முன்னுரை
இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவுகளைக் கொண்டது சங்க இலக்கியம். காதலில் தொடங்கிக் கடிமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கும் அகப்பாடல்கள், வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் போன்ற பல வாழ்வியல் கூறுகளைக் கொண்ட புறப்பாடல்களை உள்ளடக்கியது சங்க இலக்கியம்.
சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் பண்பியல் கூறுகளைப் படம்பிடித்த ஓவியங்கள் ஆகும். காதலும் வீரமும் இரண்டு கண்களாக எண்ணப்பட்ட காலம் அது. சங்கப் புலவர்கள் நாத்தழும்பேற அவற்றைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடல்களில் மிகுந்து காணப்படும் உயிரி நேயச் சிந்தனைகளை ஆய்வோம்.
சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.
வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.
‘என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னர் இருவரைக் காணீரோ பெரும”
எனக் கேட்கும் செவிலிக்கு அந்தப் பெரியவர் விடை சொல்கிறார் இப்படி.
‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே எனவாங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீச் சென்றனள்
அறந்தலை பிரியா வாறுமற்று அதுவே”1
பலவுறு நறும்சாந்தமும் அதைப் பயன்படுத்துவோர்க்கே பயன்தரும். யாழில் பிறக்கும் இசை கேட்பவர்க்கே பயன்தரும். அதுபோல நும்மகள் சிறந்ததோர் காதலனைத் தேடிச் சென்றனள். அவர்க்கே அவள் உரிமை. எனவே அமைதிகொள் என்கிறார் அவ்ஆன்றோர்.
மறுக்கப்பட்ட பெண்ணுரிமை
ஆடவர்க்கிணையாகப் புலமை கொண்ட பெண்பாற் புலவர்கள் பலரைச் சங்க இலக்கியப் பொன்னேடு பதிவு செய்து கொண்டதை அறிவோம். ஈன்று புறந்தருதல் மட்டுமே பெண்களின் தலையாய கடமை. அம்மகவைச் சான்றோராக்குதல் தந்தையின் கடனாக வரையறுக்கப்பட்டிருந்த காலத்தைக் காண்கிறோம். வினை ஆடவர்க்கு மட்டுமே உயிர் எனவும் அவர்கள் வினைவயிற் பிரிந்து பொருளீட்ட வேண்டி திரைகடலோடியும் திரும்பலாம் எனவும் கருதப்பட்ட காலம் அது.
‘முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை”2 எனவும்
‘எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்”3
எனவும் தொல்காப்பியம் சுட்டும். தலைவி வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. வருவார் கொழுநர் என்று வழிமேல் விழிவைத்து வாயிற் காத்து நிற்பதே வனிதையரின் வாழ்வாக இருந்ததை அறிகிறோம்.
கைம்பெண் காண்துயர்
புறநானூறு காட்டும் கைம்பெண் வாழக்கைநிலை கண்ணீர் வரவழைக்கும் துன்பியல் காட்சியாக விரிகிறது. மன்னன் பூதப்பாண்டியன் மாண்டுவிட்டான். அவனுடன் தீப்பாய்ந்து உயிரைப் போக்கிக் கொள்ளத் துணியும் மனைவி பெருங்கோப்பெண்டை ஆன்றோர் தடுக்கின்றனர். கைம்பெண் படுதுயரங்களைச் சொல்லி அதனினும் இறத்தல் நன்றே என்கிறார் அவர்.
‘அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
வெள்எள் சாந்தோடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவற் பெண்டிரே மல்லே மாறே
நள்இரும் பொய்கையும் தீயும் ஆரற்ற”4
கைபிழிந்த நீர்ச்சோற்றை, வெள்ளை எள் அரைத்துப் புளிச்சாறு கலந்த வேளைக் கீரையுடன் உண்டு, படுக்கைக் கற்களின் மேல் பாய் விரிக்காமல் படுத்துறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் பெண்ணைக் கொல்லாமல் கொல்வன அன்றோ. கைம்பெண்கள் ‘பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்”5 என்றும் அறிகிறோம். கணவன் இழந்தபின் பெண்டிரின் உணர்வையெலாம் கொன்று சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையைக் காண்கிறோம்.
கொடை
‘ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” (புறம் 204)
என ஈகையைப் போற்றிய மனிதர் வாழ்ந்த காலம் சங்ககாலம்.
‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”6
எனச் செல்வம் படைத்ததன் பயனே பிறருக்குக் கொடுத்தல்தான் என்பதை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் வலியுறுத்துகிறார்.
‘வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
.....................
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”7
எனப் பரிசில் தரக் காலம் தாழ்த்திய அதியமான் நெடுமான் அஞ்சியை நோக்கி ஒளவையார் பாடுகிறார். எங்கு செலினும் கொடையுள்ளம் படைத்த மன்னர்களே இருப்பர் என ஒளவையார் கூறுவது அந்தநாள் மன்னர்களின் கொடையுள்ளத்தின் மாண்பைக் காட்டுகிறது.
விருந்தோம்பல்
தமிழர்களின் தலையாய பண்பு விருந்தோம்பல் ஆகும். விருந்து புறத்திருக்கச் சாவாமருந்தே கிடைத்தாலும் தனியாக உண்ணாத தகைமைக்குரியோர் தமிழர்கள் எனச் சங்கப் பாடல்கள் சுட்டும்.
‘உண்டால் அம்ம இவ்வுலகம் - இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே”8
எனப் புறநானூறு (180) போற்றுவதைக் காண்கிறோம்.
சிறுகுடிகிழான் பண்ணனைப் பாராட்டிச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய புறப்பாடலில்,
‘பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்”9
காட்சியைக் காட்டுகிறார். அப்பசிப்பிணி மருத்துவனாம் பண்ணனை ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” எனப் பாவலர் பாடுகிறார்.
விருந்தினரைப் பேணாத வாழ்க்கை செம்மை இல்லாத வாழ்க்கை ‘விருந்துண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை”10 எனப் பாடுகிறார் பெருங்குன்றூர்க்கிழார்.
சங்ககாலப் பெண்டிர் விருந்தினர்க்கு உணவளித்து மகிழ்ந்து வாழும் பயனுறு வாழ்வை, ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியைப் பாடும் புறப்பாட்டில் வியந்து போற்றுகிறார்.
இரக்கவுணர்வு
சங்ககாலப் பாடல்கள் காட்டும் எல்லா மனிதர்களுமே காதலாகிக் கசிந்து அனைத்துயிர்கள் மேலும் மனிதர்கள்பாலும் கனிவு காட்டுபவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்மறைப் பாத்திரங்களே இல்லை எனலாம். பேகன் என்னும் மன்னன் மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்கிறான். பரிசில்பாடி வந்த கபிலர், பரணர், அரிசில்கிழார் ஆகியோர் கண்ணகிக்காக இரக்கப்பட்டு மன்னா ‘யாம் விரும்பும் பரிசில் நீவிர் இருவரும் சேர்ந்து வாழ்வதே ஆகும்” எனச் சொல்கின்றனர்.
‘இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப, விம்மி
குழல் இணைவதுபோல் அழுதனள் பெரிதே”11
எனக் கபிலர் வேதனைப்படுகிறார்.
‘....... காந்தள்
முகபுரை விரலின் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள்இனி
எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப”12
என்று பேகனின் மனைவி கூறுவதைப் பேகனிடம் உரைக்கிறார் பரணர்.
‘அருந்துயர் உழக்கும் நின்திருந்துஇழை அரிவை”13யுடன் வாழவேண்டும் என வேண்டுகிறார் அரிசில்கிழார்.
சங்க காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பியல் கூறுகளையும் படம்பிடித்துக் காட்டுவன சங்கப்பாடல்கள் ஆகும். சங்ககாலப் பெண்டிர் காதல் மணம் செய்யும் உரிமையையும், உடன்போக்குச் செல்லும் உரிமையையும் பெற்றிருந்தனர். தோழியருடன் சென்று கடலிலும் குளத்திலும் புனலாடி, வாழ்வை இன்புறக் கழித்தனர் பெண்கள். பெண்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று ஓம்பும் பண்பில் சிறந்திருந்தனர்.
ஆனால் பெண்கள் திரைகடல் தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கணவனை இழந்த பெண்கள் படும் துயரைப் பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும்பெண்டு மனம் நொந்து பாடுகிறார்.
மன்னர்கள் கொடையுள்ளம் கொண்டவர்களாக விளங்கினர். பிட்டங்கொற்றன், அதியமான், பாரி, குமணன் போன்றோர் செல்வத்துப் பயனே ஈதல் என்ற நோக்கத்துடன் வறியவர்க்கும் தமிழ்ப் புலவர்க்கும் வாரிவாரிக் கொடுத்தனர். பரிசில் பெற்ற புலவர்களும் தமக்கென வைத்துக் கொள்ளாது அவர்தம் சுற்றத்துக்கும் பிறர்க்கும் கொடுத்து உவந்தனர்.
பண்டைய மன்னர்களின் விருந்தோம்பல் பண்பும் இவ்வியலில் ஆழ்ந்து ஆயப்பட்டுள்ளது. மன்னர்கள் போரில் கடைப்பிடித்த மனிதநேய நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
முடிவரை
சங்க காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பியல் கூறுகளையும் படம்பிடித்துக் காட்டுவன சங்கப்பாடல்கள் ஆகும். சங்ககாலப் பெண்டிர் காதல் மணம் செய்யும் உரிமையையும், உடன்போக்குச் செல்லும் உரிமையையும் பெற்றிருந்தனர். தோழியருடன் சென்று கடலிலும் குளத்திலும் புனலாடி, வாழ்வை இன்புறக் கழித்தனர் பெண்கள். பெண்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று ஓம்பும் பண்பில் சிறந்திருந்தனர்.
ஆனால் பெண்கள் திரைகடல் தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கணவனை இழந்த பெண்கள் படும் துயரைப் பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும்பெண்டு மனம் நொந்து பாடுகிறார்.
மன்னர்கள் கொடையுள்ளம் கொண்டவர்களாக விளங்கினர். பிட்டங்கொற்றன், அதியமான், பாரி, குமணன் போன்றோர் செல்வத்துப் பயனே ஈதல் என்ற நோக்கத்துடன் வறியவர்க்கும் தமிழ்ப் புலவர்க்கும் வாரிவாரிக் கொடுத்தனர். பரிசில் பெற்ற புலவர்களும் தமக்கென வைத்துக் கொள்ளாது அவர்தம் சுற்றத்துக்கும் பிறர்க்கும் கொடுத்து உவந்தனர்.
பண்டைய மன்னர்களின் விருந்தோம்பல் பண்பும் இவ்வியலில் ஆழ்ந்து ஆயப்பட்டுள்ளது. மன்னர்கள் போரில் கடைப்பிடித்த மனிதநேய நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
சான்றெண் குறிப்புகள்
1. கலித்தொகை, ப.11
2. தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா 37, ப.67
3. மேலது, கற்பியல் நூற்பா 34 ப.88
4. புறநானூறு, பாடல் 246, பக். 112-113
5. மேலது, பாடல் 62, ப.38
6. புறநானூறு, பாடல் 189, ப.89
7. மேலது, பாடல் 206, ப.96
8. மேலது, பாடல் 182, ப.87
9. மேலது, பாடல் 173, ப.83
10. மேலது, பாடல் 266, ப.119
11. புறநானூறு, பாடல் 143, ப.68
12. மேலது, பாடல் 144, பக். 68-69
13. மேலது, பாடல் 146, ப.69
துணைநூற் பட்டியல்
1. இரவீந்திரபாரதி
நவீன தமிழ் இலக்கியம்-சில பார்வைகள்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41 பி.சிட்கோ எஸ்டேட்,
சென்னை-98,
முதற்பதிப்பு செப்.2008.
2. எட்டுத்தொகை,
எட்டுத்தொகை,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41 பி.சிட்கோ எஸ்டேட்,
சென்னை-98,
பதிப்பு 1982.
3. ஒளவையார்
நீதிநூல்-8,
திருமுடி பதிப்பகம்,
4, கிழக்குச் சன்னதித் தெரு,
வில்லியனூர், புதுச்சேரி-605110,
முதற்பதிப்பு 2009.
4. கலித்தொகை
கலித்தொகை,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41 பி.சிட்கோ எஸ்டேட்,
சென்னை-98,
2 ஆம் பதிப்பு, 1982.
5. ப.திருநாவுக்கரசு (தொகுப்பாசிரியர்),
புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,
நிழல், 31ஃ48 இராணி அண்ணாநகர்,
கலைஞர் நகர், சென்னை,
முதற்பதிப்பு டிச.2001.
6. தொல்காப்பியம்
தொல்காப்பியம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41 பி.சிட்கோ எஸ்டேட்,
சென்னை-98,
2ஆம் பதிப்பு, 1981.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*கட்டுரையாளர்: - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752 -