ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வகைப் பூவை கண்ணியாகச் சூட்டிக்கொள்வர். அவற்றில் வெட்சி, கரந்தை, நொச்சி, உழிஞை முதலிய மலர்கள் குறிப்பிடத்தகுந்தவை. மன்னன் போருக்கான பூவை வீரர்களுக்கு வழங்கும் ‘பூக்கோள்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுவதைப் புறப்பாடல்களில் பல இடங்களில் காணலாம். அவ்வாறு இந்நிகழ்வு நடைபெற்ற சூழலில் அவர்களின் மனைவியர் பூச்சூடுதலை கைவிட்டனர் என்றும், அதன் காரணமாகப் பூ விற்கும் பெண்டிர் அம்மகளிர் வசிக்கும் மனைக்குச் செல்லாது வேற்று மனை நோக்கிச் சென்றனர் என்றும் குறிக்கப்படுகிறது. எனவே போர்க்காலங்களில் வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்வில் மலர்களால் அமையபெற்ற பண்பாட்டு நுட்பத்தினை இதன்மூலம் உய்த்துணர முடிகிறது.

ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டலுமாகிய வெட்சி, கரந்தை போர்முறைகளைப் பற்றிப் புற இலக்கியங்களில் காணலாம். அவ்வாறு வெட்சிப்போர் புரியும் மறவர்களின் அடையாள மாலையைக் காட்சிப்படுத்துகிறது ஔவையாரின் புறப்பாடல் ஒன்று. அவையே,

குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை (புறம். 269)

எனும் இவ்வடிகளாகும். இதில் நிகழ்த்தப்பெற்றது வெட்சிப்போர் ஆயினும் அடையாள பூவாக அணியப்பட்டது ‘அதிரல்’ எனப்படும் காட்டுமல்லிகை மலராகும். எனவே பிற்காலத்தில் நடைபெற்ற போர் உள்ளிட்ட நிகழ்வுகளில் காலச் சூழலுக்கேற்ப வளரப்பெற்ற மலர்களைத் தங்கள் போர் நோக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இதன் வாயிலாக அறியமுடிகிறது.

மலர்களைக் கொண்டு அடையாளப்படுத்துதல் என்பது மூவேந்தர்களுக்கும் மட்டும் உரித்தானது அல்ல. அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் குறுநில மன்னர்களுக்கும் அவை பொருந்தக்கூடியதாகும். மாலைச்சூடி போருக்கெழுந்த வேந்தர் தமக்குத் துணையாகக் குறுநில மன்னரையும் குறுநிலத் தலைவரையும் சேர்த்துக் கொள்வதுண்டு. இதனை புறம் 122ஆம் பாடலில் மலையமான் திருமுடிக்காரியெனும் சிற்றரசனின் உதவியை மூவேந்தர்களும் நாடினர். அவற்றை போலவே அதியமான் தனது தும்பையைக் கண்ணியுடன் சேரனின் குலப்பூவான பனம்பூவையும் சேர்த்துக் கட்டியுள்ளான் என்பதை,

பொலந் தும்பைக் கழல் பாண்டில் (புறம்97)

ஈகை அம் கழற் கால், இரும் பனம் புடையல்
பூ ஆர் காவின் (புறம். 99)

என வரும் இவ்வடிகளை நோக்கும்போது அதியமான் சேரனுடன் கொண்ட நட்பின் அடையாளமாகவே அப்பூவினை சூடிநின்றான்.

மூவேந்தர்களை சார்ந்திராமல் தனித்து நின்று ஆட்சி செய்த குறுநில மன்னர்களையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றன. அவர்களுக்கும் குறிப்பிட்ட சில மலர்கள் அடையாளமாக இருந்துள்ளன. ஏறைக் கோன் என்னும் குறுநில மன்னன் அவன் நிலத்தில் சிறப்புற்றிருந்த காந்தள் மலரைக் கண்ணியாகச் சூடியுள்ளான் (புறம். 157). ஆய் அண்டிரன் என்பவன் சுரப்புன்னை மலர் மாலையை அணிந்துள்ளான் (புறம். 131). எழினி அதியமான் என்பவன் கூவிளங்கண்ணி எனும் வில்வமாலையையும் (புறம். 158) பிட்டங்கொற்றன் என்பவன் வேங்கை மலர் மாலையையும் (புறம். 168) தங்களின் அடையாளத்தை புலப்படுத்தும் விதமாகச் சூடியுள்ளனர்.

ஆதிகாலத்தில் குலக்குறியீடாக இருந்த மலர்கள் பின்னாளில் போர் உள்ளிட்ட சமூகச் சடங்குகளின் வழியாகப் பண்பாட்டுக் கருவியாக உருப்பெற்றன என்பதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே சான்று. அவ்வாறு வழிவழித் தோன்றலாகும் குலப்பெருமையை நிலைநாட்டும் பொறுப்பு மன்னர்களுக்குரியது இக்கருத்தை புலவர் தாமப்பல் கண்ணனார் விளக்க முற்படுகிறார்,

ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் (புறம். 43)

குலப்பூவான பனம்பூவைச் சூடிய நின் முன்னோர் பார்ப்பனர்களுக்கு எந்தவித தீங்கும் செய்ததில்லை அவ்வாறே நீயும் எங்களை காத்தருள்வாயாக எனச் சேர மன்னனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. இதன்மூலம் மன்னர்களின் அடையாளத்தைக் கட்டமைப்பதில் மலர்கள் முக்கியப் பங்களிப்பை ஆற்றியுள்ளன என்பது புலனாகின்றன.

நாட்டுவளம்
மனிதன் இயற்கையைச் சார்ந்து வாழ்வினை மேற்கொண்ட அக்காலக்கட்டத்தில் உணவு, உடை, உறைவிடம் எனும் அனைத்தையும் இயற்கையிடமிருந்தே பெற்றுக்கொண்டான். இவ்வியற்கை வளம்சார்ந்த பெரும்நிலப்பரப்பு நாட்டினையாண்ட மன்னர்களுக்கும் பெரும்அணிகலனாகத் திகழ்ந்துள்ளது. மேலும் நாட்டின் வளத்தைப் பறைசாற்ற எண்ணற்ற கூறுகள் இயற்கையில் காணக்கிடக்கினும் அவற்றுள் மலர்களே மிகப் பரந்த இடத்தினைப் பெற்றுள்ளன. மலர்ந்து நின்று காட்சித் தரும் பல்வேறு மலர்கள் அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்குக் குறியீடாகவும் விளங்கியுள்ளன. அதனால் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பைப் பாடவரும் புலவர்கள் பலரும் அவர்களது நாட்டின் சிறப்பைப் பல நிலையில் புகழ்ந்து பாடியுள்ளனர் அவற்றுள் முதன்மை பெறுவது மலர்கள்.

நிலத்தின் வளத்திற்கு அடிப்படையாய் அமைவது நீர்வளமாகும். இதனை, விளக்க செ. வைத்தியலிங்கன் கூற்று பின்வருமாறு, “ஒரு நாட்டில் நிரம்பிய மலர்கள் காணப்படுவது கொண்டே அந்த நாட்டில் நீர்வளமும் நிலவளமும், அவை காரணமாகக் கிட்டும் மக்களின் மனவளமும் உண்டு என்பதைனை யுணர்ந்தனர்.” (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு. ப.48) இக்கூற்றிற்கேற்ப நெய்தல் மலரையுடைய வயல்களில் நெல்லினை அறுத்த உழவர்கள் பின் ஆம்பல் மலரின் இலைகளில் மதுவினை அருந்துவர் என உழவர்களின் வாழ்வியலை புறப்பாடல்களில் காணலாம். இத்தகைய வளத்திற்குத் துணைநிற்கும் நீர்நிலைகளைப் பாதுகாத்தலும் பராமரித்தலும் மன்னர்களின் முதன்மையான செயல்களில் ஒன்றாகத் திகழ்ந்துள்ளன. பகைவர் நாட்டில் போரினை மேற்கொள்ளும் பொழுது விளைந்த தானியங்களை அழித்தலும் விளைச்சலுக்குத் துணைநிற்கும் நீர்நிலைகளை அழித்தலும் வேந்தர்கள் மேற்கொள்ளும் போரின் செயல்பாடுகளில் குறிப்பிடத் தக்கவைகளாகும். இயற்கையின் மீது நிகழ்த்தப்பெறும் மறைமுக மற்றும் வெளிப்படையான இத்தாக்குதல்கள் அவற்றைச் சார்ந்திருக்கும் மனிதனுக்குப் பெருத்த விளைவினைத் தரும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமை நிரை தடுக்குநவும் (பதிற்று. 13)

கரும்பு பாத்தியில் நெய்தல் மலர் மலர்ந்து கிடக்க அதை எருமைகள் தின்னுகின்றன எனப் போர் அற்ற அமைதியான சூழலில் ஒரு நாடு திகழும் காட்சியைப் பதிவு செய்வதாக இவ்வடிகள் அமைகின்றன.

பகைவர் நாட்டின் இயற்கை வளத்தைச் சிறப்பாகக் கூறி அதன்வழி சேரனின் போர் ஆற்றலை புலப்படுத்துவதாக ஒரு பாடல் அமைகிறது.

நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூங் கரும்பின் கழனி புல்லென
திரிகாய் விடத்தரொடு கார் உடை போகி (பதிற்று. 13)

எனும் இப்பாடலடியில் சினந்து எழுந்த சேரனின் போர் ஆற்றலால் மலர்கள் பூத்துக்குலுங்கும் கரும்புகள் வளரப்பெற்ற வயல்களில் இன்று ‘விடத்தோரை’ எனும் முள்மலர்கள் வளர்ந்து நின்றன என்ற குறிப்புக் கிடைக்கிறது. எனவே போர் நிகழ்வுகளில் வீரர்களின் இறப்பைக் காட்டிலும் இயற்கை வளங்களை சூறையாடுதல் அல்லது பாழாக்குதல் என்பது போர் உத்திகளில் ஒன்றாகும். இதனை அரங். இராமலிங்கம் தரும் கூற்று தெளிவுப் படுத்தும், “வெற்றி பெற்ற வேந்தன் பகைவரின் காவலமைந்த நீர்நிலைகளை அழித்தல், பாழாக்குதல், விளைநிலங்களை தீயிட்டு அழித்தல் போன்றவை பகைவர் விரைவில் நிலைபெறுவதைத் தடுத்து தம் வெற்றியை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்திருக்கும் வழியின” (சங்க இலக்கியத்தில் வேந்தர். ப.185)

ஒரு மன்னனின் நாட்டுவளத்தை நேர்மறையாகப் புகழ்ந்து பாடுவதும் எதிர்மறையாகப் புகழ்ந்து பாடுவதும் என இருவேறு தன்மைகள் சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றன. முன்னது புலவர்கள் விளித்துப் பாடும் மன்னனின் ஆட்சி சிறப்பைக் குறித்து அமைகிறது. பின்னது தான் விளித்துப் பாடும் மன்னனின் வெற்றிச் சிறப்பைக் குறிப்பதாக அமைகிறது. அதாவது வீழ்த்தப்பட உள்ள அல்லது வீழ்த்தப்பட்டது என்ற நிலையில் பகைவரின் நாட்டுவளத்தைப் பாடுதல் என்பதாகும். அவ்வாறு, போருக்கு முன்பாக அழிவினை எதிர்நோக்கி இருக்கும் பகைவரின் நாட்டின் வளத்தைப் பற்றிப் பதிற்றுப் பத்துப் பாடல் ஒன்று விளக்கி நிற்கிறது.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் வெற்றிச் சிறப்பைக் குறித்துப் பாடவரும் புலவர் பாலைக் கௌதமனார்,

அவல் ஏறி உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்று.29)

எனும் இவ்வடிகளை அமைக்கிறார். இதில் பகைவர் நாட்டில் வாழும் மகளிரின் செயல்கள் குறிக்கப்படுகின்றன. போர் நிகழ்வதற்கு முன்பு பகைவர் நாட்டை இவ்வாறு காட்சிப்படுத்தப்படுவதன் மூலம் போர் நிறைவுற்றப்பின் அதன் அழிவுகளால் ஏற்படும் உணவு பஞ்சமும், மலர்களைச் சூடாது துயரமடையும் மகளிரின் நிலையையும் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாகச் சேரனின் வெற்றி என்ற ஒற்றை நிலையைக் குறிப்பிட பகைவரின் நாட்டுவளத்தைப் பட்டியலிடுவதும் அதற்கு மலர்களை முதன்மைப்படுத்துவதும் புலவர் கைக்கொள்ளும் இலக்கிய உத்திகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டைய தமிழர்கள் சிறந்து விளங்கிய துறைகளில் ஒன்று வானியல். இவற்றில் சுக்கிரன் எனும் வெள்ளிக் கோளை மையமாகக் கொண்டு மழை வளம் பற்றி அறிதல் குறிப்பிடத்தக்கது ஆகும். வெள்ளிக் கோள் தென்திசை நோக்கி சென்றால் மழை வளம் குன்றி நாட்டில் பசியும் பிணியும் அதிகரிக்கும் எனும் குறிப்பைப் பதிற்றுப்பத்து முதலிய சங்க இலக்கியப் பாடல்களில் காணலாம். அவ்வாறு பாரியின் நாடு வானியல் அறிவை பொய்க்கும் விதமாகப் பசுமை கொண்ட வளத்துடன் திகழ்கிறது என்றும், அதற்குப் பூத்துகுலுங்கும் மலர்களே சான்று எனவும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறைய புதல் பூ மலர (புறம். 117)

எனும் கபிலரின் இவ்வடிகள் அமைகின்றன.

மனைக்குப் புறத்தே காணப்படும் பரந்துப்பட்ட நிலப்பரப்புகளை அடையாளப்படுத்துவதும் அவற்றை அளவிடும் கருவியாகவும் மலர்கள் இருந்துள்ளன. அந்தந்த நிலங்களில் காணப்படும் சிறப்பான மலர்களே அந்நிலத்தின் வளத்திற்குக் குறியீடாகவும் வந்துள்ளன. மேலும் போர்கள் உள்ளிட்ட பல காரணங்களின் வழி இயற்கையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களிலும், போர்களற்ற அமைதியான சூழலில் ஒரு நாடு திகழ்கிறது என்பதைக் குறிப்பிடும் இயற்கை வருணனைகளிலும் பல்வேறு மலர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதை மேற்கண்ட இலக்கியச் சான்றுகளின் மூலம் உய்த்துணர முடிகின்றன.

கொடைப்பண்பு
வறுமையில் வாடும் புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள் முதலானோர்களுக்குப் பசி தீர அளிக்கப்படும் உணவே மன்னர்கள் வழங்கும் பொருள்களில் முதன்மையானவை. அதன்பிறகே உடை, அணிகலன் என இன்னபிற பொருட்களும் அமைகின்றன. இரவலர்களுக்கு வழங்கப்படும் இப்பொருட்களில் மலர் சார்ந்த பதிவுகள் வெளிப்படையாகவும் பொன், வெள்ளி போன்ற பொருட்களில் மலர்களின் வடிவத்தை முதன்மையாகக் கொண்டு குறியீட்டுத் தன்மையிலும் மலர்கள் அமையப்பெற்றுள்ளன. மேலும் கொடைப் பண்பில் சிறந்த விளங்கும் மன்னனுக்கும் அப்பண்பினைப் பெற்றிராத மன்னனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உவமையின் வாயிலாக விளக்கவும் மலர்கள் துணைசெய்கின்றன.

கொடைத் தன்மையில் வேந்தர்கள், மன்னர்கள் மட்டுமின்றி வீரர்களும் இப்பண்பில் சிறந்தவராய் திகழ்ந்துள்ளனர். இரந்து நிற்கும் புலவர்களின் உண்ணாத வயிற்றினைப் காணப்பெறாது, போருக்குச் சென்று பகைவரை வென்று பொருள் கொணர வேண்டித் தன்னூர்க் கொல்லனை வேல்வடித்துக் கொடுக்கச் சொல்லும் வீரனின் நிலையை

உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்
கருங் கைக் கொல்லனை யிரக்கும்
திருந்து இலை நெடுவேல் வடிந்திசின் எனவே (புறம். 180)

எனும் இப்பாடலடிகள் சுட்டுகின்றன.

வரையாது வழங்கும் மன்னர்களை நாடி பல்வேறு நாட்டில் வாழ்ந்த இரவலர்கள் பலரும் வருகின்றனர். அவ்வாறு தன்னிடம் இரந்து நிற்பவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை அவர்களின் முகக் குறிப்பின் மூலம் அறிந்து உதவும் மன்னர்களும், இரவலர்கள் வாராக் காலத்தில் அவர்கள் இருக்கும் இடம்நோக்கிச் சென்று அழைத்து வந்து சிறப்புச் செய்யும் மன்னர்களின் உளப்பாங்கும் கொடைத்தன்மையின் நுட்பத்தைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் பிறருக்கு வழங்குதல் வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் பல போர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை நோக்கும்போது இரவலர்களைக் காத்தருளும் உயரிய பொறுப்புணர்வை மன்னர்கள் பெற்றிருந்தனர் என்பது புலனாகின்றன.

மன்னர்களால் இரவலர்களுக்கு அளிக்கப்படும் பொன், வெள்ளிப் போன்ற பொருட்கள் பலவற்றில் மலர்களின் வடிவத்தைக் காணமுடிகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை தாமரை மற்றும் குவளைமலர் ஆகும். இவ்விரு மலர்கள் பயின்று வரும் இரண்டு பாடல்கள் மட்டும் இப்பகுதியில் எடுத்தாளப்படுகிறது. அவையே,

அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூற் பெய்து (புறம். 29)

பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
வால் நார்த் தொடுத்த கண்ணியும் (புறம். 153)

முதலாவது பாடல் சோழன் நலங்கிள்ளியைக் குறித்து உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், இரண்டாவது பாடல் வல்வில் ஓரியை பற்றி வன்பரணரும் பாடுகின்றனர்.

நெருப்பினைக் கொண்டு செய்யப்பெற்றது பொன்னாலான தாமரை. அதனை வெள்ளிக் கம்பியைக் கயிறாகக் கொண்டு பொன்னரிமாலையாக்கிப் பாணர்களுக்குச் சூடி மகிழ்கிறான் சோழன் நலங்கிள்ளி. பூக்காத மணிமிடைந்த குவளைப்பூ இதனை வெள்ளி நாரால் தொடுத்த பொன்னரி மாலையாய் பரிசிலருக்கு அளித்து மகிழ்கிறான் மன்னன் வல்வில் ஓரி. வேற்று நிலத்து விருந்தினரை தன் நிலத்தில் விளைந்த மலரினைக் கொடுத்து வரவேற்கும் பண்பு பழந்தமிழரிடம் காணப்பட்ட பொதுப்பண்பாகும். இவற்றின் மேம்பாடாகவே மேற்காணும் மன்னர்களின் கொடைபண்பு அமைகிறது. இதன்மூலம் மன்னர்களின் உள்ளார்ந்த வள்ளல் தன்மையில்கூட மலர்கள் முக்கியப் பங்கு பெற்றுள்ளன.

இரந்து நிற்கும் இரவலர்களின் செயலும் அவர்களை காத்து நிற்கும் மன்னனின் புகழினையும் ஒருங்கே வைத்தப் பாடல் புனைந்துள்ளார் புலவர் மோசிகீரனார். அப்பாடலின் பொருள் பின்வருமாறு, பாழுரில் நெருஞ்சியின் பொன்னிறப்பூ, எழுஞாயிறை எதிர்கொண்டு மலரும்: அதுபோல வறுமையுற்ற யாழ்ப் புலவரது ஏற்கும் உண்கலம், விளங்கிய புகழையுடைய கொண்பெருங்கானங் கிழானது குளிர்ந்த மாலை அணிந்த மார்பினை மலர்ந்து நோக்கின. (புறநானூறு மூலமும் உரையும். பக். 362 – 363) இயற்கையில் நிகழக்கூடிய நெருஞ்சிப் பூவின் இத்தன்மை மன்னனின் கொடைப்பண்பிற்கு உவமையாக வந்துள்ளது. அதுபோல் இப்பண்பினைப் பெற்றிராத மாந்தர்களை உவமைப்படுத்த பகன்றைமலர் வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இனி, பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை:

பனித்துரை பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! (புறம். 235)

இவ்வடிகள் அதியமான் நெடுமானஞ்சி இறந்த பிறகு அவனது பிரிவை எண்ணி புலம்பும் ஔவையாரின் கையறுநிலை பாடலில் இடம்பெறுவதாகும். இவை தரும் விளக்கமாவது, நீர்த்துறையில் பூத்து நிற்கும் பகன்றை மலர் யாரும் சூடுதலின்றி வீணில் ஒழிவது போல பிறருக்குக் கொடுத்துதவாது இவ்வுலக வாழ்வை கடப்பவர் பலர். எனக் கொடைப்பண்பு இல்லாத மாந்தர்களைப் பகன்றைமலரின் பயன்பாட்டுத் தன்மையின் மூலம் உவமைப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நெருஞ்சி மற்றும் பகன்றை எனும் இவ்விருமலர்களும் கொடைத்தன்மையில் நிகழக்கூடிய இரண்டு வேறுபட்ட தன்மைகளைப் புலப்படுத்துகின்றன எனலாம்.

பொன்னும், பொருளும் வழங்கி நிற்கும் மன்னர்களின் ஈகை குணத்தில் ஆடைகளும் இடம்பெறுகின்றன. புறம். 398 ஆம் பாடலில் கிணைப் பொருநன் கிள்ளிவளவனிடம் வேண்டி நிற்கும் பொருள்களில் ஒன்றாக ஆடைகள் இடம்பெறுகின்றன. “முட்டை ஈன்ற பாம்பினது நாவின் வடிவைப் போல, பழைமையுற்றிருந்த கிழிந்து பிளவுபட்ட என் பீறிய உடையை முற்றவும் நீக்கி, அரும்பு மலர்ந்த பகன்றையின் புதுப்பூப் போன்ற அகல மடிக்கப்பட்ட ஆடையைக் கொடுப்பாயாக” (புறநானூறு மூலமும் உரையும் ப.859) எனும் இவ்வுரையின் வாயிலாகப் புது ஆடையின் மென்தன்மையைப் புலப்படுத்த பகன்றையின் புதுப்பூக்கள் உவமையாக வந்துள்ளன என்பது தெளிவாகின்றன.

மாந்தர்களின் புற வாழ்க்கை

மேற்கண்ட கூறுகள் வேந்தர்கள் மற்றும் மன்னர்களுக்குரியப் பண்புகளை விளக்குகின்றன. அவ்வாறு புற வாழ்வில் நிகழக்கூடிய பொது மாந்தர்களின் செயல்கள் பலவற்றையும் காணமுடிகின்றன. “காலத்திற்கும் இடத்திற்கும் பிற இயற்கைச் சூழல்களுக்கும் இயைந்த நிலையில் வாழ்வினை மேற்கொள்ளும் மக்கள் தம் மனநிலையாலும், பழக்க வழக்கங்களாலும், உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை நிறைவு செய்து கொள்ளும் போக்குகளாலும் பண்பாட்டுக் கூறுகளைத் தம்மியல்பாகப் புலப்படுத்தி வந்துள்ளனர்” என்பார் செ. வைத்தியலிங்கன் (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு. ப.22) அவ்வாறு இயற்கைச் சூழல்களுக்கிடையே வாழ்ந்த மக்களின் உணவு, உடை, அணிகலன், விளையாட்டுப் போன்றவற்றிலும், கணவனை முன்னிறுத்தி அவன் மனைவியர்க்கு நிகழ்த்தக் கூடியச் சடங்குகள் முதலியவற்றிலும் மலர்கள் நீங்கா இடம்பெற்றுள்ளன.

ஆடவரும், மகளிரும் சேர்ந்து ஆடும் புனல் விளையாட்டில் ஆம்பல் பூவின் தண்டினைக் கை வளையலாக அணிந்துள்ளனர் மகளிர். அணிகலனாக விளங்கும் இப்பூவை பற்றி புறம். 63 ஆம் பாடலில் குறிப்பிடப்படுகிறது. மேலும் புனலாடும் பேதைப் பெண்கள் ஆற்றில் வண்டில்மண் எடுத்துப் பாவை செய்து விளையாடுவதும், அம்மணற்பாவைக்கு மலர்மாலையைச் சூட்டி மகிழ்வதும் மகளிர் ஆடும் விளையாட்டுகள் ஆகும். அவ்வாறு தொடித்தலை விழுத்தண்டினார் தன் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த செயல்கள் பலவற்றை எண்ணி மனம் மகிழ்வதாக அமைகிறது ஒரு புறப்பாடல்,

செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து. (புறம். 243)

எனும் இவ்வடிகள் மூலம் பாவை செய்து அதற்கு மலர்மாலைச் சூட்டி மகிழும் பேதைப் பெண்களையும், அவர்களின் கையைப் பிடித்து புனலாடியப் புலவரின் இளமைக்காலத்து நினைவுகளையும் இப்பாடலில் பதிவுச் செய்துள்ளார்.

வறண்ட நிலத்தில் வளரும் தன்மைக் கொண்டது இருப்பை மரம். இதன் வெண்ணிறப் பூக்கள் சற்று இனிப்புச் சுவையுடையதால் இதனை சர்க்கரையாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பர். கள் உணவை அக்காலத்தில் பலரும் விரும்பி அருந்தினர். அவ்வாறு, தென்னை, மற்றும் பனைமரங்களின் அரும்புகளிலிருந்துப் பெறப்பட்ட சாற்றினைக் கொண்டு அதில் மலர்களை இட்டு சமைத்த கள் உணவை மறவர்கள் வாழ்த்துகின்றனர்.

நார் அரி
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி (புறம். 297)

மேலும் இதே தன்மையைக் கொண்டு விளங்கும் புறம். 347 ஆம் பாடலில் கள்ளினை அருந்துபவர்கள் தாங்கள் அருந்தும் கள்ளில் தும்பை மலரை இட்டு சுவைத்துள்ளனர் என்ற குறிப்பும் கிடைக்கிறது. இவ்வாறு வேறு சில மலர்களும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தமிழர்களின் உணவுமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு மேலும் சில சான்றுகள் கிடைக்கின்றன.

வேளைப்பூ புளிப்புச்சுவையை உடையது. எனவே அதனைக் கொண்டு கூழ் சமைக்கும் பக்குவத்தை பின்வரும் உரைப்பகுதி விளக்குகிறது. “கவையாகப் பிளந்த கதிரினைக் கொண்ட வரகு. அவ்வரகினைக் குற்றி எடுத்து வடிக்கப்பட்ட சோற்றையும், எருவையுடைய தெருவில் தாதாக உதிர்ந்த போதொடு தழைத்த வேளைச் செடியின் வெள்ளிய பூவினை தயிரில் இட்டு இடைமகள் சமைத்த அழகிய புளித்த கூழை நிறைய உண்பர்” (புறநானூறு மூலமும் உரையும் ப.520) இதன்மூலம் இடையர்களின் உணவுமுறையில் வேளைப்பூ ஒரு இடுபொருளாக அமைந்து அதன் சுவையை மிகைப்படுத்தியுள்ளது என்பது புலனாகிறது.

தலைவன் போர் மற்றும் பிற காரணங்களுக்காகத் தலைவியை விட்டு பிரிந்து செல்லுகிறான். இப்பிரிவினை தாங்கிக் கொள்ளாதத் தலைவி பெருந்துன்பத்தை அடைகிறாள். இந்நிகழ்வு அகம், புறம் இரண்டிலும் காணப்படுகின்றன. ஒப்பனைகள் ஏதுமின்றி மலர்ச் சூடுதலை தவிர்த்து தனிமையில் இருக்கும் தலைவியின் இந்நிலை பிரிவுத் துயரினை குறிப்பால் உணர்த்துகிறது. மேலும் பழந்தமிழரின் வாழ்வியலில் துயரத்தினை வெளிப்படுத்தும் விதமாக மலர்களைக் கொண்டு சில பண்பாட்டுச் சடங்குகள் நிகழ்த்தப்பெற்றுள்ளன. அவற்றினுள் குறிப்பிடத்தக்க ஒன்று கணவனை இழந்த பெண்ணுக்கு அளிக்கப்படும் கைம்மை நோன்பாகும்.

கணவன் இறந்த பின்பு மனைவிக்கு அளிக்கப்படும் உணவை குறித்து புறப்பாடல் தரும் விளக்கம் பின்வருமாறு, “சிறிய வெண்மையான ஆம்பல் முன்பு நாம் இளமையுடன் இருக்கும் காலத்தில் தழையாடையாக இருந்து உதவின. இப்பொழது பெரிய செல்வத்தையுடைய கணவன் இறந்த பிறகு உண்ணும் வேளைத்தவறி துஞ்சும் பொழுதில் உண்பதற்கு அல்லியிடத்து உண்டான புல்லரிசியைத் தந்துதவின” (புறநானூறு மூலமும் உரையும் ப. 575) பெண்கள் மணக்கோலம் பூணுவதற்கு முன்பும், மணமுடித்துக் கணவனின் இழப்பை எதிர்கொண்ட பொழுதும் மலர்கள் கொண்டு கட்டமைக்கப்படும் அவர்களின் வாழ்க்கைச் சூழலை மேற்கண்ட வரிகளின் மூலம் சித்திரிக்கப்பட்டுள்ளன. எனவே, மகிழ்ச்சியின் குறியீடாக விளங்கும் மலர்கள் களையப்படுவதன் மூலம் அவை துயரத்தை வெளிப்படுத்தும் குறியீடாக மாறுகின்றன.

அணிகலன்கள் நீக்கப்படுதலும் துயரத்தின் வெளிப்பாடு என்பதற்கு மேலும் சில சான்றுகள்

பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. (புறம். 234)

கோவலர்கள் கூர்மையான வாளால் பூக்கள் செறிந்த தழைகளையுடைய வேங்கை மரத்தின் கிளைகளை வெட்டுவர். அதுபோலக் கரிகாலன் இறந்ததால் அவனுடைய உரிமை மகளிர் தங்களின் அணிகளை நீங்கினர். எனக் கணவன் இறந்த பின்பு அணிகலன்கள் களையப்படும் சடங்கு பெண்களுக்கு நடத்தப்பட்டுள்ளது என்பதை இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வேங்கை மலர் மலர்தல் மணத்தின் குறியீடு. அம்மலர்கள் வீழ்த்தப்படும் காட்சியைத் துயரம்மிகுந்த இச்சடங்கில் உவமையாகச் சித்திரிக்கப்படுகிறது. என்பதன் மூலம் பழந்தமிழரின் பண்பாட்டுக் கட்டமைப்பில் மலர்களுக்கெனத் தனித்த இடம் ஒன்று இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

தொகுப்புரை
இந்நிலவுலகை நிலைநிறுத்தும் பெரும் அரண்களாக விளங்குபவை காடு, மலை, அருவி, ஆறு, கடல் என்னும் இயற்கை கூறுகள் ஆகும். பண்டைய தமிழரின் இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்வியல் முறைகளும் இதனடிப்படையில் அமையப்பெற்றவைகளாகும். இவ்வியற்கை வளங்களை மணத்தாலும், நிறத்தாலும், அழகுற செய்பவை மலர்கள். புலவர்களின் கற்பனை வளத்திற்கேற்பக உவமைகளாகவும், குறியீடுகளாகவும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்தி நின்ற இம்மலர்கள், உலக இலக்கியங்களில் திணை, துறை வகுக்கப்பெற்ற இலக்கியம் எனச் சங்க இலக்கியத்தின் சிறப்பை சுட்டுவதிலும் பெரும் பங்கினை ஆற்றியுள்ளன.

வேந்தர்களின் குடி, போர் உள்ளிட்ட அடையாளங்களைப் புலப்படுத்தி நிற்கும் மலர்கள், மாந்தர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு , உடை முதல் சமூகத்தில் நிகழ்த்தப்பெற்ற பல்வேறு சடங்குகள் என அனைத்திலும் தனது பண்பாட்டுக் கூறுகளைச் செலுத்தியுள்ளன என்பதற்கு மேற்கண்ட விளக்கங்களே தக்க சான்றுகளாகும். எனவே, மலர்கள் மாந்தர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை என நெடுந்தூரப் பயணத்தில் பயணிப்பதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை உலகளாவியப் பார்வைக்கு இட்டுச் செல்ல மலர்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

துணைநூற்பட்டியல்
ஆலிஸ், அ. (உ.ஆ) - பதிற்றுப்பத்து மூலமும் உரையும்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. மு.ப 2007.

இராமலிங்கம், அரங்க    - சங்க இலக்கியத்தில் வேந்தர்
ஐந்திணைப் பதிப்பகம், சென்னை,
முதற்பதிப்பு, 1987.

இளவழகன். கோ. (ப.ஆ) - தொல்காப்பியம்,பொருளதிகாரம்,புறத்திணையியல்
தமிழ்மண் பதிப்பகம், சென்னை. 2003.

வைத்தியலிங்கன். செ. - தமிழ்ப் பண்பாட்டு வரலாறு,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

வைத்தியலிங்கன். செ    - புறநானூறு மூலமும் உரையும்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப. 2007.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R