சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள். “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,
நிரை களிறு இடைபட, நெளியாத்த இருக்கை போல்” (கலி.132:4-5)
என்ற கலித்தொகைப் பாடலில் மூன்று வகையான முரசுகள் பற்றி சுட்டப்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு உரை வகுத்தோர் ‘முரசு மூன்றாவன, வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு’ என்று விளக்குவர். வீரமுரசு போர்க்காலத்திலும், போர்களங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மணமுரசு விழாக்காலங்களில் செய்திகளை அறிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,
“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்” (மணி.விழா.27-31)
என்று மணிமேகலை கூறும். “வென்ற காளையின் தோலினால் போர்க்கப்பட்டதும் இடி போன்ற முழக்கினை உடையதும் ஆகிய முரசினைக் கச்சையானையின் கழுத்தின் மேலேற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியினை ஊரவர்க்கு, பழைமையினை உடைய குடியில் பிறந்தோன் அறிவித்தான் என்பர். இதனால் திருவிழாச் செய்தியினை ஊரவர்க்கு அறிவிக்கும் போது முரசு அறைந்து அறிவித்தல், மணிமேகலை காலத்தில் ஏற்பட்டது போலும். ஆனால் சங்க காலத்தில் குயவர்களே தெருத் தெருவாகச் சென்று விழாச் செய்தியினை உரத்துக்கூவி உரைத்தல் வழக்கமென்பதும், அப்போது அவர்கள் நொச்சி மாலையைச் சூடிச்செல்வர் என்பதும் நற்றிணைச் செய்யுளொன்றால் அறியலாம்”2 என்று வெ.வரதராசன் கூறுகிறார்.
அரசனின் பிறந்த நாளைத் திருநாள் என்று அழைத்து அந்நாளினை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இன்நாளை திருவிழாவாகக் கொண்டாடுதல் மரபென்பதையும், அச்செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் போது முரசறைந்து அறிவித்தல் வழக்கம் என்பதையும் பெருங்கதையால் அறிய முடிகிறது. இதனை,
“திருநாள் படைநாள் கடிநாள் என்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்” (பெருங்.2:32-34)
என்ற பாடலடிகள் உணர்த்தும். அரசனுடைய பிறந்தநாள், படையெழுச்சி நாள், மணநாள் என்னும் இப்பெருநாட்களில் அச்செய்தியினை வள்ளுவர் முரசறைந்து தெரிவிப்பர் என்கிறது. முரசினை வைப்பதற்கு என்று ஒரு தனிக் கட்டிலும் உருவாக்கப்பட்டு, அதன் மீது வைக்கப்பட்டிருந்துள்ளன. இச்செய்தியினை,
“செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண்பெயர்த்து, இயவர்” (பதிற்.19:5-7)
என்ற பதிற்றுப்பத்து பாடலடியால் அறியமுடிகிறது. அதாவது, ‘தங்கள் செய்த அரிய போர்த்தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழல் அணிந்த காலினையுடைய வீரத்தின் மாறுபடாத வயவர் திண்ணிதாகச் செறிக்கப்பெற்ற வேலினைப் புலித் தோலால் செய்யப்பட்ட உறையினின்றும் வெளியே எடுக்கவும், இரத்தத்தால் சிவக்கும் போர்க்களத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு கூலவகையினைச் சேர்ந்த சிவந்த நிறத்தினையுடைய தினையினை இரத்தத்தோடு கலந்து தூவி நீராட்டப்பெற்ற வீர முரசத்தினை அடிக்கும் பக்கத்தைச் திறந்து வைத்து குறுந்தடியைக் கையிலே கொண்டு தம் வீரவளையணிந்த தோளினை உயர்த்தி அடிப்பர்’ என்று விளக்கம் தருவார்.
முரசு மன்னர்களின் புகழை தெரிவிக்கும் வீரத்தின் அடையாளமாக இருந்துள்ளது. பகை அரசர்களின் காவல் மரங்களை வெட்டி வீழ்த்தி அம்மரத்தின் மூலம் முரசம் செய்து, அதனை வீரத்தின் அடையாளம் என்று கருதியுள்ளனர். இதனை,
“மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சுட்டி,
குறுதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாராஅளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேர்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர” (புறம்.50:1-8)
என்ற பாடலடிகள் சிறப்பிக்கும். ‘நின் வீர முரசு, குற்றம் தீர இறுகப் பிணித்துக் கட்டப்பட்ட வாரையுடையது. கரிய மரத்தால் அமைந்ததால் கருமை படர்ந்த பக்கங்களையுடையது. மயிலின் தழைத்து நீணட தோகைகளால் ஒளிபொருந்திய புள்ளியையுடைய நீலமணி போன்ற மாலையைக் கொண்டு சூட்டப்பெற்றது. அதனுடன் உழிஞையின் பொன் போன்ற தளிர்களும் அழகு பெறச்சூட்டப் பெற்றது. இத்தகைய பொலிவுடன் குருதியைப் பலி கொள்ளும் வேட்கையுமடையதாய் அச்சம் தருவதாய் நின் முரசு விளங்கும். அந்த முரசினை நீராட்டிக் கொண்டு வரும் முன் எண்ணெய் நுரையை முகந்து பரப்பியது போல மென்மையான பூக்களையுடைய கட்டிலில், அது முரசுகட்டில் என அறியாது ஏறிக் கிடந்துறங்கினேன்’ என மோசிகிரனார் பாடுவார். முரசுக் கட்டில் என அறியாது உறங்கிய மோசிகீரனாருக்கு சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கவரி கொண்டு வீசியுள்ளார். இங்கு முரசு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும், அதன் இயல்புகளும், அது வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டிலையும் பற்றி அறிய முடிகிறது.
முரசு பகையரசர்களின் காவல் மரத்தால் செய்யப்படும் என சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. போரில் வெற்றி பெற்றதும் பகையரசர்களின் ஊர், நிலம், அவனது உடமைகள் அனைத்தையும் கைப்பற்றும் மன்னன் அவனது காவல் மரத்தையும் வெட்டி வீழ்த்தி தனது வீரத்தை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளான். அன்றைய கால அரசர்கள் பகையரசனின் காவல் மரத்தை வெட்டி வீழ்த்தி, அம்மரத்தின் மூலம் முரசு செய்துள்ளனர். இதனை,
“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை,
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும்பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்,
அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந்தலைப் பைந் நிலம் வருக, இந்நிழல் என” (பதிற்.17:5-9)
என்ற பதிற்றுப்பாடல் அடிகள் உணர்த்தும். ‘அசைதலையுடைய நீர் துளித்துளியாகச் சிதறும்படி பெரிய கடலைக் கடந்து அங்குள்ள பகைவரது காவல்மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அம்மரத்தினால் வெற்றி பொருந்திய பெரிய முரசத்தினைச் செய்தான் சேரலாதன். வீரவளையினை அணிந்த தோள்களையுடைய வீரர்கள் வீரக் கூத்தினை ஆடியவாறே அம்முரசத்தின் அருகே சென்று அரிய பலிக்குரிய பொருள்களைத் தூவி, வணங்கிப் பின்னர்க் குறுந்தடி கொண்டு அம்முரசினை அடித்தனர்’ என்று உரை விரிகிறது. ஆக சேரலாதன் கடல் கடந்து சென்று போர் செய்ததோடு மட்டுமின்றி, பகைவர்களின் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அதில் தனக்கான வீர முரசினை அமைத்துக் கொண்டுள்ளான். பண்டைய தமிழர்கள் பகைவர்களின் காவல்மரத்தினால் முரசு செய்யும் மரபினைக் காட்டுவதாக உள்ளது.
முரசத்திற்கான தோலினை தேர்வு செய்யும் முறைகளை சங்கப்பாடல்கள் இயம்புகின்றன. மண்ணைக் குத்திக்கொள்வதால் வரி வரியாகக் கீறப்பட்ட மிக்க கூரிய கோட்டினை உடைய பெருமை பொருந்திய நல்ல ஆனேறுகள் இரண்டினைத் தம்முள் போர் செய்யவிடுவர். அதில் வெற்றி பெற்ற ஏற்றின் தோலினை மயிர் சீவாது போர்த்தி முரசினை செய்வர். இதனை,
“மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வேன்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க,
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவ” (புறம்.288:1-5)
என்று புறநானூற்று அடிகள் விவரிக்கின்றன. இக்கருத்தமைவினை கீழ்காணும் சங்கப்பாக்களும் உணர்த்துகின்றன.
“கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கள் முரசம் நவில கறங்க” (மதுரை.732-33)
“ஓடா நல்லேற்று உரிவை தைஇய
ஆடு கொள்முரசும் இழுமென முழங்க” (அகம்.334:1-2)
என்ற அடிகள் மேற்கண்ட கருத்துக்களை விளக்கும். தோலினை தேர்வு செய்யும் போது இரு வீரம் பொருந்திய களிறுகளை மொதவிட்டு அதில் வெற்றி பெறும் களிற்றினால் ஆன தோலைக் கொண்டே முரசு செய்துள்ளனர். “சீவின் கொம்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற இடிபோலும் சீற்றத்தை உடைய ஏற்றின் தோலைப் போர்த்த முரசினை உடைய சேனை’ என்பதால் ‘புலியொடு பொருதிய ஏற்றின் தோலும் பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரிய வருகிறது”3 என்று முரசின் தோல் தேர்வு பற்றி விளக்குவார் வெ.வரதராசன். ஒரு நாட்டின் முரசு கைப்பற்றப்பட்டுவிட்டால் அந்நாடு தோல்வியுற்றதாக எண்ணும் மரபு பண்டைத் தமிழர்களிடையே இருந்துள்ளது. இதனால் காவலர்கள் தம் உயிரையும் பணயமாக வைத்துப் போராடிக் காத்துள்ளனர்.
“சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படே னாயின்” (புறம்.70:8-9)
“விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்” (புறம்.179:4-5)
முதலான பாடல்கள் மேற்கண்ட கருத்துக்களை மெய்ப்பிக்கின்றன. மோகூர் மன்னனின் காவல் மரமாகிய வேம்பினை வெட்டி முரசம் செய்த காட்சியினை பரணரின் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
“மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடித்து,
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை” (பதிற்.44:14-18)
என்ற பாடலில் மோகூர் மன்னனின் காவல் மரமாகிய வேம்பினைத் துண்டாக வெட்டியதை மட்டும் கூறவில்லை. வெட்டப்பட்ட மரங்களை அம்மன்னனின் உரிமை மகளிர்களின் கூந்தல்களால் கயிறு செய்து, களிற்றினைப் பூட்டி இழுத்து வந்தான் என மொழிகிறது. சோழன் நளங்கிள்ளி தன்னுடைய அரசாட்சிக்கு நிகராக முரசினை எண்ணினான் என புறநானூறு மொழிகிறது. தன்னை வந்து பணிந்து ‘எமக்குத் தருக’ என்று தாழ்ந்து இரந்து நிற்பவர்களுக்கு தம் சிறப்புடைய முரசுடன் தொன்மை பொருந்திய அரசாட்சியையும் தருவேன் என்று வஞ்சினம் கூறும் முன் பாடியுள்ளான்.
“மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி,
ஈ என இரக்குவர் ஆயின், சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென்” (புறம்.73:1-4)
என்ற அடிகளில் தம் பழமை பொருந்திய அரசாட்சியையும் முரசின் சிறப்புக்களையும் பணிந்து நின்று கொடை வேண்டுவோருக்கு தருவேன் என்று பாடப்பட்டுள்ளது. ஆட்சியைத் தருவதோடு மட்டுமல்லாது சிறப்பு பொருந்திய முரசுடன் தருவேன் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. வீரத்தன்மை வாய்ந்த முரசினையும் சேர்ந்து கொடுத்தல் பெருமையாகக் கருதப்பட்டுள்ளது. முரசு என்பது கரிய நிறத்தால் ஆனது எனப் பரிபாடல் கூறுகிறது. திருப்பரங்குன்றத்தில் மணி (கருமை) போன்ற நிறமுடைய முரசு அயராது ஒலித்துக் கொண்டே இருக்கும் என்கிறது. இதனை,
“குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழு,
காலோடு மயங்கிய கலிழ் கடலென” (பரி.8:29-31)
என்ற பாடல் அடிகள் சுட்டுகின்றன. ‘கிரௌஞ்சம் என்னும் மலையினை உடைத்த ஒளிமிக்க வேற்படையினை ஏந்திய முருகப்பெருமானே! மதுரை மாநகரில் மணம் பொருந்திய மணி போன்ற நிறமுடைய முரசத்தின் முழக்கம் எழுந்தது. காற்றினால் மோதி அடிக்கப்பட்ட கடல் அலைகள் கரைக்குப் பெயர்ந்து வந்து ஒலிப்பது போலவும், அக்கடல் நீரைக் குடிக்கும் மேகத்தின் முழக்கத்தைப் போலவும், இந்திரனுடைய இடியேசை முழக்கம் பெரிய இடியின் ஒலிபோலவும், அம்மணமுரசம் ஒவ்வொருமுறை முழங்குந்தோறும் அம்முழக்கம் உன்னுடைய திருப்பரங்குன்றத்தில் முழங்கிய முழக்கத்ததிற்கு மாறுமாறாக ஒலிக்கும்’ என உரை விரிகிறது. இங்கு முரசிற்கு மணம் உண்டு என்பதும், அது கருமை நிறமுடையது என்பதும் இதன் மூலம் அறியப்படுகிறது. அதன் ஓசை கடலின் அலையைப் போன்றும், மேகத்தின் முழக்கத்தைப் போன்றும், இடியின் ஓசையைப் போன்றும் மாறி மாறி ஒலித்துள்ளது. விழாவினைப் பற்றி அறிவிக்கும் முரசிற்கு மணமுரசு என்று பெயர் என்பதனை முன்னரே கண்டுள்ளோம். இவ்வாறு சங்ககால மக்களின் வாழ்வியலில் முரசு பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்புகள்
1. பாலசுப்பிரமணியன்.கு.வெ., சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், ப.122.
2. வரதராசன்.வெ., தமிழ்ப்பாணர் வாழ்வும் வரலாறும், ப.144.
3. பாலசுப்பிரமணியன்.கு.வெ., சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், ப.145.
பயன்பட்ட நூல்கள்
1. பாலசுப்பிரமணியன்.கு.வெ., - சங்க இலக்கியத்தில் கலையும்
கலைக்கோட்பாடும்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு,
சென்னை - 600 113.
முதற்பதிப்பு - 1998.
2. வரதராசன். வெ., - தமிழ்ப் பாணா; வாழ்வும் வரலாறும்
பண்ணன் பதிப்பகம்,
சென்னை - 72.
முதற்பதிப்பு - 1973.
கட்டுரையாளர்: - செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -முகவரி,
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.