- ச.அன்பு, M.A.,M.Phil.,(Ph.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-         காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.

காப்பு – என்னும் சொற்பொருள்
பொதுவாக தமிழில் தக்க கருத்தியல்களைத் தரும் இலக்கியங்களாகத் திகழ்வன இதிகாசங்கள் என்று சொல்லத்தகும் மகாபாரதமும், இராமாயணமும்; காப்பியங்கள் என்று அழைக்கப்படும் பெருங்காப்பியப் பண்புகளுக்குட்பட்ட காப்பியங்களும்; சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களும் அதன் அமைப்பியலை ஒத்த சிற்றிலக்கிய நூல்களும் தான். இவற்றில் கூட முதலாவதாகச் சொல்லப்பட்ட இதிகாசங்கள் தான் நமக்கான எல்லா கருத்தியல்களையும் சொல்லுகின்றன.

இதிகாசங்களால் சொல்லப்பட்ட நமக்கான பண்பாட்டு – கலாச்சார – பழக்கவழக்கங்கள் யாவும், புனைகதைகளாகவும் (கட்டுக் கதைகளாகவும்), தொல்புராண கதைகளாகவுமே சொல்லப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொல்புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்தியல்கள் தான் பின்னால் வந்த காப்பியங்கள் மூலம் காட்சிகளாக - நாடகப்பாங்கில் காட்டப்பட்டுள்ளன அல்லது விளக்கப்பட்டுள்ளன. இப்படி காப்பியங்களால் விளக்கப்பட்ட காட்சியுருக்களே சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அதைத் தொடர்ந்து வந்த பிற இலக்கியங்கள் மூலமாகவும், ஒருவித விமரிசன நோக்கில் பிரித்தறியப்பட்டது. இப்பிரிவுகள் அனைத்தும் அதன் தன்மையை அல்லது உட்பொருளை விளங்கிக்கொள்ள வந்தவையாகும். எனவே தான் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தனது எல்லா கருத்துரைகளையும் அகம் – புறம்; காதல் – வீரம்; களவு – கற்பு; தலைவன் – தலைவி என இரண்டு வகைமைக்குள் அடக்கி இருக்கக்காண்கிறோம். இவையல்லாமல் எழுந்த மற்ற இலக்கியங்கள் யாவும் புதிதாக எதையும் சொல்வதாக இல்லை. மாறாக ஏற்கனவே தொன்றியுள்ள இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கியங்கள் என்ற மூன்று வகைமைக்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் அடிப்படையில் தான் தமிழ் நூல்கள் அனைத்தும் இலக்கியங்கள், காப்பியங்கள் என்ற இரண்டே வகைமைக்குள் அடக்கப்பட்டுள்ளன.

இதில் இலக்கு என்பது இயன்றது. இது வாழ்க்கையின் இலக்கை அல்லது கலைகளின் இலக்கைக் குறிப்பதாக அமையும் இயல்புகளை உணர்த்துவது. காப்பு என்பது பாதுகாப்பு என்ற பொருளோடு ஒத்தது. அதாவது மொழியின் காப்பு எனப்படுவதும், அதனை இயம்புவதும் காப்பியமாகும். இந்நிலையில் தான் மொழியியல்பைக் காக்கும் இலக்கண நூலுக்கும், வாழ்வியல்பைக் காக்கும் மந்திர நூலுக்கும் (காப்பமை மந்திரம் – பெரு 4-7 ; 117) இது பெயராகி இருக்கக் காண்கிறோம். உதாரணமாக தொல்காப்பியத்தைக் கூறலாம். இங்கு தொல் + காப்பு + இயம் = தொல்காப்பியம் என்று பிரித்தறியப்பட்டு, தொன்மையாகக் கருதப்பட்ட கருத்தியல்களைப் பாதுகாத்து வைத்திருந்து இயம்பும்/கூறும் நூல் என்று பொருள் கூறப்படுவது கவனிக்கத்தக்கது. இதே பொருண்மையில் தான், முதல் முதலாக இச்சொல் சிலப்பதிகாரத்தில் (காப்பியத் தொல்குடி .,30 :83) கையாளப்பட்டுள்ளது. சிலம்புக்கு அடுத்ததாக மணிமேலை இச்சொல்லை நாடகக் காப்பிய நன்னூல் (19 : 18) என்று கூறுகிறது. இது இன்றைய நிலையில் காப்பியம் உணர்த்தும் பொருளைக் குறிப்பதாக அமைகின்றது. இன்னும் இச்சொல் பெருங்கதை (1 – 38 : 167); சீவகசிந்தாமணி (1585 : 3); சிற்றிலக்கியங்களில், ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் (4 : 2) இலக்கண நூல்களான தொல்காப்பியம்; வீரசோழியம்; (174 : 3, 176 : 2,4); பன்னிருப்பாட்டியல் (88); தண்டியலங்காரம் போன்ற நூல்களில் இதேப் பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆக, காப்பியம் என்பதில் கதையைக் கூறும் நோக்கம் மட்டுமல்லாமல், கதைக்கான காப்பைக்கூறும் நோக்கமும் இழைந்திருந்தது/இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவலாகிறது.

 

காப்பியத்தின் தோற்ற - பொருண்மை
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை சுமார், 400 ஆண்டு காலம், தமிழகத்தை சோழர்கள் ஆட்சி செய்தனர். இக்கால கட்டமே (900 – 1200) சோழர் காலம் என்று அழைக்கப்பட்டது. இக்காலக் கட்டத்தில் தமிழக மக்கள் இன்புற்று வாழ்ந்தனர். அன்றைய அரசியல், ஒருவித ஆரோகியமானதாக இருக்கப்போய் வாழ்வு தழைத்தது. அதனால் அன்றைய சமூக பொருளாதார நிலை உயர்ந்தது. அன்றைய ஆட்சியில் மன்னர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. பௌத்தர்களும் சமணர்களும் பல காவியங்களைப் படைத்தனர். கம்பர் போன்றோர் வடமொழிக் காப்பியங்களை இயல்பு குன்றாமல், தமிழ்ப்படுத்தினர். அப்பொழுது தான் எண்ணற்ற புராணங்களும், சிற்றிலக்கியங்களும், பல்வேறு இலக்கண - இலக்கியநூல்களும் பெருகின. இத்தகைய ஒரு வளமான சூழலில் தோன்றிய இலக்கிய வகைமையுள் குறிப்பிடத்தக்கது காப்பியம்.  

காப்பியம் என்ற சொல், காப்பியங்கள் தோன்றிய அக்காலக்கட்டத்தில் இல்லாத போதும், காப்பியம் என்பதன் பொருண்மை புலப்படுத்தப்பட்டிருப்பதை அக்கால இலக்கண – இலக்கியங்களே உணர்த்தியுள்ளன. அவையாவன;

தொல்காப்பியம் கூறும் வனப்பில், தொல் என்பது – காப்பியம் என்று   வரையறுக்கப்பட்டுள்ளது.  அடியார்க்கு நல்லார் காப்பியத்தைத் தொடர் நிலை செய்யுள் என்கிறார்.
தண்டியலங்காரம் காப்பியத்தை பாவிகம் எனக் குறிக்கிறது.

-இங்கு பழம்பெரும் இலக்கிய வகைமையைச் சார்ந்த காப்பியம், தொன்மையோடு சேர்த்து தொல்காப்பியம் என்று பெயர் திரிபடைவதும் கவனிக்கத்தக்கது. இதில், தொல் என்பது தொன்மை என்றும்; காப்பு என்பது காத்தல் என்றும்; இயம் என்பது சொல்லன்ன (சொல்லுதல்) என்றும் பொருள்பட அமைவதால், பழமையான செய்திகளைக் காத்துவைத்திருந்து சொல்லும் இலக்கியம் காப்பியமாகும். இக்காப்பியம் ஒரு மொழியின் வளர்ப்பைப் புலப்படுத்துகிறது. வெறும் இலக்கியங்களாக இருந்த தனிநிலை செய்யுளிலிருந்து தொடர்நிலைச் செய்யுளுக்கு மாற்றமடைந்த அல்லது வளர்ச்சியடைந்த இலக்கியங்கள் காப்பியங்களாகின்றன. இவை அதன் பாடுபொருக்கேற்ப பெருங்காப்பியங்கள்; சிறுங்காப்பியங்கள் என வகைப்படுகின்றன. இதில் வாழ்த்து, வணக்கம், வரும் பொருள் என்ற மூன்று மங்கலங்களோடு, ஒன்றுக்கொன்று அறம்; பொருள்; இன்பம்; வீடு என்ற நான்கு வகை உறுதிப்பொருட்களை உணர்த்தும் இயல்புடையதாக பெருங்காப்பியங்கள் அமைகின்றன. அதோடு, தனக்கு ஒப்பான தன்னிகறற்ற தலைவனைக் கொண்டு, அவனது மணம் முடிப்பு; மண வாழ்க்கை; துன்பம்; இன்பம்; விளையாட்டு; வினைப்பயன் என எண்வகை சுவையையும் சேர்த்து – நிலைப்பெற்ற காவியக் கதையின் தொடர்ச்சியும் அதனூடான கிளைக்கதைகள் மற்றும் கதைச்சொல்லிகள் ஆகியனவும் அதனை பெரியதாக்குகின்றன. அதற்கு பெருமை சேர்க்கின்றன.

காப்பியத்தில் கிளைக்கதையும் கதைச்சொல்லியும்
ஒரு காப்பியத்திற்குக் கதை எத்துனை தேவையோ... அத்தனை தேவை அதிலிடம்பெரும் கிளைக்கதைக்கும், கதைச்சொல்லிக்கும் உண்டு. இதனையே கதையமைப்பு (PLOT) - (காப்பியப் புனைதிறன்., தமிழ்ப் பதிப்பகம், சென்னை – 20., 1979) என்கிறார் டாக்டர். ச.வே.சு. காப்பியமும் காப்பியத்தினூடான கதைப்போக்கும் எழுச்சியுடனும், விறுவிறுப்புடனும் செல்வதற்கு இவ்வமைப்பு நிலை துணைபுரிகிறது.

காப்பியத்தில் நிகழ்ச்சிகளின் கோர்வையே கதையை ஆக்குகின்றன என்றால், அதில் இடம்பெரும் கதைச்சொல்லியும் – கிளைக்கதையும் அக்கதையை நிலைநிறுத்தி -  அதனூடான ஊடுபொருளாகி அதற்குறிய அமைப்பை அதற்கு அளிக்கின்றன. எப்பொழுதும் முன்பின் ஏற்றத்தாழ்வற்ற கதை என்பது, அக்கதை இடம்பெரும் இலக்கியத்திற்கு வன்மையான அமைப்பை கொடுக்காது. எனவே ஒரு கதை காப்பிய அமைப்பாக பொருந்த வேண்டுமானால், அதோடான திருப்பங்களும், சிக்கல்களும் இன்றியமையாதனவாகின்றன. பொதுவாக வெகுசன வாழ்வில் தனிமனிதனுக்கு இயல்பாகத் தோன்றும் பொருளை/நிகழ்ச்சியைக் காட்டிலும், ஒருவித வியப்போடும், கவர்ச்சியோடும் தோன்றும் முரண்பட்ட காட்சி அல்லது நிகழ்ச்சி வாசிப்பாளனை ஒருவித பிணிப்புக்கு இழுத்துச் சென்று, கதையோடு ஒன்றச்செய்கிறது. இத்தகைய வாசகனின் ஆர்வம் காப்பியத்துக்குள் கதையமைப்பால் ஏற்படுத்தப்படுவது குறிப்பிட்த்தக்கது. எழுத்து ரூபம் கொண்ட இத்தகைய இலக்கிய படைப்புகளில், வரலாற்றுக்கான சில குறிப்புகளையும் நமக்கான அடையாளங்காக, சொல்ல துணைநிற்பவை இந்த கதைச்சொல்லிகள். இந்த மாதிரியான அடையாளங்களை, படைப்பில் ஒலிக்கும் குரல், ஆசிரியனின் குரலாக இல்லாமல், ஒரு கதைச்சொல்லியின் குரலாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு ஒவ்வொரு கதையிலும், நாவலிலும், காப்பியங்களிலும் ஒரு கதைச்சொல்லி கதையைச் சொல்லத் தொடங்கும். அப்படி கதையில் கதைச்சொல்லிச் சொல்லும் அடையாளங்களை, ஆதாரங்களை கதைக்கேட்போன் (வாசகன்) கேட்பான். இப்படி, கதைச் சொல்ல – கேட்க நிகழும், நிகழ்வு மட்டுமே மீதமாக நின்று, கதை வெறுமனே கதைத்தலாகிவிடக் கூடாது என்ற அக்கறை மேலிட்டால், காப்பியங்களில் கதையோடு ஒத்த சமயக்கருத்துகளும், புதிய புரட்சி சம்பவங்களும் இடம்பெருமாறு படைக்கப்படுகின்றன.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஒரு புரட்சிக் காப்பியமாக்கப் பெண்ணை  (கண்ணகி) முன்னிருத்தி காப்பிய கதையமைத்தது; கணிகையர் குலத்துப் பெண்ணை கோவலன் மணமுடிப்பதாகக் காட்சி அமைத்தது; பொருளீட்டச் செல்லும் தலைவன் தன்னுடன் தலைவியையும் கூட்டிச் செல்லுவதாகக் கதையமைத்தது; மெய்யுணர்வுக்குப் பல இடங்களில் இயற்கையை உள்ளுறையாக்கியது; சமய வேறுபாடுகளை நீக்கி, இந்து – சமண – பௌத்த சமயங்களை இணைத்துக் காட்டியது. ஜென சமயத்தில், ஒரு பெண் ஆணாக பிறந்த பின்புதான் முழுமையடைகிறாள் என்ற வழக்கமிருக்க, ஜெனத் துறவியான கவுந்தியடிகள் கண்ணகியின் கற்பைப் புகழ்ந்து பேசுவதாக வழக்குடைப்பது; முக்கிய மூன்று நோக்குகளை வலியுருத்துவது; இன்னும் சிலம்பை ஒரு இயல் – இசை - நாடகப் காப்பியமாக; தேசியக் காப்பியமாக; மூவேந்தர் காப்பியமாக; குடிமக்கள் காப்பியமாக; வரலாற்றுக் காப்பியமாக; பெண்ணியக் காப்பியமாக எனப் பலவாறு தனித்துக் காட்டியதைக் கூறலாம்.

கதைச்சொல்லியின் குரல்
காப்பியங்களிலும் சரி, நாவல்களிலும் சரி,  இன்னொரு கவனிக்கவேண்டிய விஷயம், அதில்வரும் கதைச்சொல்லி எப்பொழுதும் ஒரு கதைக் குரலாக மட்டுமின்றி, பல கதைகளின் குரலாக அமைவது, அல்லது அமைக்கப்படுவது. இந்த பலகுரல் கதைசொல்லும் நிகழ்வே வாசகனைக் கதையுலகத்துக்குள் இறக்கிவிட அவசியமானதாகும். இந்த மாற்றுக் குரல் கதையின் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் கதையூடகம் நம்மை நாம் அறியாத நிலைக்கு வெகுவிரைவில் இட்டுச்சென்றுவிடும் ஆற்றலுடையது.

பொதுவாக கதைகளில் வரும் கதைச்சொல்லிகள், சில கதைகளை வெளிப்படையாகவும், சில கதைகளை பூடகமாகவும் சொல்லுவதுண்டு. கதைக்கான தத்துவத்தின் படி, ஒரு கதைசொல்ல வேண்டுமாயின், அதற்கான ஆரம்பமும், நடுவும், முடிவும் இருக்க வேண்டும், கதை கேட்க ஆரம்பித்தால் முடிப்பது வரை, நாம் நம்மை மறந்து கதைகேட்கும் ரகசியம் இந்த, ஆரம்பமும் நடுவும் முடிவும் சேர்ந்து உருவாக்கும் ஒருவித மன இழுப்பையில் தான் இருக்கின்றது.

மனம் நம்மை அறியாமல் கதைக்குள் வசியப்படுத்தப்பட, நாம் நம் அனுபவ உலகிலிருந்து கதையின் அனுபவத்திற்கும் ஒரு புனைவுலகிற்கும் நகர்ந்து போய்விடுகிறோம். அப்படி போனபின் நம்மால் கதைமுடியும் வரை அந்த அனுபவத்திலிருந்து மீள முடியாமல் போகிறது. சிலர் கதை முடிந்தும் அந்த அனுபவத்திலேயே இருப்பர். இவர்கள் மன இழுப்புக்கு ஆளானதை அறியாதவர்கள். இன்னும் சிலர், கதை அனுபவத்திற்குள்ளேயே தங்கிவிடுவர். தனக்குத் தெரிந்த பழைய அனுபவ உலகத்திற்கு வரமுடியாதவர்களான இவர்கள், மன இழுப்புக்கு ஆளானதையும் மறந்து, நாம் வசியப்பட்டுள்ளோம் என்பதையும் அறியாமல் இருப்பவர்கள். இத்தகையவர்களின் அறியாமை ஆபத்தானது. இவர்கள் ஒருவித  மாயையில் சிக்கிக்கொள்பவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் முழு மாயாவாதிகளானால் வசியப்பட்ட நிலைதான் உண்மை என்று நம்பிவிடுவார்கள். இத்தகைய வாசகர்களை முன்வைத்தே பெரும்பாலான கதைகள்/காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன/எழுதப்படுகின்றன. ஆனால், உண்மையில் நம் வாழ்வு நிலை வேறு. காப்பிய அமைப்பியலில் இருக்கும் வசியப்படுத்தப்பட்ட கதைக்கான வாழ்வு நிலை வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஒருவனாலேயே கதையில், கதைச்சொல்லிச் சொன்ன கதையையும், கதைச்சொல்லிச் சொல்லாதக் கதையையும் தெரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு கதையில் அல்லது காப்பியத்தில் கதைச்சொல்லி சொல்லாமல் விட்ட கதைகள் பெரும்பாலும் உளவியல் தன்மையுடையனவாக - இருப்பதாக ஆய்வளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், வசியப்பட்டவனின் மனம் சுகமான கதைக்கேட்புக்காகத் தன் சுயவாஞ்சையை இழந்துவிடும். அப்போது அதற்கான கதைக்கேட்பு குறித்த பகுத்தறிவு இரண்டாம் பட்சமாகிறது. அதனால், வசியப்பட்ட அல்லது வசியப்படுத்தப்பட்ட வாசகனால், கதைச்சொல்லிச் சொன்ன கதையில், கதைச்சொல்லி சொல்லாமல் விட்டதை இனம் காண முடியாமல் போகிறது. அப்பொழுது அவனுக்குள்ளிருக்கும் நனவிலி மனம் செயல்படத் தொடங்குகிறது.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் கோவலன் கள்வன் என்று பொற்கொல்லன் சொன்னதைக் கேட்டவுடன் மன்னன் கொன்று அச்சிலம்பு கொணர்க என்கிறான். இஃது அவனது அல்லது அவனைப் படைத்தளித்த படைப்பாளியினது வெளிப்பாடு. இச்சூழ்நிலையில் அவன் தான் மன்னன், தனது மனைவி அரசி, எனவே தன் பொருளை களவுண்டவனை மனதளவில் வஞ்சகனாகக் கருதினான். எனவே தனது உள்ளத்திலிருந்த பொருள் கட்டுப்பாடின்றி வெளிப்பட்டது. இதனை உளவியல் கருத்துப்படி ஆராய்ந்தால் பாண்டிய மன்னனின் அந்தக் கூற்று, அவனை அறியாமலேயே நினைவிலிமனதிலிருந்து வந்தது என்பதையும், பாண்டியமன்னனை படைத்தளித்த இளங்கோவடிகளின் ஆண் என்னும் மனக்குரலின் உள எதார்த்தம் என்பதையும் தவிர வேறெதுவுமில்லை. இங்கு சிலப்பதிகார – ஆசிரியரின் கதைச்சொல்லி, சொன்ன கதை - கண்ணகிக்கு தீங்கு செய்ததற்காக கோவலன் கள்வன் என்று பழி போடுவதாக இருக்கிறது. அனால் அந்த கதையில் கதைச்சொல்லி சொல்லாமல் விட்ட கதை, பாண்டியமன்னனின் (இளங்கோவடிகளின்) ஆணாதிக்கச் சிந்தனையாக இருக்கிறது. இப்படித்தான் கண்ணகி மதுரையை எரித்த சம்பவமும் அவளது கற்பு திண்மையால் நிகழ்ந்தாகப் பரவலாகக் கூறப்பட்டாலும், அவள் தன் கணவன் கள்வன் என்று சொல்லி, கொலைசெய்யப்பட்டதைக் கேட்ட பிறகே, மிகுந்த சினம் கொண்டு தேரா மன்னா செப்புவதுடையேன் என்று சீறுகிறாள். ஆக அவள் தான் இத்தனை காலம் தன் கணவனுக்காகா பொருமையாய் இருந்தும், தன் கணவன் கள்வனாக பொய் சுமத்தப்பட்டு இறந்தான் என்ற செய்தி, தன் வாழ்வில் அவனுக்காக இதுநாள்வரை விட்டுத்தந்த எல்லாவற்றையும் பொய்யாகிவிடுமோ? என்ற அச்சத்தை அவளுக்குள் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதனால் கண்ணகி என்னும் ஒரு பதுமையின் குணம், பிற்கால வரலாற்றில் எங்கும் இடம்பெறாமல் போய்விடும் அபாயம் இருப்பதால் கூட, கண்ணனி மதுரையை எரிக்கச் சூலுரைத்திருக்கலாம் என்ற ஒரு உளவியல் கருத்தும் சிலப்பதிகாரக் கதையை தழுவி – கூறப்படுகிறது. இது அவளது பண்பு மீட்சிக்கானதாகப் பார்க்கப்படும் உளவியல் பார்வையை அதில் வரும் கதைச்சொல்லி தருவதாக அமைவது குறிப்பிடத்தக்கது     

நிறைவுரை
ஆக, ஒவ்வொரு கதைச்சொல்லிக்குள்ளும் கேட்பவனின் கவனம் மிக முக்கியமானதாக இருக்கவேச் செய்கின்றது. எனவே தான், இன்னும் கதைச்சொல்லிகள் ஒரு நாயகனின் குரலாகவும், உயர் சாதியின் குரலாகவும், மதபோதகரின் குரலாகவும் அல்லது ஒரு அறிவு ஜீவியின் குரலாகவும் இருந்து வருகின்றது. இங்கு, கதைகளினூடான கதைச்சொல்லிகள் அவனா? அவளா? அவரா? என்பதை விட, அது என்பதுதான் நம் விளக்கத்திற்கும், நாம் விளங்கிக்கொள்ளவும் நலம் பயப்பதாக அமையும் எனலாம். அப்படி அதுவாக கதைச்சொல்லியை நாம் விளங்கிக்கொள்ளும் பொழுது வரலாறு மற்றும் எதார்த்தம் பேசும் கதைகளாலும்/காப்பியங்களாலும் உண்மையில் நடந்ததை பற்றி பதிவு செய்ய முடியாது என்பதை உணர முடிகிறது. மேலும்  அவைகள் உண்மையைப் பதிவு செய்ய போராடியதையும், போராட வேண்டிய அவசியமிருப்பதைப் புரியவைக்க எழுந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் சிலப்பதிகாரத்தை பார்க்கும் போது, சிலம்பு வலியுருத்தும் கற்பு பற்றிய கருதுகோள்களால் மதுரை எரியுண்ட சம்பவம் -  நடந்த சம்பவமல்ல என்பதும்; மாறாக கற்பு என்பது ஒரு முக்கிய ஒழுக்கப்பண்பாக வலியுத்தப்பட வேண்டியதன் அவசியமும் நம்மை விளங்கிக்கொள்ள செய்கின்றன.

துணை நூற்பட்டியல்

1. சிலப்பதிகாரம்., சிலம்பொலி சு, செல்லப்பன் – தெளிவுரை., பாரதி பதிப்பகம்., 1994
2. Dr.ச.வே.சுப்பிரமணியன்., காப்பியப் புனைதிறன்., தமிழ்ப் பதிப்பகம்,சென்னை – 20., 1979.
3. க.வெள்ளைவாரணன்., தொல்காப்பியம் (தமிழிலக்கிய வரலாறு)., அண்ணாமலைப் பல்கலைக் கழகம்., 1970.
4. ச.வே.சு.., ந. கடிகாசலம்., பதிப்பித்த ஆய்வுக்கோவை., தமிழிலக்கியக் கொள்கைகள்., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்., சென்னை.20., 1981
5. மணிவேலன்., அவலநாடக நோக்கில் சிலம்பு., தேந்தமிழ்ப் பதிப்பகம்,சேலம் – 01., 1979

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் *- ச.அன்பு, M.A.,M.Phil.,(Ph.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R