- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம் என பல முகங்களைக் கொண்டது ஆகும். இவற்றுள் இக்கால இலக்கியமும் ஒன்று. கவிதை, சிறுகதை, நாவல் முதலானவை இவ்வகையைச் சாரும். கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் வைரமுத்து. இவரது படைப்புகளில் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் நூலில் அமைந்த சமுதாயச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது

கவிதை
கவிதை என்பது ஒரு கலையாகும். கவிஞர் தான் பெறும் அனுபவங்களைக் கற்பனை நயத்துடனும், கருத்துச் செறிவுடனும் ஒலிநயம், உணர்ச்சி, இனிமை, எளிமை ஆகியவற்றைக் கலந்து கவிதை வடிவங்களாகத் தருகின்றார். கவிதை குறித்து கவிமணி,

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை (மலரும் மாலையும், ப.51)

என்று கூறுகின்றார். கவிஞரின் கருத்திற்கேற்ப கவிதையின் பாடுபொருள் அமையும்.

கவிதையின் வகைகள்
கவிதை இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாப்பிலக்கணத்தோடு வரையறைக்கு உட்பட்டு அமைவது மரபுக்கவிதை என்றும், இலக்கணமின்றி வரையறையற்று அமைவது புதுக்கவிதை என்றும் வழங்கப்படுகின்றது. புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறுகையில் பாரதியார்,

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை (பாரதியார் கவிதைகள், பக்.318-319)

என்று கூறுகின்றார். பாரதியைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதுக்கவிதை இலக்கியத்திற்கு வலுசேர்த்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வைரமுத்து ஆவார்.

கவிஞர் வைரமுத்து
புதுக்கவிதை இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தற்காலக் கவிஞர் பெருமக்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர். வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.
சமுதாய முன்னேற்றத்தில் இலக்கிய படைப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இலக்கியம் அன்றி மக்களின் வாழ்க்கையையும் கவிஞர் வைரமுத்து தம் கவிதைகள் உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

தனிமனித உணர்ச்சிகளும், சமுதாயப் பிரச்சினைகளும் இவரது கவிதைகளில் எதார்த்தமாய் எளிமையாகக் கூறபட்டுள்ளது. இத்தன்மை கருதியே மு.கருணாநிதி, “பலநாட்டுக் கவிஞர்கள், பலமொழிக் கவிஞர்கள் வழங்கியுள்ள வைரங்கள் பட்டை தீட்டப்பட்டுள்ள பாங்கில் ஜொலிக்கின்றன. மலையில் பூத்த மலர்களைக் கூட மணம் வீசச் செய்துள்ளார்” (மு.கருணாநிதி, முத்தமிழ் அறிஞர், அணிந்துரை.)என்று வைரமுத்துவின் கவிதைகளைப் பாராட்டுகின்றார்.

வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் மொழி, கலை, சமூகம், பண்பாடு, மனித விழுமியங்கள், அறிவியல் என அனைத்தும் இடம்பெற்றும் கருத்துப் பெட்டகமாய்த் திகழ்வதை காணமுடிகின்றது.

இயற்கை
நம் முன்னோர் நமக்கு கற்றுக் கொடுத்த வாழ்க்கை ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கை’ ஆகும். இயற்கை இடைவிடாது இயங்கிக் கொண்டிருத்தலின் மூலமாகத்தான் மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேடல்களும், தேவைகளும் நிறைந்த இந்த வாழ்க்கையை மனிதருக்கு அர்த்தப்படுத்திக் காட்டுவதும், அழகுபடுத்திக் காட்டுவதும் இயற்கைதான்.

மரம்

மரங்கள் இயற்கையின் முக்கிய அம்சம். நீண்டகால வாழக் கூடியவை. உயிரினங்கள் வெளியிடும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்ஸிஜனைக் கொடுத்து மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் காப்பவை மரங்கள். மழைப் பெய்யவும், தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் உதவுபவை மரங்களே ஆகும். மரங்கள் இந்த பூமியின் வரம். இந்த மரங்களின் முக்கியத்துவத்தை,

உயிர் ஒழுகும்
மலர்கள்
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு
மனிதன் தோன்றுமுன்
மரம் தோன்றிற்று
மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும் வரை காய்காய்க்கும் (வைரமுத்து கவிதைகள், ப.455)

மரம் மனிதனின் முதல் நண்பன், மரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்று எடுத்துக்கூறுகின்றார்.

மழை
உலக உயிர்கள் யாவும் வாழ அடிப்படையான நீரைத் தருவது மழை. அதனால்தான் புலவர்கள் கொடைக்கு மழையை உவமையாகக் கையாண்டனர். அவ்வகையில் பாரியின் கொடைத்தன்மையைக் கூறுகையில் கபிலர்,

“மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே”    (புறம். 107)

என்று குறிப்பிடுகின்றார். மழை மண்ணில் வாழும் உயிர்களின் குருதியைப்போல விளங்குகின்றது. மழை பெய்யாமலிருந்தால் மண்ணில் உயிர்களுமில்லை, பயிர்களுமில்லை என்பதை வள்ளுவர்,

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது (குறள். 16)

என்கின்றார். கவிஞர் வைரமுத்து ‘மழைப் பிரசங்கம்’ என்னும் கவிதையில்,

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்
……………………….
மழை மழை மழை
மண்ணின் அதிசயம் மழை
பூமியை வானம்
புணரும் கலை மழை
சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை (வைரமுத்து கவிதைகள், ப.421)

என்ற வரிகளில் மழையானது விண்ணுக்கும், மண்ணுக்குமான தண்ணீர்ப் பாலமாக விளங்குவதைக் குறிப்பிடுகின்றார். தாவரங்களுக்கன்றி மனித வாழ்க்கையிலும் மழை என்பது மூலதனமாகும். மேலும்,

கீழ்நோக்கிப் பொழியும்
மழைமட்டும் பொய்த்துவிடின்
மேல்நோக்கி வளர்வன
பூமியில் ஏது? (வைரமுத்து கவிதைகள், ப.680)

என்ற வரிகளில் மேல்நோக்கி வளரும் விதைக்கும், மனிதனுக்கும் கீழ்நோக்கிப் பெய்யும் மழைதான் முக்கியமான மூலப்பொருளாகும் என்பதை விவரிக்கின்றார். இதனால் மழையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

மருத்துவ முறை
இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று மருத்துவம். “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம்.”(வலைதளத் தேடல், மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா)

இன்று பல கண்டுபிடிப்புகள் பல மருத்துவமுறைகள் காணப்படுகின்றன. கவிஞர் வைரமுத்து ‘மருத்துவ அறிக்கை’ என்னும் தலைப்பில் புதிய மருத்துவ முறைப்பற்றியும் நோயாளிகளைக் கையாளும் முறைப்பற்றியும் நோய்களின் தன்மைகளையும் கூறுகின்றார். இதனை,

மருத்துவ முறையை
மாற்றுங்கள் டாக்டர்
நோயாளி பாமரன்
சொல்லிக் கொடுங்கள்
நோயாளி மாணவன்
கற்றுக் கொடுங்கள்
வாய்வழி சுவாசிக்காதே
சுவாசிக்கும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொட வேண்டும்
சொல்லிக் கொடுங்கள் (வைரமுத்து கவிதைகள், பக்.465-467)

எனவரும் பகுதியில் நோய் உருவாகுவதன் காரணத்தையும் அதை எளிய முறையில் தடுப்பது எப்படி என்பதையும் மக்களுக்கு உணர்த்தினாலே நோய்க் குறைந்துவிடும் என்று வலியுறுத்துகின்றார். கவிஞர் வைரமுத்துவின் இந்த சிந்தனையால் நோயற்ற சமூகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

தன்னம்பிக்கைச் சிந்தனைகள்
தன்னம்பிக்கை என்பது மனிதர் ஒருவர் தம் எண்ணங்களின்மீதும், தன் வலிமையின்மீதும் கொண்டுள்ள நம்பிக்கையாகும். வாழ்வில் உயரத் துணைநிற்பது. விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிட்டு செயல்படல், தோல்வி கண்டு தளராமை போன்றவை தன்னம்பிக்கைக்குரிய குணங்களாகும். கவிஞர் கவிதாசன்,

நமது
இரண்டு கைகளையும் இயக்குகின்ற
மூன்றாவது கைதான் தன்னம்பிக்கை

என்ற வரிகளில் உடலின் உறுப்பான கை நம்முடன் என்றும் இருப்பதுபோல மூன்றாவது கையான தன்னம்பிக்கையும் இருக்கவேண்டுமென்பதை வலியுறுத்துகின்றார். (செ.பழனிச்சாமி (ப.ஆ.), சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்பிலக்கியம் - பன்முக ஆய்வு, ப.68)

‘யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார். மனிதன் மனம் கலங்கி சோர்வுற்றுத் தவிக்கும் நிலையில் தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களும், எழுத்துக்களுமே அவனது மனநிலையை மாற்றி வாழ்வில் மேன்மையுறச் செய்கின்றன. கவிஞர்; வைரமுத்து தன்னம்பிக்கையைப் பற்றிக் கூறுமிடத்து,

உருவுகண்டு எள்ளாதே
ஒவ்வொரு விதையிலும்
ஒரு விருட்சம் ஒளிந்திருக்கிறது (வைரமுத்து கவிதைகள், ப.485)

என்றும்,

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய் (வைரமுத்து கவிதைகள், ப.487)

என்றும் வரும் கவிதைகள் தன்னம்பிக்கை எண்ணங்களை எழுச்சியுடனும், எதார்த்தத்துடனும் எடுத்தியம்புகின்றன. வெற்றி தோல்வியைச் சமமாக நினைக்க வேண்டும். நாம் செல்லக் கூடிய பாதை எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டும் (வைரமுத்து கவிதைகள், ப.491, ப.671) என்ற நம்பிக்கை உணர்வினை இளைஞர்களின் மனதில் பதிய வைக்கின்றார்.

முதிர்கன்னி
இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். இம்முதிர்கன்னிகளைக் கவிஞர் வைரமுத்து,

அல்லிப்பூ தாமரைப்பூ
ஆயிரம் பூப்பூத்தாலும்
கல்யாணப் பூவெனக்குக்
காலமெல்லாம் பூக்கலையே    (வைரமுத்து கவிதைகள், ப.454)

என்ற கவிதையில் திருமணமாகாமல் வாழ்க்கை முழுவதும் கன்னிப்பெண்களாகவே காலத்தைக் கழிக்க வேண்டிய பெண்களின் அவலத்தை எண்ணிக் கவலைப்படுகின்றார். முப்பத்தேழு வயது முடிந்தும் திருமணமாகாமல் இருக்கின்ற முதிர்கன்னியின் மன வெறுமையினை,

தூண்டிலில் சிக்கவில்லை
ஆனால்
இது
கற்புள்ள கருவாடு (வைரமுத்து கவிதைகள், ப.457)

என்று தம் கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பெண்களின் அவலநிலை மட்டுமின்றி,

தாயெனும் வடிவை தமக்கையின் வடிவை
மகளெனும் வடிவை மனைவியின் வடிவை
மூதுரை சொல்லும் முதுமகள் வடிவை
ஓவியத் திருவே உன்வழி காண்கிறேன்
உனக்கு முன்னே உயிர்பிரி யத்தான்
எனக்கு விருப்பம் இயற்கை உதவும் (வைரமுத்து கவிதைகள், ப.349)

என்று பெண்களுக்குரிய மதிப்பையும் தம் கவிதைகளில் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

தொகுப்புரை
மனிதருக்கு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் காட்டுவதும், அழகுபடுத்திக் காட்டுவதும் இயற்கைதான் என்பதைக் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளின் வாயிலாக உணர்ந்துகொள்ள முடிகின்றது. இயற்கைப் புனைவுகள், அறிவியல் ஆக்கங்கள், அரசியல் சித்தரிப்புகள், தன்னம்பிக்கைத் தேடல்கள், மனித உறவுகள், பெண்களின் நிலை, குழந்தைத் தொழிலாளர்களின் நிலை போன்றவைகள் கவிஞர் வைரமுத்து கவிதைகளில் பதிவு பெறும் விதத்தால் கவிஞரின் சமூகச் சிந்தனையை அறிய முடிகின்றது.

சான்றாதாரங்கள்
1. வைரமுத்து - வைரமுத்து கவிதைகள், சூர்யா வெளியீடு, டிரஸ்ட்புரம், சென்னை. எட்டாம் பதிப்பு - 2006.
2.பழனிச்சாமி,செ. - சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்பிலக்கியம் - பன்முக ஆய்வு, (ப.ஆ.) குமரன் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு - 2009.
3. பாரதியார் - பாரதியார் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம்;, சிதம்பரம். முதல் பதிப்பு - 1987.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R