்டுமல்லாது இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்ச்சியை உவமையாகக் கூறுமிடத்தும் இயற்கை உவமை அமைவதுண்டு.

மூங்கில்கள் உரசுவதால் எழும் தீ மூங்கிற்காடு முழுவதையும் அழிப்பது இயற்கை. இவ்வியற்கை நிகழ்ச்சியை கம்பராமாயணத்தில் அரக்கர் குலத்தையே அழிக்கும் சூர்ப்ப நகையின் தன்மைக்கு ஒப்பிடுகிறார் கம்பர்8.

கிருட்டிணையர் அவர்களும் இதுபோன்று பல இயற்கை உவமைகளை இந்நூலில் படைத்துள்ளார். ‘நிகழ் பிறை சுடர்போல் முக்கீற்றது’ (பா.3), ‘மிடறு திருந்திய குரலிசை வண்டினம் மடலறு பங்கையும் போல்’ (பா.4), ‘தயிரில் பிறைபோல்’ (பா.43), ‘குடகாவிரி கங்கையள்’ (பா.59), ‘செறியும் மலரிடை வண்டு தேனுண்டு மீண்டும் திரும்பித் திரும்பி வரல்போல்’ (பா.93) எனப் பல இயற்கை உவமையை ஆசிரியர் பல இடங்களில் கையாண்டுள்ளார்.

தொகை உவமை

உவமையில் அமையும் உருபுகளை நீக்கி உவமையையும் பொருளையும் தனித்தனியே காட்டுவது தொகை உவமை எனப்படும். ‘முளறி மலர் விரல்’ (பா.36), ‘பொற்பாதம்’ (பா.39), ‘குமிழையே குறுதி நிற்கும்’ (பா.51), ‘கமல மைக்கண்’ (பா.51), ‘தேயா மதியே’ (பா.52), ‘கொங்கை மலை’ (பா.92) போன்ற பல தொகை உவமைகள் இந்நூலில் பயின்று வருகின்றன.

உவம உருபுகள்

உவமையையும் பொருளையும் இணைக்கும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். தொல்காப்பியர் 38 உவம உருபுகளைக் குறிப்பிடுகின்றார். அவற்றுள் ‘என்ன’, ‘என’, ‘நிகர’, ‘போல’ அனைய என்பன போன்ற உவம உருபுகளைக் கிருட்டிணையர் இப்பிள்ளைத் தமிழில் கையாண்டுள்ளார். ‘உமியும் தவிடும் முளையும் போல்’ (பா.43), ‘நின் பெருங்கருணை போல் பெருகும் நீராடுக’ (பா.119), ‘குடம் நிகர் கொங்கையள்’ (பா.59), ‘நாடகக் கணிகை நிகர் கோலக் கபால மயில் நடனங்கள்’ (பா.115), ‘கண்கள் கயல் என்ன’ (பா.112), ‘நம் பரமன் விளையாடல் எனவே’ (பா.114), ‘குண் கொண்ட வேல் அனைய இரு கண்கள்’ (பா.112).

உருவகம்

உவமை அணிக்கு அடுத்து சிறப்பு பெறுவது உருவக அணியாகும். உவமை அணியின் வளர்ச்சி நிலையே உருவகமாகும். உவமை முதல் நிலை அதன் முந்திய நிலை உருவகமாகும்9. உருவகத்தை பொருள் உவமையோடு ஒன்றி விடுவது என்று கூறலாம்.

“உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித்
தொன்றென மாட்டின்அஃ துருவக மாகும்”10

என உருவகம் பற்றித் தண்டியலங்காரம் கூறுகிறது. “பிரிதொரு பொருளோடுள்ள ஒப்புமையின் அழகும் நெருக்கமும் காரணமாக அப்பொருளாகவே குறிப்பிடப்படும் நிலையில் உருவகம் உருவாகின்றது”11. இவ்வுருவகங்களை

1. தொகை உருவகம் 2. விரி உருவகம்

என இரண்டாகப் பிரித்துக் கூறலாம்.

தொகை உருவகம்

பொருள், உருவகம் இரண்டையும் இணைக்கும் உறவுச் சொற்கள் இல்லாமல் தொகைப்படுத்திக் கூறும் பொழுது அவை தொகை உருவகம் எனப்படுகிறது. தி.சி.பி. தமிழில் ‘இருவினைக் களிறோட’ (பா.3), ‘ஆலிலைப் பூந்தொட்டில்’ (பா.24), ‘உளக்கோயில்’ (பா.39), ‘வித்தின் பொருளே’ (பா.54), பச்சை மயிற்பெடையே, பச்சை மடப்பிடியே’ (பா.80) போன்ற பல தொகை உருவகங்கள் பயின்றுவருகின்றன.

விரி உருவகம்

உருபுகள் வெளிப்படையாக விரிந்து நிற்குமாயின் அஃது விரி உருவகம் எனப்படும். ‘ஆக’, ‘ஆகிய’, ‘என்னும்’, ‘எனப்படும்’, என்கின்ற உருபுகள் பிரிந்து நிற்கும் பொழுது அவை விரி உருவகமாகின்றன. ‘பேருருவமருவம் எனப்பெறு நவபேதத்தின்’ (பா.1), ‘திருஞான சபைதனில் சிற்கத்தி ஆகியே’ (பா.2), ‘முக்திக்கு வித்தாகி ஞானக் கொழுந்தாகி முதிரும் ஓர் சுருதியாகி’இ ‘சித்திதரு சந்தமும் சோதிடமும் ஆகியே’ (பா.10), ‘வீடருள் நற்றாய் எனும்’ (பா.106) என்பன போன்ற விரி உருவகங்களும் அமைந்துள்ளன.

தற்குறிப்பேற்றம்

இயல்பாக நிகழ்கின்ற நிகழ்ச்சி மீது கவிஞர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றம் எனப்படும். கதை மாந்தரின் இன்பத்திற்காக மகிழ்ந்து துன்பத்திற்காக அவலமுறும் கவிஞனின் குரல் இத்தற்குறிப்பேற்றத்தை உத்தியாகக் கொண்டு புலப்படுகின்றது எனலாம்12.

“வலையினில் செங்கயலை உய்க்கும்
பிணையை அச்சம் புரியும்
மாவடுவை உப்பின்பட அவிக்கும்
கடுவினைப் பின் தொடருமே
அலையினைச் சென்று அலைய வைக்கும்” (பா.51)

இப்பாடலில் மீன் வலையில் அகப்படுவதும், மான் அஞ்சுவதும், மாவடு உப்பில் ஊறிப்போவதும், நஞ்சு உடல் முழுவதும் பரவுவதும், கடல் அலைவதும், இயற்கையாக நடைபெறும் செயல்கள். அம்மையின் கண் அழகு காரணமாகவே மீன் தன்னை மாய்த்துக்கொள்ள வலையில் விழுந்ததாகவும், மான் அஞ்சியதாகவும், மாவடு ஊரியதாகவும், நஞ்சு ஓரிடத்தில் நில்லாது ஓடியதாகவும், கடல் அலைவதாகவும் கவிஞர் தன்குறிப்பினை ஏற்றிப் பாடியுள்ளார்.

இயல்பு நவிற்சியணி

எவ்வகைப் பொருளையும் அல்லது செயலையும் உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களால் அமைவது இயல்பு நவிற்சியணி எனப்படும். அதாவது மிகைப்படுத்தாது, உதாரணம் இல்லாது, உருவகப்படுத்தாது உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறும் தன்மையுடைது என்பர். இது தன்மை நவிற்சியணி என்றும் கூறப்படும்.

“முட்டாமரைப் பொகுட்டு அரசனும் குரைகடல்
முகட்டு அரவணைச் செல்வனும்
முக்கண் திருக்கடவுளும் கண்டு” (பா.33)

உயர்வு நவிற்சியணி

உயர்வு நவிற்சியணி வெறும் கற்பனையே எனலாம். கவிஞன் தான் கண்ட காட்சியில் தன் எண்ணங்களைத் திணித்து மிகைப்படுத்திக் கூறுவான். “கற்போரும் வியந்து மகிழும் படி பெரியதை மிகப் பெரியதாகவும், சிறியதை மிகச் சிறியதாகவும் திறமையுடன் கூறும் அழகினில் அமையும் இயல்பினது உயர்வு நவிற்சியணி”13. தண்டியலங்காரம் இதனை அதிசியவணி என்று குறிப்பிடுகிறது.

“அடிமுடியும் ஆயிரத்து எட்டு மாற்றுச்
செம்பொன் அழகுறச் சுவர் இயற்றி
அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு

நடுவு அசையாத தூண் நிறுத்தி

இடையில் அறைவீடு பதினாலென வகுத்து
முகடு இனிய செம்பொற்கற்றை இட்டு
எழுகுதிரை கட்டி இரவும் பகலும் எரியவே
இருவிளக்கு ஏற்றி வைத்துப்
படியிலகு பதவிப் பழங்கலம் அடுக்கி
விளை பச்சைநெல் இருநாழியில்
பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
அடுக்களைப் பல அடுப்பும் சமைப்பத்
திட மருவு பெருவீடு கட்டி”    (பா.72)

பொன்னால் சுவராக்கி, மகாமேருமலையைத் தூணாக்கி, செம்பொன்னால் கூரை அமைத்து, சூரிய சந்திரனை விளக்குகளாக்கி, உலகையே கலமாக்கி, இருநாழி நெல் கொண்டு உலக உயிர்களின் பசியைப் போக்க பெரிய அடுப்புகளைக் கொண்ட அடுக்களையோடு செய்யப்பட்ட பெருவீடு என்று உயர்வு பட கூறியிருப்பது புலவரின் புலமைக்குச் சான்றாக அமைகிறது.

சிலேடை அணி

ஒரு சொல்லோ தொடரோ பல பொருள் தரும் வகையில் அமைவது சிலேடை அணியாகும். தண்டியலங்காரம் இதனை,

“ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்”14

எனக் கூறுகிறது.

“கற்பகத் தருவுமே கவடுளது பதுமநிதி
கள்ளமுற்றது தேனுவும் கட்டுமுட்
டுண்டது” (பா.34)

இப்பாடலில் வரும் கற்பக மரம் கவடுள்ளது எனும்போது கிளைகளை உடையது, குற்றமுடையது எனவும் பதுமநிதி கள்ளமுற்றது எனும்போது அரக்கர்களால் பலமுறை களவாடப்பட்டது, கள்ளத்தனமாக உள்ளுக்குள் தேனையுடையது எனவும் இருபொருள் தரும் வகையில் பாடப்பெற்றுள்ளது.

வேற்றுமையணி

ஒப்புமையுடைய இரு பொருள்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்வது வேற்றுமையணி எனப்படும். தி.சி.பி. தமிழில் ஒரு சில இடங்களில் இவ்வணியை ஆசிரியர் படைத்துள்ளார்.

“கனல் விளைக்கும் கிளையின் முத்தம்
கதழ் எரிக்கண் பொரியுமே
கடுநடைச் செம்புகர் முகத்தின்
கரியின் முத்தம் கரியுமே”    (பா.48)

என்று சிவகாமியம்மையின் முத்தத்திற்கு மூங்கில் முத்து, யானையின் கொம்பில் தோன்றும் முத்து, மேகமுத்து, மதிமுத்து, கரும்பின் முத்து, தாமரை நீர் முத்து இவை யாவற்றையும் உவமையாகக் கூறுகின்றார். பின் பாடலின் இறுதியில்

“தனது முத்து அங்கு உனது முத்தம்
தருக முத்தம் தருகவே! (பா.48)

என்று உன் முத்தமே உரிமையுடையது, குற்றமற்றது என வேற்றுமையையும் எடுத்து மொழிகின்றார்.

சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பலமுறை வருவதாகும்.

“முத்த நகையால் முத்தம் நின்பால்
முகமாமதியால் முத்தம் நின்பால்
முகிற்கூந்தலினால் முத்தம் நின்பால்
முலை யானையினால் முத்தம் நின்பால்
நத்தார் களத்தால் முத்தம் நின்பால்” (பா.44)


வரிகள் தோறும் முத்தம் நின்பால் என்ற சொற்களும் முத்து உனக்கு உரிமையுடையது என்ற பொருளும் மாறாமல் பலமுறை வந்துள்ளன. பருவங்கள் தோறும் இவ்வணியைப் புலவர் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தி.சி.பி. தமிழில் அணிச்சிறப்பு மிக்க பல பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. எட்டு வகையான அணிகளை இந்நூலில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். உவமையணியை மரபு நிலையிலும் புதுமைத் தன்மையோடும் படைத்துள்ளார். இயற்கை நிகழ்ச்சியை பல இடங்களில் உவமையாகக் கையாண்டுள்ளார். உவம உருபோடும், அல்லாமலும் பல உவமைகளைப் படைத்துள்ளார். உருவகங்களை தொகை உருவகம், விரி உருவகம் என்ற இரு நிலைகளில் கையாண்டுள்ளார். பாடலுக்கு சுவை கூட்டும் தற்குறிப்பேற்ற அணி, உயர்வு நவிற்சியணி ஆகியவற்றையும் தம் பாடல்களில் தந்துள்ளார். ஒரு பாடல் மட்டும் சிலேடையணி பெற்று வருகிறது. முத்தப்பருவத்தில் பல பாடல்களை வேற்றுமையணியில் படைத்துள்ளார். மேலும் இயல்பான தன்மையை விளக்க இயல்பு நவிற்சி அணியையும், பருவங்கள்தோறும் சொற்பொருள் பின்வருநிலையணியையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வணிகள் அனைத்தும் தி.சி.பி. பிள்ளைத்தமிழ் நூலுக்குச் சிறப்பைத் தருவதாகவும் படிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்துள்ளன.

அடிக்குறிப்புகள்

1. கு.முத்துராசன், சைவப்பிள்ளைத்தமிழ் - ஒரு திறனாய்வு, ப.36
2. கு.முத்துராசன், பிள்ளைத்தமிழ் இலக்கியம், ப-234
3. நன்னூல், எழுத்ததிகாரம், சிறப்புப்பாயிரம் (நூற்பா-9)
4. ந.சுப்புரெட்டியார், கவிதையனுபவம், ப.209
5. சிவ ஞான சுவாமிகள், சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள், ப.19
6. சா.வே.சுப்பிரமணியன், கம்பனின் இலக்கிய உத்திகள், ப.212
7. சு.சாமி ஐயா, சிவஞான முனிவரின் காஞ்சிப்புராணம் ஓர் ஆய்வு, ப.238
8. வான்தொடர் மூங்கில் தந்த வயங்கு வெந்தீ இது என்ன
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா அமைத்து நின்றாள்
கம்பராமாயணம், சுந்தரகாண்டம் - 2940
9. ரா.சீனிவாசன், சங்க காலத்தில் உவமைகள், ப.5
10. தண்டியலங்காரம், நூற்பா – 36
11. ச.வே.சுப்பிரமணியன், கம்பனின் இலக்கிய உத்திகள், ப.287
12. மேலது, ப.309
13. கே.இராஜகோபாலச்சாரியார், இலக்கண விளக்கம், ப.93
14. தண்டியலங்காரம், நூற்பா - 76

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R