ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சு.செல்வகுமாரன் குமரிமாவட்டம் தெக்குறிச்சியில் பிறந்தவர். (03-06-1974) கடந்த பன்னீரெண்டு ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அரசின் பணியிடமாற்றத்தில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் குறித்து காத்திரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த பத்து வருடங்களாக தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழம், புலம்பெயர் படைப்பிலக்கியங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருபவர். ஈழத்துப் படைப்புலகம் வலிகளை எழுதும் கவிதை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2015, ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு, காவ்யா - 2008, சமகால நாவல்களில் புனைவின் அரசியல் என்.சி.பி.எச் - 2015, அ.முத்துலிங்கத்தின் புனைவு உலகம், கலைஞன் - 2015, ஆகியன இவரது நூல்களில் முக்கியமானவையாகும். திணை, மற்றும் பூவரசி சிற்றிதழ்களின் துணை ஆசிரியராக விளங்குபவர். மேலும் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக, (காவ்யா – 2012), உலுப்புக்காரனின் திசை,  (பூவரசி – 2016) எனும் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதை எழுத்து குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொண்ணூறுகளுக்கு பிறகு தமிழ் கவிதை பண்பாட்டு வேர்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்தது. குறிப்பாக உரைநடை மொழிக்கு உயிர் கிடைத்திருந்தது. இக் காலகட்டத்தில் தமிழ் கவிதை மொழி மக்கள் மொழியாகியது. கருத்தியல் ரீதியாகவும் புதிய பாடுபொருள்களை சுமந்து வரத் தொடங்கியது. அந்த வகையில் தமிழ் பண்பாட்டின் வேர்களை சுமந்து வெளிப்பட்ட ஒரு மண்ணின் வாழ்க்கை சு.செல்வகுமாரனின் கவிதைகளில் வெளிப்பட்டதை நாம் காண முடியும். அவரின் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக என்ற கவிதை புத்தகம் வெளிக்காட்டி இருக்கின்ற உலகம் பால்ய கால ஓர்மைகளின் வழி பயணத்தை தொடங்கி தாத்தா, அப்பா, அம்மா, தங்கம்மா கிழவி என இப்படி உறவுகளுக்குள்ளும், பூவரசம்பூ, பனங்கிழங்கின் பீலி, நொண்டங்காய், புன்னை மரக்கிளையில் ஊஞ்சல், நாருப்பெட்டி, தென்னம்பூ, வேட்டாளி, மரைக்காலில் நெல்மணி, இப்படி வாழ்க்கையின் பண்பாட்டின் பகுதிகளிலிருந்தும் வாழ்ந்த வாழ்க்கையின் பக்கங்களை சுமந்து கொண்டு கவிதை வருவதை நாம் காண முடிகின்றது.

“கொண்டையான் குளத்தில் மேலகரையில்
வளர்ந்து நின்ற வேப்பமரத்தில் ஏறி
உடலை சுருட்டி மூன்று சுற்றுச்சுற்றி
குளத்தில் குதித்து மூழ்கி
படிக்கரையில் தலையை மேலெழுப்பியதும்
நீச்சலடித்து தொட்டு விளையாடியதும்
பறித்த செந்தாமரைகளில் பெரிய மொட்டினை
சரஸ்வதி படத்தில் வைத்து படிப்பைக் கேட்டதும்
சங்கிலி பாசியாய் நிரம்பிக் கிடக்கின்றது”1

என்று ஒரு கவிதை பேசுகின்றது. இந்த கவிதை பால்யங்களில் பதுக்கி வைக்கப்பட்ட ஓர்மைகளில் இருந்து உயிர் உள்ள சித்திரமாய் வாழ்க்கையை எழுதி செல்கிறது. அதுவும் சங்கிலிப் பாசியாய் என்ற அடர்த்தியான வார்த்தை அற்புதமான குறியீடாக அமைகின்றது. தங்கம்மா கிழவி என்ற தலைப்பில் எழுதி இருக்கின்ற கவிதையும் முக்கியமான கவிதையாகும். பாஞ்சி இலையில் ஏழு பறிச்சி ஒன்றை மூட்டில் போட்டு மீதியான ஆறுடன் இரண்டு பரல் உப்புமாய் வைத்து பிள்ளையின் வயிற்றில் தடவினாள் தங்கம்மா கிழவிக்கு ஏப்பம் வரும்படிக்கு. ஆனைக்கொதி பூனைக்கொதி அடுத்தோர் கொதி தொடுத்தோர் கொதி எல்லா கொதியும் மாயமாய் போக தலையை மூன்று சுற்று சுற்றி எச்சில் துப்பி தணல் மிகுந்த அடுப்பில் முக்க மேலெழுந்த புகையின் நாற்றத்தில் காணாமல் போகிறாள் தங்கம்மாள் கிழவி. இந்த கவிதை நாட்டார் பண்பாட்டின் சாற்றை பிழிந்து எழுதிய கவிதை. ஏனெனில் நமது முன்னோர்கள் விதைத்து வைத்து இருக்கின்ற நம்பிக்கைகளின் உலகம் மிகவும் முக்கியமானது. அது நமது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நிகழ்கின்றது. அதுவும் கிராமப்புறங்களில் கொதிக்கு பார்ப்பது இன்றளவும் எதிர் கொண்டு வரும் நம்பிக்கை உலகம் இதனை செல்வகுமாரன் கவிதையாக்கி இருப்பது சிறப்புக்குரிய விசயமாக கொள்ளலாம்.

மேலும் செல்வகுமாரனின் கவிதை புத்தகம் முழுக்க முழுக்க விளிம்புநிலையில் வாழுகின்ற மக்கள் சார்ந்த கதாபாத்திரம், அவர்களின் தொழில் சார்ந்த பண்பாடுகள் கவிதையாகி இருக்கிறது. குறிப்பாக கயிறு என்ற தலைப்பில் இடம் பெற்ற கவிதை மிகவும் முக்கியமானது. அந்த கவிதை இப்படி தொடங்குகிறது.

கடவப்பெட்டியிலும் காளை வண்டியிலுமாய்
குண்டிற்கு கொண்டு வரப்பட்ட கதம்பல்2

இதில் கயிறு சார்ந்த தொழில் நுட்பத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அது போல குமரி மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களோடு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஒன்று பனை ஏறுதல். விளிம்பு நிலையில் வாழுகின்றவனுக்கு பனை பெரிய வாழ்வாதாரம் அப்படிப்பட்ட பனை மரத்தை அழித்து வெற்று தரைகளாக்கும் சூழல் ஏற்படுகின்ற போது அதனை மிக சரியான அர்த்தத்தளத்தில் உள்வாங்கி பனைமரம் பேசுவது போன்ற ஒரு கவிதை செல்வகுமாரனிடமிருந்து மிக கூர்மையாக வெளிப்பட்டுள்ளது. நான் உங்கள் பனை மரம் பேசுகின்றேன் என தொடங்கும் அந்தக் கவிதை,

“தாயாக நின்று பதனீர் தருகின்றேன்
நொங்கு தின்பாயா
இதோ எடுத்துக் கொள் என் கண்கள் மூன்றையும்
உன் பாட்டனும் அப்பனும் குடித்து மகிழ்ந்த
கள்ளும் நானல்லவா பருகிக்கொள்
பனம்பழம் ஒன்று தருகிறேன் எடுத்துச்செல்
அம்மா நெல் அவித்த இரட்டை அடுப்பின்
வெந்தணலில் போட்டு சாப்பிடு பசியாறும்
பாட்டி மண் பானை ஒன்றில்
வாழாங்கொத்து புளிகளை அடுக்கி
கூப்பனி ஊற்றி வைத்திருப்பாள்
கற்கண்டாய் மாற இன்னும் சில மாதங்கள் ஆகும்
பாட்டிக்குத் தெரியாமல் சற்றே உண்டு வா
குருத்தோலை என்றும் குறும்பு பேசாதே
வரும் கார்த்திகை நாளில்
கொழுக்கட்டை செய்து உண்ணலாம்
பனை மட்டை தானே எதற்குப் பயன்படும் என்கிறாயா
ஒரு நார் கட்டில் செய்து படுத்து கொள்
இதமாய் இதமாய் தூங்கிக் கொள்ளலாம்” 3

என்று முடிகின்ற கவிதை பல ஆண்டுகால மண்ணின் வரலாற்று சுவடுகளை வேதனையோடு செல்கிறது. எளிமையான மொழியில் ஒரு கதை சொல்லலின் தன்மையோடு அமைந்திருக்கின்ற இந்த கவிதையில் வெளிப்பட்டிருக்கும் வாழ்வு தமிழ் கவிதைக்கு புதிது என்று நிச்சயமாக கூறலாம். அது மட்டுமில்லாமல் நம் தாத்தா பாட்டி பயன்படுத்திய புழங்கு பொருட்களான முக்கூட்டு, நாற்காலி அடுப்பு, தீ மூட்டிய சருகு, நெல் அவித்த மண் பானை, காயப்போட்ட பெரிய ஓலைப்பாய், கைக்குத்தல் செய்த உரல், உலக்கை, கஞ்சி வடித்த பரவச்சட்டி, பெரிய கணை ஆப்பை அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் எப்படி எல்லாம் காணாமல் போனது என்றும் ஆதங்கப்படுகிறார். இவரின் கவிதைகளில் இது போன்ற பல இடங்களை நாம் கிராமத்து புழங்கு பொருட்கள், பண்பாட்டு அடையாளங்களோடு கூடியதாய் காணமுடியும். இவை பின்காலனிய (Post Colonialism) வாசிப்புக்கான இடத்தினை கோரி நிற்பதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். பின் காலனியத்தில் வேர்களைத் தேடுதல் பற்றி குறிப்பிடும் கவிஞர் ஆதிரன் “பின் காலனிய நிகழ்வின் முதல் கட்டமான ஆதிக்க நிலையைத் தொடர்ந்து இரண்டாவதாக ஃபனான் விளக்குவது மூல இருப்புத் தேடல். அதாவது தான் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என அறிந்தபின் தனதான வேரை, தனது அசலான பண்பைத் தேடும் நிலை எனக் கொள்ளலாம். தனது தொன்மத்தை, ஆதி நிலத்தின் பண்பை, தனது பண்பாட்டைத் தேடிச்செல்லும் பண்புகளை அவைக் கொண்டிருக்கும்”4 என்பது கவனத்திற்குரியது.

அம்மா பற்றிய கவிதைகளும் இவரிடத்தில் மிகவும் காத்திரமாக வெளிப்படுகின்றன. பூவரச மரத்தின் குளிர்ச்சியில் பக்கத்துவீட்டு சித்தியுடன் பேசியபடி கட்டியிருந்த கண்டாங்கி சேலையில் ஒரு முகப்பினை அவிழ்த்து விரித்து தரையில் படுத்திருப்பாள் அம்மா என்று இந்த கவிதையில் ஒரு எளிய பாசாங்கில்லாத கிராமத்து தாயை கண் முன் காட்டுகின்றார். நான் ஏற்கனவே சொன்னது போன்று தனது புத்தகம் முழுக்க எளிய மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகின்றார். அது போல இன்னொரு அம்மா பற்றிய கவிதை இப்படி வருகிறது,

“அம்மா வருவதாய் சொன்னாள்
பக்கத்து வீட்டுபாட்டி
கறியும் சோறுமாய் காத்திருந்தேன்
ஒட்டுத்திண்ணையில்
அன்று முழுஅமாவாசை”5


இந்த கவிதை வரிகள் முன்னோர்களை அமாவாசை அன்று நினைவுபடுத்துதல் என்கிற புராதான நாட்டுப்புற நம்பிக்கையை நேர்த்தியுடன் எழுதி செல்கிறது. உச்சக்கொடை என்ற கவிதையில்  
“ஆராதனைகள் வந்து
நரம்பு முறுக்கேற துள்ளிக்குதித்து
குலைவாழையில் முட்டுகிறார்
சல்லடம் கட்டப்பட்டு
தீப்பந்தத்தை கையிலெடுத்தார்.
உச்சக்கொடையில் சாமியாடியாய்
செவ்வரளிமாலை கேட்டு முத்தாரம்மன் பேசினாள்.” 6

என்று சிறு தெய்வ வழிபாட்டு மரபுகளின் பின்புலம் கவிதையாகி இருக்கிறது. இப்படி பல கவிதைகளில் விளிம்பில் வாழும் மக்களின் நம்பிக்கை உலகம் செல்வகுமாரனின் கவிதைகளில் வெளிப்படுவதை நாம் காண முடிகிறது. அது போல பல கவனிக்கப்படாத உதிரி மனிதர்கள் உரிய மரியாதையோடு இவரது கவிதைகளில் கடந்து போவதைக் காணலாம். குறிப்பாக எள்ளுவிளை பெரியம்மா, செல்லம்மாள் இப்படி சொல்லி கொண்டே போகலாம். இவைகள் அனைத்தும் கவிதைக்குள் கதைவடிங்களாய் ஒரு கதைக்கான நீட்சியோடு இடம்பெற்றிருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. இது செல்வகுமாரனின் தனித்துவ அடையாளமாக கொள்ளலாம். அப்பா, அம்மா உரையாடல் தொனியில் அப்பாவின் மந்திரம் என்ற ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது. இந்த கவிதையை யதார்த்த பதிவாக பட்டவர்த்தனமாக எழுதப்பட்டிருப்பதாக சொல்லலாம். விடியற்காலையில் அம்மாவுடன் படுத்து கிடக்கும்  மகனை எழுப்ப தண்ணீர் தெளிக்கின்றார் அப்பா. அம்மா சொல்கிறார் பிள்ளைய உறங்கவும் விட மாட்டான் இடிவுளுவான் கைய்யில கறையான் அரிக்கியதுக்கு என்று. கவிதையின் கடைசி பகுதி இப்படி அமைகிறது. வெள்ளாளர் வீட்டுப்பிள்ளைய நாலு மணிக்கெல்லாம் எழும்பிப்படிக்கும். இதுவ படிக்கவா பிறந்திருக்கு? மாடு மேய்க்கப் பொறந்ததுவ என்னும் அப்பாவின் பதில் யதார்த்தமாக சமூகத்தில் மேல் கீழ் படிநிலையில் காணப்படுகின்ற இயங்குதளத்தை மிக நுட்பமாக கட்டுடைத்து காட்டுகிறது.

மேலும் நொண்டங்காய் ,அனந்தர சொக்காரமார்கள், அப்பாவின் விசிறி. இப்படி பல கவிதைகள் யதார்த்த சித்தரிப்புகள் நிறைந்த வாழ்வை முன் வைக்கிறது. செல்வகுமாரனின் கவிதைகளை பற்றி குறிப்பிடும் கவிஞர் ஹெச். ஜி. ரசூல் “ஒற்றைவாசிப்புத் தாண்டிய பன்முக வாசிப்பை கோரிநிற்கும் ஊடிழைப் பனுவல்களாக குறிப்பிடலாம். இக்கவிதைப் பனுவல்களில் வரலாறும், தொன்மமும், மொழியும், பண்பாடும் இணைவாகியுள்ளன. வாசகனிடத்தில் இன்னுமதிக தேடலையும், வாசிப்பையும் கோரி இக்கவிதைகள் நம் முகத்தில் அறைந்து கொண்டிருக்கின்றன.”7 என்கிறார். மொத்தத்தில் செல்வகுமாரனின் ‘பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக’ கவிதை புத்தகம் அடர்த்தியான வாழ்வியலை முன் வைக்கும் ஒரு சிறுகதை தொகுப்புக்கு இணையானது. தனக்கே உரிய எளிமையான மொழியோடு அடர்த்தியான வாழ்க்கையை முன் வைக்கும் செல்வகுமாரனின் இந்த கவிதை உலகம் தமிழ் மைய கவிதை உலகத்திற்கு புதியது என உறுதியாக கூறலாம்.

சமீபத்தில் வெளிவந்திருக்கின்ற ‘உலுப்புக்காரனின் திசை’ இவரின் இரண்டாவது கவிதை புத்தகமாகும். இத்தொகுப்பு முற்றிலும் மாறுப்பட்ட மொழியோடு பயணப்படுவதை நாம் கவனிக்க முடியும். வேலை நிமித்தமான வாழ்க்கையை எதிர்கொள்ளும் போது கிடைக்கின்ற வலிகள் சார்ந்த நெருடல்கள், நகர்புற வாழ்வில் எதிர்கொள்ளுகின்ற வாழ்வின் அபத்தமான இருண்மை சார்ந்த பக்கங்கள், தொழில் நுட்பம் சார்ந்த நவீன உலகத்திற்கு மனிதன் பயணிக்கும் போது அழிந்து போன பண்பாட்டு உபகரணங்கள் குறித்த கரிசனையோடு கூடிய கோபம், காதல் காமம் சார்ந்த புள்ளிகள், ஊடகம் கட்டமைக்கின்ற அல்லது நம் வாழ்வோடு திணிக்கின்ற விசயம், நுட்பமான சமூக வாழ்வோடு கூடிய விமர்சனம், யுத்தங்கள் தந்த துயரங்கள், சுய விமர்சனம், குழந்தைகளோடுள்ள உறவு இப்படி கவிதைப் புத்தகம் முழுக்க ஏராளம் விரிந்து கிடக்கிறது. பனை மரத்து நாரினால் ஆன தாத்தா வீட்டு கட்டில் துவரங்களாலானது. தாத்தா இறந்த போது அவரின் இறுதி குளியல் அந்த கட்டிலில்தான்  நடைபெற்றது. என்ற வரிகளை பேசும் கவிதையில் உறவுகளின் மூச்சுக்காற்றை மறந்து விடாமல் துல்லியமாக பதிவு செய்யும் நுட்பமான கலைஞனை சந்திக்க நேரிடுகிறது .

இன்னொரு கவிதை புங்கமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்ததும் பறந்து போன சாம்பல் குருவியின் கூடு போல ஒரு கூடு போதும். இரவு நேரங்களிலும் மழை நேரங்களில் இளைப்பாறிக் கொள்வதற்கு. என்பதாக நகரத்து வாசனையோடு தன்னை இணைத்துக் கொண்டு வாழ்ந்தாலும் ஆழ்மனப்பரப்பில் காணப்படுகின்ற கிராமத்து ஓர்மைகளின் அடுக்குகளை சுமந்தபடி இந்த கவிதை சொல்லியின் மனம் நகர்வதை இந்த கவிதை உணர்த்துகிறது. அது போல நெய்தல் நிலப்பரப்பு வெளிசார் மக்களின் வாழ்க்கை வேதனைகளையும் படம் போட்டு காட்டுகிறது. அதுபோல சுயம் சார்ந்த கோபத்தின் வெளிப்பாடு மிகச்சிறப்பாக செல்வகுமாரனிடம் பதிவாகி இருப்பதை பல கவிதைகளில் கவனிக்க முடிகிறது.

“மேல் எழாத படிக்கு பார்த்து கொள்கின்றாய் நீ
எனினும் என்னுள்ளிலிருந்து ஊடுருவுகின்ற
சிறு கசிவுகளை
ஒன்றும் செய்ய முடிந்ததில்லை உன்னால்” 8

இன்னொரு கவிதையில் வரும் உன்னை எதிர்கொள்ள கூரிய ஆயுதங்கள் தேவையில்லை. என்னிடத்தில் தேங்கி இருக்கின்ற பசப்பு மொழிகளே போதுமானது என்ற வரிகளாகட்டும், கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கொண்டு கைகள் நனையாதபடி நத்தைகளை நீ கைப்பற்றிக் கொண்டிருக்கிறாய் ஒருநாள் உன் கைகளுக்கு அவைகள் வராமலும் போகும் என்பதாகட்டும். மேலும் கோலை வைத்திருப்பதால் ஆட்டிடையனாகவோ வித்தைக்காரனாகவோ நீ இருக்கலாம் என  நீளும் கவிதை பிரிப்பது உனது இலட்சியம், உடையும் கணப்பொழுதில் நிலை மாறும் பிரளயத்தில் எதிர் நீச்சல் அடிக்கும் வல்லமை இல்லாத வித்தைக்காரன் நீ. என பேசுகின்ற கவிதை வரிகளாகட்டும் இவை எல்லாவற்றுக்குள்ளும் தான் எதிர் கொள்ளுகின்ற அல்லது தன்னை தன்னைச் சுற்றி இருக்கின்ற சுயம் சார்ந்த வலி செல்வகுமாரனின் கவிதை கவித்துவ மொழியோடு வெளிப்பட்டுள்ளது. இது தமிழ் நவீன கவிதையினுடைய தொடர்ச்சியான மரபு என்று கூறலாம்.

ஆரம்பகால நவீன கவிதை அகத்தை அல்லது சுயத்தை தனது வைதீக சுடரொளிக்குள் தேடியது. அதன் பிறகு வானம்பாடிகளின்சுயம் சமூக விடுதலையை உள்வாங்கி கொண்டு சமூகக் கோபமாக தன்னை வெளிப்படுத்தி கொண்டது. அதன் பிறகு பலரும் தனிமனித உணர்வை பல கோணங்களில் வெளிப்படுத்தினார்கள். ஆனால் இவரின் கவிதைகளில் ஒரு விளிம்புநிலை சுயம் வெளிப்படுகிறது. அது கவனிப்புக்கு உட்படுத்தக்கூடிய உதிரிகளின் வலிகளின் நீட்சியாக வந்து விழுவது இந்த புத்தகத்திற்கு கூடுதல் பலமாகும்.

போர்சார்ந்த கவிதைகள் பேரழிவு இலக்கியத்தின் கூறுகள் செல்வகுமாரனின் சில கவிதைகளில் சமூகக் கோபத்தோடு வெளிப்பட்டுள்ளது. ஒரு கவிதை ஓடி மறைவதற்கு ஒன்றுமில்லை எங்களிடத்தில் பதுங்குகுழிகள் பிணக் கிடங்குகளாய் இனியும் வெட்டுவதற்கு யாரும் இல்லாது போயுள்ளனர். இல்லாதவர்கள் இருந்து என்ன செய்யப் போகின்றோம். இரத்தம் மரமட்டைகள் பறவைகள் மணல்கள் விலங்குகளின் கருகல் வாசனையைத்தவிர ஒன்றுமில்லை. இப்போதைக்கு எரிந்து கொண்டிருக்கிறது நிலம். மேலும்,    ‘வெகுநாட்களாக’ என தொடங்கும் கவிதையில்

“வெகுநாட்களாக
பிள்ளைகள் நிகழ்த்துகின்ற
பலி ஆட்டத்தின்
கருகலான இரத்த வாடையில்
புத்தரின் மண்டை
விறைத்துப் போய் உள்ளது.
தமது பிள்ளைகள்
நீரில் நிலத்தில் ஆகாயத்திலென
நிகழ்த்துகின்ற சூட்சுமங்கள்
இப்போது பதிவிறக்கம் ஆவதில்லை
புத்தருக்குள்.
பதிவேற்றங்களும் பதிவிறக்கங்களும்
சீடர்களிடம் மட்டுமே.
அவர்கள் திருட்டு கடவுச்சொல்லால்
உள் நுழையவும் வெளியேறவும்
செய்து கொண்டிருக்கின்றனர்
புத்தர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்” 9

என்பதாக முடியும் இந்த கவிதையும் செல்வகுமாரனின் கவிதைகளில் சிறந்த கவிதைகளில் ஒன்றாக கருதலாம். ஈழத்து இனப் படுகொலையை புத்தர் என்ற குறியீடு மூலம் அந்த உரிமை மீறும் அராஜகச் செயலை மிக துணிச்சலாக வெளிப்படுத்தி உள்ளார். உலுப்புக்காரனின் திசை என்ற புத்தகத்தில் உள்ள பல கவிதைகள் கருத்தியல் ரீதியாக சமூக விமர்சனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாக கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் தான் கடந்து வந்த பண்பாட்டு பயணத்தை செல்வகுமாரன் மறக்கவில்லை. பால்ய கால ஓர்மைகளின் சில பகுதிகளையும் இந்த புத்தகத்திலும் வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு புட்டானென தொடங்கும் கவிதை நல்ல உதாரணம். அந்த கவிதையின் கடைசி பகுதி திருவிழா கடையில் வாங்கிய சோப்புக் கரைசலை ஊதிய மகளை பற்றி வருகிறது. கவிதையை முடிக்கும் போது மனம் முழுக்க துள்ளுப் புட்டான்கள் பறந்து கொண்டிருக்கிறது.

மேலும் குமரி மாவட்ட மண்ணின் சொல்லாடல் இவரது சில கவிதையை உயிருள்ள பிரதேச வெளியாக மாற்றுகிறது. அந்த வகையில் உலுப்புக்காரனின் திசை என்ற கவிதை மிக முக்கியமான கவிதையாகும். உலுப்புக்காரன் ஏறிய புளியில் பழமாய் இருக்கின்றேன் என்ற வரிகளில் உள்ள கவித்துவத்தையும் பண்பாட்டு அடையாளங்களையும் நம்மால் உள்வாங்க முடியும். குழந்தைகள் சார்ந்த நுட்பமான உலகமும் வீடு என்ற சொல்லின் படிநிலை நீட்சியும் மிகச் சிறந்த கவிதை கருக்களாக வெளிப்பட்டுள்ளது. மேலும் சங்க இலக்கிய வாழ்வியல் பின்புலத்தில் கூட இல்லாத நெய்தல் நில உலகம் வட்டாரப் பண்பாட்டு வார்த்தைகளோடு இணைந்து கவிதைகளுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருப்பதும் கவனத்திற்குரியது. ஆகப் பண்பாட்டு வேர்களைத் தாங்கி பிடிக்கும் சு. செல்வகுமாரன் கவிதைகள் எனது வாழ்வு எனது உடை எனது பண்பாடு எனது பழக்கவழக்கம் எதை சார்ந்து நிகழ்கிறது என்பதை கூற விளைவதற்கு அவரது கவிதைகளே சாட்சியாகிறது.

சான்றெண் விளக்கம்

1. பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக,    காவ்யா பதிப்பகம்,  சென்னை    மே-2012, ப – 35
2. மேலது, ப- 11
3. மேலது, ப -27
4. பின் காலனியம், பாவை பப்ளிகேஷன்ஸ்,    ஜனவரி – 2017, ப -73
5. பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக,    காவ்யா பதிப்பகம்,  சென்னை    மே-2012, ப – 53
6. மேலது, ப – 47
7. முதற்சங்கு,    இதழ் 07, ஆகஸ்டு 2012, ப - 33           
8. உலுப்புக்காரனின் திசை,    பூவரசி பதிப்பகம்,    நவம்பர் – 2016, ப – 23
9. மேலது, ப – 66.

* கட்டுரையாளர் -     - கவிஞர் நட. சிவகுமார், தமிழ் உதவிப்பேராசிரியர், நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, குமாரகோவில், குமரிமாவட்டம். -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R