சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஓர் அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக பெண்களது நலன், வளர்ச்சி அபிவிருத்தி என்பவற்றில் பங்கெடுக்கும் பல அரச அமைப்புக்களும், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது அரச அங்கீகாரத்துடன் பதியப்பட்ட முற்று முழுதாக பெண்களால் நிருவகிக்கப்படும் ஒரு பெண்கள் அமைப்பாகும். இவ் அமைப்பானது பெண்களது உளநலம், வாழ்க்கைத்தரம், என்பவற்றை விருத்தி செய்யும் பொருட்டும் பாரபட்சமாக பெண்களை நடாத்தும் சமூகத்தில் சக மனிதர்களாய் பெண்களை உணரச் செய்யவும், வன்முறையற்ற ஒரு சமூகத்தினை உருவாக்கும் நோக்குடனும் இன்றுவரை பரந்ததும் விரிந்ததுமான பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றது.
1990களில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பயங்கரவாத யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான அகதி முகாம்கள் உருவாகின. இம் முகாம்களில் குறிப்பாக பல நூற்றுக்கணக்கான பெண்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிப்புற்றவர்களாகக் காணப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக 1990 செப்ரெம்பரில் நாட்டின் பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த பல சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் கொழும்பில் ஒன்று கூடி கலந்துரையாடல் செய்தனர்.
இக் கலந்துரையாடலின்போது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் இப்பெண்களை பல வழிகளிலும் வலுவுள்ளவர்களாகவும், சுயமாக சிந்தித்துச் செயற்படக்கூடியவர்களாகவும், உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இப்பெண்களுக்கான ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டது. இதன் விளைவாக உருவாகியதே சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
இவ்வகையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெயர்ந்த பெண்களின் மீள் அபிவிருத்திக்காக 1991 ஆம் ஆண்டு கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பே சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஆகும். இவ் அமைப்பின் ஆரம்பக்கட்ட முயற்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ், முஸ்லிம் பெண்களதும் சிறுவர் சிறுமியர்களதும் உடல், உள சுகாதாரத்திலும் கவனம் செலுத்துவதாய் அமைந்தது. இதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை நிறைவேற்றும் முகமாக 1994இல் மட்டக்களப்பில் தனது நிரந்தர நிலையத்தை அமைத்து இன்றுவரை செயற்படுகிறது.
இவ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களாக செயற்பட்ட சுனிலா அபயசேகர, சித்திரலேகா மௌனகுரு, அம்மன்கிளி முருகதாஸ், ஒட்றிசறிபேரா, சரளா இமானுவேல், வாசுகி ஜெயசங்கர், போன்றவர்களே இத்தகைய செயற்பாடுகளை இன்னும் முன்னெடுத்துச் செல்ல வழியமைத்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நோக்கும் இலக்கும்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது பின்வரும் நோக்கமும், இலக்கும் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
1. பெண்களை சகல துறைகளிலும் வலுவுள்ளவர்களாக்க உழைத்தல்.
2. பெண்கள் மத்தியில் சமூகத்தைப் பற்றிய அறிவையும் சிந்தனைகளையும் வளர்ப்பதுடன், அவர்களிடையே பொறுப்பையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்புதல்.
3. பெண்களுக்கு சமூகத்திலே ஏற்படும் பிரச்சினைகளை இனங்கண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு இயன்றளவு ஒத்துழைப்பை வழங்கல்.
சூரியாவினால் மேற்கொள்ளப்படும் பெண்களுக்கான சேவைகள்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது பல்வேறுபட்ட தளங்களிலும் பெண்களுக்கான சேவையை வழங்குகிறது. குறிப்பாக 1994இல் இருந்து இன்று வரை மட்டக்களப்பில் வாழும் பெண்களுக்கு தனது சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் யுத்தங்கள், இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கு உதவுதல், பாலர் பாடசாலைகளை அமைத்தல், பல வருடங்களாக சிறையில் இருக்கும் பெண்களுக்கும், ஆண் உறவினர்களுக்கும் சிறையில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காகவும், விடுதலை செய்யப்பட்ட பின்னும் இயன்ற உதவிகளை பல வழிகளிலும் வழங்குதல், பிரசவித்த தாய்மார்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் உதவுதல், போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குதல், பெண்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக கடனுதவி வழங்குதல், பெண்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை வழங்குதல், சமூகத்தில் இருக்கின்ற பெண்கள் தொடர்பான பார்வைகளை கலை, இலக்கிய நிகழ்வுகளின் ஊடாக வெளிப்படுத்துதல். அந்தவகையில் இலக்கியச் செயற்பாட்டில் 'பெண்' சஞ்சிகை முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது. இவ்வாறான காத்திரமான வேவைகளை சூரியா பெண்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கிறது.
'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்
'தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
உங்கள் முன் பிரசன்னமாயுள்ளேன்'
என்னும் மகுடவாசத்தினைக் கொண்டு பெண்ணைப் பிரதிபலிக்கும் இதழாக 'பெண்' இதழ் திகழ்கிறது. பெண்ணிலைவாதம், பெண்விடுதலை பற்றிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் எல்லா மட்டங்களிலும் வெளிப்படுத்தும் நோக்கில் 1996 முதல் இன்று வரை காத்திரமான படைப்புக்களைத் தாங்கி வெளிவருகிறது. பெண்களை எழுத்துத் தளத்திற்குக் கொண்டு வருவதும் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாக அமைகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிவரும் பெண்களுக்கான தனித்துவமான இதழ் என்னும் பெருமையுடையது. காலம் காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்களின் மன உணர்வுகளுக்கு இலக்கிய வடிவம் கொடுத்தது. பெண்கள் தங்களது மன உணர்வுகளை கட்டுரைகள், கவிதைகள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள். 'பெண்' இதழ் பெண்நிலைவாதிகள்மீது பலரும் கொண்டுள்ள அச்சத்தினை தவிர்த்து சமூகங்களில் பெண்களின் ஆளுமைகளை வெளிப்படுத்திய பெருமைக்குரியது.
பெண்களை எழுத்துத் தளத்திற்குக் கொண்டு வந்து பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்து பெண் எழுத்தாளர் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியது. புதுமுக எழுத்தாளர்களுக்கும் குறிப்பாக பெண் எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது. எல்லாக் கோணங்களிலும் பெண்ணின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது. அரசியல் பற்றிய விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தியதோடு அரசியல் என்றால் என்ன? என்பது பற்றிய பெண்நிலைப் புரிதலை வாசகர் முன் வைக்க வழியமைத்தது. இவ்வாறு 'பெண்' இதழ் பெண்களை மீளமையப்படுத்தும் முயற்சியையும் பெண்களது இயக்கத்திற்கு நிலையையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ் இதழ் வெளிப்படுத்தும் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் மூலம் உறுதியான கருத்தினை, முடிவினைத் தெரிவிப்பனவாகவும் பெண்களை விழிப்பூட்டுவதாகவும் அமைந்தது.
'பெண்' இதழில் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம், வில்லுப்பாட்டு, துணுக்குகள், நேர்காணல்கள், பெண் எழுத்தாளர் பற்றிய அறிமுகம், அவர்களுடனான உரையாடல்கள், அனுபவங்கள், போன்றன வெளிவந்தன. இவ்வாறான இலக்கிய அம்சங்கள் பெண்களின் வறுமை, ஒடுக்குமுறை, அடிமைத்தனம், ஏமாற்றம், தலமைத்துவம், கலாசார நிலை, குடும்பச்சுமை, யுத்த காலச் சூழலில் பெண்களின்நிலை போன்றவற்றை கருப்பொருளாக் கொண்டிருந்தன. இவ் இலக்கிய அம்சங்கள் பெண்களை மையப்படுத்தி மாத்திரம் வெளியிடப்படுவதால் தமது குடும்ப சூழ்நிலை காரணமாக பெண்கள் ஆக்கங்களை தந்துதவுவதில் காலம் தாழ்த்துகின்றார்கள்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் பெண்களிடமிருந்து இணையத்தள உதவியின் மூலம் ஆக்கங்கங்கள் பெறப்படுகின்றன. இவ்வாக்கங்களில் சில ஆக்கங்கள் தெளிவற்ற முறையில் காணப்படும் சந்தர்ப்பத்தில் இவ் ஆக்கங்கள் இதழாசிரியரால் தொகுக்கப்பெற்று மீண்டும் உரிமையாளரின் அனுமதியைப் பெற்று வெளியிடும் நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக ஆக்கங்களைப் பெற்று 'பெண்' இதழ் வெளியிடுவதென்பது பெண் இதழ் ஆசிரியருக்கு முக்கிய சவாலாகவே அமையப்பெற்றுள்ளது.
'பெண்' இதழானது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வெளியிடப்படுகிறது. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்திலையமானது ஆக்க இலக்கியங்களுக்கு இலக்கிய வடிவம் கொடுக்கும் நோக்கில் பயிற்சிப்பட்டறைகளை மேற்கொள்ளும்போது இப்பயிற்சிப் பட்டறைகளில் சில பெண்கள் தமது குடும்ப சூழ்நிலைகளைக் காரணங்காட்டி கலந்துகொள்வதில்லை. இவ்வாறு கலந்துகொள்ளாத பட்சத்தில் 'பெண்' இதழ் வெளியீடும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இடம் பெறுவதென்பது கடினமான ஒன்றாகவே அமைகிறது.
ஆக்கங்களை அனுப்புபவர்கள் உடனடியாக அவ்வாக்கங்கள் தொகுக்கப்பட வேண்டும் என்றும் அதில் சில மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் வற்புறுத்துகிறார்கள். தொடர்ச்சியாக ஆக்கங்களை அனுப்பி வரும் பெண்களிடம் இலக்கிய விடயம் தொடர்பாக எழுதத்தூண்டும்போது அவரது குடும்பத்தினர் அவரை எழுதவிடாது தடுப்பதையும் காணலாம். இவற்றையெல்லாம் தாண்டி பெண்களிடம் இருந்து ஆக்கங்களைப் பெற்று 'பெண்' இதழ் வெளியிடுவதென்பது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் எதிர்நோக்கும் பாரிய சவாலாகவே அமைந்துள்ளது.
'பெண்' இதழில் பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் பெண்களிடம் நேர்காணலை மேற்கொள்ளும்போது பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளன. குறித்த பெண்களை சந்திப்பதிலும் அவர்களிடமிருந்து உண்மையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் காணப்படுபகின்றன. குறிப்பாக பின்தங்கிய கிராமங்கிளல் வசிக்கும் பெண்கள் நாளாந்தம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். குடிநீர்ப்பிரச்சினை, நுண்கடன் திட்டம், போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் பல பெண்களுக்கு சமுர்த்தித் திட்டம் இல்லை. இவ்வாறான பிரச்சினைகள் குறித்த கிராமங்கிளல் இனங்காணப்பட்டாலும் குறித்த பெண்களிடம் சென்று நோர்காணலை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள முடியாதுள்ளதோடு அவர்களிடம் இருந்து உண்மையான தகவல்களைப் பெறுவதென்பதும் கடினமானதாகவே காணப்படுகிறது.
இவ்வாறான சிரமங்களை எதிர்கொண்டு ஆக்கங்களை ஒன்றுசேர்த்து 'பெண்' இதழை வடிவமைத்து அதனை வெளியிடுவதற்குரிய இடத்தையும் பெண்களையும் ஒன்றிணைப்பது தற்பொழுது ஒரு சவாலாகவே அமையப்பெற்றுள்ளது. கிராம மட்டத்தில் இருந்து நகர மட்டங்கள் வரையில் பெண்களை ஒன்றிணைப்பதும் அனைவருக்கும் பரீட்சயமான ஒரு இடத்தை தெரிவு செய்வதென்பது கடினமானதாகவே அமைகிறது. குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண்களை ஒன்றிணைக்க முடியாத நிலை காணப்படகிறது.
'பெண்' இதழ் வெளியீட்டில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக பொருளாதாரப் பிரச்சினை காணப்படுகிறது. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் நிதி திரட்டப்பட்டு 'பெண்' இதழ் வெளியிடப்படுகிறது. வெளியிடப்படும் பெண் இதழ்களின் விற்பனை குறைவாகவே காணப்படுகிறது. அடுத்தடுத்த இதழை வெளியிடுவதற்கு நிதி போதுமானதாக இல்லை. ஆகையால் 'பெண்' இதழை அரையாண்டிதழாக வெளியிடுவதென்பது சிக்கலான விடயமாகவே அமையப்பெற்றுள்ளது.
பெண்களை எழுத்துத் தளத்திற்குக் கொண்டு வருவதும் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும் பெண் எழுத்தாளர் பாரம்பரியத்தை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாகக் கொண்டு திகழும் 'பெண்' இதழானது பல்வேறுபட்ட சவால்களையும் தாண்டி இன்று வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உசாத்துணைப் பட்டியல்
1. விஜயலட்சுமி சேகர், பெண் சஞ்சிகை ஆசிரியர்: மட்டக்களப்பு
2. நேர்காணல் : ரேவதி (தாண்டியடி)
3. நேர்காணல் : வசந்தி (புதுமண்டலத்தடி)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.